![](pmdr0.gif)
திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம்
பிள்ளையவர்கள் சரித்திரம் - இரண்டாம் பாகம், பகுதி 2
உ. வே. சாமிநாதையர் எழுதியது
tiricirapuram makAvitvAn mInATcicuntaram piLLai
carittiram, volume 2, part 2
written by u.vE. cAminAta aiyar
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our thanks also go to Tamil Virtual Academy for providing a PDF copy of this work.
The e-text has been generated using Google OCR and subsequent proof-reading.
Sincere thanks go to Ms. Karthika Mukundh for her help in the proof-reading process.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2018.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
http://www.projectmadurai.org/
திரிசிரபுரம் மகாவித்துவான் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்
சரித்திரம் - இரண்டாம் பாகம், பகுதி 2
உ. வே. சாமிநாதையர் எழுதியது
Source
விருத்தமும் கீர்த்தனமும்.
பின்பு இப்புலவர் கோமான் தஞ்சையிலிருந்து பட்டீச்சுரத்திற்கு வந்து அங்கே சில தினம் இருந்தனர். அப்பால் திருவாவடுதுறைக்குப் புறப்படுகையில் முன்பு கூறிய பிரான்மலை ஓதுவார், பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர் புதுக்கோட்டை மகாராஜாவாகிய இராமசந்திர தொண்டைமான் மீது இயற்றிய இங்கிலீஷ் நோட்டின் மெட்டுள்ள ஒரு கீர்த்தனத்தைப் பாடிக் காட்டினர். அந்த மெட்டில் ஒரு கீர்த்தனம் சுப்பிரமணிய தேசிகர் மீது செய்ய வேண்டுமென்னும் எண்ணம் இவருக்கு அப்போது உண்டாயிற்று. உடனே ஒரு விருத்தமும், அந்த மெட்டில் ஒரு கீர்த்தனமும் இவர் இயற்றினர். அவை வருமாறு :-
திருவாவடுதுறைக்கு வந்தது.
அப்பாற் பரிவாரங்களுடன் இவர் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தார். வந்தவுடன் அவ்விருத்தத்தையும் கீர்த்தனத்தையும் சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பிக்கும்படி செய்தார். கேட்ட அவருக்கும் திருக்கூட்டத்தாருக்கும் அவை இன்பத்தை விளைவித்தன. மடத்திலுள்ள முதியவர்கள், தேசிகர் இரவில் ஆலயம் சென்று ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு மடத்துக்கு வந்து ஒடுக்கத்திற் பீடத்தில் வீற்றிருந்து அடியார்களுக்கு விபூதிப்பிரசாதம் அளிக்கும்பொழுது மேற்கூறிய கீர்த்தனத்தைப் பாடச்செய்ய விரும்பினார்கள். அவ்வண்ணமே ஓதுவார்கள் நாள்தோறும் அச்சமயத்திற் பாடி வருவாராயினர்.
சுப்பராய செட்டியார் கடிதம்.
ஒருநாள் நாங்கள் பாடங்கேட்டுக் கொண்டிருந்த பொழுது சென்னையிலிருந்த சுப்பராய செட்டியாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், "நான் திருச்சிராப்பள்ளியில் தங்களிடம் படித்துக் கொண்டிருக்கையில் வெஸ்லியன் மிஷன்ஸ்கூலில் எனக்கு வேலை கிடைத்தது. முதல் மாதச் சம்பளமாகிய ரூபாய் பதினைந்தைத் தங்களிடம் கொடுத்து வந்தனம் செய்து பெற்றுக்கொண்ட பொழுது தாங்கள் இந்தப் பதினைந்தைத் திரும்பவைத்தால் என்ன தொகையோ அதனைப்பெற்று வாழ்ந்திருக்கவேண்டுமென்று அருளிச்செய்தீர்கள். அந்தப்படியே தங்களுடைய பெருங்கருணையினால் எனக்கு இன்று ரூ. 50 சம்பளம் ஏற்பட்டது" என்று தெரிவித்திருந்தார். இவருடைய நல்வாக்குப் பலிதமாகுமென்பதைச் சிலராற் கேட்டிருந்த நாங்கள் அக்கடிதத்தால் அச்செய்தி உண்மையென்று அறிந்து மகிழ்ந்தோம்.
திருமாளிகைத் தேவர் பூஜை.
ஒருதினம் மடத்திற் பகற் போசனம் ஆன பின்பு இவர் மடத்தின் முகப்பிலிருக்கையில் மடத்திற்குள்ளே மணியோசை கேட்டது. அந்த ஓசைக்குக் காரணம் என்ன வென்று அங்கே உள்ளவர்களை இவர் வினாவியபொழுது திருமாளிகைத் தேவருக்கு நடக்கும் பூஜாகாலத்தில் அடிக்கப்படும் மணியோசை யென்று சொன்னார்கள். அப்பொழுது இவர் சுப்பிரமணிய தேசிகருக்கு,
என்னும் வெண்பாவை எழுதுவித்தனுப்பினார்.
மடத்திற் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் திருமாளிகைத் தேவருக்குப் பூஜை செய்பவர் ஆதிசைவராதலால் ஸ்ரீ கோமுத்தீசுவரர்க்கு உச்சிக்காலமான பின்பு அர்ச்சகர் அங்கே வந்து பூஜைசெய்வது வழக்கம். அன்றைத்தினம் என்ன காரணத்தாலோ கோயிலில் தாமதித்து உச்சிக்காலம் நடந்தமையின் அவர் அகாலத்தில் வந்து பூசிப்பாராயினர்.
இப்பாட்டைக் கேட்டவுடன் மறுநாள் தொடங்கிக் காலையிலேயே வந்து பூஜை செய்யும்படி தேசிகர் ஸ்ரீ கோமுத்தீசுவரர் கோயில் அர்ச்சகர்களுக்குச் சொல்லி அனுப்பிவிட்டார். அவர்கள் அங்ஙனமே செய்வாராயினர். அப்படியே இன்றும் நடைபெற்று வருகின்றது.
இரத்தினம்பிள்ளையின் உதவி.
முன்பு அம்பலவாணதேசிகர்பிள்ளைத்தமிழை அரங்கேற்றிய பொழுது இவருக்கு மடத்திலிருந்து போடப்பட்ட ஏறுமுக உருத்திராட்ச கண்டியானது பணத்திற்கு முட்டுப்பாடு வரும்போதெல்லாம் அடகு வைக்கப்பட்டிருக்கும்; பணங்கிடைத்தபின் கடன்காரர்களிடத்தில் வட்டியும் முதலுங் கொடுத்து மீட்கப்படும். அந்தப்படியே அது மாயூரத்தில் ஒருவரிடம் அடகு வைக்கப்பட்டிருந்தது. புராணம் அரங்கேற்றுவதற்காகத் திருப்பெருந்துறைக்குப் போகும்பொழுது அதனை மீட்டுத் தரித்துக் கொள்ளவேண்டுமென்று நாங்கள் தெரிவித்துக்கொண்டோம். அப்போது கையிற் பணம் இல்லாமையால் கடன் வாங்கி மீட்பதற்கு இவர் தீர்மானித்தார். சோழன்மாளிகை இரத்தினம் பிள்ளையிடம் ரூ. 300 வாங்கிவர வேண்டுமென்றும் திருப்பெருந்துறைப்புராணம் அரங்கேற்றி வந்தவுடன் அத்தொகையை வட்டியுடன் தாம் சேர்ப்பித்து விடுவதாகச் சொல்லவேண்டுமென்றும் கூறி என்னை அவரிடம் அனுப்பினார். அப்படியே நான் போய்த் தெரிவித்தவுடன் அத்தொகையை அவர் கொடுத்தார். நான் அதனைப் பெற்றுக்கொண்டு புறப்படுங் காலத்தில் அவர், "இத்தொகையை ஐயா அவர்களிடம் மீட்டும் பெறுவதாக எனக்கு உத்தேசமே இல்லை. ஏதாவது என்னால் இயன்றதை அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு நெடுநாளாக இருந்தது. அந்த எண்ணத்தைப் பூர்த்தி பண்ணும்படி நேர்ந்த இந்தச் சமயத்துக்கு என்னுடைய வந்தனத்தைச் செலுத்துகிறேன். என்னுடைய வேண்டுகோளை அவர்களிடம் ஸமயம் பார்த்துத் தெரிவிக்க வேண்டும்" என்று சொல்லி என்னை விடுத்தனர். நான் மீண்டு வந்து அவருடைய வேண்டுகோளைத் தெரிவித்ததுடன் தொகையையும் இவரிடம் சேர்ப்பித்தேன். அத்தொகையைக் கண்டு இரத்தினம் பிள்ளையினுடைய அன்பின் மிகுதியை நினைந்து நன்றி பாராட்டி அவருக்கு ஒருகடிதம் எழுதுவித்தார்; வழக்கம்போலவே அக்கடிதத்தின் தலைப்பில் எழுதிய செய்யுள் வருமாறு:
இரத்தினம் பிள்ளை அளித்த அத்தொகையைக் கடன் வாங்கினவரிடம் சேர்ப்பித்துக் கண்டியை மீட்டு இவர் தரித்துக் கொண்டனர்.
திருப்பெருந்துறைக்குப் புறப்பட்டது.
ஒரு நல்ல தினம் பார்த்துத் தேசிகரிடம் விடைபெற்றுக் கொண்டு திருவாதிரைத் தரிசனத்துக்கு இவர் திருப்பெருந்துறை போய்ச் சேரவேண்டுமென்ற எண்ணத்துடன் ஸ்ரீமுக ஆண்டு மார்கழி மாதத்தின் முதலிற் (1873 டிஸம்பரில்) புறப்பட்டனர். கூடவே சென்றோர் பழனிக்குமாரத் தம்பிரான், அரித்துவாரமங்கலம் சோமசுந்தர தேசிகர், சுப்பையா பண்டாரம், கும்பகோணம் பெரியண்ண பிள்ளை, [1] சவேரிநாதபிள்ளை, தில்லை விடங்கன் வேலுஸாமி பிள்ளை முதலியோர். நானும் சென்றேன்.
செல்லும்பொழுது திருவிடைமருதூர்க் கட்டளை மடத்தில் தங்கி அங்கேயிருந்த நெல்லையப்பத் தம்பிரானென்பவரால் உபசரிக்கப்பெற்றார். அப்பாற் புறப்பட்டு மேற்கே சாலைவழியிற் செல்லும்பொழுது, "ஏதாவது படித்துக்கொண்டுவரலாமே" என்று சொன்னார். கையில் வெங்கைக்கோவை ஏட்டுப் பிரதியிருந்தமையால் அதனைப் படித்துப் பொருள்கேட்டுக்கொண்டே சென்றோம். இவர் அதிலுள்ள நயங்களைச் சுவைபட எடுத்துக்காட்டியதுடன் நூலாசிரியருடைய பெருமைகளை இடையிடையே பாராட்டிக்கொண்டும் வந்தார்.
ஒரு பழைய நண்பர்.
அங்ஙனம் செல்லுகையில், கும்பகோணத்திற்குக் கிழக்கே அஞ்சுதலை வாய்க்காலின் தலைப்புள்ள இடத்தை யடைந்தவுடன் அவ்விடத்தில் ஒரு முதியவர் எதிரே வந்தார். அவருக்குப் பிராயம் சற்றேறக்குறைய அறுபத்தைந்து இருக்கலாம். அவர் ஒரு பெரிய மூட்டையைத் தலையில் வைத்துக்கொண்டும் எண்ணெய்க் கலயமொன்றைக் கையில் எடுத்துக்கொண்டும் வந்தார்.
அவர் இவரைக்கண்டு விரைவாக அருகில் வந்து, "என்னப்பா மீனாட்சிசுந்தரம்! செளக்கியமாக இருக்கிறாயா?" என்றார்.
"நீ செளக்கியந்தானா? எங்கே போகிறாய்?" என்று இவர் கேட்கவே அவர், "நீ மிகுந்த சிறப்போடு விளங்குகிறாயென்பதைப் பலபேர் சொல்லக் கேட்டுச் சந்தோஷமடைந்து கொண்டே இருக்கிறேன். நீ நல்ல புண்ணியசாலி. அநேகம் பேர்களுக்குப் பாடஞ் சொல்லுகிறாயென்றும் கேள்விப்பட்டேன். இன்னும் நல்ல செளக்கியத்திலி ருக்கும்படி உன்னைச் செய்விக்க வேண்டுமென்று தாயுமானவரைப் பிரார்த்தித்துக் கொண்டேயிருக்கிறேன். நான் உன்னோடு படித்தவன்தான்; என் அதிர்ஷ்டம் இப்படி இருக்கிறது. என் மகளுக்குப் பிரஸவகாலமாம்; அதற்கு வேண்டிய மருந்துகளை நானே வாங்கி வரவேண்டுமென்று மருமகப்பிள்ளை எழுதினார்; அதற்காக எல்லாம் வாங்கிக்கொண்டு போகிறேன். என்ன செய்வேன்! திருச்சிராப்பள்ளி எங்கேயிருக்கிறது? மாப்பிள்ளை ஊர் எங்கேயிருக்கிறது பார்! ஊரைவிட்டுப் புறப்பட்டு மூன்று நாள் ஆய்விட்டன. வழியில் தங்கித் தங்கி வருகிறேன்; என் கஷ்டத்தை நான்தானே அனுபவிக்கவேணும். மறுபடி ஒருசமயம் வந்து உன்னைப் பார்க்கிறேன். நீ எங்கேயோ ஒரு முக்கியமான காரியமாகப் பலபேரோடு போகிறாயென்று தோன்றுகிறது; நல்லது, போய்வா" என்று சொல்லி இவரிடம் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார்.
மீனாட்சிசுந்தரமென்று அவர் அழைத்ததைக் கேட்ட நாங்கள் இவரோடு இந்த மாதிரி ஒருமையாகப் பேசி அளவளாவினவர்களை அதுவரையில் பார்த்திராமையால் வியப்புற்று அவரை இன்னாரென்று தெரிந்துகொள்ளுதற்கு நினைந்து இவருடைய முகத்தைப் பார்த்தோம்; அந்தக் குறிப்பை இவர் அறிந்து, "இவர் என் தகப்பனாரிடத்தில் என்னோடு பள்ளிக்கூடத்திற் படித்துக் கொண்டிருந்தவர். தொண்டை மண்டல வேளாளர். நான் திரிசிரபுரம் வந்த பின்பு அடிக்கடி நூதனமாகப் பெற்றுள்ள ஏட்டுச் சுவடிகளை வாங்கி வாங்கிச் சென்று அதி சீக்கிரத்தில் முற்றும் படித்துவிட்டு ஜாக்கிரதையாகத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்துவிடுவார். அந்நகரத்தில் இருந்தவரையில் நான் படித்த புத்தகங்களை யெல்லாம் தவறாமல் ஒவ்வொன்றாக வாங்கிச்சென்று படித்தவர் இவர். ஒரு நூலுக்காவது இவருக்குப் பொருள் தெரியாது. பொருள் தெரிந்துகொண்டு படிக்கவேண்டு மென்ற விருப்பமும் இவருக்கு இல்லை. சில சமயங்களில் நான் சந்திப்பதுண்டு. இப்படியே பேசி முடிப்பார். இவரது வறுமை நிலையை உத்தேசித்து ஏதேனும் நான் கொடுக்க முயன்றால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டு விரைந்து சென்று விடுவார். அதைக் குறித்துப் பேசத் தொடங்கினாற் கோபமும் அவருக்கு வந்துவிடும். ஒருபொழுதும் நானிருக்கும் இடத்திற்கு அவர் வந்ததுமில்லை; ஏதாவதொன்றை என்னிடம் பெற்றுக்கொண்டதுமில்லை. பிறரிடத்தும் அப்படியே. அதனால்தான் இப்பொழுது நான் ஒன்றும் கொடுக்கத் துணியவில்லை. கபடமில்லாத மனத்தினர். நல்ல குணமுடையவரே. இளமையிற் பேசியது போலவே அவர் ஒருமையாகப் பேசுவது எப்பொழுதும் வழக்கம்" என்று அன்புடன் சொன்னார்.
வழியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள்.
அப்பாற் கும்போணம், பாபவிநாசம், தஞ்சாவூர், முத்தாம்பாள்புரம் (ஒரத்தநாடு), பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, காலகம் என்னும் ஊர்கள் வழியே சென்று திருப்பெருந்துறையை இவர் அடைந்தார்.
சில சமயங்களில் வண்டியினின்றும் இறங்கி நாங்கள் சாலையிலே நடந்து செல்லுவோம்; அப்போது பாடங் கேட்டுக்கொண்டும் போவோம். முத்தாம்பாள்புரத்தில் முன்பு தஞ்சை அரசரால் ஏற்படுத்தப்பட்டிருந்த பெரியதொரு தர்ம ஸ்தாபனத்தில் தமிழ்ப் பாடம் சொல்லுதற்கு உபாத்தியாயராக நியமிக்கப்பெற்றிருந்தவரும் திருக்கண்ணபுர ஸ்தலபுராணம் முதலியவற்றைச் செய்தவருமாகிய வித்துவான் நாராயணசாமி வாத்தியார் என்பவருடைய குமாரர் வந்து இவருக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய சௌகரியங்களைச் செய்வித்தனர்.
இடையிலே உள்ள இடங்களுக்குச் சென்றபோது இவருடைய வரவையறிந்து அங்கங்கேயுள்ள தமிழபிமானிகள் வந்து வந்து, "இங்கே சிலதினமிருந்து எங்களுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டும்" என்று குறையிரந்தார்கள். "திருவாதிரைத் தரிசனத்திற்குத் திருப்பெருந்துறைக்குச் செல்லுகிறேன். அங்கே சிலதினம் இருப்பேன். இருந்துவிட்டுத் திரும்பிவரும்போது நேர்ந்தால் இங்கே தங்கிச் செல்வேன்; இப்போது அவகாசமில்லை" என்று அவரவர்களுக்கு ஸமாதானம் கூறினர்.
[2] வேம்பத்தூர்ப் பிச்சுவையர்.
அப்பால் திருப்பெருந்துறையை அடைந்து அதன் தெற்கு வீதியிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் இவர் பரிவாரங்களுடன் தங்கினார். இவர் அங்கே வந்து விட்டதை ஸ்ரீ ஆத்மநாதஸ்வாமி கோயிற் கட்டளை ஸ்தானத்திலிருந்த ஸ்ரீ சுப்பிரமணிய தம்பிரானுக்குத் தெரிவிப்பதற்குப் பழனிக்குமாரத் தம்பிரானும் நானும் கட்டளை மடத்திற்குச் சென்றோம். அப்பொழுது மடத்தின் வெளியே உள்ள ஒரு மண்டபத்தில் நாட்டுக்கோட்டை நகரத்துத் தனவைசிய கனவான்கள் சிலரோடும், வேம்பத்தூர்ப் பிச்சுவையர் முதலிய தமிழ்ப்பண்டிதர்களோடும் இருந்து வன்றொண்டச் செட்டியார் பேசிக்கொண்டிருந்தார். பிச்சுவையர் பாடல் சொல்லி எல்லோரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். அதைக் கவனித்த என்னை நோக்கி, "இவர்தாம் வேம்பத்தூர்ப் பிச்சுவையர்" என்று பழனிக்குமாரத் தம்பிரான் தெரிவித்தனர். அவர் பாடல் சொல்லுதலைக் கேட்டுக்கொண்டே சிறிது நேரம் நின்றுவிட்டு உள்ளே சென்று சுப்பிரமணிய தம்பிரானைப் பார்த்துப் பிள்ளையவர்கள் வந்திருப்பதை நாங்கள் தெரிவித்தோம். இவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்த அவர் அதனைக்கேட்டு மகிழ்ச்சியடைந்தார். அச்சமயத்தில்,
வன்றொண்டர் முதலியவர்கள் வந்து வந்தனம் செய்து தம்பிரானிடம் விபூதிப்பிரசாதம் பெற்றுக்கொண்டார்கள். பிச்சுவையர் நிமிஷப்பொழுதிற் கவிசெய்யும் ஆற்றலைக் குறித்து வியந்து கொண்டே நாங்கள் இக்கவிஞர்பிரான் இருந்த விடுதிக்குச் சென்றோம்.
அவ்விடத்திற் கோயிலார் மரியாதையுடன் வந்து பிரசாதங்களை இவரிடம் கொடுத்துத் தரிசனத்திற்கு வரவேண்டுமென்று அழைத்தார்கள். உடனே இவர் ஆலயத்துக்குச் சென்றார். சுப்பிரமணிய தம்பிரான் அங்கே வந்து இவரை வரவேற்று முன்னே நின்று தரிசனம் செய்வித்தார். அன்றைத் தினம் திருவாதவூரடிகள் கொண்டருளியிருந்த மந்திரிக்கோலக் காட்சி எங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.
தரிசனமான பின்பு பிள்ளையவர்களுக்குத் தம்பிரானவர்களாற் காளாஞ்சிகள் கொடுக்கப்பெற்றன. அவற்றை இவர் வாங்கி வேறொருவரிடம் கொடுப்பதற்குத் திரும்பினார். உடனே அங்கே நின்ற வேம்பத்தூர்ப் பிச்சுவையர் வந்து அவற்றை அன்புடன் வாங்கிக்கொண்டனர்; அவரைக்கண்டு இவர், "துவடுக நாததுரை எப்பொழுது வந்தது?" என்று கேட்டனர்.
[3] 'துவடுக நாததுரை' என்று அவரைச் சொன்னதன் காரணத்தை நாங்கள் இவரிடம் பின்பு கேட்டுத் தெரிந்து கொண்டோம். அப்பால் இவர் தமக்கு அமைத்திருந்த விடுதிக்குச் சென்றார். இவருடைய வரவைக் கேட்டதும் அங்கே திருவிழாவிற்கு வந்திருந்த பண்டிதர்கள் பலர் வந்து பார்த்து ஸல்லாபஞ் செய்து கொண்டு உடனிருந்தார்கள்.
மறுநாட் காலையிற் பிச்சுவையர் தாம் ஆலவாயடிகள் திறத்துச் செய்திருந்த நிரோட்டக யமகவந்தாதியை இவரிடம் படித்துக்காட்டிப் பொருள் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, "இது பிழை, அது பிழை" என்று உடனிருந்த [4] பழனிக்குமாரத் தம்பிரான் அடிக்கடி ஆட்சேபஞ் செய்தனர். பிச்சுவையர் உடனுடன் அந்தப் பதங்களை மாற்றி மாற்றி வேறு வேறு பதங்களை யமைத்துச் சிறிதும் வருத்தமின்றி முடித்துக்கொண்டே வந்தார். இதைக் கண்ட இக்கவிஞர்கோமான் தம்பிரானை நோக்கி, "சாமீ, நிரோட்டகத்தில் யமகமாகப் பாடல்கள் செய்திருக்கும் அருமையைச் சிறிதும் பாராட்டாமல் ஒவ்வொரு பாடலிலும் பல ஆட்சேபங்கள் செய்துகொண்டே செல்வது நன்றாக இல்லை. ஆட்சேபிக்க ஆட்சேபிக்க ஆலோசனை செய்யாமல் உடனுடன் வேறு பதங்களை அமைத்து விரைவில் இவர் முடித்து விடுவதைப் பார்த்து இவருடைய திறமையைப்பற்றி வியக்கவேண்டாமா? மேலே சொல்லும்படி தாராளமாக விட்டுவிடுக. ஊக்கத்தைக் குறைக்கக்கூடாது" என்று சொல்லவே அவர் ஆட்சேபியாமல் சும்மா இருந்துவிட்டனர். பின்னர் அந்நூல் முற்றும் படித்துக் காட்டப்பெற்றது.
இப்படியே வந்தவர்களுள் ஒவ்வொருவரும் தினந்தினம் தாங்கள் செய்துவைத்திருந்த நூல்களை இவரிடம் படித்துக் காட்டித் திருத்திக்கொண்டனர். இவரும் சலிப்பில்லாமற் கேட்டு அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி ஆதரித்து வந்தார்.
அங்கே வந்திருந்த சிங்கவனம் சுப்புபாரதியார் முதலியவர்களிடம் ஆகாரம் முதலிய விஷயங்களிற் கவனித்துக் கொள்ளும்படி இவர் என்னை ஒப்பித்தனர்.
சின்னச்சாமி வீரப்பனானது.
பின்பு கட்டளை மடத்தின் கீழ்புறத்திலுள்ள 'சவுகண்டி'யில் இவருக்கு இருப்பிடம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே இவர் பரிவாரங்களுடன் இருந்து வருவாராயினர். சின்னச்சாமி படையாச்சியென்ற மடத்து வேலைக்காரனொருவன் திருவாவடுதுறை மடத்திலிருந்து இவருடன் அனுப்பப்பட்டிருந்தான். அந்த வேலைக்காரனைத் தவசிப்பிள்ளைகள், "அடே சின்னச்சாமி" என்று அடிக்கடி கூப்பாடு போட்டு அழைத்தலையும், "அங்கே போடா, இங்கே வாடா" என்று சொல்லுதலையும் கேட்ட இவர் அவர்களை அழைத்து, "இங்கே கட்டளைச்சாமியைப் பெரியசாமி யென்றும் உதவியாக இருந்துவரும் ஸ்ரீகாசிநாதசாமியைச் சின்னச்சாமியென்றும் ஸ்தலத்தார் மரியாதையாக வழங்கி வருவது உங்களுக்குத் தெரியுமே. ஆதலால் அவனை இன்று முதல் சின்னச்சாமி யென்றழையாமல் வீரப்பனென்றழையுங்கள்" என்று சொன்னார்; அன்றியும் அவனை அழைத்து, "உன்னை இன்று முதல் சின்னச்சாமியென்று அழைக்கமாட்டார்கள்; வீரப்பனென்றே அழைப்பார்கள்; அழைக்கும்போது நீ ஏனென்று கேட்டு, சொன்ன வேலைகளைச் செய்யவேண்டும்" என்று அறிவித்தார். அதுமுதல் அவன் அவ்வாறே அழைக்கப்பட்டுப் பார்க்கவேண்டிய வேலைகளைப் பார்த்து வந்தான். இதனால் இவருடைய கவனம் ஒரு சிறு விஷயத்திலும் செலுத்தப்பட்டமை விளங்குகின்றது.
புராண அரங்கேற்ற ஆரம்பம்.
நல்லதினத்திற் புராணம் அரங்கேற்ற ஆரம்பிக்கப் பெற்றது. அப்போது தம்பிரானவர்கள் பல இடங்களுக்குச் சொல்லியனுப்பினமையால் சமீபமான இடங்களிலிருந்த சில ஜமீன்களின் பிரதிநிதிகளும், சேர்வைகாரர்கள் முதலியவர்களும், பெரிய மிராசுதார்களும், புதுக்கோட்டை அறந்தாங்கி முதலிய இடங்களில் இருந்த உத்தியோகஸ்தர்களும், பண்டிதர்கள் பலரும் வந்து கூடினார்கள்.
குறிப்பிட்டிருந்த நல்ல முகூர்த்தத்தில் திருப்பெருந்துறைப் புராணத்தின் ஏட்டுப்பிரதியை ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமியின் திரு முன்பு பீடத்தில் வைத்துப் பூசித்துப் பிள்ளையவர்களிடம் [5] ஒரு நம்பியார் கொண்டுவந்து கொடுத்தனர். விபூதிப் பிரசாதத்தைக் கொடுத்து மாலை சூட்டிச் சிரத்திற் பட்டுக்கட்டுவித்த பின்பு இவரை உபசாரத்துடனழைத்து வந்து [6] குதிரைஸ்வாமி மண்டபத்தில் இருக்கச்செய்து தொடங்கச்சொன்னார்கள். இவர் கட்டளைப்படி முதலிலிருந்து பாடல்களை நான் படித்தேன். ஒவ்வொன்றற்கும் அழகாகப் பதசாரஞ் சொல்லி இவர் உபந்யசித்தார். கேட்டு எல்லோரும் இன்புற்றார்கள்.
சுப்பிரமணிய தம்பிரானது கோபம்.
நாள்தோறும் பகல் மூன்று மணி தொடங்கி ஐந்துமணி வரையில் அரங்கேற்றுதல் நடைபெறும். நாகபட்டினத்திலிருந்து வந்து அந்தத் தலத்தில் வாசஞ்செய்துகொண்டிருந்தவர்களும் வடமொழி தென்மொழிகளிற் பயிற்சியுள்ளவர்களும் சிவபக்தியுடையவர்களுமாகிய சைவச் செல்வர்களிருவரும் வன்றொண்டர் முதலியோரும் நாள்தோறும் தவறாமல் வந்து வந்து மற்றவர்களுடன் கேட்டுக்கேட்டு மகிழ்ச்சியுறுவார்கள். ஒருநாள் வழக்கப்படி எல்லோரும் வந்தும் வன்றொண்டரும் மேற்கூறிய இருவரும் வருவதற்குத் தாமதித்தமையால் அவர்கள் வரும்வரையில் படிக்கத் தொடங்கவேண்டாமென்று இக்கவிஞர் கோமான் சொன்னார்; அதனால் நான் படிக்கத் தொடங்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் வந்தார்கள். வந்தவுடன் புராணப் பிரசங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அங்ஙனம் தாமதித்ததில் சுப்பிரமணிய தம்பிரானுக்கு இவர்மீது மிகுந்த கோபமுண்டாகிவிட்டது. வாசித்து முடியும்வரையில் பூமியை நோக்கிக்கொண்டே ஒருமாதிரியாக இருந்து நிறுத்தியவுடன் ஒன்றும் பேசாமல் திடீரென்று எழுந்து சென்றுவிட்டார். போனதுமுதல் இவரிடம் பேசவேயில்லை.
வழக்கப்படியே மறுநாள் அரங்கேற்று மண்டபத்திற்கு இவர் சென்றார். புத்தகத்தை எடுத்துக்கொண்டு நான் இவருடன் சென்றேன். அங்கே பலர் காத்திருந்தார்கள். தம்பிரானவர்கள் வரவில்லை. இன்ன காரணத்தால் வரவில்லையென்று தெரியாத இவர் புராணப் பிரசங்கத்தைத் தொடங்காமல் அழைத்து வருவதற்கு அவரைத் தேடிச் சென்றபொழுது அவர் கோயிலின் பின்புறத்தில் நடந்துகொண்டிருந்த திருப்பணி வேலையைக் கண்காணித்துக்கொண்டே நின்றார். அங்கே ஸமீபத்தில் போய் இவர் அஞ்சலி செய்து பார்த்தபொழுது ஏறிட்டுப் பாராமலும் யாதொன்றும் பேசாமலும் சரேரென்று அவ்விடத்தை விட்டு வேறிடத்திற்குப் போய்விட்டார். தொடர்ந்து செல்ல மனமில்லாமல் இவர் நின்று விட்டார்.
அப்பால் இவருடைய குறிப்பறிந்து நான் மட்டும் அவரிடம் சென்று மனத்திலுள்ள கவலையை முகத்தில் நன்றாகப் புலப்படுத்திக்கொண்டு வாட்டத்தோடு அருகில் நின்றேன். நின்றதை அறிந்த அவர், "என்ன ஐயா! உங்கள் பிள்ளைக்கு மரியாதையே தெரியவில்லை? நான் வந்து காத்திருக்கையில் யாரோ சிலபேர்கள் வரும்வரையிற் பொறுத்திருமென்று சொன்னாரே. அப்படிச் சொல்லலாமா? ஊரார் என்ன நினைப்பார்கள்? என்னை மதிப்பார்களா? அவர் செய்தது என் முகத்திற் கரியைத் தீற்றியதுபோலவே இருந்தது. அவரைப் புராணம் பாடும்படி செய்து அரங்கேற்றுதற்கு வருவித்து உபசரிக்கின்றவன் நானா அவர்களா?" என்று சொல்லி மண்டபத்திற்கு வாராமல் நின்று விட்டார். அதனால் சிலநாள் வரையில் புராணம் அரங்கேற்றப்படாமல் நின்றிருந்தது. அப்பால் சிலர் வேண்டுகோளால் அவர் சாந்தமடைந்து வழக்கம்போலவே வந்து படிப்பிக்கச்செய்து கேட்டு வருவாராயினர். தம்பிரானுக்குக் கோபம் ஒருவகையாகத் தணிந்தாலும் இப்புலவர்பிரானுக்கு அவர் செய்த அவமதிப்பால் உண்டான வருத்தம் தீரவே இல்லை. அது மனத்தினுள்ளே வளர்ச்சியுற்று வந்தது.
மனவருத்தத்தோடு இயற்றிய செய்யுட்கள்.
அது வரையில் புராணத்தில் பாடப்பட்டிருந்த பகுதிகள் அரங்கேற்றப்பட்டு முடிந்து விட்டமையால் மேலே உள்ள பகுதிகள் காலையிற் பாடி மாலையில் அரங்கேற்றப்பட்டு வந்தன. ஒருநாட் காலை தொடங்கி இவர் பாடிவருகையில் அப்புராணத்தின் உபதேசப் படலத்தில் மாணிக்கவாசகர் குருந்தமூல குருமூர்த்தியைத் துதிக்கும் செய்யுட்களைப் பாடும் சந்தர்ப்பம் வந்தமையின் நேரமாகியும் நிறுத்தாமல் மேலே எழுதும்படி செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். அப்பொழுது தவசிப்பிள்ளைகள் வந்து ஸ்நானம் செய்வதற்கு வற்புறுத்தி அழைத்தும் எழாமல் துதிப்பாடல்களை ஒரு தடையுமின்றி இவர் சொன்னார்; நான் எழுதிக்கொண்டே வந்தேன். அப்போது இவருக்குத் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக்கொண்டேயிருந்தது. முன்னமேயிருந்த வருத்தமிகுதியே அப் பாடல்களாக வெளிப் போந்ததென்று உடனிருந்தவர்கள் அறிந்து மனமுருகினார்கள். அப்பாடல்கள் வருமாறு :--
இப் புராணத்தில் மாணிக்க வாசகர் சரித்திரமாகிய திருவாதவூரர் திருவவதாரப் படலம் முதலியன வடமொழியிலுள்ள ஸ்ரீ ஆதிகைலாஸ மாஹாத்மியம், மணிவசன மாஹாத்மியம், திருப்பெருந்துறைப் பழைய தமிழ்ப் புராணங்கள், திருவாதவூரடிகள் புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய இவற்றை ஆராய்ந்தே செய்யப் பெற்றன. அரங்கேற்றுகையில் ஒரு நாள் திருவாதவூரடிகள் புராணத்தை ஆராய்ந்து வருங்காலையில் பாண்டியனுடைய தண்டற்காரர்கள் மாணிக்க வாசகரைத் துன்புறுத்தியபொழுது அவர் மனமுருகிச் சிவபெருமானை நினைந்து முறையிட்டனவாக அமைக்கப்பெற்ற,
ஆத்மநாத பாகவதர்.
அந்த ஸ்தலத்தில் ஆத்மநாத பாகவதரென்று ஒருவர் இருந்தார். அவர் சிவகங்கை ஸமஸ்தானத்தைச் சார்ந்த பெருங்கரை யென்னும் ஊரிலிருந்த கவிகுஞ்சர பாரதியாரின் மருகர்; ஒவ்வொரு நாளும் மாலையில் பூஜாகாலத்தில் ஆத்மநாத ஸ்வாமியின் ஆலயத்தில் கீர்த்தனங்கள் முதலியவற்றைப் பாடும் பணியைப் பெற்றவர்களுள் ஒருவர்; சிவபக்தி வாய்ந்தவர்; அவர் சாரீரம் யாதொரு தடையுமின்றி மூன்று ஸ்தாயிகளிலும் செல்லும் வன்மையுடையதாதலின் அவர் வஜ்ரகண்ட பாகவதரென்றும் கூறப்படுவார். அவர் இக் கவிஞர்பிரானிடம் அடிக்கடி வந்து போவதுண்டு. அக்காலங்களில் கவி குஞ்சர பாரதியாரியற்றிய கந்தபுராணக் கீர்த்தனத்திலிருந்து சில கீர்த்தனங்களையும் வேறு கீர்த்தனங்கள் சிலவற்றையும் இவருடைய விருப்பத்தின்படி பாடிக் காட்டுவார். இவர் கேட்டு இன்புற்று அனுப்புவார். உடனிருப்பவர்களும் கேட்டு மகிழ்வதுண்டு. இங்ஙனம் அக்காலத்தில் வந்து பாடி மகிழ்வித்துச் செல்லும் ஸங்கீத வித்துவான்கள் அங்கே சிலர் இருந்தனர்.
சுப்பு பாரதியாருக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது.
ஒருநாள் சிங்கவனம் சுப்பு பாரதியார் தாம் இயற்றிய மதுரைச் சுந்தரேசர் நெஞ்சமாலை முதலிய மூன்று நூல்களை இவரிடம் படித்துக்காட்டித் திருத்தஞ்செய்துகொண்டு அவற்றிற்குச் சிறப்புப்பாயிரங்களையும் பெற்றுச் சென்றார். அவற்றுள் நெஞ்சமாலையின் சிறப்புப்பாயிரம் மட்டும் கிடைத்தது; அது வருமாறு:
சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் சிறப்புப்பாயிரம்.
தஞ்சைச் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரென்பவர் வந்து சில தினமிருந்து திருப்பெருந்துறைப்புராணப் பிரசங்கத்தைக் கேட்டு இன்புற்று ஒன்பது பாடல்களைச் சிறப்புக் கவிகளாகச் செய்து சபையிற் படித்துக்காட்டிச் சென்றனர். அவற்றுள் இவரைப் பற்றிப் பாராட்டிய பாடல்களுள் ஒன்று வருமாறு:
எனக்கு ஜ்வரநோய் கண்டது.
இப்படியிருக்கையில் அப்பொழுது எனக்கு ஜ்வரநோயும் வயிற்றில் ஜ்வரக்கட்டியும் உண்டாகி மிகவும் வருத்தின. அதனால் தளர்ச்சியுடன் படுக்கையிலேயே இருந்து விட்டேன். தக்க பரிகாரங்களை வைத்தியர்களைக் கொண்டு இவர் செய்வித்து வந்தும் ஜ்வரநோய் சிறிதும் தணியவில்லை. அதனால் புராணத்தை ஏட்டிலெழுதும் பணியைக் கும்பகோணம் பெரியண்ணம் பிள்ளை யென்பவரும், அரங்கேற்றும் காலத்துப் படிக்கும் பணியைச் சவேரிநாத பிள்ளையும் ஏற்றுக் கொண்டார்கள்.
புராணம் அரங்கேற்றும் காலமல்லாத மற்றக் காலங்களில் இக்கவிநாயகர் என் பக்கத்திலே இருந்து என்னைக் கவனித்துக் கொண்டும் மேலே அரங்கேற்றுவதற்குரிய பாடல்களைப்பாடி எழுதச்செய்தும் வந்தார்.
ஒருநாள் அரங்கேற்றுதல் ஆனவுடன் பிற்பகலில் என்பால் வந்த இவர் என் பக்கத்திலிருந்து மயக்கம் நீங்கி நான் விழித்துக்கொண்டபொழுது என்னை நோக்கி, "புராணப் பிரசங்கத்தைப் பற்றி மஹாஸந்நிதானத்தினிடமிருந்து (சுப்பிரமணிய தேசிகரிடமிருந்து) கட்டளைச் சாமிக்கு இன்று திருமுகம் எழுந்தருளியிருக்கிறது. அதில், 'புராணப் பாடல்கள் தமக்குத் திருப்தியை யுண்டு பண்ணுவதன்றி அச்செய்யுட்களைச் சாமிநாதையர் படித்தல் தமக்கு ஸந்தோஷத்தைக் கொடுக்கக்கூடுமே' என்று கட்டளை யிட்டிருக்கிறது. உமக்கு உடம்பு இப்படியிருக்கிறதே!" என்று வருத்தம் அடைந்து சொன்னார்.
நான் ஊர் சென்றது.
புராணப் பிரசங்கம் சிறப்பாக நடைபெற்று வந்தது. 'தினந்தோறும் இப்புலவர் கோமானுடைய பிரசங்கத்தைக் கேட்க முடியவில்லையே!' என்ற வருத்தம் என் மனத்தில் வளர்ந்து வந்தது. எனக்கு இருந்த ஜ்வரம் தணியவில்லை. வருபவர்களோடு பேசிக்கொண்டிருப்பதிலும் அரங்கேற்றத்திற்கு வேண்டியவற்றைக் கவனிப்பதிலும் இவருக்கு நேரம் போயினமையின் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்ள முடியவில்லையென்ற வருத்தம் இவருக்கும் இருந்துவந்தது. பலவகை வேலைகளுக்கு இடையில் என்னைப்பற்றிய கவலையையும் இவர் மேற்கொண்டதை அறிந்து நான், "உத்தமதானபுரத்திற்குப்போய்ப் பரிகாரஞ் செய்துகொண்டு ஸெளக்கியம் உண்டான பின்பு வருவேன்" என்று கூறி விடைபெற்றுக்கொண்டேன். இவருக்கு என்னைப் பிரிவதில் வருத்தம் உண்டாயிற்று. நானும் வருந்தினேன். வெண்பாப்புலி வேலுஸாமி பிள்ளையை எனக்குத் துணையாகச் சேர்த்து வேண்டிய செளகரியம் செய்வித்து என்னை இவர் அனுப்பினார். நான் உத்தமதானபுரம் சென்றேன்.
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.
இக் கவிசிகாமணியின் பக்கத்திலிருந்து நாள்தோறும் புராணப் பிரசங்கங்கேட்டு வந்த வன்றொண்டச் செட்டியார் மாணிக்க வாசகர் சரித்திரத்தை இவர் அருமையாகச் செய்திருப்பதை அறிந்து ஒருநாள் இவரிடம், "திருத்தொண்டர்களுடைய பெருமைகளை நன்றாக யாவரும் அறியும்படி பெரியபுராணத்தின் வாயிலாகப் புலப்படுத்தியருளிய சேக்கிழார் திறத்தில் பிள்ளைத்தமிழொன்று ஐயா அவர்கள் செய்தருள வேண்டும்" என்று மிகவும் வணக்கமாய்க் கேட்டுக்கொண்டனர். அப்போது 'பெரிய புராணத்திற்கு வன்றொண்டர் வாய்மொழியாகிய திருத்தொண்டத்தொகை காரணமாக இருந்தது; அப்புராணத்தை இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழுக்கு வன்றொண்டச் செட்டியாரது வாய்மொழியே காரணமாயிற்று. இது நல்ல அறிகுறி' என்று இவர் எண்ணி எண்ணி மகிழ்ந்தனர். அவர் கேட்டுக்கொண்டவாறே சேக்கிழார் பிள்ளைத்தமிழைச் செய்யத் தொடங்கி மிக ஆராய்ந்து சில தினங்களிற் பாடி முடித்தனர்.
பெரிய புராணத்திலுள்ள பலவகை நயங்களையும் அறிந்து பலவருடம் அனுபவித்து இன்புற்றும் இன்புறுவித்தும் வந்தவராதலின் இக்கவிஞர் பிரானுக்குச் சேக்கிழார்பாற் சிறந்த பக்தியிருந்ததென்பதை யாவரும் அறிவார். இயல்பாகவே நாயன்மார்களுடைய வரலாற்றைப் பலவகையில் எடுத்தாண்டு தம்முடைய நூற்பகுதிகளை அழகுபடுத்தும் இயல்புடைய இவருக்கு அந்நாயன்மார் சரிதையை விரிவுறவெளியிட்ட சேக்கிழார் பால் அத்தகைய அன்பு மிக்கிருத்தல் தக்கதன்றோ?
சேக்கிழாருடைய குலம், குணம், அதிகாரம், கல்வி, பக்தி, ஞானம் முதலியவற்றின் பெருமைகளைப் பலபடியாக அப்பிள்ளைத் தமிழில் இக்கவிஞர் கோமான் செவ்வனே பாராட்டியிருக்கிறார்.
காப்புப் பருவத்தில் ஏனைய பிள்ளைத்தமிழ்களில் துதிக்கப்பெறும் திருமால் முதலிய தெய்வங்களை இவர் கூறவில்லை. விரியாகிய பெரிய புராணத்திற்கு அதன் தொகையாகிய திருத்தொண்டத் தொகையிலுள்ள பதினொரு திருப்பாசுரங்களுள் ஒவ்வொன்றிற் கூறப்பட்ட நாயன்மார்களை ஒவ்வொரு செய்யுளால் துதித்துள்ளார். இவ்வாறு காப்புப்பருவத்தில் அமைக்கும் [8]புதுமுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழில் இவரால் முதலில் மேற்கொள்ளப்பட்டது. காப்புப் பருவச் செய்யுளின் தொகைக்கு ஏற்ப அம்முறை இந்த இரண்டு நூல்களிலும் பொருத்தமாக அமைந்த வாய்ப்பைத் தியாகராச செட்டியார் அடிக்கடி பாராட்டுவதுண்டு.
‘பெரிய புராணத்திற் பலவகைச் சொல்லணி, பொருளணி, பொருள்கோள்கள் அமைந்தும், பலவகை அழகுகள் நிரம்பியும், முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முதலியவை காப்பிய இலக்கணப்படி பாடப்பட்டுமுள்ளன. தமிழ் நடை செவ்விதாக அமைந்துள்ளது. தேவாரத்திலுள்ள பலவகை மந்தணப்பொருள்கள் அங்கங்கே வெளிப்படுத்தப்பட்டும் தொண்டர்கள் அருமை பெருமைகள், அவரவர் நிலை, சாதி, குணம், மார்க்கம் முதலியவை விளக்கப்பட்டும் இருக்கின்றன' என்ற செய்திகளை அங்கங்கே அப்பிள்ளைத் தமிழில் இவர் புலப்படுத்தியிருக்கின்றார்:
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தில் ஐந்திணைகளின் வளத்தைக் கூறுதலுடன் அவ்வத்திணையிலுள்ள சிவதலங்களைச் சொல்லியிருக்கும் முறை முதன்முதலாகப் பெரிய புராணத்திலேதான் காணப்படுகிறது. அதனை இவர் அறிந்தவராதலின் தாம் இயற்றிய புராணங்கள் பலவற்றில் அதனை மேற்கொண்டனர். அம்முறையை அறிவித்தது சேக்கிழார் திருவாக்கே என்பதை,
'அமங்கலமாம் சொற்கள் புணராது அறக்களைந்து' என்றது, மெய்ப்பொருள் நாயனார் புராணத்தில் முத்திநாதன் மெய்ப்பொருள் நாயனாரை வாளால் வீழ்த்தினானென்பதை வெளிப்படையாகக் கூறாமல்,
"பத்திரம் வாங்கித் தான்முன் நினைந்தவப் பரிசே செய்ய"
என்று பாடியிருத்தலையும், ஏனாதிநாத நாயனார் புராணத்தில் அதிசூரனென்பவன் ஏனாதிநாத நாயனாரை வாளாலெறிந்ததை அங்ஙனமே,
"முன்னின்ற பாதகனுந் தன்கருத்தே முற்றுவித்தான்"
என்று கூறியிருத்தலையும், இவைபோன்ற பிறவற்றையும் நினைந்தேயாகும்.
சேக்கிழாரைப்பற்றிக் கூறும் இடங்களில்,
அவருடைய பலவகை ஆற்றல்களைப் பாராட்டும் பின்வரும் செய்யுள் அறிந்து இன்புறற்குரியது :
[10]சேக்கிழார் பிள்ளைத்தமிழை இவர்பால் வரும் வித்துவான்களும் பிறரும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்து பாராட்டி வந்தனர். இவரே அதனை மீண்டும் மீண்டும் படிப்பித்துக் கேட்டு இன்புறுவதுமுண்டு. இவர் இயற்றிய பிள்ளைத் தமிழ்களுள் இறுதியிற் செய்தது அதுதான். தேவாரம் பெரிய புராணம் முதலிய நூல்களில் ஈடுபட்டுள்ள வித்துவான்கள் அந்தப் பிள்ளைத் தமிழில் ஈடுபடாமலிரார்.
அப்புசாமிப் புலவருக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது.
திருப்பெருந்துறையைச் சார்ந்த ஏம்பலென்னும் ஊரிலுள்ள அப்புசாமிப் புலவரென்னும் பரம்பரைக் கல்விமான் ஒருவர் தம்முடைய குமாரரான அருணாசலப் புலவரென்பவரை அழைத்துக்கொண்டுவந்து இவரிடம் விட்டு, "சில வருடம் இவனை உடன் வைத்துப் படிப்பித்து அனுப்பவேண்டும்" என்று பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார்; அவ்வாறே அவருக்கு இவர் பாடஞ் சொல்லிவந்தார்; அப்பால் அப்புசாமிப்புலவர் ஏம்பலிலுள்ள முத்தையனென்னும் ஐயனார் மீது தாம் பாடியிருந்த பிள்ளைத் தமிழொன்றைப் படித்துக்காட்டிச் செப்பஞ் செய்து கொண்டதன்றி இவருடைய சிறப்புப் பாயிரமொன்றையும் பெற்றுச் சென்றார். அச்சிறப்புப் பாயிரம் வருமாறு:
சிங்காரவேலுடையார்.
திருப்பெருந்துறைக்கு அருகிலுள்ள தம்முடைய கிராம மொன்றைப் பார்க்கவந்த [11]தண்ணீர்க்குன்றம் சிங்காரவேலுடையாரென்னும் பிரபு ஒருவர் இவர் திருப்பெருந்துறையில் இருப்பதை அறிந்து சில அன்பர்களுடன் வந்தார். ஒரு தினம் இருந்து புராணப்பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டியதோடு, "இந்தப் புராணத்தை முடித்துவிட்டுத் திருவாவடுதுறைக்குச் செல்லும்பொழுது தண்ணீர்க்குன்றத்திற்கு வந்து சில தினம் இருக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்; அன்றியும் தம்முடைய ஊருக்கு அருகிலுள்ள திருவெண்டுறையென்னும் ஸ்தலத்துக்கு ஒரு பிரபந்தமாவது புராணமாவது செய்து சிறப்பிக்க வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டு சென்றார்.
அரங்கேற்றத்தின் பூர்த்தி.
அப்பால் ஒரு நல்ல தினத்தில் திருப்பெருந்துறைப்புராண அரங்கேற்றத்தின் பூர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. அதற்காக அழைக்கப்பட்டுப் பட்டுக்கோட்டைத் தாலூகாவிலுள்ள பாலைவனம், நகரம் முதலிய சில ஜமீன்களிலிருந்து பிரதிநிதிகளும், உத்தியோகஸ்தர்களும், புதுக்கோட்டையிலிருந்து பல உத்தியோகஸ்தர்களும், நாட்டுக்கோட்டைத் தனவைசியப் பிரபுக்களிற் பலரும், வேறு சிலரும் வந்து சிறப்பித்தார்கள். அப்புராணம் ஒரு சிவிகையில் வைத்து ஊர்வலம் செய்விக்கப்பெற்றது. அச் சிறப்பு ஓர் அரசருடைய விவாக ஊர்வலம் போலவே நடைபெற்றது. அப்போது சுப்பிரமணிய தம்பிரான் முதலில் வாக்களித்திருந்தபடியே ரூபாய் இரண்டாயிரம் இவருக்கு ஸம்மானம் செய்ததன்றி உடன் இருந்த மாணாக்கர்களுள் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய தகுதிக்குத் தக்கபடி மரியாதை செய்தார். அத்தொகைகள் அவருடைய சொந்தச் சம்பளத்திலிருந்து மிகுத்து வைக்கப்பெற்றவை.
அந்த விசேஷத்திற்கு வந்திருந்த கனவான்கள் ஊருக்குச் செல்லுகையில் இக்கவிச்செல்வரைக் கண்டு திருவாவடுதுறைக்குப் போகும்பொழுது தத்தம் இடங்களுக்கு வந்து சில தினங்கள் இருந்து சிறப்பித்துச் செல்லவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.
அக்காலத்தில் இருந்த ஜமீன்தார்களும் பிரபுக்களிற் பெரும்பான்மையோரும் கல்விமான்களோடு பழகுதலையும் அவர்களை ஆதரித்தலையும் தங்களுடைய கடமையாகக் கருதி வந்தார்கள். வித்துவான்களோடு சம்பாஷித்தலே அவர்களுக்குப் பொழுதுபோக்காக இருந்தது. ஒவ்வொருவரிடத்திலும் வடமொழியிலும் தமிழிலும் ஸங்கீதத்திலும் வல்ல ஒவ்வொருவர் இருந்தே வருவார். அவரவருடைய வருவாயில் வேறு செலவுகள் அக்காலத்தில் அதிகமாக இல்லாமையால் வித்துவான்களை ஆதரிப்பதில் விஞ்சவேண்டுமென்று ஒருவரைவிட ஒருவர் ஊக்கங் காட்டியும் வந்தனர். ஆதலால், பிள்ளையவர்கள் தங்கள் ஊருக்கு வந்து போதலை அவர்கள் பெரிய பாக்கியமாகவே கருதினார்கள்.
திருப்பெருந்துறைப் புராண அமைப்பு.
திருப்பெருந்துறைப் புராணத்தில் முதலில் 27-செய்யுட்களடங்கிய கடவுள் வாழ்த்தும் அவையடக்கமும் திருநாட்டுப் படலம் முதலிய 32-படல உறுப்புக்களும் அமைந்துள்ளன. இதிலுள்ள செய்யுட்களின் தொகை 1659 .
உருவம், அருவம், அருவுருவமென்னும் மூவகைத் திருமேனிகளுள்ளே சிவபெருமான், அம்பிகையும் தாமும் அருவத் திருமேனிகொண்டு எழுந்தருளி விளங்கும் இடம் இந்தத் திருப்பதியே. இதனை இப்புராணத்தில் பல இடங்களிற் புலப்படுத்தியிருக்கிறார் ; அவற்றுள் ஒன்று வருமாறு:
பிரமதேவர், திருமால், காலாக்கினி யுருத்திரர், மாணிக்க வாசகர், சோழராசன், அதர்மன், இலக்குமி, ஒரு வேடன் என்பவர்கள் செய்தனவாக இந்நூலில் உள்ள துதிச் செய்யுட்கள் மனத்தை உருக்கி அன்பை மிகுவிக்கும்.
இப் புராணத்திலுள்ள அருமையான செய்யுட்களிற் சில வருமாறு:-
[இச்செய்யுள் விரோதவணி. அரைப்புலித்தோல்: அரை - இடை; காற்புலி - காலாற்புலியாகிய வியாக்கிரபாதமுனிவருடைய; இவற்றில் அரை, காலென்னும் பின்ன எண்களின் பெயர்கள் தொனிக்கின்றன. வரைப்பு - எல்லை. ஒரு பாம்பு - பதஞ்சலி முனிவர். மேக்கு திரை பயம் மாது - திருமுடி மேலுள்ள அலையையுடைய நீராகிய கங்கை; மேக்கு - மேல்; இதில் திரையையும் அச்சத்தையும் உடைய முதியவளென்னும் வேறொரு பொருள் தோற்றுகின்றது. அலைஇ - அலைந்து. கிழக்கு - கீழ். இளங்கன்னி - சிவகாமியம்மை.]
[இருவாத - இருத்தாத. ஒருவாத - நீங்காத.]
படலந்தோறும் முதற்கண் உள்ள திருவாதவூரடிகளின் துதிகளுள்ளே சில வருமாறு:
திருவாதவூரடிகளுடைய வரலாற்றைக் கூறும் பகுதிகள் பெரிய புராணத்தைப் போன்ற அமைதியையும் அழகையும் உடையனவாக விளங்கும். நைமிசமுனிவர் பெருந்துறை யடைந்து பூசித்த படலத்தில், திருப்பெருந்துறையைத் தரிசித்தற்கு வரும்பொழுது சூதமுனிவர் சவுனகாதியருக்கு இடையிலுள்ள தலங்களைக் காட்டுவதாக உள்ள பகுதியில் அறுபத்து மூன்று தலங்கள் வெளிப்படையாகக் கூறாமல் பலவகைக் குறிப்புக்களால் கூறப்பட்டுள்ளன. அவற்றால் அத்தலங்களின் வரலாறுகளுள் அரியனவாகிய சில செய்திகள் புலப்படும்.
----------------------
[1] இவர் பிள்ளையவர்களிடத்துப் படிக்க வந்த சில தினத்திற்குப் பின்பு மற்றவர்களைப்போலே தாமும் இருக்கவேண்டுமென்றெண்ணித் திரு நீறு தரித்துக்கொள்வாராயினர். அதனைக் கண்ட பிள்ளையவர்கள், "இனிச் சவேரிநாதைச் சிவகுருநாத பிள்ளையென்றே அழையுங்கள்" என்று சொன்னார். மடத்திலும் பிற இடங்களிலுமுள்ள யாவரும் அதுமுதல் அவ்வாறே அழைப்பாராயினர்.
[2]வேம்பற்றூரெனவும் வழங்கும்.
[3] ஒருகாலத்திற் சிவகங்கை ஸமஸ்தானத் தலைவராக இருந்த முத்துவடுகநாத
துரையென்பவர் மீது பிச்சுவையர், காதலென்னும் ஒரு பிராபந்தம் செய்து அரங்கேற்றி ஸம்மானம் பெற்றனர். அப்பொழுது அங்கே ஆஸ்தான பண்டிதராக இருந்த முத்துவீரப்பப்பிள்ளை யென்பவர் அவரைப்பார்த்து, முத்துவடுகநாத துரையென்பதை ஒரு வெண்பாவிலமைத்து ஐந்து நிமிஷத்திற் பாட வேண்டுமென்று கூறினார். பிச்சுவையர் அப்படியே செய்துவிட்டார். அச்செய்யுளின் முன்னிரண்டடிகள் எனக்குக் கிடைக்கவில்லை. பின் இரண்டடிகள் மட்டும் கிடைத்தன. அவை வருமாறு :
"கவடுக நாதனையே கைதொழுது வாழ்முத்
துவடுக நாத துரை"
[கவடு உகத் தொழுதென்க; கவடு - வஞ்சனை. நாதன் - சிவபெருமான்.]
அந்த வரலாற்றை ஒரு சமயம் பிள்ளையவர்கள் கேட்டு வியப்புற்று அது தொடங்கி அவரைக் காணுந்தோறும் 'துவடுக நாத துரை’ என்றே அன்புடன் அழைப்பாராயினர்.
[4] இவரும் பிச்சுவையரும் சின்னப்பட்டம் ஸ்ரீ நமச்சிவாய தேசிகரிடம் கல்லிடைக்குறிச்சியிற் படித்தவர்கள்.
[5] இவர் ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமியை அர்ச்சிப்பவர்; அத்தலத்தில் உள்ள அந்தணர் முந்நூற்றுவர்களைச் சார்ந்தவர்.
[6] இதன்பால் ஸ்வாமி அசுவாரூட மூர்த்தியாக எழுந்தருளியிருக்கின்றமையின் இஃது இப்பெயர் பெற்றது; இத்தலத்துள்ள ஸபைகள் ஆறனுள் இது கனகஸபையென்று கூறப்படும்.
[7] இப்புத்தகம் 116 - ஆம் பக்கம் பார்க்க.
[8] முதற்பாகம், 224 - ஆம்பக்கம் பார்க்க.
[9] தோட்டி - அழகு.
[10] இந்நூல் பிற்காலத்தில் இவருடைய மாணாக்கராகிய ஆறுமுகத் தம்பிரானவர்களால் சிறப்புப்பாயிரத்தோடு தனியே பதிப்பிக்கப் பெற்றது; மீ.பிரபந்தத்திரட்டு, 722-824.
[11] இது மன்னார்குடி தாலூகாவிலுள்ளதோரூர்.
---------------------
திருப்பெருந்துறையினின்றும் புறப்பட்டது.
பின்பு இக் கவிஞர்பெருமான் திருப்பெருந்துறையினின்றும் புறப்பட எண்ணிச் சுப்பிரமணிய தம்பிரானிடம் பிரியாவிடைபெற்றுக் கொண்டார். இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிதற்கு மனமில்லாதவராகி வருந்தினார்கள். பின்பு ஒருவாறு ஆறுதல் கூறி விடைபெற்று இவர் புறப்பட்டார்.
குன்றக்குடி சென்றது.
அப்பொழுது இவரை அழைத்து வரவேண்டுமென்று குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனத் தலைவரான ஸ்ரீ ஆறுமுக தேசிகர் அனுப்ப, அவ்வாதீனத்தில் முதற் குமாஸ்தாவாக இருந்தவரும் சிறந்த தமிழ்க் கல்விமானும் அருங்கலை விநோதருமாகிய அப்பாப்பிள்ளை யென்பவர் வந்து அழைத்தார். அவருடன் புறப்பட்ட இவர் இடையிலேயுள்ள அன்பர்களின் வேண்டுகோளின்படி அவ்வவ்விடங்களுக்குச் சென்றுவிட்டுக் குன்றக்குடி சென்றார். அங்கே ஆதீனத் தலைவர் இவரை வரவேற்று உபசரித்துச் சில தினங்கள் இருக்கும்படி செய்து தக்க ஸம்மானங்கள் வழங்கிப் பின்பு பல்லக்கு வைத்து அனுப்பினார். அக்காலத்தில் அவர் மீது இவர் இயற்றிய சில பாடல்கள் உண்டு. அவை இப்பொழுது கிடைக்கவில்லை.
குருபூசை மான்மியம்.
அப்பால் இவர் வன்றொண்டச் செட்டியார், சத்திரம் அருணாசல செட்டியார், வெளிமுத்தி வைரவ ஐயா என்பவர்களால் அழைக்கப்பட்டுத் தேவகோட்டைக்குச் சென்று சிலநாள் இருந்து அங்கேயுள்ள கனவான்களால் உபசரிக்கப்பெற்றார். பிறகு காரைக்குடி சென்று அங்கே அறுபத்து மூவர் குருபூசை மடத்தில் தங்கினார். அங்கே சில தினம் இருந்தபொழுது குரு பூசையின் பெருமையைப் புலப்படுத்திச் சில செய்யுட்கள் இயற்றித் தரவேண்டுமென்று அங்கேயிருந்த மெ.பெரி. ராம. மெய்யப்ப செட்டியா ரென்பவர் கேட்டுக்கொள்ளவே, குருபூசை மான்மியமென்ற ஒரு நூல் விரைவில் இயற்றி இவரால் அளிக்கப்பெற்றது. அது பதினைந்து செய்யுட்களையுடையது; அச்சிடப்பெற்று வழங்குகின்றது. மெய்யப்ப செட்டியார் கேட்டுக்கொண்டதையும் உடனே விரைவில் யாதொரு தடையுமின்றி இவர் இயற்றியளித்ததையும் உடனிருந்து பார்த்தவராகிய காரைக்குடி சொக்கலிங்கையா அடிக்கடி சொல்லிப் பாராட்டிக்கொண்டேயிருப்பார். அம் மான்மியத்திலுள்ள முக்கியமான செய்யுட்கள் வருமாறு:
காரைக்குடியி லிருந்தபொழுது அவ்வூரிலும் அயலூரிலும் இருந்த தமிழ் வித்துவான்கள் வந்துவந்து இவரைப் பார்த்துத் தத்தம் கருத்துக்களை நிறைவேற்றிக்கொண்டு சென்றார்கள். அவர்களுள், மழவராயனேந்தலென்னும் ஊரினராகிய அஷ்டாவதானம் பாலசுப்பிரமணிய ஐயரென்பவர் இயற்றிய குன்றைத் திரிபந்தாதியைக் கேட்டு மகிழ்ந்து அவருடைய விருப்பத்தின்படியே இவர் ஒரு சிறப்புப் பாயிரம் அளித்தனர்; அது வருமாறு:
அதன்பின்பு முற்கூறிய பாலைவனம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்கங்கேயுள்ள ஜமீன்தார்களால் உபசரிக்கப்பெற்றுச் சில தினங்கள் இருந்தார். அங்ஙனம் சென்ற இடங்களில் தம்மை அன்புடன் ஆதரித்தவர்கள் திறத்தில் நன்றி பாராட்டி இவர் செய்த தனிப்பாடல்கள் பல உண்டு. அவை இப்பொழுது கிடைக்கவில்லை.
சிங்கவனம் சென்றது.
இவருடைய மாணாக்கராகிய சுப்பு பாரதியாரையும் அவர் பரம்பரையினரையும் ஆதரித்து வந்த சிங்கவனம் ஜமீன்தார் அந்தப்பாரதியார் முதலியவர்களை அனுப்பி இவரை அழைத்து வரச் செய்து சில தினம் உபசாரத்துடன் வைத்திருந்து சம்பாஷணை செய்து இன்புற்றார். அந்த ஜமீன்தாருடைய நற்குண நற்செய்கைகளையும் அவருக்குத் தமிழில் இருந்த ஈடுபாட்டையும் அறிந்து மகிழ்ந்து அவர்மீது இவர் செய்த பாடல்கள் வருமாறு:
அப்பால் வழியிலுள்ள ஊர்களிற் பல கனவான்களால் உபசரிக்கப்பட்டுத் திருவாவடுதுறையை நோக்கிவருகையில் புதுக்கோட்டையைச் சார்ந்த திருக்கோகர்ணம் சென்று அந்த ஸமஸ்தான வித்துவானான கணபதி கவிராயர் வீட்டில் தங்கினார்.
இவர் வரவைக் கேள்வியுற்ற புதுக்கோட்டையிலுள்ள தமிழபிமானிகள் பலர் வந்துவந்து விசாரித்துவிட்டுச் சம்பாஷித்து வேண்டியவற்றை அப்பொழுது அப்பொழுது அளித்து வந்ததன்றிச் சிலதினம் இருந்து செல்லும்படிக்கும் கேட்டுக்கொண்டார்கள்.
புதுக்கோட்டை மன்னராகிய கெளரவம் பொருந்திய இராமசந்திர தொண்டைமானவர்களுடைய மூத்த தேவியாரான ஸ்ரீ பிரகதம்பா பாய்சாகேபவர்கள் அங்கே இவர் வந்திருத்தலைக் கேள்வியுற்றுத் தக்கவர்களை அனுப்பி இவரை அரண்மனைக்கு அழைத்துவரச் செய்து நாடோறும் பல அரிய விஷயங்களைக் கேட்டார்கள். தேவாரங்கள் சிலவற்றிற்கும் பெரிய புராணத்திலுள்ள பாடல்கள் சிலவற்றிற்கும் பொருள் கேட்டு அறிந்து தக்க ஸம்மானங்கள் பல செய்வித்து இவருடைய பூஜைக்கு வேண்டிய பாத்திரங்களை வெள்ளியினாலே செய்வித்து அளித்தார்கள்.
பின்பு இவர் புதுக்கோட்டையிலேயே ஒரு மாதம் இருந்தார். அப்பொழுது சிறந்த உணவுப்பொருள்கள் இவருக்கு அரண்மனை உக்கிராணத்திலிருந்து நாள்தோறும் அனுப்பும்படி திட்டம் செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது பாய்சாகேப் அவர்களுடைய அன்புடைமையைப் பாராட்டி இவர் ஐந்து பாடல்கள் இயற்றினார். அவை கிடைக்கவில்லை. அப்பால் ஆறுமுகத்தா பிள்ளை முதலிய அன்பர்கள் இவர் புதுக்கோட்டைக்கு வந்திருப்பதைக் கேள்வியுற்று இவரைப் பட்டீச்சுரத்துக்கு அழைத்துச் செல்வதற்கு அங்கே வந்து இவருடன் சில தினம் இருந்தார்கள்.
திருவரன்குளப் புராணம்.
புதுக்கோட்டைக்கு அருகிலுள்ளதான திருவரன்குளமென் னும் சிவஸ்தலத்து அபிமானிகளாகிய வல்லநாட்டுப் பெருங்குடி வணிகர் சிலர் வந்து இவரைப் பார்த்துப் பேசி மகிழ்ச்சியுற்றனர்; திருவரன்குளத்திற்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு போகவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அங்ஙனமே இவர் அங்கே சென்று ஸ்ரீ ஹரதீர்த்தஸ்தலேசரையும் பெரிய நாயகியம்மையையும் தரிசனம் செய்தனர். அக்காலத்தில் அத் திருக்கோயில் அர்ச்சகர்களாகிய ஆதிசைவர்களும் தருமகர்த்தர்களாகிய மேற்கூறிய வணிகர்களும் அத்தலத்திற்கு ஒரு வட மொழிப் புராணம் இருப்பதைச் சொல்லி அதனை மொழிபெயர்த்துத் தமிழ்க் காப்பியமாகப் பாடித் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அங்ஙனமே செய்வதாக இவர் வாக்களித்து வடமொழிப் புராணத்தை வாங்கிக்கொண்டு சென்றனர். புதுக்கோட்டைக்கு மீண்டு வந்த பின்பு அங்கேயே இருந்து அந் நூலிற் சில பாடல்களை இயற்றினர்; திருவாவடுதுறைக்கு வந்தபின்பும் சில செய்யுட்கள் இயற்றப்பெற்றன. [3] கடவுள் வாழ்த்து, ஆக்குவித்தோர் வரலாறு, அவையடக்கமென்பனவும் திருநாட்டுப் படலத்தில் பத்துப் பாடல்களுமே இவராற் செய்யப்பெற்றன. பின்பு அது பூர்த்திசெய்யப் பெறவில்லை. அதிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:
அப்பால் அந்நகரிலிருந்து புறப்பட்டுத் தஞ்சை வழியாகக் கும்பகோணம் வந்து தியாகராச செட்டியார் வீட்டில் தங்கினார். அப்பொழுது திருப்பெருந்துறையிற் கிடைத்த ரூ. இரண்டாயிரமும் இடையிடையே சில ஜமீன்தார் முதலியவர்களால் கிடைத்த ரூ. இரண்டாயிரமும் ஆக ரூபாய் நாலாயிரமும் இவரிடம் இருப்பதை உடன் வந்தவர்களால் அறிந்த தியாகராச செட்டியார் இவரைப் பார்த்து, "இந்தத் தொகையை என்னிடம் கொடுத்தால் வட்டிக்குக் கொடுத்து விருத்திபண்ணி வட்டியை அவ்வப்பொழுது ஐயா அவர்களுடைய குடும்ப ஸெளகரியத்திற்காக அனுப்பிவருவேன். அந்த நாலாயிரமும் குடும்பத்துக்கு மூலதனமாக இருக்கும். உங்கள் கையிலிருந்தால் சில தினங்களிற் செலவழித்து விடுவீர்கள். இளமைப் பருவத்தில் நீங்கள் பணத்தின் அருமையை அறிந்ததுபோல இப்பொழுது அறிந்து கொள்ளவில்லை. உங்களுக்கு என்னைப்போலச் சொல்லுபவர்கள் ஒருவருமில்ல; நான் சொல்வதைக் கேட்கவேண்டும்" என்றார். அதற்கு இவர் சிறிதும் உடன்படவில்லை. இவர் இளமையில் வறுமையால் துன்புற்றதை அவர் விரிவாக அறிவித்துப் பல முறை வற்புறுத்தியும் இவர் கேட்கவில்லை.
அப்பொழுது பிள்ளையவர்களுடன் இருந்த சுப்பையா பண்டாரத்தைத் தியாகராச செட்டியார் பார்த்து, "நீரும் உடன்போய் வந்தீரா? யாராவது உம்மைத்தெரிந்து கொண்டார்களா?" என்று கேட்டார். அவர், "ஐயா அவர்களைக் கேட்டால் தெரியும்" எனவே, செட்டியார் பிள்ளையவர்களைப் பார்த்தனர்; இவர், "நான் சென்ற இடங்களில் பெரும்பான்மையானவர்கள் இவருக்குத் தெரிந்தவர்களாகவே இருந்தனர்; இவர் உடன் இருந்தது அவர்களுடன் பழகுவதற்கு எனக்கு அநுகூலமாக இருந்தது" என்றார். கேட்ட செட்டியார் வியப்புற்றார்.
பட்டீச்சுரம் சென்றது.
பின்பு ஆறுமுகத்தாபிள்ளையினது வேண்டுகோளால் இவர் அங்கிருந்து பட்டீச்சுரம் சென்று சில தினம் இருந்தார். அங்கே இருந்த நாட்களுள் ஒருநாள் இரத்தினம் பிள்ளை சோழன் மாளிகைக்கு இவரை அழைத்துச் சென்று உபசரித்தனர். அவருடைய அன்புடைமையை நினைந்து இவர்,
திருவாவடுதுறைக்கு வந்துசேர்ந்தது.
சில தினங்களுக்கப்பால் இவர் பட்டீச்சுரத்திலிருந்து திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தார். வந்தவுடன் திருப்பெருந்துறை முதலிய இடங்களில் நிகழ்ந்தவற்றை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பிக்க அவர் கேட்டு மிகவும் சந்தோஷித்தார். புராணத்திலுள்ள சில பகுதிகளையும் சேக்கிழார் பிள்ளைத்தமிழையும் படிக்கச் சொல்லி மெல்லக் கேட்டுக் கேட்டுப் பிள்ளையவர்களுடைய பெருமையை உடனுடன் பாராட்டிக் கொண்டே வந்தார்.
கொண்டுவந்த தொகையில் அவசரமாகக் கொடுக்க வேண்டிய கடன்களைத் தீர்த்த பின்பு எஞ்சியதைத் தாமே வைத்துக் கொண்டு சில தினங்களில் சிறிதும் பாக்கியில்லாமல் தாராளமாக இவர் செலவழித்து விட்டனர்.
கஞ்சனூர்ச் சாமிநாதையர்.
திருவாவடுதுறைக்கு வடமேற்கிலுள்ள கஞ்சனூரில் சாமிநாதையரென்ற ஒரு மிராசுதார் இருந்தனர். அவ்வூரிலுள்ள சில தமிழ்க்கல்விமான்களுடைய பழக்கத்தால் சில பிரபந்தங்களையும் நைடதம் திருவிளையாடல் முதலியவற்றையும் அவர் படித்தறிந்தார். இவரிடம் படிக்கவேண்டுமென்ற எண்ணத்துடன் இவர்பால் வந்து தம்முடைய விருப்பத்தைப் புலப்படுத்தி ஆங்கிரஸ வருஷந் தொடங்கிப் பாடங் கேட்டு வந்தார். அடிக்கடி இவரை மாணாக்கர்களுடன் தம்மூருக்கு அழைத்துச் சென்று விருந்து செய்வித்து அனுப்புவார்; சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர். அவரிடத்தில் இவருக்கும் விசேஷ அன்புண்டு. தம்முடைய தவசிப் பிள்ளைகளுள் ஒருவராகிய சாமிநாத செட்டியாரென்பவருக்கு வீடு கட்டுதற்கு விட்டம் முதலியவற்றிற்காக மரங்களை விலைக்கு வாங்கி அனுப்பவேண்டுமென்று இவர் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அதன் தலைப்பில்,
அவர் அதைப் பார்த்துவிட்டு உடனே ரூ. 200 மதிப்புள்ள மரங்களை வாங்கி அனுப்பினார். அவற்றின் விலையை இவர் கொடுக்கத் தொடங்குகையில் அவர் வேண்டாமென்று மறுத்து விட்டார். அம்மரங்களைக் கொண்டு வீடு கட்டப்பட்டு நிறைவேறியது; அவ்வீடு இன்றும் உள்ளது.
வீழிதாஸ நயினார்.
ஒரு சமயம் திருவீழிமிழலையிலிருந்து வீழிதாஸ நயினாரென்னும் ஒரு பிரபு திருவாவடுதுறைக்கு வந்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்தார். அவர் திருவீழிமிழலை ஆலயத்திற்குப் பெரும்பொருள் செலவிட்டுப் பலவகைத் திருப்பணிகளைச் செய்தவர். பிள்ளையவர்களைக் கொண்டு அத்தலத்துக்குப் புதிதாக ஒரு புராணம் இயற்றுவிக்க வேண்டுமென்பது அவருடைய விருப்பம், அதற்காக அத்தலத்திற்குரிய வடமொழிப் புராணத்தையும் பழைய தமிழ்ப்புராணத்தையும் கொணர்ந்திருந்தார். அவற்றை இக்கவிஞர்பெருமானிடம் கொடுத்துத் தம்முடைய விருப்பத்தை வெளியிட்டார். இவர் அவற்றை வாங்கி வைத்துக்கொண்டு அங்ஙனமே செய்வதாகக் கூறினார். ஆனாலும், இவருக்கு உண்டான தேக அஸெளக்கியத்தால் அது பாடுதற்குத் தொடங்கப்படவேயில்லை.
[4] மருதவாணர் பதிகம்.
பவ வருஷத்தில் குமாரசாமித் தம்பிரானுக்குத் தேக அசெளகரியம் உண்டாயிற்று. ஆதீனத் தலைவருடைய கட்டளையின்படி திருவிடைமருதூர் சென்று கட்டளை மடத்தில் தங்கி அங்கேயுள்ள தக்க வைத்தியர்களிடம் மருந்து வாங்கி உட்கொண்டு வந்தார். அப்பொழுது அவரைப் பார்க்கச் சென்ற இவர் அவர் தேக நிலையையறிந்து வருத்தமுற்றார். அவர், "தினந்தோறும் நான் ஸ்தோத்திரம் பண்ணும்படி ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியின் மீது ஒரு பதிகம் இயற்றித்தரல் வேண்டும்" என்று விரும்பவே, இவர் ஒரு பதிகம் இயற்றினார். அது மருதவாணர் பதிகமென்று வழங்கும். அதை அவர் தினந்தோறும் பாராயணம் செய்து கொண்டு வந்தார்.
அப்பதிகத்திலுள்ள 1, 4, 9- ஆம் செய்யுட்களால் நோயை நீக்கவேண்டுமென்று விண்ணப்பித்திருத்தல் விளங்கும். சில தினத்தில் அவருக்குப் பிணி நீங்கிவிட்டது. அப்பால் அவர் திருவாவடுதுறைக்கு வந்து வழக்கம் போலவே பாடங் கேட்டு வந்தார்.
'சூரியமூர்த்தி சாட்சி.'
ஒருநாள் முன்ஸீப் வேதநாயகம் பிள்ளை சில உத்தியோகஸ்தர்களோடு மாயூரத்திலிருந்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய தரிசனத்திற்கு வந்தார்; அவர்களுள் டிப்டி கலெக்டராக இருந்த சூரியமூர்த்தியா பிள்ளை யென்பவர் முக்கியமானவர். தேசிகருடைய குணங்களில் ஈடுபட்ட வேதநாயகம் பிள்ளை தாம் இயற்றிய சில புதிய பாடல்களைச் சொல்லிக் காட்டினர். அப்பொழுது மகிழ்ந்து இவர் சொல்லிய பாடல் வருமாறு :
ஷஷ்டியப்த பூர்த்தி.
இவருக்கு அப்போது பிராயம் 60 ஆகிவிட்டமையால் அதனை யறிந்த சுப்பிரமணிய தேசிகர் அக்காலத்தில் இவருக்கு நடத்த வேண்டிய ஷஷ்டியப்த பூர்த்தி யென்னும் விசேஷத்தைப் பங்குனி மாதத்தில் மடத்துச் செலவிலிருந்தே மிகவும் சிறப்பாக நடத்துவித்தார்.
அம்பர் சென்றது.
அம்பர்ப்புராணம் பூர்த்தியாகியும் அரங்கேற்றப்படாமல் இருந்ததையறிந்த சுப்பிரமணிய தேசிகர் அப்புராணத்தை ஆக்குவித்தோராகிய அம்பர் [5]வேலாயுதம் பிள்ளை யென்பவருக்கு அந் நூலை விரைவில் அரங்கேற்றுவித்தல் உத்தமமென்று ஒரு திருமுகம் அனுப்பினார். அவர் அதனைச் சிரமேற்கொண்டு விஷயத்தைப் படித்தறிந்து உடனே திருவாவடுதுறைக்கு வந்து தேசிகரைத் தரிசனம் செய்துவிட்டுப் பரிவாரங்களுடன் இக்கவிநாயகரை அழைத்துக் கொண்டு சென்றார்; அங்கேயிருந்த சொர்க்கபுர ஆதீன மடத்தில் இவரைத் தங்கும்படி செய்து வேண்டிய சௌகரியங்களைச் செய்வித்து நாடோறும் சென்று ஸல்லாபம் செய்து வந்தனர்.
நான் அம்பருக்குச் சென்று இவரைப் பார்த்தது.
முன்பு திருப்பெருந்துறையிலிருந்து இவரிடம் விடைபெற்றுப் பிரிந்த நான் விரைவிற்கொடுத்துத் தீர்க்கவேண்டிய கடனுக்காகப் பொருளீட்டும் பொருட்டுப் பெரும்புலியூர் (பெரம்பலூர்)த் தாலூகாவிலுள்ள காரையென்னும் ஊருக்குச் சென்று அங்கே உள்ள சின்னப்பண்ணைக் கிருஷ்ணஸாமி ரெட்டியாரென்பவர் முதலிய அன்பர்களின் விருப்பத்தின்படி திருவிளையாடற் புராணத்தைப் படித்துப் பொருள் சொல்லிக் கொண்டு வந்தேன். இடையிற் சில நாட்கள் ஓய்வு ஏற்பட்டமையால் இவரைப் பார்த்து வரவேண்டுமென்னும் அவாவோடு திருவாவடுதுறைக்கு வந்து இவர் புராணம் அரங்கேற்றுதற்கு அம்பர் சென்றிருப்பதைக் கேள்வியுற்று ஒருநாள் அங்கே சென்று பார்த்து ஆறுதலடைந்தேன்.
அன்று பிற்பகலில் திருக்கோயிற்குச் சென்று தரிசனம் செய்கையில் ஒவ்வொரு விசேடத்தையும் சொல்லி வந்தார்; ஒரு பஞ்ச காலத்திற் பொருளில்லாமல் வருத்தமுற்ற நந்தனென்னும் அரசனுக்கு நாள்தோறும் படிக்காசு அருளினமையால் அத்தல விநாயகருக்குப் படிக்காசுப் பிள்ளையாரென்னும் திருநாமம் அமைந்ததை எனக்கு விளங்கச் சொன்னதன்றி, அங்கே யிருந்த தீர்த்தத்தைக் காட்டி, "இதுதான், [6] 'அன்னமாம் பொய்கை சூழ் அம்பரானை' எனத் தேவாரத்திற் சொல்லப்பட்டுள்ள அன்னமாம் பொய்கை; அன்னவடிவங் கொண்ட பிரமதேவர் உண்டாக்கிய தீர்த்தம் இது" என்று கூறினார். சுவாமி எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலைக் காட்டி, "இது கோச்செங்கட் சோழ நாயனாரால் திருப்பணி செய்யப்பெற்ற பெருமை வாய்ந்தது; இத்தலத்துத் [7] தேவாரங்களால் இது விளங்கும்" என்று சொன்னார்;
பின்னும், "இந்த ஊர் மிகப் பழைய நகரம். திவாகரத்தில், 'ஒளவை பாடிய அம்பர்ச் சேந்தன்' என்றதிற் கூறப்பட்டதும், ‘தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே, மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள், அம்பர்ச் சிலம்பி யரவிந்த மேமலராம், செம்பொற் சிலம்பே சிலம்பு' என்ற தனிப்பாடலிற் சொல்லப்பட்டதும் இந்த அம்பரே" என்று அந்நகரத்தின் சிறப்பை விரித்துச் சொல்லி வந்தார்.
அப்போது சில நாட்கள் உடன் இருந்து இவரிடம் சில நூல்களைப் பாடங்கேட்டேன். இவர் குறிப்பிட்டபடி அங்கே இருந்த குழந்தைவேற்பிள்ளை யென்னும் கனவானுக்குத் திருவிடைமருதூருலாவைப் பாடஞ்சொன்னேன். அது முற்றுப்பெற்ற பின்பு இவரே சில நூல்களை அவருக்குப் பாடஞ் சொல்லி வந்தார்.
கொங்குராயநல்லூர் சென்றது.
ஒருநாட் காலையிற் பக்கத்திலுள்ளதாகிய கொங்குராயநல்லூரில் இருந்த ஒரு வேளாளப் பிரபுவின் வீட்டிற்கு அவருடைய விருப்பத்தின்படி இவர் சென்றார். அப்பொழுது அவர் குமாரராகிய ஐயாக்கண்ணுப் பிள்ளைக்கு முத்துவடுகநாத தேசிகரென்னும் வித்துவான் தமிழ்ப்பாடஞ் சொல்லிக்கொண்டிருந்தார். அத் தேசிகர் இலக்கண விளக்க ஆசிரியர் பரம்பரையில் இருந்த ஒரு பெரியாரிடம் முறையே பாடங்கேட்டுத் தேர்ந்தவர்; வடமொழியில் தர்க்க சாஸ்திரத்திலும் காவிய நாடகங்களிலும் நல்ல பயிற்சி யுடையவர்; நன்மதிப்புப் பெற்றவர்.
மேற்கூறிய பிரபு இவரைப் பார்த்துத் தம் குமாரரைப் பரீட்சிக்கும்படி கேட்டுக்கொண்டார்; "ஏதாவது ஒரு பாட்டுச் சொல்லப்பா" என்று இவர் வினாவினர். அவர் திருவிளையாடலில் திருநாட்டுச் சிறப்பின் முதற் பாடலாகிய,
அப்பால் முத்துவடுகநாத தேசிகர் இவரிடம் நாள்தோறும் பிற்பகலில் வந்து இலக்கணக் கொத்தைப் பாடம் கேட்டு முடித்தார். அம்பர்ப் புராணம் அரங்கேற்றி முடிந்த தினத்தில் அவர் இயற்றிய சிறப்புப்பாயிரத்துள்ள,
நான் மீண்டும் காரைக்குச் சென்றது.
திருவிளையாடலைப் பூர்த்திசெய்ய வேண்டியவனாக இருந்தமையின், ”என்னை ஊருக்கு அனுப்பவேண்டும்" என்று நான் கேட்டுக்கொண்டேன். பழக்கம் இல்லாமலிருந்தும் மேற்கூறிய கிருஷ்ணசாமி ரெட்டியாரென்பவருக்கு இவர் ஒரு பாடல் இயற்றித் தலைப்பில் அமைத்து, "திருவிளையாடற் புராணத்தை விரைவிற் பூர்த்தி செய்வித்துச் சாமிநாதையரை இங்கே அனுப்பினால் எனக்குத் திருப்தியாயிருக்கும்" என்று ஒரு கடிதம் எழுதுவித்துத் தந்தார். நான் விடைபெற்றுச் சென்று காரை சேர்ந்து அந்த ரெட்டியாரிடம் கடிதத்தைச் சேர்ப்பித்தேன். அவர், "நான் அறியாதவனாக இருந்தும் என்னையும் ஒரு பொருட்படுத்திப் பிள்ளையவர்கள் கடிதம் எழுதினார்களே; பாக்கியசாலியானேன்; இதற்குக் காரணம் உங்கள்பால் அவர்களுக்குள்ள அன்பே" என்று வியந்தனர்; கடிதத்திற் கண்டவாறே என்னை விரைவில் அனுப்ப அவர் முயன்று வருவாராயினர்.
அம்பர்ப்புராண அரங்கேற்றம்.
நல்ல தினம் பார்த்து அம்பர்ப் புராணம் அரங்கேற்றத் தொடங்கப்பெற்றது. அதனை அறிந்து பல வித்துவான்களும் கனவான்களும் பல ஊர்களிலிருந்து வந்து நாள்தோறும் கேட்டு வருவாராயினர். பழைய மாணாக்கராகிய [8] சொக்கலிங்க முதலியாரென்பவர் அங்கே வந்து உடனிருந்து இவருக்கு ஆக வேண்டிய காரியங்களைக் கவனித்துச் செய்து வருவாராயினர். அரங்கேற்றம் நிறைவேறிய தினத்தன்று சிறப்புடன் புராணச் சுவடி ஊர்வலம் செய்யப்பெற்றது. பிள்ளையவர்களுக்கு வேலாயுதம் பிள்ளை தம்முடைய குடும்பத்தாருடன் சேர்ந்து தக்க ஸம்மானஞ் செய்தார். அப்போது உடனிருந்த மாணாக்கர்களும் பிறரும் வேலாயுதம் பிள்ளையையும் பிள்ளையவர்களையும் நூலையும் பாராட்டிச் சிறப்புக்கவிகள் இயற்றிப் படித்தார்கள்.
சிவராமலிங்கம் பிள்ளை.
அன்றைத்தினத்தில் தற்செயலாகத் திருவனந்தபுரம் வலிய மேலெழுத்துச் சிவராமலிங்கம் பிள்ளை யென்பவர் சிவஸ்தல யாத்திரை செய்து கொண்டே அங்கே வந்து ஸ்வாமி தரிசனஞ் செய்து விட்டுப் புராணப் பூர்த்தி விழாவையும் கண்டு மகிழ்ந்து இப்புலவர்திலகருக்குத் தம்மாலியன்ற ஸம்மானத்தைச் செய்து வேறு ஸ்தல தரிசனத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். [9]திருநணா வென்பது இன்ன பெயரால் வழங்குகின்றதென்பது அவருக்கு விளங்கவில்லை. அதனையும் சில தேவாரங்களுக்குப் பொருளையும் அவர் இவர்பால் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அம்பர்ப் புராணம் 15 - படலங்களையும் 1007 - செய்யுட்களையும் உடையது. சோமாசிமாற நாயனார் வரலாறும் கோச்செங்கட் சோழநாயனார் வரலாறும் இப்புராணத்தில் உள்ளன. அப்பகுதிகள் இவருக்கு நாயன்மார்கள்பாலுள்ள பேரன்பையும் சிறிய வரலாற்றையும் விரிவாக அமைத்துப்பாடும் வன்மையையும் புலப்படுத்தும். இந்நூலிலிருந்து சில செய்யுட்கள் வருமாறு:
(முருகக்கடவுள் துதி) (விருத்தம்) {9.20}
"வள்ளியபங் கயக்கிழவன் முடிகொடுத்த லொடுவணங்கி மற்றை வானோர்
தெள்ளியபொன் முடிகொடுத்த புறச்சுவட்டுப் பொலிவினொடும் சிறிய நாயேம்
கொள்ளியசூட் டலினெமது முடிகொடுத்த வகச்சுவடும் குலவக் கொள்ளும்
ஒள்ளியகை காலொடம ரொருமுருகப் பெருமாளை உன்னி வாழ்வாம்."
அம்பர்ப் புராணம் அரங்கேற்றிய பின்பும் இவர் அம்பரிலேயே சிலதினம் இருந்தார்.
சுப்பிரமணிய தேசிகருக்கு எழுதிய விண்ணப்பம்.
அங்கே இருக்கும் நாட்களுள் ஒருநாள் இவர் ஒரு ஸ்தல தரிசனத்திற்குச் சென்றிருந்தார். சென்றபொழுது அத்தல விசாரணைக் கர்த்தரும் ஓர் ஆதீனத் தலைவருமாகிய ஒருவர் இவரைச் சிறிதும் மதியாமலும், இவரை இன்னாரென்று அங்கே உள்ளவர்கள் எடுத்துச் சொல்லவும் கவனியாமலும் தம்முடைய பெருமைகளை மட்டுமே பாராட்டிக்கொண்டு இவரை மதியாமலே இருந்து விட்டார். அப்பால் ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு இவர் அம்பருக்கு வந்தார்.
விசாரணைக் கர்த்தரைக் கண்டு பேசி அளவளாவி வரவேண்டுமென்று எண்ணியிருந்த இவருக்கு அவருடைய இயல்பு வருத்தத்தை உண்டாக்கியது. ஓர் ஆதீன கர்த்தராக இருப்பவர் பிறரை மதியாமலும் வந்தவர்களை விசாரியாமலும் இருப்பதைப் பார்த்த இவருக்கு எல்லா விதத்திலும் உயர்ந்த நிலையில் இருந்து விளங்கும் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய ஸௌலப்யகுணம் ஞாபகத்துக்கு வந்தது. எந்த வித்துவான் வந்தாலும் முகமலர்ந்து ஏற்றுப் பேசி ஆதரிக்கும் அவருடைய பெருந்தன்மை இவருடைய மனத்தை உருக்கியது. "நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்" என்பது உண்மையல்லவா?
உடனே இவர், அம்பர்ப்புராண அரங்கேற்றம் பூர்த்தியானதையும் விரைவில் வந்து தரிசனம் பண்ணிக் கொள்ள எண்ணியிருப்பதையும் புலப்படுத்தி ஒரு விண்ணப்பக் கடிதம் சுப்பிரமணிய தேசிகருக்கு எழுதி ஒருவர்வசம் அனுப்பினார். அதன் முதலில் இவர் எழுதுவித்த பாடல் வருமாறு :
திருவாவடுதுறைக்குத் திரும்பியது.
அம்பர்ப்புராணம் அரங்கேற்றப்பெற்றபின் சில ஸ்தலங்களுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்து வரலாமென்று நினைத்திருந்தார். இவருக்கு ஒரு வகையான சரீரத்தளர்ச்சி ஏற்பட்டமையால் இவர் அவ்வாறு செய்வதை நிறுத்திக்கொண்டு திருவாவடுதுறைக்கே போய்ச்சேர எண்ணினார். வேலாயுதம் பிள்ளை முதலியவர்கள் தங்களுடைய பேரன்பையும் இவருடைய பிரிவால் உண்டான துயரத்தையும் புலப்படுத்தினார்கள். பின்னர் இவர் எல்லோரிடத்தும் விடைபெற்றுக்கொண்டு மாணாக்கர்களுடன் திருவாவடுதுறையை அடைந்தார்.
-------------
[1] பின்பு கிடைத்தமையால் இச்செய்யுள் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டிற் பதிப்பிக்கப் பெறவில்லை.
[2] "இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு " (திருக்குறள்.)
[3] மீ. பிரபந்தத்திரட்டு, 3370 - 3408.
[4] மீ. பிரபந்தத்திரட்டு, 21 - 30.
[5] இவர் பெயர் வேலுப்பிள்ளையெனவும் வழங்கும்.
[6] திருநா. திருநாகைக்காரோணம்.
[7] "அரிசிலம் பொருபுன லம்பர் மாநகர்க், குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே", "ஐயகன் பொருபுன லம்பர்ச் செம்பியர், செய்யக ணிறைசெய்த கோயில் சேர்வரே", "அங்கணி விழவம ரம்பர் மாநகர்ச், செங்கண லிறைசெய்த கோயில் சேர்வரே" திருநா.தே. திருவம்பர்ப் பெருந்திருக்கோயில்.
[8] இவர் பிற்காலத்தில் துறவியாகித் தொண்டர் சீர் பரவுவாரென்னும் நாமம் பூண்டு பலராலும் மதிக்கப்பெற்று விளங்கி வந்தார்.
[9] திருநணா-பவானியென வழங்கும் ஸ்தலம்.
--------------------
நான் திருவாவடுதுறைக்கு வந்தது.
அக்காலத்தில் நான் என்னுடைய வேலைகளையெல்லாம் ஒருவாறு முடித்துக்கொண்டு திருவாவடுதுறைக்கு வந்து இவரைப் பார்த்தேன். பார்த்ததுமுதல் இவரது குறிப்பறிந்து முன்பு நான் செய்து வந்த காரியங்களைச் செய்து வரத் தொடங்கினேன்.
கம்பராமாயணம் பாடஞ்சொல்லியது.
பின்பு எங்களுடைய வேண்டுகோளின்படியே இவர் கம்பராமாயணத்தை ஆரம்பத்திலிருந்து பாடம் சொல்லத் தொடங்கினார். தேக அசெளக்கியத்தால் வழக்கமாக நடக்கிறபடி அதிகச் செய்யுட்கள் நடைபெறவில்லை. நூறு அல்லது நூற்றைம்பது செய்யுட்களே நடைபெற்றன. முக்கியமான இடங்களுக்குமட்டும் பொருள் தெரிந்து கொண்டு வந்தோம். அதைப் படித்துக்கொண்டே வருகையில் இவர், "இவை எவ்வளவு அழகாக இருக்கின்றன! இவையெல்லாம் யோசித்துப் பாடிய பாட்டுக்களா?" என்று மனமுருகிக் கூறிச் சில சமயங்களிற் கண்ணீர் விடுவதுமுண்டு.
சூரியனார் கோயில் ஸ்ரீ அம்பலவாண தேசிகர்.
பிள்ளையவர்களுக்கு இளமையில் கம்பரந்தாதியைப் பாடஞ் சொன்னவரும் திருவாவடுதுறை யாதீனத்தில் நெடுங்காலம் இருந்தவருமாகிய [1]அம்பலவாண முனிவர் பின்பு சூரியனார் கோயிலாதீனகர்த்தராக நியமிக்கப்பெற்று அம்பலவாண தேசிகரென்ற பெயருடன் விளங்கி வந்தார். முதுமைப்பருவமுடைய அவர் ஒருநாள் பரிவாரங்களுடன் திருவாவடுதுறை மடத்துக்கு விஜயம் செய்திருந்தார். பிள்ளையவர்கள் அவரைப் பற்றியும் அவர்பால் தாம் பாடங்கேட்டதைப்பற்றியும் எங்களிடம் முன்னரே சொல்லியிருப்பதுண்டு. ஆதலின் அந்தப் பெரியவரைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் எங்களுக்கு மிகுதியாக இருந்தது.
மடத்தின் ஓரிடத்தில் நானும் உடன்படிப்பவர்கள் சிலரும் பழைய பாடங்களை வாசித்துச் சிந்தித்துக்கொண்டிருந்தோம். கம்பராமாயண அச்சுப்பிரதிகள் எங்கள் கையில் இருந்தன. அப்பொழுது அவ்வழியே முற்கூறிய அம்பலவாண தேசிகர் வந்தார். நாங்கள் அவரை இன்னாரென்று அறிந்து எழுந்து நின்றோம். அவர் நாங்கள் புத்தகங்களை வைத்துப் படித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, "என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? கையில் இருப்பது என்ன புத்தகம்?" என்று கேட்டார். "கம்பராமாயணம்" என்று விடை கூறினோம். உடனே அவர் வியப்பையடைந்து, "ஓகோ! இதைக்கூடப் ‘புக்குப்’ போட்டுவிட்டானா?” என்று கூறினார். அந்த நூல் அச்சிற் பதிப்பிக்கப்பட்டதற்காக ஆச்சரியப்பட்டனரென்று நாங்கள் அறிந்தோம். உலக இயல்பு அதிகம் அவருக்குத் தெரியாதென்பதையும் சிவபூஜை செய்தல் புஸ்தகங்களைப் படித்தல் முதலியவற்றில் நல்ல பழக்கமுள்ளவ ரென்பதையும் பிள்ளையவர்கள் மூலமாக நாங்கள் அறிந்திருந்தோமாதலின் அப்பொழுது அவர் கூறிய வார்த்தைகள் எங்களுக்குச் சிரிப்பை உண்டாக்கிவிட்டன. அவர் போகும் வரையில் சிரிப்பை அடக்கிக்கொண்டே இருந்து போனபின்பு சிரித்தோம். எல்லாப் புத்தகங்களையும் வெள்ளைக்காரர்களே அச்சிற் பதிப்பிப்பவர்க ளென்ற எண்ணம் அவருக்கு இருந்து வந்தது.
அம்பலவாண தேசிகர் தொடுத்த வழக்கு.
இந்த அம்பலவாண தேசிகர் தம்முடைய மடத்தைச் சார்ந்த மிராசுதார் ஒருவர் ஏதோ நிலத்தின் விஷயத்திற் சரியாக நடக்கவில்லையென்று எண்ணி அவர்மேல் நீதிஸ்தலத்தில் ஒரு வழக்குத் தொடுத்தனர். மிராசுதார்பால் பொறாமை கொண்ட சிலர் இந்த அம்பலவாண தேசிகரிடம் வந்து மிராசுதாரைப்பற்றிப் பலவகையாகக் குறைகூறி வழக்கை ஊக்கத்துடன் நடத்தும்படி தூண்டிவிட்டார்கள். அவர் வழக்கின்முறை, நியாயம் முதலிய விஷயங்களிற் சிறிதும் பயிற்சி இல்லாதவர்; பிறர் செய்யும் மரியாதையையும் உபசாரங்களையுமே அதிகமாக எதிர்பார்ப்பவர்; ஆதலால் அந்த மிராசுதார் தம்மிடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளாமையால் பெருங்குற்றம் செய்துவிட்டாரென்றும் அதற்குரிய தண்டனையை நியாயஸ்தலத்தின் மூலம் விதிக்கச் செய்வதே முறையென்றும் எண்ணிப் பிடிவாதமாக வழக்காடினார்.
தூண்டுபவர்களுடைய வார்த்தை அவருக்கு மேன்மேலும் ஊக்கத்தை உண்டாக்கியது. வழக்கின் இயல்பு தெரிந்தவர்களும் தக்கவர்களுமாகிய சிலர் அவர்பாற் சென்று அவ்வழக்குப் பயன்படாதென்று சொல்லிப் பார்த்தும் அவர் கேட்கவில்லை. மிராசுதார் இறுதியில் தமக்கே வெற்றியுண்டாகு மென்பதை நன்றாக அறிந்திருந்தாலும் இடையில் வீண் செலவாதலையும் அதனால் தமக்கு மிக்க துன்பமுண்டாகுமென்பதையும் எண்ணிச் சமாதானமாதற்காகப் பலவகையான முயற்சிகளைச் செய்தார். ஒன்றும் பலிக்கவில்லை.
பின்பு அவர் பிள்ளையவர்களைக்கொண்டு சொல்லச் செய்தால் ஒருகால் தேசிகர் உண்மையை உணர்வாரென எண்ணிச் சில கனவான்களைக்கொண்டு இக்கவிஞர்பிரானுக்குச் சொல்லும்படி செய்தார். அவர்கள் இவரிடம் வந்து விஷயங்களை விளக்கிச் சொன்னார்கள். உடனே இவர் சூரியனார் கோயில் சென்று அம்பலவாண தேசிகருக்குப் பலவாறு நியாயங்களை எடுத்துக் கூறி வழக்கை நடத்தாமல் நிறுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். தேசிகருடைய பிடிவாதம் குறையவில்லை. துர்மந்திரிகளுடைய போதனை அவர் மனத்தில் அதிகமாக உறைத்திருந்தது. இந்தக் கவிநாயகர் பின்பு திருவாவடுதுறைக்கு வந்து விட்டார் .
பின்னரும் வழக்கானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. வேறு சிலர் பிள்ளையவர்கள்பால் வந்து முறையிட்டனர். அப்பொழுது இக் குணமணி அம்பலவாண தேசிகருக்கு,
என்ற செய்யுளை எழுதி யனுப்பினார். அதனைப் பார்த்து அவர் சிறிது நேரம் யோசித்தார்; "மகாவித்துவானும் நமக்கு வேண்டியவரும் மதிப்புப் பெற்றவருமாகிய இவருடைய வார்த்தையை அவமதிக்கலாமா?" என்று எண்ணினார்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் தூண்டிவிட்டு வாதிப்பிரதிவாதிகளுக்குள் மேன்மேலும் மனஸ்தாபத்தையும் கலகத்தையும் விளைவித்து அதனால் வரும் வருவாயால் பிழைக்கும் இயல்புடைய சிலர், "புராணம் பாடுவதற்குத்தான் மகா வித்துவானேயல்லாமல் வியாஜ்ய விஷயங்களில் அவருக்கு என்ன தெரியும்? தமிழ்ப் பாடல்களிற் சந்தேகம் இருந்தால் அவர் சொல்வதைக் கேட்கலாம். சட்ட விஷயத்தில் அவர்பால் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன இருக்கிறது? ஸந்நிதானத்தில் தொடுத்த வழக்கைப் பாதியில் நிறுத்திக்கொண்டால் பிரதிவாதியினுடைய கொட்டம் எப்படி அடங்கும்? செலவையும், தப்பு வழக்கென்பதையும் எண்ணிப் பயந்து நிறுத்திக்கொண்டார்களென் றல்லவோ ஊரார் கூறுவார்கள்? இன்றைக்கு இந்த வழக்கில் இப்படிச் செய்து விட்டால் நாளைக்கு வேறொருவன் வேண்டுமென்றே அக்கிரமம் பண்ணுவான். 'கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி' என்பது போலக் கொஞ்சம் சூடு போட்டு வைத்தால் தானே இவர்களெல்லாம் அடங்கியிருப்பார்கள்? பெரிய இடத்தை எதிர்க்கக் கூடாதென்பதை இவர்கள் எப்படித்தான் உணர்ந்து கொள்வது? நம்முடைய கட்சியில் நியாயம் இருக்கும்போது ஸந்நிதானத்தில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? பத்துப் பேர் பத்து விதம் சொல்வார்கள். ஆதீன நிர்வாகப் பொறுப்பு அவர்களுடையதா? ஸந்நிதானத்தினுடையதா?" என்று பலவகையில் தூபம் போட்டார்கள். பாவம்! பெரியவருக்கு அவர்களுடைய மாய வார்த்தைகள் உண்மையாகவே பட்டன. வழக்கைப் பின்னும் நடத்திவந்தார். வழக்கின் முடிவில் பலர் எதிர்பார்த்தபடியே தேசிகர் பக்கம் அபஜயந்தான் ஏற்பட்டது. திருவாவடுதுறைக்கு வந்த சில பிரபுக்கள் இந்தச் செய்தியை இவருக்கு அறிவித்தனர். இப் புலவர்கோமான் கேட்டு, "அம்பலவாண தேசிகரவர்கள் பரமஸாது; திருவாவடுதுறையில் இருக்கும்போது பூஜையும் புஸ்தகமுமே அவர்களுக்குத் தெரியும். உலக வழக்கமே தெரியாது. இப்பொழுது ஆதீனத் தலைமை பெற்றவுடன் அவ்வழக்கம் எப்படிப் புதிதாகத் தெரியவரும்? பிடிவாதமும் கடின சித்தமும் இப்பொழுது உண்டாயிருக்கின்றன. பணம் பண்ணும் வேலை அது; ' [3]அறநிரம்பிய அருளுடை யருந்தவர்க்கேனும் , பெறலருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்' என்று சொன்ன கம்பர் வாய்க்குச் சர்க்கரை போடவேண்டும்" என்று சொன்னார்.
சிங்கப்பூர் நாராயணசாமி நாவலர்.
சிங்கப்பூரில் நாராயணசாமிநாவலரென்னும் ஒருவர் இருந்தார். அவர் இவருடைய புலமைத் திறத்தைப் பலர் வாயிலாக அறிந்தவர். இவருடைய பழக்கத்தைப் பெறவேண்டுமென்னும் விருப்பம் அவருக்கு மிகுதியாக உண்டு. ஆயினும் நேரிற்கண்டு பழகுவதற்கு இயலாத நெடுந் தூரத்தில் இருந்தவராதலின், கடிதங்கள் மூலமாகத் தம்மை அறிவித்துக்கொண்டார். இவருடைய பூஜைக்கு வேண்டிய பொருள்களையும் நல்ல பழங்களையும் சிறந்த பிற பொருள்களையும் அனுப்பிவந்தார். இவர் விஷயமாகச் செய்யுட்களும் எழுதியனுப்பியதுண்டு. கம்பராமாயணம் முதலியவற்றில் தமக்கு விளங்காத பகுதிகளை எழுதியனுப்பி இவரிடமிருந்து விடைபெற்றுத் தெரிந்து கொண்டனர்; தமக்கு வேண்டிய சில நூல்களை எழுதுவித்து வருவித்துக் கொண்டார்.
நோயின் தொடக்கம்.
அக்காலத்தில் இவருடைய காலிலும் அடிவயிற்றிலும் வீக்கத்தைத் தோற்றுவித்துக்கொண்டு ஒருவகையான நோய் உண்டாயிற்று; இவருடைய தேகம் வரவரத் தளர்ச்சியடையத் தொடங்கியது; ஆகாரம் செல்லவில்லை. அதனால் இவர் நூலியற்றுதலும் பாடஞ் சொல்லுதலும் வழக்கம்போல் நடைபெறாமல் சில சமயத்துமட்டும் நடைபெற்று வந்தன.
[4] திருவிடைமருதூர்த் திரிபந்தாதி.
இவருடைய மாணாக்கர்களுள் ஒருவர் அப்போது திருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணியீசர்மீது திரிபந்தாதியொன்று இயற்றி அதைப் பல அன்பர்களுக்கு இடையே இருந்து இவரிடம் திருத்தம் செய்துகொள்வதற்காகப் படித்துக் காட்டினார். இவர் அதனை முற்றுங் கேட்டு முடித்தனர். பின்பு அவர் இல்லாத சமயம் பார்த்து, "இந்த அந்தாதி சிறிதும் நன்றாக இல்லை; மிகவும் கடினமாக இருக்கின்றது; சரியான இடத்தில் மோனையில்லை; பொருள் நயமுமில்லை; அவருடைய நிர்ப்பந்தத்தினால் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. இவ்விடத்துவாக்கினால் இந்தத் தலத்திற்கு ஓரந்தாதி செய்துதர வேண்டும்" என்று மாணாக்கர்கள் எல்லாரும் இவரைக் கேட்டுக்கொண்டார்கள்.
இவர், "அவர் செய்திருக்கும்பொழுது இத்தலத்திற்கு நான் செய்வது முறையன்று; வேண்டுமானால் திருவிடைமருதூருக்குச் செய்வேன்" என்று கூறி அவ்வாறே செய்யத் தொடங்கி விநாயகர் காப்பை முடித்தவுடன் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய துதி செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது நான், "ஐயா அவர்கள் உடையவர் பூஜை எழுந்தருளப் பண்ணிக் கொண்டபோது குரு ஸ்தோத்திரமாக ஒரு செய்யுள் செய்ததுண்டு; எனக்கு அது ஞாபகமிருக்கிறது" என்று சொன்னேன். அதைச் சொல்லச் சொல்லிக் கேட்டு அதைச் சேர்க்கும்படி சொன்னமையால் அப்படியே அது சேர்க்கப்பட்டது. சில தினங்களில் அவ்வந்தாதி முற்றுப் பெற்றது. அந்த நூல்தான் இறுதியில் இவராற் பாடப்பெற்றவற்றுள் முற்றுப் பெற்ற பிரபந்தம். அந்நூலிற் சில பாடல்கள் திருவிடைமருதூருக்குச் சென்றிருந்தபொழுது பாடப்பெற்றன.
அதன்பாலுள்ள சில செய்யுட்கள் வருமாறு :
“சொல்லையப் பாக முறுவெ னுலாவுங்கொள் தூயவ" (93)
எனக் குறிப்பித்திருக்கின்றார்.
இங்ஙனம் விநாயகர் முதலியோர் தனித்தனியே சிறப்புற்று விளங்கும் ஸ்தலங்களையே பரிவார தேவதைகளுக்குரிய ஸ்தானங்களாகக் கொண்ட ஸ்தலம் வேறொன்றுமில்லை. இதனாலேதான் அடைமொழியின்றி மகாலிங்கமென்று வழங்கும் திருநாமம் இத்தலத்து மூர்த்திக்கே அமைந்துள்ளது. இங்ஙனம் பல வகையாலும் பெரியனவாயுள்ள தலத்தையும் மூர்த்தி முதலியவற்றையும் தியானத்தால் தன்பால் அடக்கியுள்ள மனத்தை அணுவென்பது பிழையென்னும் கருத்து இதில் அமைக்கப்பெற்றுள்ளது" என்று விரித்துக் கூறினார். நாங்கள் கேட்டு மகிழ்ந்தோம்.
[6] வண்டானம் முத்துசாமி ஐயர்.
அக்காலத்தில் அயலிடத்திலிருந்து வந்தவர்களில் பெரியோர்கள் சுப்பிரமணிய தேசிகரிடத்திலும் ஏனையோர் இவருடைய மாணாக்கர்களிடத்திலும் தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நூல்களைப் பாடங்கேட்டுச் சென்றனர். குமாரசாமித் தம்பிரானிடம் முத்துசாமி ஐயரென்ற ஒருவர் படித்துக்கொண்டிருந்தார். அவருடைய ஊர் எட்டையபுரத்தைச் சார்ந்த வண்டானமென்பது. சூடாமணி நிகண்டிலுள்ள பன்னிரண்டு தொகுதிகளும் அவருக்கு மனப்பாடம் உண்டு. சில சிலேடை வெண்பாக்கள், சில அந்தாதிகள் முதலியவற்றை முறையாகப் பாடங் கேட்டார்.
இயல்பாகவே தமிழறிவுடைய குடும்பத்திற் பிறந்தவராகையால் நல்ல தமிழ்ப்பயிற்சியை யடைந்தார். அவர் பிறரிடத்திற் பேசுதல் மிக அருமை; பிறர் சொல்வதையும் முகங் கொடுத்துக் கேளார்; யாரோடும் கலந்து பேசார்; எப்பொழுதும் தனியே இருப்பதன்றி மெளனமாகவும் இருப்பார்; அகங்காரத்தினால் அவ்வாறிருந்தவரல்லர். அவருடைய இயல்பே அது. சிலேடையாகப் பேசுவார்; அவர் ஜனங்களோடு பழக விரும்பாதவராகையால் எல்லாரும் உண்ட பின்னரே மடத்தைச் சார்ந்த சத்திரத்தில் அகாலத்தில் வந்து ஆகாரம் செய்து கொள்ளுவார். அவருடைய நிலைமையை உத்தேசித்து எல்லோரும் அவரை, "வண்டானம் வந்தது, போயிற்று" என்று அஃறிணையொருமையாகவே வழங்குவார்கள். படித்த கோஷ்டிக்கு அவரிடம் மதிப்புக் கிடையாது. அவர் வஸ்திரம் அழுக்கு மலிந்திருக்கும்.
ஒருநாள் சத்திரத்தின் சுவரில் கீழேகண்ட பாடல் மாக்கல்லால் எழுதப்பட்டிருந்தது :
அப்பொழுது குமாரசாமித்தம்பிரான், "வண்டானம் எழுதியிருக்கலாம்; அது பெரும்பாலும் அகாலத்திலேதான் சென்று உண்ணுவது வழக்கம்; தனக்கு ஆகாரம் சரியாக ஒன்றும் கிடைக்கவில்லையென்று சில சமயங்களில் என்னிடம் சொல்லியிருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும்" என்றார். சாப்பிடும் இடத்தில் விசாரிக்கையில் சமையற்காரர், வண்டானந்தான் ஏதோ நேற்றுக் கிறுக்கிக்கொண்டிருந்தது" என்றார். உடனிருந்தவர்களுக்கு அவரை எப்படியேனும் கண்டுபிடித்து அழைத்து வர வேண்டுமென்ற விஷயத்தில் ஊக்கம் உண்டாயிற்று. இரண்டு மூன்று பேர்கள் விரைந்து சென்று ஊருக்குள்ளே தேடிப் பார்க்கையில் எங்கும் அகப்படவில்லை. அப்பால் வடக்கு மடத்துத் தோட்டத்தில் ஒரு மரத்தின் அடியிலுள்ள மேடையில் ஏதோ யோசனை செய்து கொண்டு உட்கார்ந்திருந்தார். கண்டு அழைக்கையில் அவர் விரைவில் எழவில்லை. சென்றவர்கள் வலிய அவரை இழுத்துக்கொண்டுவந்து பிள்ளையவர்களுக்கு முன்னே நிறுத்தினார்கள்.
அவரை இவர் இருக்கச்செய்து, "இந்தப் பாடலைச் செய்தவர் யார்?" என்று கேட்டார். அவர், "நான் செய்யவில்லை" என்று கூறிவிட்டார். பின்னும் வற்புறுத்திக் கேட்கையில் அவர், "சரியாக நடந்து கொள்ளாமற் போனால் பின் என்ன செய்கிறது?" என்றார். குமாரசாமித் தம்பிரான், "நீ அகாலத்திற்போனால் உனக்கு என்ன கிடைக்கும்? உன்னுடைய தவறு அது" என்று கோபத்துடன் சொல்லுகையில், "சாமி, சும்மா இருக்க வேண்டும்; கோபித்துக் கொள்ளக்கூடாது" என்று பிள்ளையவர்கள் கையமர்த்திவிட்டு, "இந்தச் செய்யுளின் நடையைப் பார்க்கும் பொழுது, இதற்குமுன் இவர் பல பாடல்கள் செய்து பழகியிருக்கவேண்டுமென்று தோற்றுகின்றது. அதைப்பற்றி விசாரிக்க வேண்டும்" என்றார். விசாரித்ததில் அவர், ”யாதொன்றும் செய்ததில்லை" என்று அஞ்சிச் சொன்னார். "பாடுதலில் நீர் பழக்கமுள்ளவரென்பதை இப்பாடலே தெரிவிக்கின்றது; செய்திருந்தால் அச்சமின்றிச் சொல்லும்" என்று பின்னும் இவர் வற்புறுத்திக்கேட்கவே, அவர் பல திரிபு, யமகம், சிலேடை முதலியன தாம் செய்தனவாகச் சொல்லிக் காட்டினர். அவற்றுள் பிள்ளையவர்கள் செய்துள்ள, "துங்கஞ்சார்" என்ற நோட்டின் மெட்டில், தம்மை ஆதரித்த பிச்சுவையரென்பவர்மேல் இயற்றிய கீர்த்தனம் ஒன்றைச் சொன்னார்; "உச்சஞ்சார் வண்டானத் துறை பிச்சுவைய தயாநிதியே" என்ற அதன் பல்லவி மட்டும் என் ஞாபகத்தில் இருக்கிறது.
அவற்றைக் கேட்ட இக்கவிஞர்பெருமான் அவரைப்பார்த்து மிகவும் வருந்தி, "இவர் இவ்வளவு அழுக்கான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டு தமிழருமையறிந்த இந்த ஊரில் அநாதரவுடன் இருத்தல் மிகுந்த வருத்தத்திற்கு இடமாக இருக்கிறது" என்று சொல்லி வஸ்திரங்கொடுக்க வேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் விஷயமாக ஒரு செய்யுள் பாடும்படி சொன்னார். அவ்வாறே அவர் உடனே,
என்னும் ஒரு செய்யுளைச் சொன்னார்.
இதைக்கேட்ட இவர் மகிழ்ந்தார். "இச் செய்யுளைச் சந்நிதானத்தினிடம் விண்ணப்பம் செய்யும்" என்று சொல்லி அவரை அனுப்பியதன்றி உடன் சென்று வரும்படி எனக்கும் உத்தரவு செய்தார். கேட்ட அவர் பிள்ளையவர்களது முன்னே நிகழ்ந்தவற்றையும் அறிந்து மகிழ்ந்து கரைபோட்ட இரண்டு ஜோடி வஸ்திரங்களை வழங்கி அவற்றைக் கட்டிக்கொண்டு பிள்ளையவர்களிடம் சென்று காட்ட வேண்டுமென்று கட்டளையிட்டார். அப்படியே உடுத்திக்கொண்டு பிள்ளையவர்களிடம் முத்துசாமி ஐயர் வரவே, இவர் கண்டு மகிழ்ந்தார்.
’இந்தியா மீனாட்சிசுந்தரம் பிள்ளை.’
ஒருநாள் இவருக்கு லண்டனிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் 'மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, இந்தியா' என்று மட்டும் விலாஸத்தில் எழுதப்பட்டிருந்தது. அது யாதொரு தடையுமின்றி இவருக்குக் கிடைத்தது. அதற்குக் காரணம் இவருடைய பெரும்புகழென்பதை அறிந்து மாணவர்களும் அன்பர்களும் மகிழ்ந்தார்கள். சுப்பிரமணிய தேசிகரும் இதனை யறிந்து பாராட்டினார்.
சுந்தரதாஸ பாண்டியருக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது.
சேற்றூர் ஜமீன்தாராகிய முத்துசாமி பாண்டியருடைய குமாரரும் தமிழ்க்கல்வி கேள்விகளிற் சிறந்தவரும் ஆகிய சுந்தரதாஸ பாண்டிய ரென்பவருக்கும் திருவநந்தபுரம் அரசராயிருந்த ராமவர்மாவென்பவருக்கும் நட்புண்டு. ஒருசமயம் பாண்டியர் திருவநந்தபுரத்து அரசர் மீது ஒரு வண்ணம் பாடினார். அதற்குத் தக்க வித்துவான்களால் சிறப்புப் பாயிரம் பெறவேண்டுமென்பது அவருடைய விருப்பம். சேற்றூரிலிருந்த வித்துவான்கள், பிள்ளையவர்களிடமிருந்து பெற்றால் சிறப்பாக இருக்குமென்று தெரிவித்தார்கள். சுந்தரதாஸபாண்டியருக்கும் அங்ஙனம் பெற வேண்டுமென்னும் வேணவா உண்டாயிற்று. ஆனால், அவருக்கும் இக்கவிஞர்பிரானுக்கும் பழக்கமில்லை. அதனால் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகருக்கு அவ்வண்ணத்தை அனுப்பித் தம்முடைய விருப்பத்தையும் விண்ணப்பஞ் செய்து கொண்டார். தேசிகர் பிள்ளையவர்களிடம் அதனை அளித்தனர். இவர் அவர் கட்டளைப்படியே உடனே அந்த வண்ணத்தைச் சிறப்பித்து ஐந்து செய்யுட்கள் இயற்றி யனுப்பினார். அவற்றில் திருவநந்தபுர ஸமஸ்தானத்தைப்பற்றிச் சொல்லுகையில், 'இந்தக் கலிகாலத்தில் மற்றத்தேசங்களில் ஒரு காலால் நடக்கும் தர்மமாகிய ரிஷபம் நான்கு காலாலும் நடக்கும் இடம்' என்னும் கருத்தை அமைத்திருந்தார். அன்றியும் வண்ணத்தின் இலக்கணங்களையும் புலப்படுத்தியிருந்தார். அச்செய்யுட்களைச் சுப்பிரமணிய தேசிகர் சுந்தரதாஸ பாண்டியருக்கு அனுப்பினார். அவற்றைப் பெற்ற அவர் பிள்ளையவர்கள் தம்மை அறியாமலிருந்தும் தம் பாடலை மதித்துச் சிறப்புப்பாயிரம் அளித்ததைப் பாராட்டி நேரே இக்கவிஞர்பிரானுக்குத் தம் வந்தனத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியனுப்பினார்.
[7] ஸ்ரீ சிவஞான யோகிகள் சரித்திரம்.
சிவஞான யோகிகள் சரித்திரத்தைத் தமிழ்ச் செய்யுளாக இயற்றவேண்டுமென்றும் அதில் ஆதீனத்தின் பரம்பரை வரலாறுகள் முறையே கூறப்பட வேண்டுமென்றும், ஆதீனத்து அடியார்கள் பலர் நெடுநாளாக விரும்பியதை யறிந்து சுப்பிரமணிய தேசிகர் இவருக்குக் குமாரசாமித் தம்பிரான் மூலமாகத் தெரிவித்தார். அங்ஙனம் செய்யவேண்டுமென்று தமக்கு நீண்ட நாளாக எண்ணம் இருந்ததென்றும் கட்டளையிட்டது அனுகூலமாயிற் றென்றும் சொல்லிச் செய்வதற்கு இவர் உடன்பட்டார்.
கச்சியப்ப முனிவருடைய நூல்களில் இவர் மிக்க மதிப்பு வைத்துப் படித்தும் பாடஞ் சொல்லிக்கொண்டும் வந்தவராதலால், அவரிடம் இவருக்குப் பக்தி அதிகம். அவர் சிவஞான யோகிகளைப் போலவே புலமை வாய்ந்தவரென்பதும் உடன் படித்தவரென்பதும் இவருடைய கருத்து. இதனை அடிக்கடி எங்களிடத்தும் பிறரிடத்தும் இவர் சொல்லி வருவதுண்டு. சிவஞான யோகிகள் இயற்றிய செய்யுள் நூல்களிலும் வசன நூல்களிலும் மிக்க பயிற்சியுடையவராகையால் அவருடைய பயிற்சி உயர்ந்த தென்பதும், கச்சியப்ப முனிவர் அவருடைய மாணாக்கரென்பதும் சுப்பிரமணிய தேசிகருடைய கருத்து.
இந்த விவாதம் நெடுநாளாக நிகழ்ந்து வந்ததுண்டு. இரு திறத்தாரும் தம்பால் வந்தவர்களோடு பேசிக்கொள்வதேயன்றிச் சந்தித்தபொழுது நேரே தம்முள் பேசிக் கொண்டதில்லை. இவர், சிவஞான யோகிகளோடு கச்சியப்ப முனிவர் படித்தவரென்று பாடிவிடுவாரென நினைந்து கச்சியப்ப முனிவரைச் சிவஞான யோகிகளுடைய மாணாக்கரென்று பாடவேண்டுமென்று தேசிகர் இவருக்குத் தெரிவித்தார். அதற்கு இவருடைய மனம் உடன்படவில்லை. அது தெரிந்த தேசிகர் மடத்துப் புத்தகசாலையிலிருந்த பழஞ்சுவடி ஒன்றை எடுத்து வரச்செய்து அதில் கச்சியப்ப முனிவர் சிவஞான முனிவருடைய மாணாக்கரென்று குறிப்பிட்டிருந்த,
என்ற ஒரு செய்யுளைப் படித்துக் காட்டச்செய்தார்.
அப்பால் இவர் தேசிகருடைய நோக்கத்தை அறிந்து அங்ஙனமே செய்வதாக ஒப்புக்கொண்டு அக்கருத்தை அமைத்துப் பாடுவாராயினர். அது சிவஞான யோகிகள் சரித்திரத்திலுள்ள,
என்னும் செய்யுளால் விளங்கும். அந்நூல் திருவாவடுதுறையில் தொடங்கப்பெற்றுத் திருவிடைமருதூருக்கு அசெளக்கிய நிவிர்த்திக்காக இவர் போயிருந்தபொழுதும் செய்யப்பட்டு வந்தது; நடுநாட்டு வருணனையிற் பத்துப்பாடல்கள் வரையில்தான் நடைபெற்றது; எழுதியவன் யானே. அப்பால் தேகத் தளர்ச்சி இவருக்கு அதிகரித்து வந்தமையால் மேலே செய்யப்படாமற் போயிற்று.
அந்நூலில் இவர் செய்த இறுதிச் செய்யுள்,
என்பது. அதன் இறுதியடியில் உள்ள ”அடியேனாலா குவதோ" என்ற தொடர் மேலே இவர் இயற்ற இயலாராயினாரென்பதைத் திருவருள் குறிப்பிக்கின்றதென்று எல்லாரும் பலநாள் கழித்துச் சொல்லத் தொடங்கினார்கள்.
அது குமாரசாமித் தம்பிரான் விருப்பத்தின்படி செய்யப்பெற்றதென்பதும், கச்சியப்பமுனிவரே அச்சரித்திரத்தைப் பாட வல்லவரென்பதும் பின்வரும் பாடல்களால் விளங்கும்:
"திருவாவடுதுறைக்குச் சுந்தரலிங்க முனிவரென்பவராற் செய்யப்பெற்ற புராணம் ஒன்று உண்டு; இருந்தாலும் அது சிவஞான யோகிகளுடைய முறைப்படியே காப்பிய இலக்கணங்கள் அமையப்பெறவில்லை. அம்முறையில் ஸ்தல புராணங்கள் பாடிவரும் பிள்ளையவர்கள் இந்தத் தலத்திற்குப் புராணம் இக்காலத்திற்கு ஏற்றபடி செய்தால் நாம் அதற்காகவும் இதுவரையில் இங்கிருந்து சிறப்பித்து வந்ததற்காகவும் மூன்றுவேலி நிலங்கள் வாங்கித் தருவோம்" என்று சுப்பிரமணிய தேசிகர் சொல்லியனுப்பினார்; இவருக்கும் அங்ஙனம் செய்தலில் உடன்பாடே; அங்ங்னமே செய்யலாமென்றெண்ணியும் அஸெளக்கிய மிகுதியால் அதனைப் பாடத் தொடங்கவில்லை.
திருவாவடுதுறைச் சிலேடை வெண்பா.
தென்னாட்டிலிருந்து வந்த முதிய கவிராயர் ஒருவர் திருவாவடுதுறைக்குச் சிலேடை வெண்பா ஒன்றை இயற்றிக்கொணர்ந்து ஆதீனத் தலைவருக்கு அதனைப் படித்துக் காட்டினார். அதில் பல பொருளொரு சொல்லே சிலேடையாக அமைக்கப் பெற்றிருந்தது; ஒருவரும் பாராட்டவில்லை. ஆனாலும் வந்தவரைச் சும்மா அனுப்பக்கூடாதென்று நினைத்துத் தேசிகர் அவருக்கு ஸம்மானம் செய்து அனுப்பிவிட்டார். அதில் சில பாடல்களைக் கேட்ட தம்பிரான்களிற் சிலர், "சிவஞான முனிவர் முதலிய பெரிய கவிகள் எழுந்தருளியிருந்த இடமும், நீங்கள் பாடஞ் சொல்லிக்கொண்டும் நூல்களை இயற்றிக் கொண்டும் விளங்கும் இடமும் ஆகிய இந்தத் தலத்திற்குச் செய்யுள் செய்யும் ஆற்றலில்லாத அக்கவிராயரா சிலேடை வெண்பாச் செய்கிறது? உங்களுடைய அருமையான வாக்கினால் ஒரு சிலேடை வெண்பா இயற்றித் தரவேண்டும்" என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே இவர் இயற்றத் தொடங்கினார். அதிற் காப்புச்செய்யுளும் நூலில் ஒரு செய்யுளுமே இயற்றப்பட்டன. தேகம் வரவர மெலிவடைந்து வந்த காலமானபடியால் அந்நூல் முற்றுப்பெறவில்லை; காப்புச் செய்யுளின் முற்பாதியாகிய,
திருவிடைமருதூர் சென்றது.
அப்பால், கால் வீக்கம், அடிவயிற்று வீக்கம், தோள்களின் மெலிவு, அன்னத்துவேஷம் முதலியவை அதிகரித்து இவரை வருத்தின. வந்து பார்த்த வைத்தியர்கள் அதனை இரத்தபாண்டு வென்னும் நோயென்று சொன்னார்கள். அந்நோயைப் பரிகரித்தற் பொருட்டுச் சுப்பிரமணிய தேசிகர் திருவிடைமருதூருக்கு இவரை அனுப்பி அங்கேயுள்ள கட்டளை மடத்திலேயே தக்க வஸதி ஏற்படுத்தித் திருவிடைமருதூர் அரண்மனை வைத்தியர்களைக் கொண்டு பார்க்கும்படி செய்வித்தார்.
இரவில் ஆகாரஞ்செய்துகொண்டு இரண்டு நாளைக்கு ஒரு முறை திருவாவடுதுறையிலிருந்து சென்று நானும் பிறரும் இவரைப் பார்த்து வந்தோம்.
இவருக்கு இரவிற் பெரும்பாலும் நித்திரை இராது. அக்காலத்தில் பெரியபுராணம் முதலாகிய நூல்களிலுள்ள பாடல்களைப் படிக்கச் சொல்லியும் முத்துத்தாண்டவராயர், பாவநாச முதலியார், மாரிமுத்தா பிள்ளை முதலிய பெரியோர்கள் செய்த தமிழ்க் கீர்த்தனங்கள், அருணாசல கவிராயரியற்றிய இராமாயணக் கீர்த்தனம், நந்தன் சரித்திரக் கீர்த்தனம் முதலியவற்றைச் சொல்லச் சொல்லியும் கேட்டு இவர் பொழுது போக்குவார்,
மஹந்யாஸ ஜபம்.
தேக அசௌகரியம் இவருக்கு அதிகரித்தபொழுது சிறந்த வைதிகப் பிராமணர்களை வருவித்து அவர்களைக்கொண்டு யுவ வருஷம் புரட்டாசி மாதத்தில் ஸ்ரீ மஹாலிங்க மூர்த்திக்கு மஹந்யாஸ ஜபத்தோடு கால் மண்டலம் அபிஷேகம் முதலியனவும் இவர் செய்வித்தனர்; அதனாற் பிணி சிறிது நீங்கியும் சிலநாள் சென்றபின் திரும்பத்தோன்றி வருத்தத் தொடங்கிவிட்டது;
நாளுக்கு நாள் இவருடைய நல்லுடல் மெலிவுறுவதை யறிந்து, சுப்பிரமணிய தேசிகர் திருவிடைமருதூருக்கு விஜயஞ்செய்து ஸ்வாமி தரிசனஞ் செய்துவிட்டு மடத்திற்கு வந்து இவரைப் பார்த்தனர்; அப்பொழுது இவர் திடுக்கிட்டு எழுந்து இரண்டு கைகளையுஞ் சிரமேற் குவித்துக்கொண்டே ஒன்றும் பேசாமல் நின்றுவிட்டார். அவர் சற்று நேரம் நின்று கவனித்து, ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளும்படி அங்கேயுள்ளவர்களிடம் சொல்லிவிட்டுத் திருவாவடுதுறைக்குச் சென்றனர். ஆதீனகர்த்தர் இங்ஙனம் செய்வது வழக்கமல்லாமையால் எல்லோரும் வியப்புற்று இவர்பால் தேசிகருக்கு இருந்த நன்மதிப்பை நன்றாக அறிந்து பாராட்டினார்கள்.
திருவாவடுதுறைக்கு வந்தது.
வியாதி குணப்படாமையைத் தெரிந்து இவரைத் திருவாவடுதுறையிலேயே வந்திருக்கும்படி தேசிகர் இவருக்குத் திருமுகம் அனுப்பினார். அப்படியே இவர் திருவாவடுதுறைக்கு வந்துவிட்டார். பூஜை செய்வதற்கு முடியாமல் இவர் வருந்துவதை அறிந்த குமாரசாமித்தம்பிரான் நாள்தோறும் தம்முடைய பூஜையை முடித்துவிட்டு வந்து இவர் செய்துவரும் முறைப்படியே பூஜையை இவருடைய பார்வையிலேயே இருந்து செய்து பிரஸாதத்தை அளித்து வந்தார். அப்பொழுது சின்ன ஒடுக்கப்பணி பார்த்து வந்த சுந்தரலிங்கத் தம்பிரானென்பவர் தேசிகருடைய கட்டளையின்படி இவருக்கு எந்தச் சமயத்தில் எந்தப் பொருள் வேண்டுமோ அதனை விசாரித்து உடனுடன் சேர்ப்பித்து வந்தார்.
புதியவர்களாகப் பாடங்கேட்க வந்தவர்களுக்கு மாணாக்கர்களே பாடஞ்சொல்லி
வந்தார்கள்; கடினமான பாகங்களை மட்டும் இவரிடம் கேட்டுத் தெளிந்து கொள்வார்கள்.
இரவில் தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் படிப்பித்துக் கேட்டு வருவார். கடினமான பதங்களைப்பற்றியோ விஷயங்களைப்பற்றியோ கேட்டால் சுருக்கமாக விடையளிப்பார்.
மாயூரம் சென்றது.
அப்பால் துலாமாதத்தில் தீபாவளி ஸ்நானத்திற்கு வர வேண்டுமென்று இவருடைய குமாரர் சிதம்பரம்பிள்ளை வந்து அழைக்கவே, மாயூரஞ் செல்லுதற்கு இவர் புறப்பட்டார். அதனை யறிந்த சுப்பிரமணிய தேசிகர் தீபாவளி ஸ்நானம் செய்த பின்பு தரித்துக் கொள்ளும்படி வழக்கம்போலவே அப்பொழுது இவருக்கும் உடனிருந்தவர்களுக்கும் வஸ்திரங்கள் கொடுத்து மேனாப் பல்லக்கை வருவித்துச் சௌக்கியமாக அதிற் செல்லும்படி செய்வித்து உடன் செல்லக் கூடியவர்களையும் அனுப்பினார். நான் மட்டும் இவருடைய கருத்தின்படியே திருவாவடுதுறையில் இருந்துகொண்டு இடையிடையே மாயூரம் சென்று பார்த்து வந்தேன்.
எனக்கு வஸ்திரம் வாங்கி அளித்தது.
தீபாவளிக்கு முதல்நாள் திருவாவடுதுறையில் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மற்ற அன்பர்களுக்கும் தேசிகர் வஸ்திரம் அளிப்பது வழக்கம். நான் இருப்பது அவருடைய ஞாபகத்துக்கு வராமையால் எனக்கு வஸ்திரம் கொடுக்கப்படவில்லை. நானும் அதனைப் பெறவேண்டுமென்று முயலவில்லை. அதற்கு முன்னர்ப் பலமுறை பெற்றவற்றை நினைந்து அப்போது அளியாததைக் குறித்து வருந்தவுமில்லை. எனக்கு வஸ்திரம் கொடுக்கப்படவில்லை யென்பதை அப்பொழுது திருவாவடுதுறையிலிருந்து மாயூரம் சென்ற காரியஸ்தரொருவர் முகமாகத் தெரிந்து இவர் வருத்தமடைந்தார்.
துலா மாஸமானவுடன் இவர் திருவாவடுதுறைக்கு வர எண்ணியிருப்பது தெரிந்தமையால் கூட இருந்து அழைத்து வருதற்காக மாயூரம் சென்று இவரைப் பார்த்தேன். பார்த்தவுடன், "தீபாவளிக்கு மடத்திலிருந்து வஸ்திரம் கிடைக்கவில்லையாமே" என்று சொல்லிவிட்டுக் கடையிலிருந்து விலைகொடுத்து ஒரு புதிய பத்தாறு மடி வருவித்து மஞ்சள் தடவி என்னிடம் கொடுத்து அதைத் தரித்துக் கொள்ளவேண்டுமென்று சொன்னார். அப்படியே தரித்துக் கொண்டேன்.
இராமாயணப் புத்தகங்கள்.
அப்பால் சில தினங்கள் மாயூரத்திலேயே இருந்தேன். ஒரு நாள் கடைத்தெருவிற்குப் போய்ப் பார்த்தபோது ஒரு புஸ்தகக் கடையில் கம்பராமாயணம் ஆறு காண்டங்களும் உத்தர காண்டமும் இருந்தன. ஏழு ரூபாய் விலையென்று கடைக்காரர் சொன்னார். அதற்கு முன்பு அந்நூலைப் பாடங்கேட்கையில் புத்தகமில்லாமல் இரவற் புத்தகத்தை வைத்துப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவற்றை வாங்கிவிட வேண்டுமென்ற அவா அதிகமாக இருந்தது. ஆனால் வாங்குதற்கோ கையிற் பணமில்லை. உடனே புறப்பட்டுத் திருவாவடுதுறைக்குச் சென்று அங்கே இருந்த என் சிறிய தந்தையாரிடம் (சிறிய தாயாரின் கணவரிடம்) ஏழு ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு வந்து அந்தப் புஸ்தகங்களை விலைக்குப் பெற்றுக்கொண்டேன். எனக்கு அப்போது உண்டான மகிழ்ச்சிசிக்கு அளவே இல்லை. உடனே சென்று பிள்ளையவர்கள் கையால் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்து இவரிடம் கொடுத்தேன். "என்ன புஸ்தகங்கள்?" என்றார். "இராமாயணம்; இவற்றை ஐயா அவர்கள் கையாற் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது என்னுடைய விருப்பம்" என்றேன். "எப்படி இவை கிடைத்தன?" என்று இவர் வினவவே நான், "விலைக்கு வாங்கினேன்" என்றேன். "பணம் ஏது?" என்றபோது நடந்ததைச் சொன்னேன். இக்கவிச்சக்கரவர்த்தி புஸ்தகங்களை வாங்கிப் பார்த்துவிட்டு, "எதற்காகச் சிரமப்பட்டு விலை கொடுத்து வாங்க வேண்டும்? என்னிடம் சொல்லக் கூடாதா? என்னிடமுள்ள புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாமே" என்று சொல்லிவிட்டு அவற்றை எனக்கு அன்புடன் அளித்தார். எனக்கு ஒருவிதமான கவலையும் ஏற்படக்கூடாதென்று இவர் எண்ணியிருந்ததை இவருடைய அன்பார்ந்த செயல்களும் வார்த்தைகளும் புலப்படுத்தின.
திருவாவடுதுறைக்கு வந்தது.
அப்பால் மாயூரத்திலிருந்து மேனாவிலேயே இவர் திருவாவடுதுறைக்கு வந்தார். நானும் மற்றவர்களும் உடன் வந்துவிட்டோம்.
நோய் வரவர அதிகப்பட்டுக் கொண்டே வந்தது. வைத்தியர்கள் தக்க மருந்துகள் கொடுத்துவந்தும் அது தணியவே இல்லை. இவருக்கு விருப்பமுள்ள உணவுகள் இன்னவையென்று எனக்குத் தெரியுமாதலால், அக்காலத்தில் அவ்வூரில் இருந்த என் சிறிய தாயாரிடம் சொல்லி அவற்றைச் செய்வித்து எடுத்துச் சென்று இவருக்குக் கொடுத்து வந்தேன்; இவர் பிரியமாக உண்டு வந்தனர்.
நெல்லையப்பத் தம்பிரான் வெள்ளித்தொன்னை அளித்தது.
தம்மிடமிருந்த வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் பூஜைக்கே இவர் உபயோகப்படுத்தி விட்டமையால் கஞ்சி பால் முதலியவற்றை உண்ணுவதற்குத் தக்க வெள்ளிப் பாத்திரம் இல்லை. நாங்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு வெள்ளித்தொன்னை செய்வித்து அனுப்ப வேண்டுமென்பதைக் குறிப்பித்து இவர் திருவிடைமருதூர்க் கட்டளை விசாரணைத் தலைவராக அப்போது இருந்த நெல்லையப்பத் தம்பிரானுக்கு ஒரு கடிதம் எழுதுவித்து, அதன் தலைப்பில்,
என்னும் பாடலை இயற்றி அமைப்பித்து அனுப்பினார். உடனே அவர் தமது சம்பளத் தொகையிலிருந்து வெள்ளித்தொன்னை ஒன்று செய்வித்துக் கொடுத்தனுப்பினர். அது பின்னர் இவருக்கு மிக உபயோகமாக இருந்து வந்தது.
'கொடுப்பவன் கேட்பானா?'
மடத்திற்கு வருகிற பிரபுக்களும் வடமொழி தென்மொழி வல்லுநரும் ஏனையோரும் வந்துவந்து பார்த்து விட்டு இவருடைய தேக நிலைமையை அறிந்து மனம் வருந்திச் செல்வார்கள். ஒரு நாள் பெரிய உத்தியோகஸ்தர் ஒருவர் இவரைப் பார்த்தற்கு வந்தார்; அவர் இவருக்கு இளமையிலிருந்தே நண்பராக உள்ளவர். அவர் இவருடைய தளர்ச்சியை அறிந்து அருகில் வந்து இவரை நோக்கி, "ஐயா, இனித் தங்களைப்போன்ற மகான்களை எங்கே பார்க்கப் போகிறோம்? தமிழ் நாட்டிற்கும் இந்த மடத்திற்கும் அணிகலனாக விளங்கும் நீங்கள் இவ்வளவு மெலிவை யடைந்திருப்பது என் மனத்தை வருத்துகின்றது. நாங்கள் இனி என்ன செய்வோம்? தங்கள் விஷயத்தில் தக்க உதவி செய்ய வேண்டுமென்று நெடுநாளாக எனக்கு ஓரெண்ணம் இருந்து வந்தது. இப்போது அதனை விரைவில் செய்யவேண்டுமென்று தோற்றுகின்றது. என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறேன்; உத்தரவு செய்ய வேண்டும்" என்று வருந்திக் கேட்டுக்கொண்டனர். இவர் அவரைப் பார்த்து, "இங்கே என்ன குறைவு இருக்கின்றது? குறைவில்லாமல் ஸந்நிதானம் எல்லாம் செய்வித்து வருகிறது. ஏதேனும் குறை இருப்பதாகத் தெரிந்தாலல்லவோ உங்களிடம் நான் சொல்லுவேன்?" என்று விடையளித்தார்.
கேட்ட அவர் விட்டுவிடாமல் மேலே மேலே, "அடியேனிடத்தில் தங்களுக்குக் கிருபையில்லை; என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று வற்புறுத்திப் பலமுறை போராடினார். இவர் ஒன்றும் வேண்டுவதில்லையென்பதை வார்த்தைகளாற் கூறாமல் சிரத்தாலும் கரத்தாலும் குறிப்பித்தார். அப்பால் அவர், "நான் என்ன செய்வேன்! இவர்கள் விஷயத்தில் யாதொரு பணியும் செய்வதற்கு இயலவில்லையே" என்று வருந்தி விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்.
அப்பால் இந்நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டும் இவர் வேண்டாமென்று சொன்னது பற்றிக் கோபமுற்றும் அங்கே அயலில் நின்ற சவேரிநாதபிள்ளை இவரைப் பார்த்து, "நீங்கள் இதுவரையில் எத்தனையோ ஆயிரக்கணக்கான திரவியங்களைச் சம்பாதித்தும் குடும்பத்திற்கு யாதொரு செளகரியமும் செய்விக்கவில்லை; வேறு வருவாயும் இல்லை; இதற்காகப் பிறரிடத்தே சென்று கேட்டு வாங்கிக்கொடுக்க வேண்டுமென்று இப்பொழுது நான் தங்களுக்கு விண்ணப்பம் செய்து கொள்ளவில்லை. தக்க கனவானாகிய ஒருவர் வலியவந்து உதவி செய்வதாக வற்புறுத்துங் காலத்திலும் தாங்கள் ஒன்றும் வேண்டாமென்று சொல்லி விடலாமா? எத்தனையோ லட்சக்கணக்கான திரவியங்களை உடைய அவருக்கு எதையேனும் உங்களுக்குக் கொடுப்பதனாற் குறைந்து போமா? நல்ல மனமுடையவர்போற் காணப்படுகிறாரே. இப்பொழுது உங்களுக்குக் கடன் மிகுதியாக இருப்பதனால் ஏதேனும் திரவியம் கேட்கலாம்; இல்லையாயின் குமாரருக்கு ஒரு வேலை செய்விக்க வேண்டுமென்றும் சொல்லலாம்; செய்வித்தற்கு அவருக்கு ஆற்றலும் உண்டு. ஒன்றையும் வேண்டாமல் அவருடைய விருப்பத்தை மறுத்தது எனக்கும் பிறருக்கும் மிகவும் வருத்தத்தை உண்டு பண்ணுகின்றது. இனிமேல் இப்படியிருத்தல் கூடாது; குடும்பத்திற்குத் தக்க ஸெளகரியம் பண்ணுவிக்க வேண்டும். மிகவும் சுகமாகவே இதுவரையில் வாழ்ந்துவந்த சிதம்பரம்பிள்ளை இனி என்ன செய்வார்? நான் கேட்டுக்கொள்கிற வரம் இதுதான். இனிமேல் கவனிக்கவேண்டும்" என்று அன்போடும் வருத்தத்தோடும் தெரிவித்து மேலும் மேலும் அதைப் பற்றியே சொல்லிக்கொண்டு வந்தனர்.
இவர் இடையிலே பேச்சை நிறுத்தும்படி குறிப்பித்து, "என்னப்பா, தோற்றினபடியெல்லாம் பேசுகிறாய்? கொடுப்பவனாக இருந்தால் என்னைக் கேட்டுத்தானா கொடுப்பான்? அவன் எந்தக் காலத்திலும் பிறருக்கு ஒன்றும் கொடுத்ததேயில்லை. எனக்கு அது நன்றாகத் தெரியும். நான் வேண்டாமென்று சொல்லியபின்பு பலமுறை வற்புறுத்தியதைக் கொண்டே அவனுடைய நிலைமையை அறிந்து கொள்ளலாமே. நான் கேட்டிருந்தால் அவன் ஒன்றையுமே கொடான். கேட்டேனென்ற அபவாதந்தான் எனக்கு உண்டாகும். இளமை தொடங்கி அவனுடன் பழகியிருக்கிறேன். அவன் யாருக்கும் கொடுத்ததே இல்லை. பொருளைச் சம்பாதித்தலில் அதிக முயற்சியும் விருப்பமும் உடையவன். நான் கேளாமலிருந்தது உத்தமம். கேட்டிருந்தால் ஒன்றும் கொடாமற் போவதுடன் இவன் பல இடங்களில் நான் கேட்டதாகச் சொல்லிக்கொண்டு திரிவான். இனிமேல் இப்படிச் சொல்லாதே. உசிதமாகத் தோற்றினால் நான் கவனியாமல் இருப்பேனா?" என்றார். அப்பால் சவேரிநாத பிள்ளை விஷயம் தெரிந்து சமாதானமுற்றிருந்தனர்.
திருவாரூர்க்கோவை.
இவர் நித்திரை செய்யாமல் தளர்வுற்று இருத்தலையறிந்து ஒருவர் மாறி ஒருவர் இவரைக் கவனிப்பதற்கு விழித்துக் கொண்டே இருப்போம். அங்ஙனம் இருக்கும் நாட்களுள் ஒரு நாள் ஓசையுண்டாகாமல் மெல்லப் படித்துக் கொண்டேயிருக்க நினைந்து திருவாரூர்க் கோவைச் சுவடியைக்கையில் வைத்திருந்தேன். அதை இன்ன நூலென்று அறிந்து முதலிலிருந்தே படிக்கும்படி இவர் சொன்னார்; அங்ஙனம் படிக்கும் பொழுது,
என்ற செய்யுட்களைக் கேட்டு, "மிகவும் நன்றாயிருக்கின்றன" என்று சொன்னதுடன் மேலே வாசிக்கும்படிக்கும் சொன்னார். அப்படியே படித்து வருகையில் அங்கங்கேயுள்ள செய்யுட்களின் நயத்தையும் நடையையும் அந்த நூலாசிரியருடைய குண விசேடங்களையும் மெல்லப் பாராட்டிக்கொண்டே யிருந்தார்.
ஐயங்களைப் போக்கியது
மற்றொருநாள் இரவில் அகத்தியத் திரட்டைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் உள்ள, "தில்லைச் சிற்றம்பலம் " என் னும் பதிகத்தில் 10-ஆவது செய்யுளில் வந்துள்ள 'ஊற்றத்தூர்' என்னும் ஸ்தலம் எங்குள்ளதென்று கேட்டபொழுது அது வைப்புஸ்தலங்களுள் ஒன்றென்றும் ஊட்டத்தூரென்று வழங்கப்படுகின்றதென்றும் அதிலுள்ள மூர்த்திக்குச் சுத்தரத்தினேசுவரரென்பது திருநாமமென்றும் நாவின் குழறலுடன் சொன்னார். அப்பால், திருவாசகத்தில் திருக்கோத்தும்பி என்னும் பகுதியைப் படிக்கும்படி சொன்னார்; அதைப் படித்து வருகையில், "நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து" என்பதிலுள்ள 'நுந்து கன்றாய்' என்பதற்குப் பொருள் விளங்கவில்லை என்றேன். 'வெறுத்துச் செலுத்தப்பட்ட கன்றைப்போன்று' என்று அதற்கு நாக்குழறலுடன் விடையளித்தார். அப்பொழுதுள்ள இவருடைய நிலைமையைப் பார்த்து ஒன்றுந் தோற்றாமல், "எவ்வளவோ அரிய விஷயங்களை எளிதிற் சொல்லும் பெரியாரை அடுத்திருந்தும் இதுவரையில் விசேஷமாக ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே. இனி அரிய விஷயங்களை யார் சொல்லப் போகிறார்கள்?" என்ற மன வருத்தத்துடன் இவரைக் கவனித்துக் கொண்டே இருந்தேன்.
இவருடைய தேக நிலையை அறிந்து மாயூரத்திலிருந்து இவருடைய தேவியாரும், குமாரரும் திருவாவடுதுறைக்கு வந்து ஸ்திரமாக இருந்து கவனித்துக்கொண்டு வந்தார்கள்.
வைத்தியன் கூறியது.
இவருடைய தேகஸ்திதி வரவர மெலிவையடைந்து வருவதைத் தெரிந்து கொண்ட சுப்பிரமணிய தேசிகர் வலய வட்டமென்னும் ஊரிலுள்ள தனுக்கோடி யென்ற சிறந்த வைத்தியனை வருவித்து இவருடைய கையைப் பார்த்து வரும்படி அனுப்பினார். அவன் வந்து கை பார்த்துவிட்டு இவரிடத்தில் ஒன்றும் சொல்லாமல் புறத்தே வந்து எங்களிடம், "இன்னும் மூன்று பொழுதிலே தீர்ந்துவிடும்" என்று 'வெட்டென’ச் சொல்லிவிட்டுச் சென்றான். அவன் அங்ஙனம் கூறியது எங்களுக்கு இடி விழுந்தது போல இருந்தது. 'மிகவும் துக்ககரமான செய்தியைச் சொல்லுகிறோம்' என்பதையேனும், 'கிடைத்தற்கரிய ஒருவருடைய வியோகத்தைப் பற்றித் துணிந்து சொல்லுகிறோம்' என்பதையேனும் நினையாமல் அந்த வைத்தியன் பளிச்சென்று சொன்னது கேட்டு ஒருபாற் சினமும் ஒருபால் வருத்தமும் உடையவர்களானோம். நோயின் இயல்பையும் மருந்து கொடுக்கவேண்டும் முறையையும் அல்லாமல் வேறொன்றையும் அறியாத அவன் நோயாளிகள் யாவரையும் ஒரு தன்மையினராகவே பாவிப்பானென்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அவன் சொல்லியதை இவருக்கு நாங்கள் சொல்லவில்லை. அவ்வைத்தியன் தாதுக்களைப் பார்த்துச் சொல்வதில் அதிசமர்த்தனாகையால் அவன் வார்த்தையை நம்பினோம்.
சவேரிநாத பிள்ளைக்காகக் கடிதங்கள் எழுதுவித்தது.
தம்முடைய தேகஸ்திதி மிகவும் தளர்ச்சி அடைந்து கொண்டு வருவதையறிந்த இவர், தம்மிடத்திற் படிக்கும் வியாஜத்தை வைத்துக்கொண்டு பல வருஷங்களாக இருந்து வேறொரு பயனையுங் கருதாமல் தமக்குப் பணிவிடை செய்துகொண்டும் தமது குடும்பக் காரியங்களைக் கவனித்துக்கொண்டும் உண்மையாக நடந்துவந்த சவேரிநாத பிள்ளைக்கு விவாகம் செய்வித்து ஏதேனும் உபகாரம் செய்து ஸெளகரியப்படுத்தி வைக்கவேண்டுமென்று எண்ணினார். தம்முடைய நண்பர்களாகிய முன்ஸீப் வேதநாயகம் பிள்ளை, வரகனேரி சவரிமுத்தா பிள்ளை, புதுச்சேரி சவராயலு நாயகர், காரைக்கால் தனுக்கோடி முதலியார் முதலிய கிறிஸ்தவ கனவான்களுக்கும், பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளை, சோழன் மாளிகை இரத்தினம் பிள்ளை முதலியவர்களுக்கும் தம் எண்ணத்தைப் புலப்படுத்தித் தனித்தனியே கடிதமெழுதும்படி என்னிடம் சொன்னார். அப்படியே இவருடைய குறிப்பறிந்து எழுதினேன். ஒவ்வொரு கடிதத்தின் தலைப்பிலும் வழக்கம்போலவே அவர்கள் மீது ஒவ்வொரு பாடல் இவரால் அந்தத் தளர்ந்த நிலையிலும் இயற்றிச் சேர்ப்பிக்கப்பெற்றது. அச்செய்யுட்கள் மிகவுஞ் சுவையுடையனவாக இருந்தன. சொல் மாத்திரம் தளர்ச்சி மிகுதியால் குழறி வந்ததேயன்றி அறிவின் தளர்ச்சி சிறிதேனும் உண்டாகவில்லை. சவேரிநாத பிள்ளையை அழைத்து அக்கடிதங்களை அளித்து, "அப்பா, சவேரிநாது, இக்கடிதங்களை உரியவர்களிடம் கொடுத்து அவர்கள் செய்யும் உதவியைப் பெற்று விவாகம் செய்துகொண்டு ஸெளக்கியமாக வாழ்ந்திருப்பாயாக ; உன்னுடைய செயல் மிகவும் திருப்தியைத் தந்தது" என்றார். அவர் கண்ணீரொழுக அக்கடிதங்களை வணக்கஞ்செய்து பெற்றுக் கொண்டார்.
ஸ்ரீ அக்கினிலிங்க சாஸ்திரிகள்.
மடத்திற்கு வரும் ஸம்ஸ்கிருத வித்வான்களும் பிற வித்வான்களும் சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்து அவரோடு ஸல்லாபம் செய்துவிட்டு இவருக்குள்ள அஸெளக்கியத்தைப் பற்றிக் கேள்வியுற்று வந்து வந்து பார்த்துச் சிறிதுநேரம் இருந்து இவர் தளர்ச்சி அடைந்திருப்பதை அறிந்து வருந்திச் செல்வார்கள். ஸ்ரீ ஹரதத்த சிவாசாரியார் கிரந்தங்களிலும் திருவியலூர் ஐயா அவர்கள், ஸ்ரீமத் அப்பைய தீக்ஷிதர், ஸ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதர் கிரந்தங்களிலும் நல்ல பழக்கமுடையவரும் சிவபக்திச் செல்வம் வாய்ந்தவரும் விபூதி ருத்திராக்ஷதாரணமுடையவரும் தோற்றப் பொலிவுள்ளவரும் இவர்பால் மிக்க அன்புடையவரும் வயோதிகருமாகிய கஞ்சனூர் ஸ்ரீ அக்கினிலிங்க சாஸ்திரிகளென்பவர் பார்க்க வந்தார்; இவருடைய தேக நிலையை அறிந்து வருத்தமடைந்தார். அவருடைய சைவத் திருக்கோலத்தைக்கண்டு இவர் அதில் மிகவும் ஈடுபட்டு உள்ளங் குளிர்ந்து உருகிக் கண்ணீர் வீழ்த்தினார். பின்பு சாஸ்திரிகளை நோக்கி ஏதாவது சொல்ல வேண்டுமென்று இவர் குறிப்பித்தார். அப்படியே அவர் மேற்கூறிய பெரியோர்களுடைய வாக்கிலிருந்து சிவபெருமானுடைய பரத்துவத்தைத் தெரிவிக்கும் சில சுலோகங்களைச் சொல்லிப் பொருளும் கூறிக்கொண்டே வந்து ஸ்ரீ சங்கராசாரியார் செய்த சிவானந்தலஹரியிலுள்ள , "ஸதாமோஹாடவ்யாம்" என்ற சுலோகத்தைச் சொல்லிப் பொருளும் சொன்னார். இப்புலவர் சிரோமணி அதில் ஈடுபட்டு அவரைச் சும்மா இருக்கும்படி குறிப்பித்துவிட்டு ஓர் ஏடும் எழுத்தாணியும் கொண்டுவரும்படி குறிப்பித்தார். நான் அவற்றைக் கொண்டுவரவே அந்தச் சுலோகத்தின் மொழிபெயர்ப்பாகச் செய்யுளொன்றை இயற்றி மெல்லச் சொன்னார். நான் எழுதிக் கொண்டேன். அச்செய்யுள் வருமாறு:
பின்பு அந்தச் சாஸ்திரிகள் ஈசுவரத்தியானம் செய்துகொண்டே இருக்கவேண்டுமென்று சொல்லிவிட்டுப் பிரிவாற்றாமல் இவரிடம் விடை பெற்றுக்கொண்டு சென்றார்.
பிறரும் நானும் இவரை இடைவிடாது பாதுகாத்துக் கொண்டே வந்தோம். அப்போது திருவாவடுதுறையில் ஸ்ரீ கோமுத்தீசுவரருக்குப் பிரம்மோத்ஸவமும் மடத்தில் தைக் குரு பூஜையும் நடைபெற்று வந்தனவாதலால் தம்பிரான்கள் முதலியவர்களுடைய திருக்கூட்டமும் பல இடங்களிலிருந்து வந்த ஸம்ஸ்கிருத வித்துவான்களுடைய குழாமும் தமிழ் வித்துவான்களுடைய கூட்டமும் சைவப்பிரபுக்களின் குழுவும் மற்றவர்களின் தொகுதியும் நிறைந்திருந்தன; மடத்திலும் கோயிலிலும் திருவீதி முதலிய இடங்களிலும் அலங்காரங்கள் செய்யப்பெற்றிருந்தன; அவற்றால் திருவாவடுதுறை சிவலோகம்போல் விளங்கியது.
சுப்பிரமணிய தேசிகர் விசாரித்துக்கொண்டே இருந்தது.
இவருடைய அசெளக்கிய மிகுதியைத் தெரிந்து சுப்பிரமணிய தேசிகர் அடிக்கடி
பார்த்துவரும்படி தக்கவர்களை அனுப்பித் தெரிந்து கொண்டேயிருந்ததன்றி அடிக்கடி வந்து சொல்லும்படி எனக்கும் கட்டளையிட்டிருந்தார். அப்படியே அடிக்கடி சென்று இவருடைய நிலையைத் தெரிவித்துக்கொண்டு வரலாயினேன்.
தை மாதம் 20-ஆம்தேதி மங்களவாரம் (1-2-1876) காலையிலிருந்து இவருக்குத் தேகத்தளர்ச்சி முதலியன அதிகரித்துக்கொண்டே வந்தன. அன்று இரவில் ஐந்து நாழிகைக்கு மேற்பட்டு இவருடைய உறவினர் ஒருவர் மீது ஏதோ ஒரு பெண் தெய்வம் ஆவேசமாகவந்து, "நான் இவர்களுடைய குலதெய்வமாகிய அம்மன்; பலவருஷங்களாக எனக்குப் பூசை போடுதலை இவரும் இவரைச் சார்ந்தவர்களும் மறந்துவிட்டார்கள். அதனாலே தான் இவ்வளவு அசெளக்கியங்கள் இவருக்கு நேர்ந்தன. இனிமேலாவது எனக்குப் பூசைபோட்டால் இவருடைய அசெளக்கியத்தைத் தீர்த்து விடுவேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். இவர் மிகவும் நல்லவராதலால் நான் வலியவந்து சொன்னேன். இனி அதைச் செய்வதற்குப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள்" என்று சொல்லியது.
அதை இவருடைய தேவியாராகிய காவேரியாச்சி ஒப்புக் கொண்டனர். இவரும் அக்குலதெய்வம் உண்மையையும் அதற்குத் தாம் பூசை போடாதிருத்தலையும் தம்முடைய முகபாவத்தாற் குறிப்பித்தார். ஆனால் ஆவேசங் கொண்டோரிடத்தில் இவருக்கு நம்பிக்கையில்லை. மற்றவர்கள் பூசைபோட்டால் நல்லதென்று சொன்னார்கள். அந்தப்படியே ஒரு ரூபாயை மஞ்சள் நீரில் நனைத்த துணியில் இவருடைய தேவியார் முடிந்து வைத்துப் பிரார்த்தனை செய்துகொண்டார். அப்படிச் செய்தாற் செளக்கியப்படலாமென்ற எண்ணம் சிலருக்கு உண்டாயிற்று.
அன்றைத் தினம் கோயிலில் ரிஷபவாகனக் காட்சியாதலால் ஸ்ரீ கோமுத்தீசர் ரிஷபாரூடராய்க் கோபுரவாயிலில் எழுந்தருளியிருப்பதை அறிந்து தரிசனத்திற்கு நான் அங்கே சென்றேன். அப்போது பரிவாரங்களுடன் வந்து தரிசனம் செய்து கொண்டே நின்ற சுப்பிரமணிய தேசிகர் என்னை அழைத்துப் பிள்ளையவர்களுடைய தேகஸ்திதியைப் பற்றிக் கவலையுடன் விசாரித்தார்; பிறர் பேசுவதை அறிந்து கொள்கிறார்கள்; உத்தரம் கூறுவதற்கு மாத்திரம் அவர்களால் இயலவில்லை" என்றேன். அதனை அவர் கேட்டு மிகவும் வருத்தமடைந்ததுடன், "இந்த நிலையிலாவது பிள்ளையவர்கள் இங்கே இருக்கிறார்களென்ற பேச்சிருந்தால் மடத்திற்கு மிகவும் கெளரவமாக இருக்கும். ஸ்ரீ கோமுத்தீசர் திருவருள் என்ன செய்கின்றதோ!" என்று சொல்லிவிட்டு, போய்க் கவனித்துக்கொண்டிருக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார்.
'அடைக்கலப் பத்து'
உடனே சென்று நானும் சவேரிநாத பிள்ளை முதலியோரும் இவரைக் கவனித்துக் கொண்டு அயலிலே இருந்தோம். பால் சிறிது சிறிதாகக் கொடுத்து வந்தோம். ஸ்ரீ கோமுத்தீசுவரர் ரிஷபாரூடராகத் திருவீதிக்கு எழுந்தருளினார். இவருடைய குறிப்பின்படி நாங்கள் தேங்காய் பழம் கற்பூரம் முதலியவற்றை எடுத்துக்கொண்டு சென்று தீபாராதனை செய்வித்து ஆதிசைவர் கொடுத்த விபூதிப் பிரசாதத்தைக் கொணர்ந்து இவர்பாற் சேர்ப்பித்தோம். அதை இவர் மெல்ல வாங்கித் தரித்துக் கொண்டார்.
சிவபதமடைந்தது.
பதினைந்து நாழிகைக்கு மேற்பட்டு இவருக்கு ஸ்வாதீனத்தப்பும் தேகத்தில் ஒரு துவட்சியும் உண்டாயின. அதனையறிந்த சவேரிநாத பிள்ளை இவருடைய பின்புறத்திற் சென்றிருந்து இவரைத் தம்முடைய மார்பிற் சார்த்தி ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொண்டார். அப்பொழுது சில நாழிகை வரையில் இவருக்குப் பிரக்ஞை இல்லை; சிலநேரம் கழித்துப் பிரக்ஞை வந்தது. உடனே திருவாசகத்தில் ஏதேனும் ஒரு பாகத்தைப் படிக்கவேண்டும் என்னுங் குறிப்போடு, "திருவா" என்றார். அக்குறிப்பை அறிந்து அப்புத்தகத்தை எடுத்துவந்து அடைக்கலப்பத்தை வாசித்தேன்; கண்ணை மூடிக்கொண்டே இவர் கேட்டுவந்தார். அப்பொழுது இவருக்கு உடலில் ஓர் அசைவு உண்டாயிற்று. உடனே நாங்கள் சமீபத்திற் சென்றபொழுது வலக்கண்ணைத் திறந்தார். அதுதான் ஸ்ரீ நடராஜமூர்த்தியினுடைய குஞ்சித சரணத்தை இவர் அடைந்த குறிப்பாக எங்களுக்குத் தோற்றியது. அப்போது இவருக்குப் பிராயம் 61. அந்தச் சமயத்தில் இவருடைய சரீரத்தைச் சார்த்திக்கொள்ளும் பாக்கியம் பெற்றிருந்த சவேரிநாதபிள்ளை அந்த நல்லுடலை உடனே படுக்கையிற் கிடத்தி விட்டு மற்றவர்களோடு புலம்பிக் கொண்டே அயலில் நின்றார். இவருடைய தேவியாரும் குமாரரும் மற்ற உறவினரும் கண்ணீர் விட்டுப் புலம்பினார்கள். அங்கேயிருந்த எல்லோருக்கும் உண்டான வருத்தத்திற்கு எல்லையேயில்லை.
அபரக்கிரியை.
இக்கவிரத்னம் மண்ணுலக வாழ்வை நீத்தசெய்தி ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குத் தெரிந்தது. காளிதாஸன் இறந்தது கேட்டுப் போஜன் வருந்தியதைக் கதைகளில் கேட்டிருக்கிறோம். அந்தக் காட்சி இப்படித்தான் இருந்திருக்குமென்றெண்ணும்படியான நிலையில் தேசிகர் இருந்தார். தாமே அறிந்து ஸ்ரீ அம்பலவாண தேசிகரிடம் பலபடியாக இவருடைய நல்லாற்றலைத் தக்கவாறு எடுத்துக் கூறி ஆதீன வித்துவானாகச் செய்தது முதல் இறுதிக்காலம் வரையில் பலவகையாலும் இக் கவிச்சக்கரவர்த்தியினுடைய குணங்களையும் புலமைத் திறத்தினையும் நன்றாக அறிந்து அறிந்து இன்புற்றவர் அவரே. பிள்ளையவர்களுடைய உண்மையான பெருமையை அவரைப்போலவே அறிந்தவர்கள் வேறு யாவர்? தம்முடைய அவைக்களத்தை அலங்கரித்து மடத்திற்குத் தமிழ் வளர்த்த பெரும் புகழை உண்டாக்கிய இந்த மகாவித்துவானுடைய பிரிவைப் பொறுப்பதென்பது அவரால் இயலுவதா?
அன்று குருபூஜைத் தினமாதலின் சுப்பிரமணிய தேசிகர் கவனிக்க வேண்டிய பல காரியங்கள் இருந்தன. அவைகளில் அவர் மனம் செல்லவில்லை. அவருடைய முகம் அன்று மலர்ச்சியின்றி யிருந்தது.
மிக்க வருத்தத்தோடு இருந்தும், தேசிகர் மேலே முறைப்படி மறுநாட்காலையில் நடக்க வேண்டிய அபரக்கிரியைகளை விரிவாக நடத்தும்படி மடத்து உத்தியோகஸ்தர்களுக்குக் கட்டளையிட்டனுப்பினர். காலையில் அதிர்வெடிகள் போடப்பட்டன. திருக்கோடிகா, திருத்துருத்தி, திருவிடைமருதூர் முதலிய ஊர்களிலிருந்து அபிஷிக்தப் பெரியார்கள் பலர் வருவிக்கப்பட்டார்கள்.
மற்றவர்களுக்கு நடக்கும் முறையிலும் செலவிலும் அதிகப்பட நடத்தி இவருடைய திவ்ய சரீரத்தை விபூதி ருத்திராக்ஷங்களால் அலங்கரித்து எடுப்பித்துக்கொண்டு செல்லத் தொடங்கியபொழுது இவருடைய மாணாக்கர்களாகிய தம்பிரான்கள் மடத்து முகப்பில் வரிசையாக வந்து நின்று கண்ணீரை வீழ்த்திக் கொண்டே கலங்குவாராயினர். வடமொழி வித்துவான்களாகிய அந்தணர்களின் கூட்டத்திலிருந்து, "தமிழ்க் காளிதாஸா! தமிழ்க்காளிதாஸா!" என்ற சப்தமும், தமிழ் வித்துவான்கள் வாக்கிலிருந்தும் அயலூரிலிருந்து வந்திருந்த இவர் மாணாக்கர் கூட்டத்திலிருந்தும், "கவிச் சக்கரவர்த்தியே! தமிழ்க் கடலே! எங்களுக்கு அரிய விஷயங்களை இனி யார் அன்புடன் சொல்வார்கள்! யாரிடத்தில் நாங்கள் செல்லுவோம்? எங்களைக் கவனிப்பார் யார் !" என்ற ஒலியும், வேறொரு சாராரிடத்திருந்து, "குணக்கடலே! சாந்த சிரோமணீ!" என்ற சப்தமும், பொதுவாக மற்ற யாவரிடத்திலிருந்தும், "ஐயா! ஐயா!" என்ற சப்தமும் உண்டாயின. உடன் சென்ற அபிஷிக்தர்கள் திருவாசகம் சொல்லிக்கொண்டு போகையில், "இனிமேல் திருவாசகத்திற்கு மிகத் தெளிவாகவும் அழகாகவும் யார் பொருள் சொல்லப் போகிறார்கள்?" என்று என் தந்தையார் முதலிய பலர் சொல்லி மனம் உருகினார்கள். உடன் சென்ற கூட்டங்கள் மிக அதிகம்.
இவ்வண்ணம் திருக்கோயிலுக்கு வடக்கேயுள்ள மருதமரச் சாலைவழியே சென்று காவிரிக்கரையிலுள்ள ருத்திர பூமியை அடைந்தவுடன் இவருடைய தேகம் சந்தனக்கட்டை, பரிமள தைலம் முதலியவற்றோடு அமைக்கப்பட்ட ஈமப்பள்ளியில் வைத்துச் சிதம்பரம் பிள்ளையால் விதிப்படி தகனம் செய்யப்பெற்றது.
மாணாக்கர்களாகிய நாங்கள் அடைந்த வருத்தம் இங்கே எழுதி யடங்குவதன்று; செயலழிந்திருந்தோம்; "உடலெலாம் உயிரிலா எனத்தோன்று முலகம்" என்றபடி அவ்வூராரும் வந்தோர்களும் செயலற்று மிக்க வாட்டத்துடன் இருந்தார்கள். அப்பால் ஸ்நானாதிகளை முடித்துக்கொண்டு மீண்டுவந்து நான் திருவாரூர்த் தியாகராசலீலையைக் கையில் வைத்துக்கொண்டு அதிலுள்ள அருமையான செய்யுட்களைப் படித்துப் படித்துப் பொருள் நயங்களை அறிந்து கண்ணீர் வீழ்த்திக்கொண்டே பகல் ஒரு மணிவரையில் இருந்துவிட்டேன்; ஆகாரத்திற் புத்தி செல்லவில்லை. மற்றவர்களும் அப்படியே இருப்பவர்களாய் இவர் இயற்றியவற்றுள் தமக்குப் பிரியமான ஒவ்வொரு நூலைப் பார்த்துக்கொண்டே இருந்து வருந்துவாராயினர்.
சுப்பிரமணிய தேசிகர் எனக்கு ஆறுதல் கூறியது.
ஒரு மணிக்கு மேலே ஒடுக்கத்தில் வீற்றிருந்த சுப்பிரமணிய தேசிகரை நான் பார்த்து வரச் சென்று அவருக்கு அயலில் நின்றேன். கயையில் ஜனோபகாரமாக ஒரு தர்மசாலை கட்டிவைத்த முத்தைய தம்பிரானென்பவரும் அங்கு வந்திருந்தார். நின்ற என்னை நோக்கித் தேசிகர் இருக்கும்படி குறிப்பித்தார். அவரைக் கண்டவுடன் எனக்கு மிகுதியான வருத்தம் உண்டாயிற்று; கண்ணீர் ஆறாகப் பெருகிவிட்டது; அழத்தொடங்கிவிட்டேன்.
அவர் கையமர்த்தி, "காலத்தை யாரால் வெல்லமுடியும்? அதே வருத்தத்துடன்தான் நாமும் இருந்து வருகிறோம். ஆனால் உம்மைப்போல் வெளிப்படுத்தவில்லை. பெரிய மணியை இழந்து விட்டோம். இனி இதைப்பற்றிச் சிந்தித்தலில் பயனில்லை. அவர்களிடம் கேளாமல் எஞ்சியுள்ள நூல்களை நாம் பாடஞ் சொல்வோம். அவற்றைக் கேட்டுச் சிந்தனை செய்து கொண்டும் புதியவர்களாக வருபவர்களுக்குப் பாடஞ் சொல்லிக்கொண்டும் செளக்கியமாக நீர் இங்கே இருக்கலாம். அவர்களுடைய பக்கத்தில் இருந்தது போலவே நம்முடைய பக்கத்தில் இருந்து வர வேண்டும். இந்த ஊரை உம்முடைய சொந்த ஊராகவே பாவித்துக்கொள்ளும்; [11]வீடு முதலியவற்றை விரைவில் அமைத்துக் கொடுப்போம். கவலையின்றி இருக்கலாம். பிள்ளையவர்களை மாத்திரம் வருவித்துக் கொடுக்க முடியாதேயன்றி வேறு இங்கே என்னதான் செய்விக்க முடியாது? உம்முடைய சகபாடிகளாகிய தம்பிரான்களைப் போலவே நீரும் மடத்துப் பிள்ளையல்லவா? உமக்கு என்ன குறைவு?" என்று எவ்வளவு தைரியத்தை உண்டாக்க வேண்டுமோ அவ்வளவையும் உண்டாக்கி அபயமளித்தார்.
பின்பு, பிள்ளையவர்களுடைய பிரிவைப்பற்றித் துக்கித்துக் கொண்டிருந்த ஸகபாடிகள் இருக்குமிடஞ் சென்று இப்புலவர்பிரானுடைய குணங்களைப் பாராட்டி வருந்திக் கொண்டே யிருந்தேன்.
பலர் பலவாறு வருந்தல்.
அஸ்தமித்த பின்பு தேசிகரைப் பார்த்தற்குச் சென்றேன். அப்பொழுது பிள்ளையவர்களுடைய வியோகத்தைப் பற்றி அவரை விசாரித்தற்குப் பலர் வந்து வந்து பார்த்து விட்டுப் போய்க் கொண்டிருந்தனர். மடத்து ஸம்ஸ்கிருத வித்துவான்களுள் ஒருவரும் மிக்க முதுமையை உடையவருமாகிய ஸ்ரீராமகுட்டி சாஸ்திரிகளென்பவர் அப்பொழுது ஒடுக்கத்திலிருந்து எனக்கு எதிரே வந்தார். அவர் பிள்ளையவர்களோடு நெடுங்காலம் பழகியவர்; பல சாஸ்திரங்களில் நிபுணர்; தளர்ந்த உடலையும் தளரா நாவையும் உடையவர். அவர் என்னைக் கண்டு ஓவென்றழுது, "தமிழ்க் காளிதாசன் போய்விட்டானையா!" என்று மூன்று முறைசொல்லி அரற்றினர். பலர் உடனே அங்கே வந்து கூடிவிட்டனர். அப்பால் ஒருவாறு சமாதானப்படுத்தி அவரை அனுப்பிவிட்டு, அங்கே நின்ற மற்றவர்களோடு சேர்ந்து ஒடுக்கத்திற்குச் சென்றேன்.
சுப்பிரமணிய தேசிகர் தம்மைச் சூழ்ந்திருந்த பலரிடம் பிள்ளையவர்களுடைய குணங்களையும் கல்விச் சிறப்பையும் பற்றிப் பாராட்டியும் பிரிவைப்பற்றி வருத்தமுற்றும் பேசிக்கொண்டிருந்தனர்: "தேசாந்தரங்களிலெல்லாம் பிள்ளையவர்களுடைய பெரும் புலமைத் திறம் புகழப்படுகிறது. அவர்கள் பெயரோடு நமது மடத்தின் பெயரும் விளங்குகின்றது. அந்தப் புலவர்மணியின் ஆற்றல் இந்த மடத்தை எல்லோருக்கும் உரிய கல்வி நிலயமாகச் செய்தது. வைதிக மதஸ்தர்களும் பிறமதஸ்தர்களும் பல்வகைச் சாதியினரும் தமிழ் நூல்களைத் தடையின்றிப் பாடஞ் சொல்லும் அவர்களை எண்ணி எண்ணி இங்கே வந்தனர். நமது மடத்துக்கும் கெளரவத்தை அளித்தார்கள். முன் பழக்கமில்லாத எத்தனையோ உத்தியோகஸ்தர்களும் வேறு வகையான பிரபுக்களும் இந்த மடத்திற்கு வந்திருக்கிறார்கள். எல்லாம் அவர்களால் வந்த பாக்கியமே. பணமும் இடமும் அதிகாரமும் சாதியாத எவ்வளவோ காரியங்களை மடத்திற்காக அவர்கள் சாதித்து உதவியிருக்கிறார்கள். அவ்வளவுக்கும் இந்த மடத்திலிருந்து அவர்கள் பெற்ற பயன் சிறிதளவேயாகும். எங்கே இருந்தாலும் அவர்கள் தம்முடைய தமிழரசாட்சியை நடத்தியிருப்பார்கள். அதற்கு இம் மடத்தை அமைத்துக்கொண்டது ஆதீனத்தின் பாலுள்ள அபிமானமே. இந்த ஆதீன குலதெய்வமென்று சொல்லப்படுகிற சிவஞான முனிவர் முதலிய பெரியோர்களால் இவ்வாதீனம் தமிழ்க் கல்வியில் மிக்க சிறப்பை அடைந்ததாயினும் மடத்திலிருந்தே பாடஞ் சொல்லித் தமிழை விருத்தி செய்யவில்லையே என்ற குறை இந்த மடத்திற்கு இருந்து வந்தது. அக்குறை பிள்ளையவர்களாலே தான் தீர்ந்ததென்பதை நாம் சொல்ல வேண்டுமா! இனிமேல் அத்தகைய உபகாரிகள் எங்கே பிறக்கப்போகிறார்கள்! ‘பிள்ளையவர்களைப் பார்க்கும்படி செய்விக்கவேண்டும்' என்று இங்கே வந்தவர்களெல்லாம் சொல்லச் சொல்லக் கேட்டுக் குளிர்ந்த இந்தச் செவிகள் இனிமேல் எதைக் கேட்கும்! பெரிய மனிதர்கள் வந்த காலத்திலும் சிறந்த வித்துவான்கள் வந்த காலத்திலும் சமயத்துக்கு ஏற்றபடியும் நம்முடைய உள்ளக் கருத்துக்கு ஒத்தபடியும் அரிய இனிய செய்யுட்களை விரைவிற் செய்து மகிழ்விக்கும் அவர்களுடைய திறமையை வேறு யாரிடம் பார்க்கப் போகிறோம்! எவ்வளவு பெரிய ஸபையிலும் அவர்கள் அங்கே நிகழும் நிகழ்ச்சியைச் சிறப்பித்துக் கவியொன்று கூறி விட்டால் அந்த ஸபையில் உண்டாகும் குதூகலமும் நமக்கு உண்டாகும் ஆனந்தமும் இனிமேல் எங்கே வரப்போகின்றன! அவர்களுடைய கவி ஸபைநிகழ்ச்சியின் முடிவிற் கிரீடஞ் சூட்டியது போல விளங்குமே! அவர்களிடம் மதிப்புள்ள எத்தனை பேர்கள் தம்மாலான அனுகூலங்களை மடத்திற்குச் செய்திருக்கிறார்கள்! 'திருவாவடுதுறை ஆதீனம் செந்தமிழ்ச்செல்வியின் நடன சாலை' என்று பிற்காலத்திலும் யாவரும் கூறும் வண்ணம் செய்வித்த அவர்கள் இல்லாத குறை இனி என்றைக்கு நீங்குமோ தெரியவில்லை.
"வந்தவர்களில் அவர்கள் குணத்தைக்கண்டு வியவாதவர்களே இல்லை. என்ன அருமையான குணம்! நாமும் தினந்தோறும் எவ்வளவோ வித்துவான்களைப் பார்த்துக் கொண்டே வருகிறோம். சிறிது படித்திருந்தால் எவ்வளவு தருக்கு வந்துவிடுகிறது? இப்பொழுது தமிழ்நாட்டிலுள்ள தமிழ்ப்புலவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கிய அவர்கள் அலையற்ற கடல்போல அடங்கியிருந்த ஆச்சரியத்தை என்னவென்று சொல்வோம்! அவர்கள் தம்முடைய ஆற்றலைத் தாமே புகழ்ந்து கொண்டதை யாரேனும் கேட்டிருக்கிறார்களா! அத்தகைய குணக்குன்றை இனிமேல் எங்கே பார்க்கப் போகிறோம்! மிகச் சிறந்த பண்டிதராகிய ஆதீன வித்துவான் [12] தாண்டவராயத் தம்பிரானவர்கள் கூட 'இவர்களைப்போல யாரும் இல்லை' என்று வியக்கும் புலமையும் இயல்பும் உடைய அவர்களுக்கு ஆயுள் மாத்திரம் இவ்வளவினதாக அமைந்ததை நினைந்து நினைந்து வருந்துவதை யன்றி நாம் என்ன செய்யமுடியும்? ஸ்ரீநமச்சிவாய மூர்த்தியின் திருவருள் இவ்வளவுதான் போலும்! கவித்வ சக்தியை நேரிற் காணாமல் யாராவது கேட்டால் உண்மையென்று நம்பமுடியாதபடி அவ்வளவு ஆச்சரியமாகப் பாடும் அந்த மகாகவியைத் தமிழ் மொழி இழந்த நஷ்டத்தை நீக்குதற்கு இனி யாரால் முடியும்? இனி நமக்குப் பொழுது போவது எவ்வாறு?" என்று அவர் பலவாறு சொல்லிக் கொண்டே யிருந்தனர்.
பிள்ளையவர்கள் சிவபதமடைந்த தினத்தைப் புலப்படுத்தித் தில்லை விடங்கன் வெண்பாப் புலி வேலுசாமி பிள்ளை யென்பவர்,
என்னும் வெண்பாவை இயற்றினார்.
கடிதங்கள்.
உடனே தியாகராச செட்டியாருக்கு இந்த விஷயத்தைத் தேசிகர் கட்டளையின்படி குமாரசாமித் தம்பிரான் எழுதியனுப்பினார்; முதல் நாளில் அவருடைய நற்றாய் தேக வியோகமானமையின் அப்பிரிவாற்றாமல் வருந்திக்கொண்டிருந்த அவர் இச் செய்தி தெரிந்து, "முதல்நாள் பெற்ற தாயையும் மறுநாள் ஞானபிதாவையும் இழந்துவிட்டேன்" என்று மிக வருந்தி விடையனுப்பினார்.
இவர் சிவபதம் அடைந்ததைக் குறித்துப் பிற்பாடு, பல அன்பர்களுக்குச் சிதம்பரம் பிள்ளையைக் கொண்டும் என்னைக் கொண்டும் பிறரைக் கொண்டும் கடிதம் எழுதும்படி சுப்பிரமணிய தேசிகர் செய்வித்தார். ஒவ்வொருவரும் பிரிவாற்றாமையைப் புலப்படுத்தி விடைக்கடிதம் அனுப்பிவந்தனர்.
அவற்றுள் சின்னப்பட்டம் நமச்சிவாய தேசிகர் கல்லிடைக் குறிச்சியிலிருந்து சுப்பிரமணிய தேசிகருக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் பிள்ளையவர்களுடைய தேக வியோகத்தைப்பற்றி எழுதியுள்ள பகுதி வருமாறு:
"மஹா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இன்னும் கொஞ்ச நாளாவதிருந்தால் கல்வி அருமை பெருமையடையும். அதற்கு அதிட்டமில்லாமற் போய்விட்டது. அவர்கள் விஷயத்தில் மஹா ஸந்நிதானத்திற் கொண்டருளுவதெல்லாம் பெருங்கிருபையென்றே நினைத்துப் பெருமகிழ்ச்சியுற்றிருக்கிறேன்."
ஆறுமுக நாவலர் சிதம்பரம் பிள்ளைக்கு எழுதிய கடிதம் வருமாறு:
உ .
"சிவமயம்."
"ஸ்ரீ சிதம்பர சபாநாயகர் திருவருளினாலே செல்வச் சிரஞ்சீவி தம்பி சிதம்பரம் பிள்ளைக்குச் சர்வாபீட்ட சித்தி யெய்துக.
"தாம் எழுதியனுப்பிய கடிதம் பெற்று வாசித்துச் சகிக்கலாற்றாத் துக்கமுற்று யாக்கை நிலையாமையை நினைந்து ஒருவாறு தெளிந்தேன். தம்முடைய தந்தையாராகிய மஹா கனம் பொருந்திய ஸ்ரீபிள்ளையவர்கள் தமிழ் வழங்கு நிலமெங்கும் உலக மழியுங்காறும் தங்கள் புகழுடம்பை நிறுத்திவிட்டுச் சென்றமையே தமக்கு வாய்த்ததொரு பெரும்பாக்கியம்! இன்னுஞ் சில காலம் இருப்பார்களாயின், இன்னுஞ் சில காரியங்கள் அவர்களாற் செய்யப்பட்டு விளங்கும். 'வினைதானொழிந்தாற் றினைப்போதளவு நில்லாது' என்னுந் திருவாக்கை நினைந்து, அவர்களருமையை யறிந்தோர் யாவரும் தங்கள் துக்கத்தை யாற்றிக்கொள்வதே தகுதி.
"தாம், தம்முடைய தந்தையாரவர்களைப் பரிபாலித்து அவர்களுடைய கீர்த்தியை வெளிப்படுத்தி யருளிய பெருங்கருணை வெள்ளமாகிய திருவாவடுதுறை மகா சந்நிதானத்தின் திருவடிகளை மறவாத சிந்தையும், தம்முடைய தந்தையாரவர்களிடத்து மெய்யன்புடைய மாணாக்கர்களைச் சகோதரர்களாகவே கொண்டொழுகு நேசமும், எவராலும் நன்கு மதிக்கற்பாலதாகிய நல்லொழுக்கமும் உடையராய், இனிது வாழ்ந்திருக்கும்படி, திருவருள் சுரக்கும்பொருட்டு ஸ்ரீ சிதம்பர சபாநாயகர் திருவடியைப் பிரார்த்திக்கின்றேன்.
யாழ்ப்பாணம்
வண்ணார் பண்ணை இங்ஙனம்,
யுவ வருடம் மாசி மாதம் 19 ஆம் நாள் ஆறுமுக நாவலர்."
இந்தக் கடிதத்தை எழுதிய பின்னர் நாவலர் நெடுநேரம் வரையில் வருத்தத்தோடும் இருந்து பிள்ளையவர்களுடைய அருமை பெருமைகளைப் பாராட்டிவிட்டு, பின்புதான் பூசைக்குச் சென்றனரென்று அக்காலத்து அவருடனிருந்து வந்த காரைக்குடி சொக்கலிங்கையாவும் பிறரும் சொன்னதுண்டு.
பிள்ளையவர்களுடைய மாணவருள் ஒருவராகிய தஞ்சை, கோ. இராமகிருஷ்ண பிள்ளை சுப்பிரமணிய தேசிகருக்கு எழுதிய விண்ணப்பக் கடிதம் வருமாறு:-
உ
"அகண்டாகார நித்திய வியாபக சச்சிதாநந்தப் பிழம்பாய் நிறைந்த ஸ்ரீலஸ்ரீ சற்குருநாத சுவாமிகள் திவ்விய சந்நிதானத்திற்கு அடியேன் கோ. இராமகிருஷ்ணன் திக்கு நோக்கித் தண்டனிட்டெழுதிக்கொள்ளும் விண்ணப்பம்.
"ஐயா அவர்கள் ஸ்ரீ சிவபெருமான் திருவடிக் கீழ் ஐக்கியமாயின செய்தி மகாசந்நிதானங் கருணை கூர்ந்து சுவாமிநாத ஐயரால் விடுத்த நிருபத்தைப் பார்க்கப் பார்க்க அதிகத் துயரத்திற்கு இடமாயிருப்பதுந்தவிர, அவர்களாலடைய வேண்டிய பெரும்பயன் யாவும் இழந்து கண்ணிலாக் குழவிபோல் நேரிட்டிருக்கும் பெருஞ் சந்தேகங்களை நிவிர்த்திக்க மார்க்கமின்றி உழல்கின்றேன். ஒன்றையே பல தடவை கேட்பினும் அதற்கு வெறுப்பின்றிப் பிதாவைப் போல் யார் இனிக் கற்பிப்பார்கள்!
"இனி இக்குறைவை நிறைவேற்றச் சந்நிதானங் கருணை கூர்தலன்றி வேறு நெறியை அடியேனும் மற்றையோரும் அறியோம்.
" இவ்விண்ணப்பத்துடன் கல்லாடவுரைப் புத்தகமொன்று பங்கித் தபாலிலனுப்பியிருக்கின்றேன். இது சந்நிதானஞ் சேர்ந்ததற்கும் அடியேன் இனி நடத்த வேண்டும் பணிவிடைகளுக்கும் கட்டளையிட்டருளப் பிரார்த்திக்கிறேன்.
தஞ்சாவூர்
யுவ வருடம் இங்ஙனம்,
பங்குனி மாதம் 16ஆம் நாள் கோ. இராமகிருஷ்ணன்.
இரங்கற் செய்யுட்கள்.
அந்தக் காலத்தில் அயலூருக்குச் சென்றிருந்த மகா வைத்தியநாதையரும் அவருடைய தமையனாராகிய இராமஸ்வாமி ஐயரும் பிள்ளையவர்கள் தேகவியோகமடைந்த செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வருந்தினார்கள். அப்பொழுது இராமஸ்வாமி ஐயர் மனம் வருந்திப் பாடிய பாடல்கள் வருமாறு:
சுப்பிரமணிய தேசிகர் இவர் குடும்பக்கடனைத் தீர்த்தது.
இவருடைய குடும்ப நிலையைப்பற்றி அறிய விரும்பிச் சுப்பிரமணிய தேசிகர் சிதம்பரம்பிள்ளையை அழைத்து விசாரித்தபொழுது ரூ. 3,000-க்கு மேற்பட்டுக் கடன் இருப்பதாக அவர் சொன்னார். உடனே சுப்பிரமணிய தேசிகர், "கடன்களைத் தீர்த்து விடாமல் இறந்து போனார்களென்ற அபவாதம் மடத்து மகாவித்துவானாகிய நமது பிள்ளையவர்களுக்கு இருக்கக்கூடாது. அவ்வாறாயின், அது மடத்திற்கு ஏற்படும் அபவாதமேயாகும்" என்று சொல்லி, கடன்காரர்களைப் பத்திரங்களுடன் வருவித்துப் பிள்ளையவர்களுடைய குமாரரையும் சில மாணாக்கர்களையும் உடன் வைத்துக் கொண்டு கடன்களைக் கொடுக்கத் தொடங்கினார். பணப்பைகள் சில அங்கே கொணர்ந்து வைக்கப்பட்டன. அப்பொழுது தேசிகர், "இவை பிள்ளையவர்களுக்காகக் கொடுக்கப்படுவன. அவர்களிடம் அன்பு வைத்து வட்டியில் சிறிதாவது, முற்றுமாவது முதல் தொகையிற் சிலபாகமாவது முற்றுமாவது தள்ளிப் பெற்றுக் கொள்ளலாம்; முற்றும் வேண்டுபவர்கள் அவ்வாறே பெற்றுக் கொள்ளலாம்" என்றார். அப்படியே சிலர், தங்களுக்குரிய தொகைகளில் ஒவ்வொரு பகுதியைத் தள்ளிப் பெற்றுக்கொண்டார்கள்.
பின்பு தேசிகர் சிதம்பரம்பிள்ளையை நோக்கி, "மடத்திலுள்ளவர்கள் பெருந்தொகையை ஒரு குடும்பத்திற்கு நாம் கொடுத்துவிட்டதாகக் குறை கூறுவார்கள். அதற்கு இடமில்லாதபடி பிள்ளையவர்களுடைய புத்தகங்களை மடத்துப் புத்தகசாலையிற் சேர்த்துவிடும். அவற்றை நீர் வைத்துக்கொண்டு இனி என்ன செய்யப்போகிறீர்?" என்றார். அப்படியே சிதம்பரம் பிள்ளை செய்துவிட்டார். பிள்ளையவர்களுடைய ஏட்டுச் சுவடிகள் மட்டும் மூன்று கட்டுப் பெட்டிகள் நிறைய இருந்தன.
----------
[1] முதற்பாகம், ப. 79 - 81, பார்க்க.
[2] கதிரவன் தளி - சூரியனார் கோயில்.
[3] கம்ப. மந்தரை சூழ்ச்சிப். 70
[4] மீ. பிரபந்தத்திரட்டு, 2237-2338.
[5] இச்செய்தி திருவிடைமருதூருலாவிலுள்ள, "ஒப்பேதும், இல்லா வலஞ்சுழியே யேரம்பன் வைப்பாக, மல்லே ரகமுருகன் வைப்பாக - நல்லார்சேர், தண்மாட வாப்பாடி தண்டீசன் வைப்பாக, வண்மாந் துறையிரவி வைப்பாக - எண்மாறா, நன்காமர் தில்லை நடராசன் வைப்பாக, மன்காழி யேவடுகன் வைப்பாக - முன்காணும், தென்னா வடுதுறையூர் சேவமர்வைப் பாவாரூர், மன்னுசோ மாக்கந்தர் வைப்பாக - உன்னிற், றடைதவிரா லங்குடியா சாரியன்வைப் பாக, இடைமருதில் வீற்றிருக்கு மீசன்" (131 - 6) என்னும் கண்ணிகளிலும் காணப்படும்.
[6] இவருடைய விரிவான வரலாற்றை, 'கலைமகள்' என்னும் பத்திரிகையின் முதல் தொகுதி 273-80-ஆம் பக்கங்களிற் காணலாம்.
[7]சிவஞான முனிவரெனவும் வழங்கப்பெறுவர்.
[8] மீ. பிரபந்தத்திரட்டு, 3941.
[9] மீ. பிரபந்தத் திரட்டு, 3953.
[10] சமயாசாரியராம் இருவர் - திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார். சந்தானத்து இருவர்கள் - மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியாரென்பவர்கள்.
[11] இங்கே கட்டளையிட்டபடியே ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் எனக்குத் திருவாவடுதுறை அக்கிரகாரத்தில் வடசிறகின் கீழைக்கோடியில் நூதனமாக இரண்டுகட்டு வீடொன்றைக் கட்டுவித்து அளித்தார்கள். அக்காலத்திற் பதிப்பிக்கப் பெற்ற சில அச்சுப் புத்தகங்களில் அவர்களுடைய கட்டளையின்படி திருவாவடுதுறைச் சாமிநாதையரென்றே என் பெயர் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அப்பால் நான் கும்பகோணம் காலேஜிற்குப் போனபோது அந்த வீட்டை அவர்களிடமே ஒப்பித்துவிட்டேன்.
[12] ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குத் தாண்டவராயத் தம்பிரானவர்கள் பால் சிறந்த மதிப்பும் அன்பும் உண்டு; "நாம் வழிபடு தெய்வம் பிரத்தியட்சமாகி என்ன வேண்டுமென்று கேட்டால் தாண்டவராயத் தம்பிரானவர்களை நாம் பார்க்கும்படி செய்யவேண்டுமென்று கேட்போம்" என்று அவர் சொல்வதுண்டு. அத்தகைய மதிப்புடைய தாண்டவராயத் தம்பிரானவர்கள் பாராட்டத்தக்க புலமைத் திறம் பிள்ளையவர்கள்பால் இருந்தமையால்தான் தேசிகர் இவரிடத்து அதிகமாக ஈடுபட்டார்.
[13] கும்பன் - அகத்திய முனிவர். கம்பன் ஆம் - நடுக்கமுடையவன் ஆவான்; கம்பம் - நடுக்கம்.
-----------
சிதம்பரம் பிள்ளை.
அப்பால் சிதம்பரம் பிள்ளை முதலியவர்கள் தேசிகரிடம் விடை பெற்றுக்கொண்டு மாயூரத்திற்குப் புறப்படுகையில் தேசிகர் உசிதமாக அப்பொழுது செய்யவேண்டிய உதவிகளைச் செய்து அனுப்பினார். அவர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு மாயூரம் சென்று சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்கள்.
சிதம்பரம் பிள்ளையினுடைய குடும்பம் வரவரப் பெருகிவிட்டமையினால் செலவு அதிகரிக்கவே குடும்பம் தளர்ச்சியை அடைந்தது. அதனை அவர் மடத்திற்குத் தெரிவிக்கவில்லை. வேதநாயகம்பிள்ளை அதனை அறிந்து அந்தத் துயரத்தை நீக்கியருள வேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகருக்கு ஐந்து பாடல்கள் எழுதியனுப்பினார். அவை வருமாறு :
சிதம்பரம் பிள்ளைக்கு ஆங்கிலத்திலும் பயிற்சி உண்டு. அவர் சும்மா இருத்தலையறிந்த வேதநாயகம் பிள்ளை அங்கே டிப்டி கலெக்டராயிருந்த முருகேசம் பிள்ளை யென்பவரிடம் சொல்லி மாயூரந் தாலூகாவிலுள்ள கப்பூரென்னும் ஊரில் கணக்கு வேலை கிடைக்கும்படி செய்வித்தார். அவ்வேலையைப் பெற்றுக்கொண்டு அவர் வாழ்ந்திருப்பாராயினர். மேல் உத்தியோகஸ்தர்கள் பிள்ளையவர்களுடைய குமாரரென்பதை யறிந்து அவரிடம் பிரியமாக இருந்து பலவகையான அனுகூலங்களை அவருக்குச் செய்வித்து வந்தார்கள்.
சிதம்பரம் பிள்ளை அப்பொழுது அப்பொழுது தாம் வாங்கி வந்த கடன் மிகுதியால் தம்முடைய வீட்டை விற்றுக் கடன்காரர்களுக்குச் சேர்ப்பிக்க வேண்டிய தொகையைச் சேர்ப்பித்துவிட்டுப் பின் வாடகை வீட்டிற் குடியிருந்துவந்தனர்; அங்ஙனம் இருந்து வந்தமை அவர் குடும்பத்திற்கு மிகவும் அஸெளகரியமாக இருந்தது. அதனை யறிந்த நான் அவருக்கு இடவசதி செய்விக்க வேண்டுமென்று நினைந்து பிள்ளையவர்கள் மாணாக்கர்கள் பலரிடத்தும் அன்பர்கள் பலரிடத்தும் சொல்லியும் கடிதவாயிலாகத் தெரிவித்தும் வந்தேன். ஒருவரும் கவனிக்கவில்லை. அப்பால் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குப் பின்பு ஆதீனகர்த்தராக இருந்தவரும் அருங்கலை விநோதரும் கற்றவர் நற்றுணையுமாகிய ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்கு, சில செய்யுட்களால் சிதம்பரம் பிள்ளைக்கு ஒரு வீடுவாங்கிக்கொடுக்க வேண்டுமென்று தெரிவித்துக்கொண்டேன். அச்செய்யுட்கள் வருமாறு :
குடும்பத்துக்கு உதவி.
கும்பகோணம் காலேஜில் நான் வேலைபார்க்கத் தொடங்கியது முதல் அவ்வப்போது என்னால் இயன்ற உதவிகளை அக்குடும்பத்துக்குச் செய்துவந்ததுண்டு. நிலையான தொகை ஒன்று இருந்தால் அக் குடும்பத்திற்கு அனுகூலமாக இருக்குமென்று நினைத்து அது விஷயத்தில் முயற்சி செய்ய எண்ணினேன். 1915-ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் பூவாளூர்ச் சைவ சித்தாந்த ஸபைக்கு நான் போய்வர நேர்ந்தது. அங்ஙனம் போயிருந்தபொழுது அவ்வூரில் பிள்ளையவர்களுடைய பெருமையை நன்றாக அறிந்த தனவைசியச் செல்வர்கள் அக்காலத்தில் இருந்தனராதலின் அவர்கள் முன்னிலையில் என்னுடைய கருத்தை வெளியிட்டேன். அந்த ஸபைக்கு வந்திருந்த சேற்றூர்ச் சமஸ்தான வித்துவான் ஸ்ரீமான் மு. ரா. கந்தசாமிக் கவிராயரவர்களும், மகிபாலன்பட்டி, பண்டிதமணி ஸ்ரீமான் மு. கதிரேசச் செட்டியாரவர்களும் அதனை ஆமோதித்துப் பேசினார்கள். ஸபைக்கு வந்திருந்த கனவான்கள் கேட்டு அங்கீகரித்து உடனே 250 ரூபாய் வரையில் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தார்கள். என்னுடைய விருப்பத்தின்படி இக்காரியத்தை நிறைவேற்றுதற்குரிய முயற்சியைக் கவிராயரவர்களும் செட்டியாரவர்களும் ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டாருக்கு ஒரு வேண்டுகோளை அச்சிட்டு அனுப்பினார்கள். பின்பு மேலைச்சிவபுரி முதலிய ஊர்களிலிருந்த கனவான்களிடமிருந்தும் பூவாளூரிலிருந்தும் வேறு வகையிலும் ரூபாய் ஆயிரத்துக்குச் சிறிது மேற்பட்ட தொகை கிடைத்திருப்பதாக அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். 1916-ஆம் வருஷம் டிசம்பர் மாதத்தில் இங்ஙனம் சேர்ந்த அந்தத் தொகை திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த பாஸ்கர விலாஸத்திற் கூட்டப்பெற்ற ஒரு மகா ஸபையில் சிதம்பரம் பிள்ளைக்கு எங்கள் விருப்பத்தின்படி ஸ்ரீ அம்பலவாண தேசிகரால் வழங்கப்பெற்றது. அவர் அதனைப் பெற்று அந்தத் தொகையின் வட்டியினாலும் வேலையிற் கிடைக்கும் வரும்படியினாலும் சுகமாக வாழ்ந்துவந்தனர்.
குடும்பத்தின் பிந்திய வரலாறு.
சிதம்பரம் பிள்ளைக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. அவர்களுள் முதல்வரும் மூன்றாம் புதல்வரும் அக்காலத்தில் இறந்துவிட்டனர். இரண்டாங் குமாரருக்கு வைத்தியநாதசாமி பிள்ளை யென்று பெயர். தம் தந்தையார் பார்த்து வந்த கப்பூர்க் கணக்கு வேலையை அவர் பார்த்துக்கொண்டு இப்பொழுது சௌக்கியமாக இருந்து வருகின்றனர். அவரை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. "உமக்கு ஆண் குழந்தை பிறந்தால் அக் குழந்தைக்குப் பிள்ளையவர்களுடைய பெயரை வைக்கவேண்டும்" என்று அவரிடம் நான் சொல்லியிருந்தேன். பின் ஒருமுறை அவரைக் கண்டபொழுது தமக்கு ஒரு குமாரன் பிறந்திருப்பதாகவும் அவனுக்கு மீனாட்சி சுந்தரமென்று பெயர் வைத்திருப்பதாகவும் சொன்னார். நான் அதனை அறிந்து மகிழ்ந்தேன். அவர் அடிக்கடி திருவாவடுதுறைக்கு வந்து இப்பொழுது ஆதீனகர்த்தர்களாக விளங்கும் ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகரவர்களைத் தரிசனம் செய்துகொண்டு போவார். அவர்களும் அவர்பால் மிக்க அன்புடையவர்களாகி விசேஷ தினங்களில் வஸ்திரம் முதலியன அளித்து ஆதரித்துவருகிறார்கள்.
சில வருஷங்களுக்கு முன்பு நான் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர்களைப்பார்க்கச் சென்றிருந்தபொழுது வைத்தியநாதசாமி பிள்ளை தம்முடைய குமாரனுடன் அங்கே வந்திருந்தார்; "இவன் தான் என்னுடைய குமாரன்" என்று அவர் சொன்னார். அப்பொழுது அவனுக்குப் பத்துப்பிராயம் இருக்கும். அவனைப் பார்த்து, “உன்னுடைய பெயரென்ன?" என்று கேட்டேன். அவன், "மீனாட்சிசுந்தரம்" என்று தைரியமாகச் சொன்னான். அந்தப் பெயரை அவன் கூறியபொழுது எனக்குப் பழைய ஞாபகங்களெல்லாம் வந்து இன்பமளித்தன. "தமிழ் வாசிக்கிறாயா?" என்றேன். “வாசித்து வருகிறேன்" என்றான். "ஏதாவது ஒரு பாடலைச் சொல்" என்றபோது ஒரு பாட்டை நன்றாகச் சொன்னான். பின்பு, "புதிதாக ஒரு பாட்டைப் பாடித் தந்தால் பாடம் பண்ணிக்கொண்டு தைரியமாக ஸந்நிதானத்திடம் சொல்வாயா?" என்று நான் கேட்கவே, "நன்றாகச் சொல்லுவேன்" என்று அவன் சொன்னான். அவனுடைய தைரியத்தைப் பாராட்டியதன்றி,
என்ற செய்யுளைச் செய்து கொடுத்துப் பாடம் பண்ணச் சொல்லி ஆதீனகர்த்தரவர்களிடம் அழைத்துச் சென்றேன். அவர்களுக்கு வந்தனம் செய்து திருநீறு பெற்றுக் கொண்டான். பின்பு பாட்டை விண்ணப்பிக்கச் செய்தேன். அவன் மிகவும் தைரியமாகவே அந்தச் செய்யுளைச் சொன்னான்; சொல்லும் பொழுது எங்கெங்கே எப்படி எப்படி நிறுத்திச் சொல்ல வேண்டுமோ அங்கங்கே அப்படி அப்படியே நிறுத்தி அந்தப் பாடலைச் சொன்னான். கேட்ட தேசிகரவர்கள் மகிழ்ந்து பின்னும் இரண்டுமுறை அதனைச் சொல்லச் செய்து கேட்டார்கள்; "மேலும் மேலும் படித்து வா. அடிக்கடி இங்கே வந்து போ" என்று பேரன்புடன் கட்டளையிட்டதோடு பொருளும் வஸ்திரமும் அளித்து அனுப்பினார்கள்.
அவனுக்கு இப்பொழுது பதின்மூன்று பிராயம் இருக்கும். அவனைக் காணும் பொழுதெல்லாம், "பிள்ளையவர்கள் பரம்பரையிற் பிறந்த உனக்குத் தமிழில் இயல்பாகவே அறிவு விருத்தியாகும். ஊக்கத்தோடு படித்து வந்தால் சிறந்த பயனை அடைவாய். தமிழ் நாட்டாருடைய அன்புக்கும் பாத்திரனாவாய்" என்று கூறிக்கொண்டு வருகிறேன்; அவனும் படித்துக்கொண்டு வருகிறான். தமிழ்த் தெய்வத்தின் திருவருளும், தமிழ்நாட்டாருடைய பேரன்பும் அக் குடும்பத்தினருக்கு என்றும் இருந்து வரவேண்டுமென்பதே எனது வேணவாவாகும். இறைவன் திருவருள் அங்ஙனமே செய்விக்குமென எண்ணுகிறேன்.
சுபம்.
--------------
தோற்றம்.
பிள்ளையவர்களுடைய சரீரம் மாநிறமுடையது. இவர் நல்ல வளர்ச்சியமைந்த தோற்றமுடையவர். இவரைப் பார்த்த மாத்திரத்தில் யாரும் ’சிறந்த தகுதியுடையவர்’ என்று எண்ணுவார்கள். நெற்றியின் அகலமானது இவருடைய அறிவைப் புலப்படுத்தும். கைகள் முழங்கால் வரையில் நீண்டிருக்கும். வலக்கையில் உள்ளங்கையிலிருந்து நடுவிரலின் மத்தியில் ஊடுருவிச் செல்லும் ரேகை ஒன்று உண்டு. அது வித்தியாரேகை யென்றும் அதனை யுடையவர்கள் சிறந்த கவிஞர்களாகவும் நல்ல, ஞாபக சக்தி யுடையவர்களாகவும் இருப்பார்களென்றும் அத்தகையவர்களைக் காண்டல் அரிதென்றும் அறிஞர் கூறுவர்; உள்ளங்கையானது பூவைப்போன்று மிகவும் மென்மை-யுடையதாக இருக்கும்; "எத்தகைய வறுமை நிலையை அடைவதாயிருந்தாலும் ஆகார விஷயத்தில் எந்த இடத்திலும் இவருக்கும் இவரைச் சார்ந்தவர்களுக்கும் யாதொரு குறைவும் வாராது" என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிந்தோர் கூறுவதுண்டு. நான் பழகிய போது இவர் பருத்த தேகம் உடையவராக இருந்தார். தலையில் சிறிய குடுமி உண்டு. இளமையிலிருந்ததைவிட முதுமையில் பருத்த தேக முடையவராக ஆயினரென்று இவருடன் பழகியவர் சொல்லுவர்.
காட்சிக்கு எளிமையும், பணிவும், சாந்தமும் இவர்பாலுள்ளன வென்பதை இவரைக் கண்டவுடன் அறியலாம். ஆழ்ந்த அறிவும் இணையற்ற கவித்துவமும் வாய்க்கப் பெற்றிருந்தும், அலைகளெல்லாம் அடங்கி ஒலியற்றிருக்கும் ஆழ்ந்த கடலைப்போல் அறிவின் விசித்திர சக்தியெல்லாம் கண்டவுடன் அறிய முடியாவண்ணம் அடங்கியிருக்கும் தோற்றமுடையவராக இவர் இருந்தார்.
இடையில் ஆறுமுழ நீளமும் மூன்றுமுழ அகலமும் உள்ள தூய வெள்ளை உடை, ஆறுமுழ நீளமுள்ள மேலாடை, உதரபந்தனமாக ஒரு சிறிய சவுக்கம் ஆகிய இவ்வளவே இவர் எக்காலத்தும் அணியும் ஆடைகள். உடையை மூலகச்சமாக உடுத்திக்கொள்வார். . முன்னும் பின்னும் கெளரிசங்கரமுள்ள ருத்திராட்ச கண்டியைத் தரித்திருப்பார். இவருடைய கையில் ஊன்றிச் செல்வதற்குரிய பிரம்பு, ஒன்று இருக்கும். நடந்து செல்லுங் காலத்தில் வலக்கையால் வஸ்திரத்தின் மூலையைப் பற்றிக்கொண்டு நடப்பார். இடையின் வலப் புறத்தில் நன்றாக வடிக்கட்டிய விபூதி நிறைந்த வெள்ளிச் சம்புடம் ஒன்றும் இடப்புறத்தில் மூக்குத்தூள் 'டப்பி' ஒன்றும் இவர் உடையிற் செருகப்பட்டிருக்கும். காலில் ஜோடு போடுவதுண்டு; ஆனால் திருவாவடுதுறையில் மட்டும் இவர் அவற்றை உபயோகிப்பதில்லை. யானை போன்ற அசைந்த மெல்லிய நடையை உடையவர் இவர். அளவாகவும் மென்மையாகவும் நிறுத்தியும் பேசுவார். திடீரென்று அதட்டிப் பேசுதலும் கோபமாக இரைந்து பேசுதலும் இவர்பால் இல்லை.
வழக்கங்கள்.
விடிய நான்கு நாழிகைக்கு முன் எழுந்திருப்பது இவர் வழக்கம்; உடனே ஒரு நாழிகைவழித் தூரத்திற்குக் குறையாமல் நடந்து சென்று தந்தசுத்தி முதலியவற்றைச் செய்து அநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வருவார். அப்பொழுது உடன் செல்பவர்களுடன் தமிழ் நூல்களிலுள்ள செய்யுள் நயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே நடப்பார். தம்முடன் உறையும் மாணாக்கர்கள் விழித்து எழுந்து வாராவிட்டால், அவர்கள் எழுந்துவரும் வரையில் [1] பழந்தமிழ்ச் செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே வீட்டு வாயிலில் உலாத்துவார்; அவர்களைத் தாமாக எழுப்புவதில்லை. நான் பழகிவந்த காலத்தில் இவர் பெரும்பாலும் வெந்நீரிலேயே ஸ்நானம் செய்வார். நல்ல புல்தரைகளையும் சோலைகளையும் ஆற்றின் கரைகளையும் பார்ப்பதில் இவருக்கு மனமகிழ்ச்சி உண்டு. கோடைக் காலத்தில் பிற்பகலிற்சென்று ஆறுகளில் ஊற்றுத் தோண்டி இறைப்பித்துச் சுத்தமான அந்த ஊற்றைப் பார்த்தலிலும் அதில் ஆடையைத் துவைக்கச் செய்தலிலும் துவைத்த ஆடைகளைக் கொய்து ஊற்றின் குறுக்கே போடுவித்து ஊறவைத்தலிலும் இவருக்கு விருப்பம் அதிகம். அந்த ஊற்றுக்களைப் பார்த்துக்கொண்டே வழக்கமாகச் செய்யும் செய்யுட்களை இயற்றுவதுமுண்டு. ஒருமுறை நான்கு ஊற்றுக்களைப் போடுவித்து அவற்றைப்பற்றி நான்கு செய்யுட்கள் இயற்றினர்.
வண்டியிற் போவதைவிட நடப்பதில் இவருக்கு விருப்பம் அதிகம். வண்டியிற் பிரயாணம் செய்யும்போது சில சமயங்களில் சில மாணாக்கர்களை வண்டியிலேயே இருக்கச்செய்து தாம் இறங்கிச் சிலருடன் நடந்துவருவார். அப்போது அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு இன்புறுவார்.
உட்கார்ந்து பாடஞ்சொல்லும்பொழுது மடியில் ஒரு திண்டை வைத்து அதன் மேல் கைகளை மடக்கிவைத்துக்கொண்டே சொல்வார். மடத்திலிருந்து பாடஞ்சொல்லும்பொழுது திண்டைவைத்துக் கொள்வதில்லை. கைகளைக் கட்டிக்கொண்டே சொல்வது வழக்கம். ஆறுமணிநேரம் வரையில் காலைப் பெயர்த்துவையாமல் அமர்ந்தபடியே யிருந்து பாடஞ்சொல்வார். எந்த வகையான செய்யுளையும் [2] ஒரே வகையான இசைமுறையிலேதான் சொல்வது இவருடைய வழக்கம்.
உணவு.
காலையில் எவ்வித உணவையும் இவர் உட்கொள்ளுவதில்லை. தினம் தோறும் பகலில் பூஜை பண்ணியபின்பே உண்பார். இரண்டு வேளையே உணவு கொள்வார். மிளகு சேர்த்த உணவு வகைகளிலும் கீரை வகைகளிலும் சித்திரான்னங்களிலும் புளி சேர்த்துச் செய்த அரைக்கீரை உணவிலும் நறு நெய்யிலும் மாம்பழத்திலும் தேங்காய் வழுக்கையிலும் இவருக்கு விருப்பம் உண்டு. இரவில் சீனாக்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பாலை உண்டு படுப்பார்; பாலுண்ணுதல் ஒருநாளும் தவறியதே யில்லை; திருவாவடுதுறையிலிருக்கும்பொழுது, இரண்டு சேர் பால் இவருக்கு மடத்திலிருந்து அனுப்பப்படும்; ஒரு சேரைத் தாம் உண்டு மிகுதியை உடன் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிடுவார்.
குணங்கள்.
இவருடைய அரிய குணங்களுள் பொறுமை, திருப்தி, தம்மை வியவாமை, பிறருடைய குற்றத்தைக் கூறாமை, பிறரைப் பாராட்டல், இரக்கம், நன்றியறிவு, சிவபக்தி, மாணாக்கர்பாலுள்ள அன்பு முதலியவற்றைச் சிறப்பாகச் சொல்லலாம்.
பொறுமை.
இவர்பால் அமைந்திருந்த சாந்தகுணமே மாணாக்கர்களையும் பிறரையும் இவர்பால் இழுத்தது. பிறர் தம்மை அவமதித்தாலும் பிறரால் தமக்கு இடையூறுகள் நேர்ந்தாலும் பொறுத்துக் கொண்டிருக்கும் இவருடைய இயல்பை அறிந்து வியந்தவர்கள் பலர். தியாகராச செட்டியார் முதலியோர் சில சமயங்களில் இவர் மேற்கொண்ட பொறுமைக்காக இவரைக் குறை கூறியதுமுண்டு. யாரேனும் கடுமையாகப் பேசினால் எதிர்த்து ஒன்றும் கூறாமல் உடனே எழுந்து சென்றுவிடுவார். யாரிடத்தும் விரோதம் பாராட்டக்கூடாதென்பது இவர் கொள்கை. தம் கொள்கைக்கு மாறுபாடுடையவர்களானாலும் தமக்குப் பல இடையூறுகளைச் செய்தவர்களானாலும் அவர்களோடு பழக நேர்ந்தால் எல்லாவற்றையும் மறந்து அன்புடன் பழகுவார்; அவர்களுக்கு உதவியும் செய்வார். இவருடைய வாழ்க்கையில் வறுமையினாலும் பிறருடைய அழுக்காற்றாலும் இவருக்கு நேர்ந்த இடையூறுகள் பல. அவற்றை யெல்லாம் பொறுமையால் வென்று புகழோடு விளங்கினார்.
திருப்தி.
பணத்திற்கு அடிமையாக இராமல் பணத்தை இவர் அடிமை யாக்கினார். எவ்வளவு வறிய நிலையில் இருந்தாலும் தம் கொள்கைக்கு விரோதமான எதையும் செய்யாத வீரம் இவர்பால் இருந்தது. வறுமையால் துன்பமுறுகையில் தமது விவேகத்தால் அத்துன்பத்தை இன்பமாக எண்ணி வாழ்ந்துவந்தார். இவரைக்கொண்டு தாம் பொருள் வருவாய் பெறலாமென்றெண்ணிப் பாடசாலை வைக்கலாமென்றும் புஸ்தகங்கள் பதிப்பிக்கலாமென்றும் வேறுவகைகளிற் பொருள் ஈட்டலாமென்றும் பலர் அடிக்கடி வந்து வந்து இவர்பாற் கூறியதுண்டு. அவற்றிற்கு இவர் செவிகொடுக்கவேயில்லை. இவர் நினைத்திருந்தால் எவ்வளவோ செல்வத்தைப் பெற்றுப் பின்னும் சிறந்த நிலையில் இருந்திருக்கலாம். உள்ளதே போதுமென்ற திருப்தியே அத்தகைய முயற்சியில் இவரைச் செலுத்தாமல் இருந்தது. இவர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இவருக்குத் தெரிந்த பிரபுக்களிற்பலர் இவரைப் பெருஞ்செல்வராகச் செய்திருப்பார்கள். அவர்களிடம் தம் நிலையைக் கூறுதலை இவர் நினைத்தும் அறியார். கல்விச் செல்வத்தையன்றி வேறு செல்வத்தை இவர் மதியார்.
தம்மை வியவாமை.
தம்மை வியத்தலென்னும் குற்றம் இவர்பால் ஒருபொழுதும் காணப்படவில்லை. இவர் தமிழ் நூலாசிரியராக இருந்து செய்தற்கரிய பல செயல்களைச் செய்திருந்தாலும் அவற்றைப்பற்றித் தாமே பாராட்டிக்கொண்டதை யாரும் இவர்பால் ஒருபோதும் கண்டிலர்.
பிறருடைய குற்றத்தைக் கூறாமை.
பிறருடைய குற்றங்களை இவர் எடுத்துக் கூறமாட்டார். ஒரு நூலாசிரியரிடமோ உரையாசிரியரிடமோ ஏனைப்புலவர்களிடமோ குற்றங்கள் காணப்படின் அவற்றை இவர் பெரும்பாலும் வெளியிடார்; வெளியிட்டாலும் குற்றமென்று பிறர் கருதாதவாறு, பக்குவமாகச் சொல்லுவார்; யாரேனும் குற்றமென்று வலிந்து சொல்வாராயின் சமாதானம் சொல்லிப் பின்பு அவரை அவ்வாறு சொல்லாத வண்ணம் செய்விப்பார்.
பிறரைப் பாராட்டல்.
பிறரைப் பாராட்டுதலும் பிற கவிஞர்களுடைய செய்யுட்களைப் போற்றுதலும் தம்பால் வந்தவர்கள் கல்வியறிவிற் குறைவுடையவர்களாக இருந்தாலும் அவர்களுடைய செய்யுட்களைப் பாராட்டி ஆதரித்து ஊக்கமளித்தலுமாகிய இவருடைய நற்குணங்கள் யாவரையும் இவர்பால் இழுத்தன. தமக்குப் புலப்படாத ஒரு கருத்து எவ்வளவு சிறிதாயினும் அதனை யார்கூறினும் அங்ஙனம் கூறியவருடைய நிலையைக் கருதாமல் இவர் மிகவும் பாராட்டுவார். இவரால் அங்ஙனம் பாராட்டப்பெற்ற பின்பு அவர்களுக்கு ஒரு தனி மதிப்பு உண்டாகும்.
இரக்கம்.
பிறருடைய துயரைக் கண்டவிடத்து இரங்கும் உள்ளமுடையவர் இவர். தமக்குக் குறைபாடிருப்பினும் பிறருக்குள்ள குறைபாடுகளை நீக்கும் தன்மையினர்; "தம் குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம், வெங்குறை தீர்க்கும்" விழுமியோர் இவர்.
நன்றி மறவாமை.
பிறர் செய்த நன்றியை மறவாமற் பாராட்டும் தன்மை இவருடைய குணங்களில் தலைசிறந்து விளங்கியது; "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர்" என்னும் அருமைத் திருக்குறளுக்கு இலக்கியமாக இவர் இருந்தனர். பிறருடைய உதவியைப் பெற்றவுடன் நன்றியறிவினால் மனங்கசிவதில் இவரை ஒப்பார் யாரும் இல்லையென்றே சொல்லலாம். அந்த உணர்ச்சி அவ்வப்பொழுது உபாகாரிகளை இவர் பாராட்டிய செய்யுட்களில் வெளிப்பட்டிருத்தலைக் காணலாம். கொடுத்தாற் புகழ்தலும் கொடாவிடின் இகழ்தலுமாகிய புன்செயல்கள் இவர்பால் இல்லை. மனிதரைப் புகழ்வது பிழையென்று சிலர் கூறுவதுண்டு. ஒன்றை எதிர்பார்த்து ஒருவரைப் புகழ்தலும், எதிர்பார்த்தபடி கிடைக்காவிடின் வெறுத்தலும் பிழையெனவே இவர் கருதிவந்தார். ஒவ்வொரு மனிதனும் பிறருடைய உதவிகளால் வாழ்க்கையை நடத்த வேண்டியவனாக இருக்கிறான். பிறருதவியின்றித் தன்னுடைய ஆற்றலொன்றனையே கொண்டு வாழ்வது உலகத்தில் இயலுவதன்று. ஒருவருக்கொருவர் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து இன்புற்று வாழ்வதே அறம். அங்ஙனம் ஒருவர் ஒருவருக்கு உதவிபுரியும் பொழுது அதனை மறவாமல் நினைத்தலும் வாயாரப் புகழ்தலும் இயன்றவரையில் உதவி செய்தவருக்குத் தம்மால் ஆன உதவிகளைப் புரிதலும் வேண்டும். அந்த முறையில் புலமை யுடையவர்கள் தமக்கு உதவிசெய்தவர்களை மறவாமல் வாயாரப் புகழ்தல் அவர்களுடைய கடமையாகும். நாவன்மையை அவ்வகையில் உபயோகிப்பது செய்ந்நன்றியறிவின் பயனாகுமேயன்றிப் பிழையாக எண்ணக்கூடியதன்று. சங்கப்புலவர்களும், கம்பர் ஒட்டக்கூத்தர் புகழேந்தி வில்லிபுத்தூரார் முதலிய புலவர் பெருமக்களும் செய்ந்நன்றியறிவு காரணமாகவே தம்மை ஆதரித்த உபகாரிகளின் புகழைப் பாராட்டி உரிய இடங்களில் பல செய்யுட்களில் அமைத்துள்ளார்கள்" என்று இவர் கூறுவதுண்டு.
சிவபக்தி.
இவருக்கு இருந்த சிவபக்தி அளவிடற்கரியது. சிவதீட்சைகளை முறையே இவர் பெற்றவர். இவர் நெற்றியில் எப்பொழுதும் திருநீறு விளங்கிக்கொண்டேயிருக்கும். இரவில் சயனித்துக்கொள்ளுமுன் திருநீறு தரித்துக்கொண்டு சிறிதுநேரம் ஈசுவரத்தியானம் செய்துவிட்டு அப்பால்தான் சயனித்துக்கொள்வார். திருநீற்றுச்சம்புடம் தலையணையின் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். துயிலெழுந்தவுடன் திருநீறு தரித்துக்கொண்டுதான் புறத்தே வருவார். நாள்தோறும் சிவபூஜையை நெடுநேரம் செய்வார். பூஜைக்கு வேண்டிய பத்திரபுஷ்பங்களை அதிகமாகக் காணுமிடந்தோறும் எடுத்தும் எடுப்பித்துக் கொண்டும் வருவதுண்டு.
சிவஸ்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வதும், சிவஸ்தல வரலாறுகளை நன்றாகத் தெரிந்துகொள்வதும், சிவபெருமானுடைய புகழைப் பலவகையாகச் சொல்லியும் பாடியும் வரும் வழக்கமும் இவர்பாற் சிறந்து விளங்கின. சைவ சம்பிரதாயங்களுக்கு விரோதமான செயல்களைக்காண இவர் மனம் பொறார். இவருடைய மாணாக்கர்களுள் ஒருவர் தம்பால் பாடங்கேட்கும் ஒரு வீரசைவரைத் தமக்குக் கால் பிடிக்கும்படி சொன்னதுண்டு. அதனை அறிந்த இவர், "சிவலிங்க தாரணம் செய்து கொண்டவரை இங்ஙனம் ஏவுதல் பிழை" என்று சொல்லி வருந்தினார். சிவத்துவேஷமான வார்த்தைகளைக் கேட்டால் வருந்துவார்.
இப்புலவர்பெருமானுடைய சிவபக்தியின் முதிர்வை இவர் நூல்களே நன்கு தெளிவிக்கும். இவர் இறுதிநாள்காறும் சிவபிரானுடைய திருவடிக் கமலத்தையே எண்ணி உருகினார். உலகவாழ்வை நீப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு சுலோகத்தை மொழிபெயர்த்து அதனுடைய ஈற்றடியில், "ஏகநாயகனே தில்லையிலாடும் இறைவனே எம்பெருமானே" என்று அமைத்த செய்தியால் சிவபிரானுடைய திருவடி நினைவில் இவர் மனம் பதிந்திருந்தமை புலப்படுகின்றதல்லவா? இவர் பூத உடம்பை நீத்த அன்று திருவாவடுதுறையில் ஸ்ரீ கோமுத்தீசுவரரது இடபவாகனக் காட்சி விழா அமைந்ததும், திருவாசகத்தில் அடைக்கலப்பத்தை வாசிக்கையில் இவர் பூவுலகை நீத்ததுமாகிய வாய்ப்புக்கள் இவரது சிவபக்தியின் பயனென்றே சொல்லவேண்டும்.
பிற மதங்களிடத்தில் இவர் அவமதிப்பில்லாதவராகவே யிருந்தார். கும்பகோணத்தில் பெரிய தெருவில் அயலூரிலிருந்துவந்து வாழ்ந்த ஒரு பெருஞ்செல்வர் இருந்தார். 'முனிசிபாலிடி' தேர்தலில் அவருக்கு ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் கோயிலைச் சார்ந்தவர்கள் தங்கள் வாக்கை வழங்கவில்லை. ஒரு நாள் பிள்ளையவர்கள் அவரோடு பேசிக்கொண்டிருந்த சமயம் திருவிழாக் காலமாதலின் அன்று ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாளது திருத்தேர் அந்த வீதி வழியாக வருகையில் அந்தப் பிரபுவின் வீட்டு வாசலில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. வாக்குப் பெறாத கோபத்தையுடைய அந்தத் தனவான், "இந்தச் சாரங்கபாணி என் வீட்டு வாசலுக்கு முன்னே வந்து ஏன் நிற்கிறான்?" என்று இகழ்ச்சிக் குறிப்போடு சொன்னார். கேட்ட இக்கவிஞர்கோமான் மிகவும் வருந்தி, "தெய்வ தூஷணை பண்ணுகிற இவரோடு பழகுதல் சரியன்று" என்று எண்ணி அன்றுமுதல் அவரது பழக்கத்தை அடியோடே விட்டுவிட்டார்.
மாணாக்கர்பாலிருந்த அன்பு.
இவருடைய வாழ்க்கையில் இவர் நூலாசிரியராகவும் போதகாசிரியராகவும் இருந்து செய்த செயல்கள் தமிழறிவை வளப்படுத்தின. அவையே இவர் வாழ்க்கையாக அமைந்தன என்று கூறுதல் மிகையன்று. தமிழ் நூல்களை ஓய்வின்றி முறையாகப் பாடஞ்சொல்லும் திறத்தில் இவர்காலத்தில் இவரைப்போன்றவர் வேறு யாரும் இல்லை. பலரிடம் பல சமயங்களில் அலைந்து முயன்று தாம் படித்து வந்த வருத்தத்தை இவர் நன்றாக அறிந்தவராதலின் தம்பால் வந்த மாணாக்கர்களுக்குக் கஷ்டத்தை உண்டாக்கக் கூடாதென்று கருதி அவர்கள்பால் அளவற்ற அன்பு பூண்டு பாடஞ்சொல்லிக்கொடுக்கும் இயல்புடையவரானார். மாணாக்கர்களிடம் இவர் தாயைப் போன்ற அன்புடையவராக இருந்தனர்; அவர்களோ தந்தையாகவே எண்ணி' இவரிடம் பயபக்தியோடு ஒழுகினர். அவர்களுடைய குற்றங்களை இவர் மறந்து விடுவார். அவர்களுக்கு எந்த எந்த வகையில் குறைகள் உண்டோ அவற்றை நீக்குதற்காக முயல்வார்; அவர்கள் தெரிந்து கொள்ளாதபடி அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வார். மாணாக்கர்களேயன்றிப் பிறர் சுற்றத்தாரல்லரென்பது இவருடைய வாழ்வின் நோக்கமாக இருந்தது.
தமிழ் படித்தவர் யாரும் இவரிடத்தில் கவலையின்றிப் பழகலாம்; ஏதாவது கேள்வி கேட்பாரென்றேனும், தருக்குற்றிருப்பாரென்றேனும், தங்களுடைய பிழைப்பைக் கெடுத்து விடுவாரென்றேனும் ஒருவருக்கும் இவர்பால் அச்சம் உண்டாவதில்லை.
தம்முடைய மாணாக்கர்களை நல்ல நிலையில் இருக்கச் செய்ய வேண்டுமென்னும் நினைவு இவருக்கு எப்போதும் உண்டு. தம்மைப் பார்க்கவந்த செல்வர் முதலியோர் தம்முடைய அரிய பிரசங்கத்தைக் கேட்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கையில் தம்முடைய மாணாக்கர்களை அழைத்து இருக்கச்செய்து அவர்களுக்குத் தெரிந்த பாடல்களை இசையோடு சொல்லச் செய்வதும் பொருள் சொல்லிப் பிரசங்கிக்கச் செய்து கேட்பிப்பதும் இவருடைய வழக்கம். அவர்களுக்கு அநுகூலம் உண்டாகும் விஷயத்தில் எத்தகைய உழைப்பையும் மேற்கொள்வார்.
இவர்பாற் படித்த மாணாக்கர்கள் பலவகையினர். சாதி, சமயம், ஆச்சிரமம் முதலியவற்றில் வேறுபாடுடையவர்கள் பலர் படித்தனர். யாவருக்கும் இவர்பாலிருந்த அன்பு ஒருபடித்தானதே. இவரிடம் படித்தவர்கள் நல்லறிவையும் நன்மதிப்பையும் உயர்நிலையையும் அடைந்தார்கள்; சிலர் ஸம்ஸ்தான வித்துவான்களாகவும் கலாசாலைப் பண்டிதர்களாகவும் இருக்கும் பேறு பெற்றனர். தம்பிரான்களிற் சிலர் நல்ல அதிகாரத்தையும் உயர்ந்த நிலையையும் அடைந்தனர்; சிலர் ஆதீனத்தலைவர்களாகவும் ஆயினர். இவரிடம் ஒருவர் சிலகாலம் படித்தாலும் சிறந்த அறிவுடையவராகி விடுவார். இவருடைய மாணாக்கர்க ளென்றாலே அவர்களுக்குத் தனியாக ஒருமதிப்பு உண்டு. இவருடைய கைராசியை யாவரும் புகழ்வார்கள். இவரிடம் புஸ்தகம் பெற்றவர்கள்கூடத் தமிழ்ப் பயிற்சி உடையவர்களாக விளங்கினார்கள். திருவாவடுதுறை மடத்தில் இராயஸவேலை பார்த்துவந்த பொன்னுசாமி செட்டியாரென்பவர் இளமையில் இவரிடம் 'வாட்போக்கிக் கலம்பகம்' என்னும் புஸ்தகத்தைப் பெற்றுப் பின் பிறரிடம் முறையே அநேக நூல்களைப் பாடங்கேட்டுத் தமிழ்நூற் பயிற்சியும் செய்யுளியற்றும் வன்மையும் சொல் வன்மையும் உடையவராகிப் புகழோடு விளங்கினர்.
பாடஞ்சொல்லுதல்.
பாடஞ் சொல்வதில் இந்நாவலர் பெருந்தகைக்குச் சலிப்பே உண்டாவதில்லை. தமக்குத் தெரிந்தவற்றை யாவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்னும் உபகார சிந்தையுடையவர். மாணாக்கர்களுடைய தரமறிந்து பாடஞ் சொல்வார். பாடஞ் சொல்லுங் காலத்தில் கையில் புத்தகம் வைத்துக்கொண்டு இவர் சொல்வதை நான் பார்த்ததேயில்லை. பாடஞ்சொல்லும் உரை நடை, செய்யுட்கள் எல்லாம் இவருக்கு மனப்பாடமாகவே இருக்கும். இவர் இன்ன சமயங்களிலேதான் பாடஞ்சொல்லுவது என்ற நியமம் வைத்துக்கொள்ளவில்லை. சமயம் நேரும்பொழுதெல்லாம் பாடஞ் சொல்வதே இவருடைய வழக்கமாக இருந்தது. வண்டியிற் செல்லும்பொழுதும், உண்ணும் பொழுதும் உறங்கத் தொடங்கிய பொழுதும் கூட இவரிடம் பாடம் நடைபெறும்.
பாடஞ் சொல்லும்பொழுது கடினபதங்களுக்குமட்டும் பொருள் சொல்வார். கற்பனைகளை இன்றியமையாத இடங்களில் விளக்கிக் காட்டுவார். இன்ன கருத்துக்களை ஒழுங்காக மனத்தில் வைத்திருக்க வேண்டுமென்று கூறுவார். தேவாரம், திருவாசகம், கல்லாடம், பெரியபுராணம், திருக்குறள், காஞ்சிப் புராணம், கம்பராமாயணம் என்பவற்றிலிருந்து மேற்கோள்களை எடுத்துச் சொல்லி மாணாக்கர் மனத்தில் கருத்துக்கள் தெளிவாகப் பதியும்படி செய்வார். பெட்டி நிறையப் பணத்தை நிரப்பிவைத்துக் கொண்டிருக்கும் வண்மையாளன் தடையின்றி எடுத்து வாரி வாரி வழங்குவது போலத் தமது உள்ளக் களஞ்சியத்தில் பல நாட்களாகச் சேமித்து வைத்த பொருள்களை யெல்லாம் பாடஞ்சொல்லுகையில் மாணாக்கர்களுக்கு வழங்கி வரும்பொழுது, "இவ்வளவு நூல்களையும் இவர் எப்படி மனத்திற் பதித்து வைத்துக்கெண்டாரோ!" என்னும் ஆச்சரியம் அயலிலிருப்பவர்களுக்கு உண்டாகும். நடக்கும் புஸ்தகசாலையென்று இவரைக் கூறலாம். பாடஞ்சொல்லும் நூல்களின் உரைகளில் மேற்கோளாக வரும் செய்யுட்களுக்குப் பொருள் கூறுவார். புலவர்களைப் பற்றிய வரலாறுகளை அடிக்கடி சொல்லுவார். அருங்கருத்துக்களைச் சொல்லிவரும்பொழுது அவற்றைத் தாம் அறிந்த வரலாற்றையும் கூறுவதுண்டு. மாணாக்கர்களுக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டாக வேண்டுமென்னும் எண்ணத்தினால் அடிக்கடி சமஸ்யைகளை அவர்களுக்குக் கொடுத்துச் செய்யுள் செய்யச் சொல்வார்.
பண்டைக்காலமுதல் நூல்களில் வழங்கிவந்த சொற்பிரயோகங்களை நாம் மாற்றுதல் பிழையென்று சொல்வார். வடமொழிச்சொற்களைத் திரித்து வழங்கும்பொழுது மனம்போனவாறு திரித்தலை இவர் விரும்பார். எல்லாச் சொற்களையும் திரித்தே வழங்கவேண்டுமென்பது இவருக்கு உடன்பாடன்று; "என் பெயரைத் திரித்து மீனாக்கிசுந்தரமென்று வழங்கினால் நன்றாக இருக்குமா?" என்று கேட்பார். கோகநகம், ஆதவன், மானிடன் என்ற சொற்பிரயோகங்கள் அடிப்பட்ட வழக்காக நூல்களில் அமைந்துவிட்டமையால் அவற்றை வடமொழிப்படியே இருக்கவேண்டுமென்று கருதித் திருத்துதல் நன்றன்று என்பர். சொல்லுக்கு மதிப்பு உண்டாவது, புலவர்களுடைய ஆட்சியில் அது வழங்கிவருவதனால்தான்; ஆதலின் சொல்லின் உருவத்தையும் பிறதொடர்புகளையும் ஆராய்வதினும் ஆன்றோர் ஆட்சியில் உள்ளனவா என்பதை ஆராய்வதே சிறந்ததென்பது இவர் கருத்து. மனஸ் என்பதை 'மனது' என்று வழங்கக் கூடாதென்பது இவர் கொள்கை; "மனஸ் என்ற வடமொழிச்சொல் மனம் என்றுதான் வரும்; சிரஸ் என்பது சிரமென்று வருகிறதேயன்றிச் சிரது என்று வருவதில்லை" என்பார். இத்தகைய செய்திகளையெல்லாம் பாடஞ்சொல்லுகையில் மாணாக்கர்களுக்குக் கூறுவார். "இலக்கண அறிவு ஒருவனுக்கு இன்றியமையாததே. ஆயினும் இலக்கிய பாடங்களை வாசித்த பின்பே இலக்கண நூல்களைக் கற்றல் பயன்விளைக்கும்" என்று இவர் சொல்வதுண்டு. அயலிடம் சென்றபொழுது யாரேனும் இவரிடம் கடினமான பாடல்களுக்குப் பொருள் கேட்பின் அவர்களுக்கு அவற்றை விளக்கிவிட்டுப் பின்பு வீட்டுக்கு வந்து மாணாக்கர்களுக்கும் அவற்றைக் கூறி விளக்குவது இவரது வழக்கம்.
கல்விப் பெருமை.
இவருடைய கல்வி மிகவும் ஆழமும் அகலமும் உடையதாக இருந்தது; "அளக்கலாகா அளவும் பொருளும்" உடைய இவரது அறிவின் திறம் ஒவ்வொருநாளும் புதியதாகவே தோற்றியது; இளமை தொடங்கியே தமிழ் நூல்களை முறையாகப் பயின்று பயின்று உரம் பெற்றதாக இருந்தது. படித்தவர்களாக எண்ணிய யாவரிடமும் பழகி அவரவர்களுக்குத் தெரிந்தவற்றை இவர் இளமை தொடங்கியே கற்றனர். தமிழ் நூலாக எதுகிடைப்பினும் அதனைவாசித்து மெய்ப்பொருள் அறிந்தனர். இங்ஙனம் துளிதுளியாகச் சேர்த்த அறிவு பலதுளி பெருவெள்ளமென்பது போல ஒரு பெரிய கடலாகப் பெருகி நின்றது. பிற்காலத்தில் இவர் பாடஞ் சொல்லும்போது நன்றாகத்தெளிந்த அறிவோடு கருத்துக்களை எடுத்துக் கூறும் வன்மையும் பாடஞ்சொல்லும் நூல்களிலுள்ள பொருள்களைத் தம்முடையனவாகக் கொண்டுவிட்ட நிலையும் இவர் இளமைதொடங்கிச் செய்துவந்த முயற்சிகளின் பயனென்றே கூறவேண்டும். சிலரைப் போலக் கல்வி விஷயத்தில் இவருக்குத் திருப்தி பிறக்கவில்லை. எந்த இடத்திற்குப் போனாலும் அங்கே பழைய சுவடி ஏதாவது இருக்கின்றதாவென்று பார்ப்பார். இருந்தால் உடனே வாங்கி ஒருமுறைவாசித்து விட்டுப் பொருள் சொல்வார்; சில சமயங்களிற் பிரதி செய்துவைத்துக் கொள்வதுமுண்டு. சந்தேகம் நேரிடின் தெரிந்தவர்களைச் சந்திக்கும்பொழுது விசாரித்துத் தீர்த்துக் கொள்ளுவார்.
இப்புலவர்பிரான் பல இடங்களில் பலவகையில் சேகரித்துவைத்திருந்த தம் அறிவைத் தம் மாணவர்களுக்கு வரையாது வழங்கினமையால், பிரபந்தங்கள் உயிர்பெற்றன. அதுகாறும் தெரிவிப்பாரின்றிக் கிடந்த குமரகுருபரசுவாமிகள் பிரபந்தங்களிற்சில , சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தங்களிற் சில, சிவஞான முனிவர் பிரபந்தங்களிற்சில, இன்னும் வேறுசில தமிழ் நாட்டாருடைய கைகளில் விளங்கின. இவர் பாடஞ் சொல்லியதனாலேயே அப்பிரபந்தங்களின் நயங்ளைத் தமிழ்மக்கள் உணரத் தலைப்பட்டனர். கம்பரந்தாதி, முல்லையந்தாதி முதலிய நூல்களுக்கு இவர் சொல்லி எழுதுவித்த உரைகளே பின்பு மதுரை இராமசாமிப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டன. காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம், திருவானைக்காப்புராணம் முதலியவற்றிற்கு இவர் பாடஞ்சொன்ன உரையே பிற்காலத்தில் தமிழ்நாட்டில் வழங்குவதாயிற்று.
பலருடைய வேண்டுகோளுக்கு இணங்கி இவர் செவ்வந்திப் புராணம், காஞ்சிப் புராணத்தின் முதற்பாகம், திருவானைக்காப் புராணம், கல்லாடமூலம் முதலியவற்றைப் பதிப்பித்தனர்.
கையெழுத்து.
நூல்களைத் தொகுத்து வைப்பதிலும் தாமே எழுதிச் சேர்ப்பதிலும் இவருக்கு அவா மிகுதி. இளமை தொடங்கியே ஏட்டில் எழுதும் வழக்கம் இவருக்கு இருந்தமையின் இவருடைய எழுத்து அழகாக முத்துக்கோத்தாற்போல இருக்கும். ஒவ்வொரு வரியும் கோணாமல் ஒழுங்காக இருக்கும்; எழுத்து ஒன்றுடன் ஒன்று சேராது. இவரால் எழுதப்பெற்ற சுவடிகளுக்குக் கணக்கேயில்லை. கம்பராமாயணத்தை மூன்றுமுறை எழுதியிருக்கிறார். மாணாக்கர்களுக்கும் ஏட்டில் எழுதும் பயிற்சியை உண்டாக்கினர்.
இவர் தம் கையினால் நூல்களைக் காகிதங்களில் எழுதியதில்லை. யாருக்கேனும் கடிதம் எழுத வேண்டுமாயின் காகிதத்தில் உடன் இருப்பவரைக்கொண்டு எழுதுவித்து இறுதியில் ‘தி. மீனாட்சிசுந்தரம்’ என்று கையெழுத்திடுவார்; 'தி' என்பது திரிசிரபுரம் என்பதன் முதற் குறிப்பாகும். ஒருவரும் அருகில் இல்லையானால் தாமே எழுதுவார். காகிதத்தில் எழுதும் எழுத்தின் அமைப்புக்கும் ஏட்டுச்சுவடியில் எழுதும் எழுத்தின் அமைப்புக்கும் சிறிது வேறுபாடுண்டு.
தமிழன்பு.
தமிழ் நூல்களிடத்தில் இவருக்கு இருந்த அன்பு அளவற்றது. ஒரு நூலைப் படித்து வருகையில் அதில் முழுதும் ஈடுபட்டு, உணவு உறக்கம் முதலியவற்றையும் மறந்துவிடுவார்; தமிழ்நூல் சில சமயங்களில் இவருடைய நோய்க்கு மருந்தாகவும் உதவியிருக்கிறது. நல்ல நூல்களில் உள்ள சிறந்த பகுதிகளைப் படிக்கும்பொழுதும் பாடஞ் சொல்லும்பொழுதும் மனமுருகிக் கண்ணீர் வீழ்த்துவார். தமிழ்ப் புலவர்களுள் கச்சியப்ப முனிவரை இவர் பக்தியோடு வழிபட்டுப் பாராட்டுவார்; "செய்யுள் செய்துவரும்பொழுது தடைப்பட்டால் கச்சியப்ப முனிவரைத் தியானிப்பேன். உடனே விரைவாகக் கருத்துக்களும் சொற்களும் தடையின்றி எழும்" என்று இவர் சொல்லியதைக் கேட்டிருக்கிறேன். சேக்கிழார், கம்பர், நெற்குன்றவாண முதலியார், அம்பிகாபதி, கவி வீரராகவ முதலியார், வரதுங்கராமபாண்டியர், அதிவீரராமபாண்டியர், திருவாரூர் இலக்கண விளக்கம் வைத்திய நாததேசிகர், துறைமங்கலம் சிவப்பிரகாசர், சிவஞானமுனிவர் என்பவர்களுடைய நூல்களில் இவருக்கு விருப்பம் அதிகம். கம்பருடைய செய்யுட்களைப் படித்து வருகையில் இடையிடையே அவற்றின் சுவையில் ஈடுபட்டு, "இவையெல்லாம் நினைத்துப் பாடிய செய்யுட்களா?" என்று கூறுவதுண்டு. திருப்புகலூரந்தாதியிலுள்ள திரிபின் அமைப்பை வியப்பார். திருச்சிற்றம்பலக் கோவையாரிலுள்ள செய்யுட்களை அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பார். கல்லாடப் பகுதிகள் இவருக்கு அடிக்கடி ஞாபகத்துக்கு வரும். தேவாரப் பகுதிகளின் கருத்தைச் சில சில சமயங்களில் எடுத்துக் காட்டுவதுண்டு. இலக்கண விளக்கத்தில் இவருக்கு மதிப்பு அதிகம். சைவரால் இயற்றப்பெற்ற நூலென்பதும் அந்நூல் அகத்திணையியலில், திருச்சிற்றம்பலக் கோவையாரிலுள்ள துறைகளை அமைத்துக்கொள்வதற்கு ஏற்ற இலக்கணங்களையும் பொருத்தி, அவற்றிற்கு அக்கோவையாரிலுள்ள செய்யுட்களை இடையிடையே உதாரணமாகக் காட்டியிருப்ப தும் அதற்குரிய காரணங்களாம். அக்காரணங்களை அடிக்கடி கூறி வைத்தியநாத தேசிகரை இவர் பாராட்டுவதுண்டு. சிவஞான முனிவருடைய செய்யுள் நடையிலும் வசன நடையிலும் இவருக்கு உவப்பு அதிகம். கச்சியப்பமுனிவர் நூல்களில் உள்ள அரிய அமைப்புக்களையும் சங்கநூற் பிரயோகங்களையும் பற்றி இவர் அதிகமாகப் புகழ்வார். அவருடைய நூலமைப்பையே இவர் பெரும்பாலும் பின்பற்றிப் பாடுவார்.
கவித்திறன்.
இக் கவிஞர்பெருமானது கவித்திறன் இவருடைய வரலாற்றாலும் நூல்களாலும் அறியப்படும். நினைத்ததை நினைத்தவண்ணம் வார்த்தைகளால் சொல்வதே மிகவும் அரிய செயல். மனத்தில் தோன்றிய இனிய கருத்துக்களைச் செய்யுளுருவத்தில் அமைக்கும் கவித்வம் பாராட்டற்குரியதேயாம். கருத்துக்களை நினைக்கலாம்; நினைத்தவற்றைச் சொல்லலாம்; சொல்வதையே அழகுபெறப் பன்னலாம்; அதனையே கவியாக அமைக்கலாம்; ஆனால் நினைத்தவற்றை நினைத்த போதெல்லாம் நினைத்த வழியே தமிழ்ச் சொற்கள் ஏவல்கேட்ப வருத்தமின்றி விளையாட்டாகக் கவிபாடும் திறமை எல்லாக் கவிஞர்களுக்கும் வாய்ப்பதன்று; அத்தகைய திறமையையுடைய கவிஞரை மற்றப் புலவர்களோடு ஒருங்கு எண்ணுதல் தகாது. அவர்கள் பிறப்பிலேயே கவித்வ சக்தியுடன் பிறந்தவர்களாவார்கள். அவ்வகைக் கவிஞர் வரிசையில் சேர்ந்தவரே இந்த மகாகவி. [3} சொற்களை வருந்தித் தேடி அகராதியையும் நிகண்டுகளையும் அடுக்கி வைத்துக்கொண்டு கவிபாடுவதென்பது இவர்பால் ஒருபொழுதும் இல்லை.
சுவையற்ற பாடல்களை உண்டாக்கும் உலைக்கூடமாக இவர் மனம் இராமல், வளம் பெற்ற செய்யுட்களின் விளைநிலமாகவே இருந்தது. செய்யுள் இயற்றுவது இவருக்குத் தண்ணீர்பட்டபாடு. எவ்வளவோ ஆயிரக்கணக்காக இவர் செய்யுட்களை இயற்றினாலும் இவருக்கு முழுத் திருப்தி உண்டாகவில்லை. இவருடைய நாத்தினவு முற்றும் தீரவேயில்லை. இவருடைய ஆற்றலை இயன்றவரையில் பயனுறச்செய்ய வேண்டுமென்னும் நோக்கத்தோடு தக்கவண்ணம் யாரேனும் இவரை ஆதரித்து ஊக்கத்தை அளித்து வந்திருந்தால் இவர் இன்னும் எவ்வளவோ நூல்களை இயற்றியிருப்பார். சிலசில காலங்களில் சிலர் சிலரால் தங்கள் தங்கள் கருத்துக்கு இயைய இன்ன இன்னவகையாகச் செய்யவேண்டுமென்று தூண்டப்பட்டுச் செய்த நூல்களே இப்பொழுது இருக்கின்றன. இவருடைய புலமைக்கடலிலிருந்து ஊற்றெடுத்த சிறிய ஊற்றுக்கள் என்றே அவற்றைச் சொல்லவேண்டும். அக் கடல்முழுதும் மடை திறந்திருந்தால் தமிழ்நாடு முழுவதும் இவருடைய பலதுறைப்பட்ட கவிவெள்ளத்தில் முழுகி இன்புற்றிருக்கும்.
செய்யுள் இயற்றுவதெனின் அதற்கென்று தனியிடம், தனிக் காலம், தனியான செளகரியங்கள், ஓய்வு முதலியவற்றை இவர் எதிர்பார்ப்பதே இல்லை. இன்னகாலத்தில் தான் பாடுவது என்ற வரையறையும் இல்லை. பிரபுக்களும் அன்பர்களும் வந்து பேசிக்கொண்டிருக்கையிலேயே அருகிலிருக்கும் ஒரு மாணாக்கரிடம் இவர் ஒரு நூலுக்குரிய செய்யுட்களைச் சொல்லி எழுதுவித்துக்கொண்டே யிருப்பார்.
இவர் பெரும்பாலும் யோசித்துக்கொண்டேயிருக்கும் இயல்புடையவர். பாடவேண்டிய விஷயங்களை ஒருவகையாக மனத்தில் ஒழுங்குபடுத்திக்கொண்டு பின்பு பாட ஆரம்பித்தால் ஒரே மூச்சில் நூற்றுக்கணக்காகப் பாடுவார். செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே வருகையில் மனப்பாடமான நூல்களில் உள்ள செய்யுட்களைக் கூறுகின்றாரென்று தோற்றுமேயொழியப் புதிய செய்யுட்களை யோசித்துச் சொல்லி வருகிறாரென்று தோற்றாது. மிகவும் அரிய கற்பனைகளை மனத்திலே ஒழுங்குபண்ணிச் சில நிமிஷ நேரங்களிற் சொல்லிவிடுவார். நூல்களுக்கு இடையிடையே அமைந்த எதுகைக் கட்டுள்ள பாடல்களை இளைப்பாற்றுப் பாடல்களென்பார்.
இவர் இயற்றியவற்றைப் புராணங்கள், பிரபந்தங்கள், தனிப் பாடல்கள், சிறப்புப்பாயிரங்களென நான்கு வகையாகப் பிரிக்கலாம். புராணங்களைக் காப்பிய இலக்கணப்படி அமைக்கும் முறையை மேற்கொண்ட புலவர்களுள் இவரைப்போல அளவிற் பலவாகவுள்ள நூல்களைச் செய்தவர்கள் வேறெவரும் இல்லை. இவருக்கு முன்பிருந்த தமிழ்ப் புலவர்களிற் சிலர், சில புராணங்களை மொழிபெயர்த்துக் காப்பியங்களாகச் செய்திருக்கின்றனர். அவர்களுடைய நூல்களிற் காணப்படும் அமைப்புக்கள் அனைத்தையும் இவருடைய நூல்களிற் காணலாம்.
நூல்களின் இயல்பு.
இவருடைய நூல்களிற் பெரும்பான்மையானவை புராணங்களே. இவருடைய வாக்கால் தங்கள் தங்கள் ஊருக்கு ஒரு புராணமேனும் ஒரு பிரபந்தமேனும் பெறவேண்டுமென்று அக்காலத்தில் சிவஸ்தலங்களில் இருந்தவர்கள் விரும்பினார்கள். பழைய புராணம் இருந்தாலும், நாட்டுச் சிறப்பு நகரச் சிறப்பு முதலிய காப்பிய இலக்கண அமைதியுடன் செய்யவேண்டுமென்னும் கருத்தால் பலர் இவரை மீண்டும் ஒரு புராணம் இயற்றித் தரும்படி வற்புறுத்தி வேண்டுவதுண்டு. இவர் புராணங்கள் இயற்றிய தலங்களில் பெரும்பான்மையானவற்றிற்குப் பழைய புராணங்கள் உண்டு. ஆனாலும் இவருடைய புராணத்திற்கு மதிப்பு அதிகம். இவராற் புராணம் முதலியவை பாடப் பெற்ற தலங்கள் பல சொற்பணிகளும், கற்பணிகளும், பொற்பணிகளும் இயற்றப்பெற்றுப் பலவகையாலும் வளர்ச்சியுற்று விளங்குகின்றன என்பர். திருச்சிராப்பள்ளியில் சிரஸ்தேதாராக இருந்த ராவ்பகதூர் தி.பட்டாபிராம பிள்ளை யென்னும் கனவான் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குத் தம்முடைய கருத்தை அமைத்து அகவல் வடிவமாக விடுத்த விண்ணப்பமொன்றில் பிள்ளையவர்களை, "புராணம் பாடும் புலவன்" என்று குறித்திருந்தனர்.
ஏறக்குறைய முப்பது வருஷங்களுக்கு முன் நானும் என்னுடைய தம்பியும் சில நண்பர்களும் திரு எவ்வுளூரிலிருந்து திருவெண்பாக்கம் என்னும் சிவஸ்தல தரிசனத்திற்காக நடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்பொழுது எதிரில் வந்த எழுபது பிராயமுடைய வேளாளரொருவரிடம் திருவெண்பாக்கத்தைப்பற்றிய விஷயங்களை விசாரிக்கத் தொடங்கினேன். அவர் அத்தல சரித்திரங்களைச் சொல்லிக்கொண்டே உடன் வந்தார். பின்பு நான், "இந்த ஸ்தலத்திற்குப் புராணம் உண்டா?" என்றேன். அவர், "புராணம் பாடுவதற்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களா இருக்கிறார்கள்? அந்த மகான் இருந்தால் இதற்கும் ஒரு புராணம் பாடியிருப்பார்” என்றார். அந்தச் சொற்கள் எனது அகக்கண்ணின்முன் பிள்ளையவர்களுடைய திருவுருவத்தையும் செயல்களையும் தோற்றச் செய்தன; நெஞ்சம் உருகியது. வந்த அன்பர்களிடம், "ஜனசஞ்சாரமற்ற இந்தக் காட்டிலே கூடப் பிள்ளையவர்களுடைய புகழ் பரவியிருக்கிறது. பார்த்தீர்களா!" என்று சொன்னேன்.
சில புராணங்கள் முற்றுப் பெறுவதற்கு முன்பே அரங்கேற்றத் தொடங்கப்பெறும்; செய்யுளியற்றுதலும் அரங்கேற்றுதலும் அடுத்தடுத்து நிகழும். உடனிருந்தவர்களால் சிறப்புப்பாயிரம் இயற்றிக் கடவுள் வாழ்த்தின் இறுதியிற் சேர்க்கப்பெறுவது வழக்கம். இங்ஙனம் செய்வித்துச் சேர்ப்பது பண்டைகாலத்து முறையென்று தெரிகிறது.
இவர் இயற்றும் புராணக்காப்பியங்களில் கடவுள் வாழ்த்திலும் அவையடக்கத்திலும், "நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி" என்னும் இலக்கணப்படி நூலில் வரும் செய்திகளை உரிய இடங்களிற் பலவகையாக அமைப்பார். அவையடக்கங்கள் பலவற்றில் இலக்கணச் செய்திகளையும் சாஸ்திரக் கருத்துக்களையும் காணலாம். பெரும்பான்மையான புராணங்களில் கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் வணக்கத்தில் மடக்கு அமைந்திருக்கும். நாட்டுச் சிறப்பில் இன்னநாடு என்று சொல்லும்பொழுது செய்யுட்களின் இறுதியில் மடக்கை அமைப்பதும் ஐந்திணைகளை வருணிக்கும்பொழுது அவ்வத்திணைகளில் அமைந்துள்ள சிவஸ்தலங்களைக் கூறுவதும் இவர் இயல்பு. இவை பெரிய புராணத்தால் அறிந்தவை. சித்திரகவிகளைத் திருநாகைக்காரோணப் புராணம் அம்பர்ப்புராணம் என்பவற்றில் இவர் அமைத்திருக்கிறார். காஞ்சிப் புராணத்தின் முதற்காண்டத்தில் இத்தகைய அமைப்பு இருக்கிறது. தோத்திரம் வருமிடங்களில் ஒத்தாழிசைக்கலிப்பா முதலியவற்றையும் அமைப்பர்; இது சீகாளத்திப் புராணம் முதலியவற்றிலிருந்து அறிந்து கொண்டது. வரலாறுகளைச் சொல்லும்பொழுது வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை முதலிய சிறு செய்யுட்களாற் கூறுவர்; சில சமயங்களிற் கட்டளைக் கலித்துறையாலும் பாடுவர்.
தேவாரச் சந்தம் இவருடைய நூற்செய்யுட்களில் அமைந்து விளங்குதலை அங்கங்கே காணலாம். சைவசித்தாந்த சாஸ்திரங்களிலுள்ள கருத்துக்களைப் பல வேறு உருவங்களில் இவர் நூல்களில் அமைத்துள்ளார். இவருடைய நூல்களிற் பெரும்பாலனவற்றின் இறுதிச் செய்யுளில் ஸ்ரீ நடராஜப் பெருமான் குஞ்சிதபாதத்தைப் பற்றிய வாழ்த்தைக் காணலாம். எந்த நூலிலேனும் ஒரு புதுக்கருத்தை அறிந்தாராயின் அதனைப் பின்னும் அழகுபடுத்தித் தாம் இயற்றும் நூலில் பொருத்திவிடுவார். தாம் கண்டும் கேட்டும் அநுபவித்தும் அறிந்தவற்றைச் செய்யுட்களில் அங்கங்கே அமைத்துப் பாடுவார். தம்முடைய ஞானாசாரிய ஸ்தானமாகிய திருவாவடுதுறையிலுள்ள மடாலயத்தையும் குருமூர்த்திகளையும் பல இடங்களில் பாராட்டிக் கொண்டே செல்வது இவருடைய வழக்கம்.
இவருடைய பிரபந்தங்களில் அவ்வப்பிரபந்தங்களின் இலக்கணம் நன்றாக அமைந்திருக்கும். பிள்ளைத்தமிழ்களில் இவர் பகழிக் கூத்தரையும் குமரகுருபரரையும் ஒப்பர். கோவைகளில் கற்பனைகளையும் நீதிகளையும் பண்டைப்புலவர் சொற்பொருள்களையும் காணலாம். இவர் இயற்றிய திருவிடைமருதூருலாவுக்கு இணையாக உள்ள ஓருலாவைக் காண்டலரிது. யமகந்திரிபுவகைகளில் வேறெவரும் இயற்றி இராத விசித்திரமான அமைப்புக்களை இவர் வாக்கிற்காணலாம்.
இவர் இயற்றிய தனிப்பாடல்கள் பலவகையாகும். சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவண்ணம் காதுரியமாகப் பாடிய பாடல்கள் அளவிறந்தன. ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு. அவற்றையன்றி, நன்றியறிவின் மிகுதியால், தமக்கு உபகாரம் செய்தவர்களை அவ்வப்போது பாடிய செய்யுட்கள் பல. அவை அன்புமிகுதியால் பாடப்பட்டனவாதலின் சில செய்யுட்கள் உயர்வு நவிற்சியாகத் தோற்றும். யாருக்கேனும் கடிதமெழுதுகையில் தலைப்பில் ஒரு பாடலை எழுதுவிப்பது இவருடைய வழக்கம். அங்ஙனம் இவர் எழுதிய பாடல்கள் நூற்றுக்கணக்காக இருக்கும். வடமொழி வித்துவான்கள் அவ்வப்பொழுது கூறும் சுலோகங்களை உடனே மொழிபெயர்த்துச் சொல்லிக்காட்டுவார். அவ்வாறு இயற்றிய செய்யுட்கள் பல. பிறருக்காகப் பாடிக்கொடுத்தவை எத்தனையோ பல.
இவரால் இயற்றப்பெற்ற சிறப்புப்பாயிரங்கள் நூலாசிரியருடைய தகுதிக்கேற்ப அமைந்திருக்கும். இவரிடமிருந்து சிறப்புப்பாயிரம் பெறுவதனால் நூலியற்றுபவர்களுக்கு உயர்ந்த மதிப்பு உண்டாயிற்று. அதனால் நூலியற்றுபவர்கள் பலர் இவருடைய சிறப்புப்பாயிரம் பெறப் பலவகையில் முயல்வார்கள். அகவலாகவும் விருத்தங்களாகவும் தரவு கொச்சகமாகவும் இவர் சிறப்புப் பாயிரங்கள் இயற்றியளிப்பதுண்டு. சிறந்த நூலாயின் அகவலாலும் பல விருத்தங்களாலும் சிறப்புப்பாயிரத்தை அமைப்பார். இல்லையெனின் ஒரு செய்யுளாலேனும், இரண்டு செய்யுளாலேனும் இன்ன நூலை இன்னார் செய்தார் என்னும் பொருள் மட்டும் அமையச் செய்து அளித்துவிடுவார். நூல்களுக்குச் சிறப்புப் பாயிரங்கள் அளிக்கும் முறை இவர் காலத்திலேதான் மிகுதியாக வழங்கலுற்றது.
இவர் இயற்றிய நூல்கள் பலவற்றுள் தெரியாதவை சில. தெரிந்தவற்றுள் புராணங்கள் 22; பிற காப்பியங்கள் 6; பிரபந்தங்கள் 45; தனிப்பாடல்கள் அளவிறந்தன.
( [$] இக் குறியிடப்பட்டவை பூர்த்தியாகாத உள்ள நூல்கள். (*)
[§] இக் குறியிடப்பட்டவை இப்பொழுது கிடைக்கப் பெறாதவை. (+)
[#] அச்சிடப்படாத நூல்கள். (|)
[@] அச்சிடப்பெற்றும் இப்பொழுது கிடைத்தற்கரியன.) (9)
1. தல புராணங்கள்.
2. சரித்திரம்,
3. மான்மியம்.
4. பிற காப்பியங்கள்.
5. பதிகம்.
6. பதிற்றுப்பத்தந்தாதி.
8. யமக அந்தாதி.
9. வெண்பா அந்தாதி.
10. மாலை.
11. பிள்ளைத்தமிழ்.
12. கலம்பகம்.
13. கோவை.
14. உலா.
15. தூது.
16. குறவஞ்சி.
17. சிலேடை வெண்பா.
18. வேறு.
இவற்றையன்றி இவர் வேறு பல நூல்களை இயற்றவேண்டுமென்று எண்ணியிருந்ததுண்டு. குறிஞ்சித்திணை வளங்கள் நிறைந்து விளங்கும் திருக்குற்றாலத்திற்கு ஒரு கோவை பாடவேண்டுமென்று எண்ணியிருந்தனர். அவ்வெண்ணம் என்ன காரணத்தாலோ நிறைவேறவில்லை.
வசனம் எழுதுவதைக் காட்டிலும் செய்யுள் இயற்றுவதிலேதான் இவருக்கு விருப்பம் அதிகம். இவர் எழுதும் கடிதங்கள் எளிய வசன நடையில் சுருக்கமாக அமைந்திருக்கும்.
பேச்சு.
இவருடைய பேச்சு யாவருக்கும் விளங்கும்படி இருக்கும். பேச்சிலேயே இவருடைய சாந்த இயல்பு வெளியாகும். புராணப் பிரசங்கம் செய்யும்பொழுது ஒவ்வொரு கருத்தையும் விரிவாக எடுத்துக் கூறிச் செல்வார். விரைவின்றியும் தெளிவாகவும் இடையிடையே மேற்கோள்கள் காட்டியும் பதசாரங்கள் சொல்லியும் பிரசங்கம் செய்வார்.
'எல்லாம் கூடிக்கூடியும்' என்னும் தொடர் இவருடைய பேச்சில் அடிக்கடி வரும். ‘ஊக்கம்' என்னும் சொல்லை இடையிடையே இவரோடு பேசிவருகையில் கேட்கலாம். மாணாக்கர்களிடம் ஏதாவது சொல்வதானால், 'என்னப்பா' என்றாவது 'அப்பா' என்றாவது சொல்லிவிட்டுத்தான் செய்திகளைச் சொல்லத்தொடங்குவார். கல்வியின் இயல்பை அறியாமல் கௌரவத்திற்காக மட்டும் யாரேனும் ஒருவர்
உதாரகுணமுடையவராகத் தோற்றினால் அவர்பால் தம்முடைய மாணாக்கர்களேனும் வேறு யாரேனும் சென்று உதவி பெறலாமென்றெண்ணுவதுண்டு. அவர்களிடம், "அவரிடம் போய்த் தமிழ்ப் பாட்டைச் சொல்லிவிட வேண்டாம். அவர் காதுக்கு அது நாராசம் போல இருக்கும். மற்ற ஆடம்பரங்களுக்குக் குறைவில்லாமற் சென்றாற் போதும்" என்பார். கல்வியறிவில்லாதவர்கள் செய்யும் உபசாரத்தை, 'பெறுவான் தவம்' என்று குறிப்பாகக் கூறுவார்; "அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாதும், இல்லை பெறுவான் றவம்" என்னும் திருக்குறளில் உள்ள தொடர் அது.
புகழ்
அருங்குணமும் நிறைந்த புலமையும் தளரா நாவன்மையும் அமைந்த இப்பெரியாருடைய கீர்த்தி இவருடைய காலத்திலேயே தமிழ் நாட்டிலும் பிற இடங்களிலும் பரவியிருந்தது. திருவாவடுதுறை மடத்தில் ஆதீன வித்துவானாக அமர்ந்த பின்னர்த் திருக்கூட்டத்தாருடைய பழக்கமும் ஆசிரியர்களின் திருவருளும் சிவ பூஜையும் மாணாக்கர்களுக்கு அதிகமாகப் பாடஞ் சொல்லுதலும் அவ்வப்போது நூல் இயற்றுதலுமாகிய இவற்றோடு இவர் மனம் அமைதியுற்றிருந்தது. வேறு எவ்வகையான நிலையையும் இவர் விரும்பவில்லை. ஆயினும் இவருடைய புகழ் நாளுக்குநாள் பரவிக்கொண்டேயிருந்தது. சைவ மடாதிபதிகள் எல்லோருடைய நன்மதிப்பையும் இவர் நன்கு பெற்றிருந்தனர். சைவர்கள் இவரை, "சைவப்பயிர் தழையத் தழையும் புயல்" என்றே கருதி வந்தனர். அன்னம் அளித்துப் புஸ்தகம் வாங்கிக் கொடுத்து அன்போடு படிப்பிப்பவர் இவரென்ற பெரும்புகழ் எங்கும் பரவியது. கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி என்ற பெயரையுடையோர்கள் பண்டைக்காலத்தில் ஒவ்வொருவரே இருந்தனர்; ஆதலின் அவர்களுடைய பெயர்கள் மற்றவர்களைச் சாராமலே தனிச் சிறப்புற்றார்கள். இவருடைய பெயரை உடையவர்கள் பலரிருந்தும் ‘மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்' என்று கூறின் இவரையே குறிக்கும் பெருமையை இவர் அடைந்திருந்தனர். தமிழ் வித்துவான்களில், "பிள்ளையவர்கள்" என்றே வழங்கும் பெரிய கெளரவம் இவருக்குத்தான் அக்காலத்தில் அமைந்திருந்தது. சமீபகாலத்தில் இத்தகையோர் இருந்ததில்லை.
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் இவருடைய புகழைப் பற்றிச் சொல்லும் பொழுது, "நம்மிடம் வரும் தமிழ்வித்துவான்கள் யாராயினும் பிள்ளையவர்களிடம் பாடங்கேட்டவரென்றேனும் அவர்களுக்குப் பாடஞ் சொன்னவரென்றேனும் அவர்களுக்கு ஐயம் தீர்த்தவரென்றேனும் அவர்களை ஜயித்தவரென்றேனும் தம்மைச்சொல்லிக்கொண்டு வருகிறார்கள். வருபவர்கள் தங்கள் தங்கள் புகழை வெளியிட எண்ணி அங்ஙனம் கூறுகிறார்கள். நமக்கோ அவர்கள் கூறக்கூறப் பிள்ளையவர்களுடைய புகழ்தான் உரம் பெற்று மிகுதியாகத் தோற்றிக் கொண்டே இருக்கிறது" என்று கூறுவார்.
இவரிடம் பாடம் கேட்கவேண்டுமென்று விரும்பியும் தங்களுக்குச் செவ்வி வாயாமையால் வருந்தினோர் பலர். வேறு யாராலும் தீர்க்கமுடியாத சந்தேகங்களை இவரைப் பார்க்கும் சமயம் நேருமாயின் அப்பொழுது இவர்பால் கேட்டுத் தீர்த்துக்கொள்ளலாமென்னும் கருத்துடைய பலர் அங்கங்கே இருந்தனர். செங்கணம் சின்னப்பண்ணை நாட்டாராகிய விருத்தாசல ரெட்டியாரென்பவர் தாம் படித்துக்கொண்டுவரும் ஒவ்வொரு நூலிலும் உண்டாகும் ஐயங்களை இவர்பால் தெரிவித்து மாற்றிக்கொள்ள வேண்டுமென்று ஐயப்பகுதிகளை ஒரு குறிப்புப் புத்தகத்தில் பதிந்து கொண்டே வந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
இவரால் தமிழ்நாட்டிற்கு உண்டான பயன்.
இப்புலவர்பிரானால் தமிழ்மக்கள் பெற்ற பயன் மிகப் பெரிதாகும். புதிய புதிய நூல்களை இயற்றித் தமிழ் நயங்களை அமைத்துக் காட்டிய இவருடைய செய்யுளால் பலவகைச் சுவைகளை அறியும் பயனைத் தமிழ்மக்கள் பெறுகின்றனர். புது நூல்களை இயற்றியதோடு நில்லாமல் தாம் வருந்தித்தேடிய பழைய நூல்களை விளக்கிவைத்த இவருடைய செயல் தமிழ் நாட்டாரால் என்றைக்கும் நினைக்கத்தக்கதாகும். தமிழ்ப் பாடஞ் சொல்லிச் சொல்லி மாணாக்கர் கூட்டத்தை வளர்த்து அவர்கள் மூலமாகத் தமிழறிவைத் தமிழ் மக்களுக்குப் பயன்படச் செய்த வள்ளல் இவர். எங்கெங்கே தமிழ் நூல்களை முறையாகப் படித்தறியும் உணர்வும் பழைய புராணங்கள் பிரபந்தங்கள் முதலியவற்றைப் பயின்று இன்புறும் இயல்பும் திகழ்கின்றனவோ அங்கெல்லாம் இவருடைய தொடர்பேனும் இவர்பாற் பாடங்கேட்டவர்களுடைய தொடர்பேனும் பெரும்பாலும் இருக்கும். இன்றளவும் ஓரளவில் புலவர்களுடைய நூல்களுக்கு உள்ள மதிப்புக்கு மூலகாரணம் இவரென்றே சொல்லலாம். தமிழ்த் தெய்வத்தின் திருத்தொண்டர்களாகித் தமிழகத்தைத் தமிழன்பில் ஈடுபடுத்திய பெரியார்களுடைய வரிசையில் இவரும் ஒருவர். தமிழ்நூற் கோவைகளில் இவருடைய நூல்களும் முத்துக்களைப்போல் விளங்குகின்றன. இனியும் அவை தமிழ்மக்கள் உள்ளத்தில் இன்பத்தை உண்டாக்கிக்கொண்டே என்றும் குன்றா இளமையோடு விளங்கும். அவற்றை ஊன்றிப் படிப்பவர்கள் பிள்ளையவர்களின் புலமை உருவத்தை உணர்ந்து மகிழலாம். தமிழ் உள்ள்ளவும் இவருடைய பெரும்புகழ் நின்று நிலவுமென்பது திண்ணம்.
[1] இங்ஙனம் சொல்லும் செய்யுட்களில் திருச்சிற்றம்பலக் கோவையாரிலுள்ள 'சிலம்பணிகொண்ட' என்பதும், புகலூரந்தாதியிலுள்ள 'தொழுந்துதிக்கைக்கு' என்பதும் எனக்கு ஞாபகத்திலிருக்கின்றன.
[2] அவ்வகையான இசையைத் திருச்சிராப்பள்ளியிலும், அந்நகரைச் சார்ந்த இடங்களிலும் பெரும்பாலோரிடத்தில் அக்காலத்திற் கேட்கலாம். தியாகராச செட்டியார் பிள்ளையவர்களைப்போல அந்த இசையோடுதான் செய்யுட்களைச் சொல்லுவார்.
[3] இப் புத்தகம் 255- ஆம் பக்கத்திலுள்ள, “எனைவைத்தி எனை வைத்தி” என்னும் செய்யுளைப் பார்க்க.
-------------------
வேறு சில வரலாறுகள்[$] .
[$] உரிய இடங்களில் எழுதப்படாமல், பின்பு ஞாபகத்திற்கு வந்த வரலாறுகள் இங்கே எழுதப்பட்டுள்ளன.
எழுவாய் பயனிலை
பிள்ளையவர்களுடைய இளம்பிராயத்தில் ஒருவர் பாடங்கேட்க வந்தார். "என்ன படிக்க வேண்டும்?" என்று இவர் அவரைக் கேட்கவே அவர், "இலக்கியம் படிக்கவேண்டும்" என்று கூறினார். அப்பால், "இலக்கணம் படிக்க வேண்டாமா ?" என்று இவர் கேட்டபொழுது, “நன்றாகப் படித்திருக்கிறேன்" என்று அவர் விடை கூறினார்; உடனே இப்புலவர்பிரான் அவரை ஒரு செய்யுள் சொல்லச் செய்து, "இந்தப் பாடலில் எழுவாய், பயனிலை என்ன?" என்று கேட்டார். அவர் நெடுநேரம் யோசித்தும் விளங்காமல் விழித்துக் கொண்டே யிருக்கையில் இவர், "எழுவாய், பயனிலை" என்று சொன்னார்; "எழுந்து செல்லலாம்; யோசிப்பதில் பிரயோசனமில்லை" என்பது இவர் சொல்லியதற்குப் பொருள். அவர் அதனையும் உணராதவராகி யோசித்துக் கொண்டிருந்தார். உடனிருந்தவர்கள் குறிப்பாக அதனைப் புலப்படுத்தினார்கள். அப்பால் அவர் அதனை அறிந்து வணக்கமுடையவராகி இவரிடம் சிலமாதம் இருந்து பாடங்கேட்டுவந்து பின்பு தம்மிடஞ் சென்றார்.
சதுர்வேத தாத்பரிய சங்கிரகம்.
இக்கவிஞர்கோமானுக்குச் சைவத்தில் அழுத்தமான பற்று இருந்தமையின் வடமொழியிலுள்ள சைவ நூல்களின் கருத்துக்களைத் தக்கோர் வாயிலாக அப்பொழுது அப்பொழுது தெரிந்துகொள்வார். ஸ்ரீ அரதத்தாசாரியார் முதலிய பெரியோர்களுடைய நூல்களிலிருந்து அவ்வப்போது வடமொழி வித்துவான்கள் கூறும் சுலோகக் கருத்துக்களை அறிந்து மகிழ்ந்து தனிச்செய்யுட்களாக மொழிபெயர்ப்பதுண்டு; அன்றித் தாம் இயற்றும் நூல்களில் உரிய இடங்களில் அக்கருத்துக்களை அமைப்பதுமுண்டு. அரதத்தாசாரியர் இயற்றிய சுருதி சூக்திமாலை யென்னும் நூலுக்குரிய வியாக்கியானமாகிய சதுர்வேத தாத்பரிய சங்கிரகத்தைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்று மதுரையிலிருந்த சிவபுண்ணியச் செல்வர்களாகிய [1] வேங்கடாசல செட்டியார், மெய்யப்ப ஐயா என்னும் இருவரும் இவருக்குத் தெரிவித்துக் கொண்டனர். இவருக்கும் அம்மொழிபெயர்ப்புப்பணி உவப்புடையதாக இருந்தது. அரதத்தாசாரியர் சரித்திரத்தையும் தமிழ்ச் செய்யுளாக இயற்ற வேண்டுமென்று இவர் எண்ணினார்.
--
திருவாவடுதுறையிலும் வேறு சில இடங்களிலும், சதுர்வேத தாத்பரிய சங்கிரக வடமொழிப் பிரதிகள் கிடைத்தன. மதுரை, திருஞானசம்பந்தர் ஆதீன மடத்தில் சில பிரதிகள் உண்டென்று தெரிந்தது. அவற்றையும் பெற்றுப் பார்க்க வேண்டுமென்னும் விருப்பம் இவருக்கு உண்டாயிற்று. ஆதலின் அப்போது அவ்வாதீன வித்துவானாக இருந்த குறுக்கைக் குமாரசாமிப்பிள்ளை என்பவருக்குத் தமது விருப்பத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியனுப்பினார். அதற்கு விடையாக அவர் பின்வரும் கடிதத்தை எழுதினார்:
"சிவமயம்.
"ம-ள-ள- ஸ்ரீ ஐயா அவர்களுக்குக் குமாரசாமி எழுதிக்கொள்ளும் விஞ்ஞாபனம்.
இவ்விடம் க்ஷேமம். அவ்விடம் க்ஷேமத்தை எப்பொழுதும் தெரிந்துகொள்ள விருப்புற்றிருக்கின்றனன். தாங்கள் அன்போடு வரைந்தனுப்புவித்த கடிதம் வரப்பெற்று மிக்க மகிழ்ச்சியை அடைந்தேன். அக்கடிதத்தை உடனே ம–ள-ள - ஸ்ரீ வேங்கடாசலம் செட்டியாரவர்களிடத்திற்கு அனுப்புவித்தேன். கடிதம் வருவதற்குச் சில நாள் முன் தொடங்கி எனக்கு ஒன்றரை மாதம் வரையிலும் கடினமான சுரம் அடித்துக் கொண்டிருந்ததனாலே பதிலெழுத இதுகாறும் தாமதித்தது. அரசத்தாசாரிய சாமி சரித்திரம் பலவிதமாக இருப்பதனாலே அதைப் பின்னாலே மொழி பெயர்க்கலாமென்றும், இப்போது சதுர்வேத தாத்பரிய சங்கிரக மூலத்தை மாத்திரம் மொழிபெயர்த்துச் செய்யுளாக்க வேண்டும் என்றும், அதற்கு இவ்விடத்தில் இருக்கிற புஸ்தகம் வேண்டுமாயின் எழுதினால் அனுப்புவிக்கிறோமென்றும் ம -ள-ள- ஸ்ரீ வேங்கடாசலம் செட்டியாரவர்களும் மெய்யப்ப ஐயா அவர்களும் தங்களுக்கு எழுதியனுப்புவிக்கச் சொன்னார்கள். வேஷ்டியைக் குறித்து மாயாண்டி செட்டியாரவர்களை வினாவினதற்குத் தங்களுக்கு எழுதிக் கொள்ளுகிறோமென்று சொன்னார்கள். மதுரைக் கலம்பகம் எழுதி முடிக்கப்பட்டிருக்கின்றது. அதைத் தபால் வழியாகவாவது மனிதர் வசமாகவாவது அனுப்புவிக்கிறேன். ஸ்ரீ சின்ன சந்நிதானம் எப்போதும் தங்கள் குணாதிசயங்களைப் பாராட்டிக்கொண்டிருக்கின்றது. யான் குறுக்கைக்கு வருங்காலம் இன்னொரு காகிதத்தில் எழுதியனுப்புகிறேன். இங்கே எழுதிய சதுர்வேத தாத்பரிய சங்கிரகத்தின் வியாக்கியானத்தை மொழிபெயர்க்க வேண்டுவதில்லை யென்று சொன்னார்கள்.
சுக்கில வருடம் கார்த்திகை மாதம் 27ஆம் தேதி
மதுரை. குமாரசாமி
விலாஸம்
"இது, நாகபட்டணத்தில் ஓவர்ஸியர் அப்பாத்துரை முதலியாரவர்கள் பார்வையிட்டு ம - ள – ள- ஸ்ரீ திரு. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வசம் கொடுப்பது."
இக்கடிதம் கண்டவுடன் இப்புலவர்பிரான் மீண்டும் குமாரசாமிப் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதினர். அது வருமாறு:
"சிவமயம்.
{அநு1.1}
"குலவர் சிகாமணி குமாரசாமிப் புலவர் சிகாமணி பொருந்தக் காண்க."
"இவ்விடம் க்ஷேமம். அவ்விடம் க்ஷேமம் வரைந்தனுப்பவேண்டும்.
"தாங்களனுப்பிய கடிதம் வந்து சேர்ந்தது.
அதிசயமாகவும் சைவ சமயம் நிலைபெறும்படியாகவும் சுரந்தீர்த்த தலத்தில் தங்களை அது வருத்தியது அதிசயமாயிருக்கிறது. இப்போது சவுக்கியமாயிருக்கிறது குறிப்பாற்றெரிந்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இது நிற்க.
"சதுர்வேத தாத்பரிய சங்கிரக மூலத்திற்குச் சுருதி சூக்குமம் என்று பெயர். அக்கிரந்தத்தொகை நூற்றைம்பது . அதை மொழிபெயர்ப்பதனாற் பிரயோசனமில்லை. யாகத்திற்குப் பதி பரமசிவமே என்பது ஒரு சுலோக தாத்பரியம். நமஸ்காரத்திற்குப் பதி பரமசிவமே என்பது ஒரு சுலோக தாத்பரியம். காயத்திரிக்குப்பொருள் பரமசிவமே என்பது ஒரு சுலோக தாத்பரியம். இந்தப்பிரகாரம் 150 சுலோகமுமிருக்குமே யன்றி வேறில்லை. ஒவ்வொரு சுலோக தாத்பரியத்தையும் எடுத்துப் பாஞ்சராத்திர முதலியோர் மதங்களைக் கொண்டு பூருவபட்சஞ் செய்து அப்பால் அநேக உபநிடதம் முதலியவற்றையுங் கொண்டு மேற்படி கட்சியை மறுத்துச் சித்தாந்தஞ் செய்வதுதான் சதுர்வேத தாத்பரிய சங்கிரகமென்பது. மூலமாத்திர மொழிபெயர்க்க வேண்டுமெனில் அதில் உள்ளதில் இரண்டு பங்கு நாம் சேர்த்துச் சொல்லலாமே. இன்ன சுருதியில் இன்ன உபநிடதத்தில் இதற்காதாரமிருக்கிறதென்பதை எடுத்துக்காட்டுதல் மாத்திரம் நமக்குக் கூடாது. அதற்குத்தான் வியாக்கியானத்தை மொழிபெயர்க்க வேண்டும்.
வியாக்கியானத்தின் பெயர்தான் சதுர்வேத தாத்பரிய சங்கிரகமென்பது. இதற்கு மேல் வியாக்கியானமில்லை. சதுர்வேத தாத்பரிய சங்கிரகத்தை மூலமென்று கருதினார்கள் போலும். பாஞ்சராத்திர தந்திரங்களும் பிற தந்திரங்களும் அநேகமாய் அதில் வெளிப்படும். சைவாகமங்கள் பலவற்றிலுமுள்ள உண்மைகளெல்லாம் வெளிப்படும். பிரபலமான சண்டை செய்து கொள்ளுவதல்லவா? இவ்வளவுக்கும் இடங்கொடுப்பது சதுர்வேத தாத்பரிய சங்கிரகமேயன்றி, அதன் மூலமாகிய சுருதி சூக்திமாலையல்ல. மூலம் 150 சுலோகமுஞ் செய்தது அரதத்தாசாரிய சுவாமிகள். வியாக்கியானமாகிய சதுர்வேத தாத்பரிய சங்கிரகஞ் செய்தவர் மேற்படி சுவாமிகள் மாணாக்கரே; மேற்படி சுவாமிகள் அனுமதியாற் செய்ததேயன்றி வேறல்ல. மூலத்தின் பெயரிருக்க வியாக்கியானத்திற்கே பிரபலம் வந்துவிட்டது. அதன் பெருமை நோக்க, இவ்வளவு மூலத்தில் அடங்கியிருந்தாலும் நம் போலிகளாலும் பிறராலும் எளிதில் உணர முடியாது. ஆதலினால் சதுர்வேத தாத்பரிய சங்கிரகமே மொழிபெயர்க்க வேண்டும். உத்தேசம் அது 3000 சுலோகமிருக்கும். ஆதலால் இவ்விடத்துள்ள பிரதியினுடைய உயர்வு முன்னமே தெரிவித்திருக்கிறேனே. அவ்விடத்திலுள்ள பிரதியையும் உடனே அனுப்ப வேண்டுவதுதான். இன்னும் சில பிரதிகளும் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் இக் கடிதங் கண்டவுடனே தபால் பங்கியில் அனுப்பவேண்டும். மூலத்தையுங் கூடச் சேர்த்தனுப்பவேண்டும். இது நிற்க .
.
"மாயாண்டிச் செட்டியாரவர்கள் வேஷ்டியைக் குறித்திதுவரையிலொன்றும் எழுதவில்லை. அவசியம் வேண்டியிருப்பதனால் முன்னெழுதிய விவரப்படியே இவ்வளவு தொகையாகு மென்று தெரிவித்தா லுடனே யனுப்புவேன். அதற்குத்து… செய்ய வேண்டுவதில்லை. கருணாநிதியாகிய சந்நிதானத்தை நானினைத்தறிவேன்.
இக்கடிதங்கண்ட தினமே பதிலெழுதுக..
"சுக்கில வருடம் இங்ஙனம்
மார்கழி மாதம் 2ஆம் தேதி தி. மீனாட்சிசுந்தரம்.
-----------------
"இவ்விவரங்களை யெல்லாம் ம - ள - ள - ஸ்ரீ செட்டியாரவர்களுக்கும் ஐயா அவர்களுக்கும் விவரமாய்த் தெரிவிக்க வேண்டும்."
விலாஸம்
"மதுரையில் தேவஸ்தான நிர்வாக சபையாரில் ஒருவராகிய ம-ள- ள - ஸ்ரீ வேங்கடாசலஞ் செட்டியாரவர்கள் மேல்விலாசம் பார்வையிட்டு ம--ள- ள- ஸ்ரீ வித்துவான் குமாரசாமிப்பிள்ளையவர்களுக்குக் கொடுப்பது."
இதன்பின்னர்ச் சதுர்வேத தாத்பரிய சங்கிரகம் என்ன காரணத்தாலோ இவரால் மொழிபெயர்க்கப்படவில்லை.
நெல் அளித்த அன்பர்கள்.
இவர் திருச்சிராப்பள்ளியில் இருந்த காலத்தில் இவரைப் பல வகையில் ஆதரித்த அன்பர்கள் பலர். பெரிய செல்வர்களும் இவர்பாற் பாடங்கேட்டுத் தாமே வலிய உதவிசெய்து வந்தனர். கள்ள வகுப்பினர் சிலர் இவர்பால் பாடங்கேட்டதுண்டு; பின்பு இக்கவிஞர்பிரானுக்கு அவ்வப்பொழுது வருஷாசனமாக அவர்கள் நெல்லளித்து ஆதரித்து வந்தனர்.
ஒரு பாட்டின் குறிப்பு.
வரகனேரிச் சவரிமுத்தாபிள்ளை ஒருமுறை இவருக்குத் திருவிளையாடற் புராணத்திலுள்ள [2] "தன்கிளை யன்றி" என்னும் ஒரு செய்யுளைப் பற்றிய ஐயம் ஒன்றைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். அதற்கு விடையாக இவர் எழுதிய கடிதம் வருமாறு:
உ
(வெண்பா)
{அநு1.2}
"இக்கடித நோக்கி யியற்செந் தமிழெவற்றும்
மிக்க தெனவளர்க்கு மேன்மையாற் - றொக்கபுகழ்த்
தென்னன் பொருவுந் திருவார் சவரிமுத்து
மன்ன னடையு மகிழ்.”
"இவ்விடம் க்ஷேமம். அவ்விடம் க்ஷேமம் வரைந்தனுப்ப வேண்டும்.
"தாங்கள் குறிப்பிட்ட திருவிளையாடற் செய்யுள், 'அன்பினில் வியப்போ வீச னருளினில் வியப்போ வன்பர்க், கின்புரு வான வீச னன்பருக் கெளிதே தைய' என்றது சரியே. எளிதேது ஐய என்பதில் ஏதுவென்பது வினா.
"ஈசனன்பர்க்கு அருளைப் பெறுதல் எளிது. அஃது அரியதன்று. அன்பு செய்தல் அரிது. அஃது எளியதன்று' என்பது பொருள். இஃது உடனே தோன்றியது. இப்போது அதைத் தெரிவித்தேன்.
"[3] சதாசிவத்திற்குச் சவுக்கியமானதை எனக்குத் தெரிவிக்கவில்லை. அது பற்றிக் கவலையில்லானென்று என்னை நினைத்தான் போலும். ம-ள-ள - ஸ்ரீ குமாரசாமி பிள்ளை, முருகப்ப பிள்ளை, சதாசிவம் பிள்ளை இவர்களைக் குருபூசைக்கு அவசியம் வரவேண்டுமென்று ஒரு மனுஷ்யனைக் கொண்டு தெரிவிக்க வேண்டும்.
"[4] ம -ள-ள- ஸ்ரீ பிள்ளையவர்களிடத்தில் கந்தசாமியைத் தாங்கள ழைத்துக்கொண்டு சென்றதும் அவனொடு வந்தவொரு செய்யுளைத் தாங்கள் பிரசங்கித்த விவரமும் தெரிய விரும்புகிறேன்.
" இவ்விடம் மகா சந்நிதானந் தங்களைப் பார்க்கும் அவா நிரம்பவுடையது. குருபூசை முன்னிலையில் எல்லாரும் வரும்போதாவது அல்லது தனித்தாவது தாங்கள் ஒரு தினம் இவ்விடம் வந்து போனாற் சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். அப்பால் தங்களிட்டம்.
பவ ஆண்டு இங்ஙனம்
கார்த்திகை மாதம் 11ஆம் தேதி தி. மீனாட்சிசுந்தரம் "
விலாஸம்.
"இது
"திருச்சிராப்பள்ளி வரகனேரியிலிருக்கும் கிராம முனிசீப் மகா -ள -ள - ஸ்ரீ பிள்ளையவர்கள் சவரிமுத்தா பிள்ளையவர்களுக்குக் கொடுக்கப்படுவது."
நோயை மறந்து பாடஞ் சொன்னது.
பிள்ளையவர்கள் காலத்திற்குப் பிறகு ஒருமுறை மேற்கூறிய சவரிமுத்தா பிள்ளையிடம் பிள்ளையவர்கள் இயற்றிய நூல்கள் சில வற்றின் கையெழுத்துப் புத்தகங்களைப் பெறுவதற்கு நான் சென்றிருந்தேன். அப்பொழுது அவர் கூறிய செய்தி ஒன்று வருமாறு:
"ஒருசமயம் ஐயா அவர்கள் என்னுடைய வேண்டுகோளின்படி இங்கே வந்து சில நாட்கள் இருந்தார்கள். அப்பொழுது நான் பெரிய புராணத்திற் சில பகுதிகளைப் பாடங்கேட்டு வந்தேன். ஒருநாள் நெடுநேரம் பாடஞ்சொல்லிக் கொண்டே வந்தார்கள். வர வர அவர்களுடைய சப்தம் பலமாயிற்று; கண்கள் சிவந்து தோன்றின. நெடுநேரம் ஆய்விட்டமையால், 'ஐயா அவர்கள் பூசைக்கு நேரமாயிற்றே' என்றேன். உடனே அவர்கள், 'உடம்பு ஒருவிதமாக இருக்கிறது; சுரம் வந்திருக்கிறது போல் தோற்றுகிறது' என்றார்கள். நான் அவர்கள் மார்பிற் கையை வைத்துப் பார்த்தேன்; கொதித்தது; சுரம் அதிகமாக வந்திருப்பது தெரிந்து, உடனே, 'நோயையே மறந்து பாடஞ் சொல்லி வந்தார்களே! இவர்களுக்கு நம் மேல் உள்ள அன்பின் அளவுதான் எவ்வளவு! பாடஞ் சொல்லுவதில் எல்லாவற்றையும் மறந்து ஒன்றியிருக்கும் இவர்களைப்போல யாராவது இருக்கிறார்களா?' என்று நினைந்து உருகினேன்."
இச்செய்தியைச் சொல்லியபொழுது சவரிமுத்தா பிள்ளைக்கு இடையறாமல் கண்ணீர் பெருகிக்கொண்டேயிருந்தது.
------------
[1] இவர்கள் சென்ற ஈசுவர (1877) வருஷத்தில் மதுரைத் திருக்கோயிற் கும்பாபிஷேகம் செய்வித்தவர்கள்.
[2] {அநு1.3}
"தன்கிளை யன்றி வேற்றுப் பறவைகள் தாமுந் தன்போல், நன்கதி யடைய வேண்டிற் றேகொலிந் நாரை செய்த, அன்பினில் வியப்போ வீச னருளினில் வியப்போ வன்பர்க், கின்புரு வான வீச னன்பருக் கெளிதே தைய." நாரைக்கு முத்தி. 24.
[3] இவருடைய மாணாக்கராகிய சதாசிவ பிள்ளை.
[4] திரு. பட்டாபிராம்பிள்ளையவர்கள்.
-----------
தனிச்செய்யுட்கள்.
கடவுள் வணக்கங்கள்.
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகப்பெருமான்.
திருக்கற்குடிமாமலைச் சிவபெருமான்.
திருப்பாதிரிப்புலியூர்ப் பெரியநாயகி யம்மை .
திருவம்பர் வம்புவனப் பூங்குழல் நாயகி.
அன்பர்களைப் பாராட்டிய செய்யுட்கள்.
அப்பாத்துரை முதலியார்.
ஆறுமுகத்தா பிள்ளை.
தம் புத்தகத்தைப் பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளை ஒளித்து வைத்தபோது அதனைத் தரவேண்டுமென்று சாமிநாத பண்டாரம் பாடியதாக இவர் இயற்றியளித்த செய்யுள்.
இராகவையங்கார்.
தேவகோட்டை, சிந்நயச்செட்டியார்.
இவர் வன்றொண்டருடைய மாணாக்கர்; இவரைப் பார்த்தவுடனே பிள்ளையவர்கள் சொல்லியது.
சுப்பிரமணிய தம்பிரான்.
பக்கிள் துரை.
திருநெல்வேலிஜில்லா, தரம் பைஸல் கலெக்டராக இருந்த பக்கிள் துரைமீது சுப்பிரமணிய தேசிகர் விருப்பத்தின்படி பாடியவை.
இராமநாதபுரம் பொன்னுசாமித் தேவர்.
பொன்னுசாமித் தேவர், ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரை மதுரைக்கு அழைத்துத் தம்முடைய பங்களாவில் எழுந்தருளச் செய்து மிகச்சிறப்பாக மகேசுவர பூஜை, பட்டணப் பிரவேசம் முதலியன செய்வித்ததையும் துதியாகச் சில பாடல்களை இயற்றி விண்ணப்பித்ததையும் அறிந்து அச்செயலைப் பாராட்டிப் பிள்ளையவர்கள் பின்வரும் செய்யுட்களை இயற்றி எழுதியனுப்பினார்கள்:
வேங்கடாசாரியர்.
திருநெல்வேலி, தரம் பைஸல் டிப்டிகலெக்டர் வேங்கடாசாரியர் மீது திருவாவடுதுறை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் கட்டளையின்படி செய்யப்பட்டவை:
முன்ஸீப் வேதநாயகம் பிள்ளை.
வேதநாயகம் பிள்ளை திருவாவடுதுறைக்கு வந்து ஆதீனகர்த்தர் மீது சில செய்யுட்களை இயற்றிச் சொல்லிக்காட்டியபொழுது பிள்ளையவர்கள் இயற்றியவை.
கடிதப் பாடல்கள்.
பிள்ளையவர்கள் எழுதிய கடிதங்களின் தலைப்பில் அமைத்த செய்யுட்களிற் சில வருமாறு. இவற்றிற்குரிய கடிதங்கள் கிடைக்கவில்லை.
அரியநாயகம் பிள்ளை .
கலியாணசோழபுரம் அருணாசலம் பிள்ளை.
கலியாண சோழபுரம் ஐயாறப்ப பிள்ளை.
(விபவ ஆண்டு ஆனி மாதம் 12ஆம் தேதி)
சரவண பிள்ளை.
(இவர் மாயூரம் முதலிய இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர்.)
கலியாணசோழபுரம் சிதம்பரம் பிள்ளை.
கோயிலூர், சிதம்பர ஐயா.
தரங்கம்பாடி வக்கீல் செளந்தரநாயகம் பிள்ளை.
வேறுவகைப் பாடல்கள்.
திரு. பட்டாபிராம பிள்ளையின் விருப்பத்தின்படி பாடி யளித்தவை.
சிறப்புப்பாயிரங்கள்.
பின் வருபவை பின்பு கிடைத்தமையால் பிள்ளையவர்கள் பிரபந் தத்திரட்டில் சேர்க்கப்படவில்லை.
ஐயாத்துரை ஐயர்.
சாமிநாத முதலியார்.
திருப்பாதிரிப்புலியூர், சிவசிதம்பர முதலியார்.
சுந்தரம் பிள்ளை.
பிறர் வரைந்து அனுப்பிய கடிதங்கள்.[§]
[§] பிள்ளையவர்களுக்குப் பிறர் எழுதிய கடிதங்கள் சில எனக்குக் கிடைத்தன. அவற்றுள் முக்கியமான சில கடிதங்களும், சிலவற்றின் பகுதிகளும் இங்கே வெளியிடப்படுகின்றன.
மேலகரம் சுப்பிரமணிய தேசிகர்.
(சின்னப்பட்டத்தில் இருந்தபோது எழுதிய திருமுகம்.)
உ
சிவமயம்
"சுவாமி அம்பலவாண சுவாமி திருவுளத்தினாலே இகபரசவுபாக்கிய வதான்னிய மூர்த்தன்னிய சதுஷ்டய சாதாரண திக்குவிஜய பிரபுகுல திலக மங்கள குணகணாலங்கிருத வாசாலக பரிபாக சிரோரத்ந மஹா புருஷச் செல்வச் சிரஞ்சீவி மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களுக்குச் சிவஞாநமுந் தீர்க்காயுளுஞ் சிந்தித மனோரத சித்தியுந் தேவகுருப் பிரசாதமுஞ் சகல பாக்கியமு மேன்மேலு முண்டாகுக.
நாளது விபவ ஆண்டு மீனரவி 14ஆம் தேதி வரையும் தெய்வப் பொன்னித் திருநதிசூழ்ந்த நவகோடி சித்தவாசபுரமாகிய ஞானக்கோமுத்திமாநகரத்தி லெம்மை யாண்ட ஞானசற்குருதேசிக சுவாமிகளாகிய மஹா சந்நிதானத் திருவடி நீழலின்கண் தங்களுடைய க்ஷேமாபிவிருத்தியையே சதா காலமும் பிரார்த்தித்து வாசித்திருப்பதில் ஞானநடராஜர் பூசையு மஹேசுவர பூஜையும் வெகு சிறப்பாக நடந்துவருகின்றன. இவ்விடத்து வர்த்தமானங்களெல்லாம் இதற்கு முன்னெழுதியிருக்கிற லிகிதத்தாலுஞ் சுப்பு ஓதுவார் முகவசனத்தாலும் விசதமாகுமே. மேற்படி யோதுவாரிட மனுப்பிய வலிய மேலெழுத்துப் பிள்ளை யவர்கள் லிகிதங்களுங் காகிதப் புஸ்தகங்களும் வந்து சேர்ந்த விவரமும் மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி அப்பாத்துரை முதலியாரவர்கள் பிரார்த்தனைப்படி நல்ல சுபதினத்தில் நாகைப்புராணம் அரங்கேற்றி வருவதும் தெரிந்து கொண்டோம். வலிய மேலெழுத்துப் பிள்ளையவர்கள் செய்யுட்களைத் திருத்தியனுப்பி யிருப்பதில் இதுவரை சிறப்புப் பாயிரமுமமைத்தனுப்பியிருக்கக்கூடுமே. அதற்குத் தொகையும் இதுவரை சேர்ந்திருக்கலாம். கந்தசாமி முதலியாருக்குக் காஞ்சிப் புராணம் முற்றுப்பெறச் செய்யும்படிக் கெழுதியதும் மற்றக் காரியாதிகளும் தெரிய விவரமா யெழுதியனுப்ப வேண்டும். ஆவராணி மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி முத்தைய பிள்ளையவர்கள் இவ்விடந் தரிசனத்திற்கு வருவதில் அவரைப் போன்ற கனவான்களைப் பார்க்க நாமும் விருப்பத்தோ டெதிர்பார்த் திருக்கிறோம். ஆசாரிய சுவாமிகளை அவ்விடந் திருக்கூட்டத்தார்களுடன் தாங்களும் போய்க் கண்டு தரிசித்த விவரமும் தெரிந்து மகிழ்ச்சியானோம். அவ்விடம் நம்முடைய மடத்து இரண்டு கொட்டடியையுந் திறந்துவிடும்படி மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சிவி திருவாரூர் ஐயாப் பிள்ளையவர்களுக்கும் எழுதியனுப்பியிருக்கிறது. நமச்சிவாயத் தம்பிரானுந் திருவெண்ணெய்நல்லூரிலிருந்து இன்னும் வந்து சேரவில்லை. பனசைத்தம்பிரானும் இவ்விடத்தில் வந்து தரிசித்துக் கொண்டுபோயிற்று. காசி இரகசியத்தைப் பற்றியும் நாச்சியார் கோவில் முதலியாரவர்கள் ......... மேற்படி சாஸ்திரியாரை யழைத்துக் கொண்டு வருவதாகவும் எழுதியிருக்கிறார்கள். வந்த விவரம் பின்பெழுதுவோம். மற்றுள்ளன பின்பு எழுதுவதாயிருக்கும். நமது இருதய முழுவது நிறைந்து நற்றவமனைத்துமோர் நவையிலா வுருப்பெற்ற குருபுத்திர சிரோமணியாய் விளங்குகின்ற தாங்கள் அரோக திடகாத்திரரா யிருந்தின்னும் பெரிதாயிருக்கிற திகந்த விச்ராந்த கீர்த்திப் பிரதாப ஜயகர பிரபல பெரும் பாக்கியங்க ளெல்லாம் மேன்மேலும் வந்து சிவக்ஷேத்ர குருக்ஷேத்ரங்களைப் பரிபாலனஞ் செய்து கொண்டிருக்க வேண்டுமென்று சிவபூஜா காலங்களிலு மஹேஸ்வர பூஜை வேளைகளிலும் வேண்டு-கொண்டிருக்கிறோம். மஹதைசுவரிய விபூதியனுப்பினோம். வாங்கித் தரித்துக்கொண்டு நித்தியானந்த சிரஞ்சீவியாயிருந்து பெருவாழ்வின் வளர்ந்தேறி வர வேண்டும்.
அம்பலவாணர் துணை "
விலாஸம்.
"இது நாகபட்டினத்தில் மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி நமதாதீன மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களுக்குக் கொடுக்கற்பாலது."
(பெரியபட்டத்தில் இருந்தபொழுது எழுதிய திருமுகம்.)
சிவமயம்
" நாளது சுக்கில வருடங் கடகரவி 17 - ஆம் தேதி வரையும் ஞான நடராஜர் பூஜையும் மகேசுவர பூஜையும் வெகுசிறப்பாக நடந்து வருகின்றன.
# # #
" புராணம் அரங்கேற்றி முடிவு செய்து கொண்டு விரைவில் நமதாதீ னாந்தரங்கமான பத்திபுத்தி பாகப் பண்புரிமையிற் சிறந்த விவேக சிரோமணியாய் விளங்குகின்ற தாங்கள் இவ்விடம் வந்து நமது நேத்திரானந்தம் பெறச்செய்து கண்டு கலந்து கொள்வதை எதிர்பார்த்திருக்கிறோம். மற்றுள்ளன பின்பு எழுதுவதாக இருக்கும்.
# # #
" புராணம் முற்றுப்பெற்று வரும்போது மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி ஓவர்சியர் முதலியாரவர்களையும் அழைத்துக்கொண்டு வர வேண்டும்.
நமஸ்ஸிவாயம்."
----------
தி. சுப்பராய செட்டியார்.
உ
"சிவமயம்
{அநு3.1}
"அருளொரு வுருவா மாரியன் கழற்கீழ்
மருளறப் புகுது மனங்குது கலித்தே "
"தங்களைத் தரிசித்து வந்த செகநாத பிள்ளை முதலியோர் தங்கள் க்ஷேமலாபங்களையும் கருணையையும் சொல்லும்போது தங்களை எப்போது பார்ப்போமென்று மனம் பதையா நின்றது. அடியேன் பாவியா யிருந்ததனாலேதான் தங்களை விட்டுப் பிரியும்படி நேரிட்டதே தவிர வேறு அன்று.
இங்ஙனம்,
விபவ தை 5-ஆம் தேதி தி. சுப்பராயன்
1869 தங்களூழியன்
--------
சுப்பராய செட்டியார் பிள்ளையவர்களுக்கு எழுதும் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் குரு வணக்கமாக இவ்விரண்டடி அமைந்த ஒவ்வொரு செய்யுள் எழுதுவது வழக்கம். கிடைத்த சில கடிதங்களில் உள்ள செய்யுட்கள் வருமாறு :
{அநு3.2}
1. சிந்தை யிருள்பருகிச் சேர்ந்தொளிரு மீனாட்சி
சுந்தரமாஞ் செய்ய சுடர். (பிரபவ வருடம் ஆடி மாதம் 28ஆம் தேதி)
{அநு3.3}
2. தண்ணிய கருணை தந்தெனை யாண்ட
புண்ணிய போதகன் பொலிந்துவா ழியவே. (விபவ வருடம் புரட்டாசி மாதம்
16ஆம் தேதி)
{அநு3.4}
3, குருபரன் றாளைக், கருதுவை மனனே.
(விபவ வருடம் மார்கழி மாதம் 19ஆம் தேதி)
{அநு3.5}
4. எனையும் புலவ ரிருங்குழாத் தொருவனா
நினைதரச் செய்தோ னிருசர ணினைகுவாம். (விபவ வருடம் மாசி மாதம் 6.)
{அநு3.6}
5. நீக்கமி லின்ப நிறுவுங் குருமணிதாள்
ஆக்கமொடு சேர்வா ரகத்து. (சுக்கில வருடம் சித்திரை மாதம் 2ஆம் தேதி.)
{அநு3.7}
6. என்பிழை பொறுத்தரு ளெழிற்குரு ராயன்
தன்பத மலரிணை தழைத்துவா ழியவே.
(சுக்கில வருடம் வைகாசி மாதம் 5ஆம் தேதி.)
{அநு3.8}
7. குலவிய பெரும்புகழ்க் குருமணி யிணையடி
நிலவிய வுளத்திடை நினைதரு வாமே.
(சுக்கில வருடம் வைகாசி மாதம் 26ஆம் தேதி)
{அநு3.9}
8. திருந்திய வுண்மைத் திறந்தரும் போதகன்
பொருந்திய பூங்கழற் போதுபுனை தானே.
(சுக்கில வருடம் ஆனி மாதம் 3 ஆம் தேதி)
சாமிநாத தேசிகர்.
உ
"சிவமயம்.
"அன்புள்ள அம்மானவர்களுக்கு விண்ணப்பம்.
"இவ்விடத்தில் யாவரும் க்ஷேமம். அவ்விடத்திய க்ஷேமம் அறிவிக்கச் சொல்லவேண்டும். மணியார்டர் செய்தனுப்பிய கடிதத்திற்கும், பதில் வரவில்லையென்று மனவருத்தத்தோடு பின் எழுதிய கடிதத்திற்கும் பதில் வரவில்லை. இந்தக் கடிதங் கண்டவுடன் மணியார்டர் வந்து சேர்ந்த செய்திக்குப் பதிலெழுதச் சொல்லவேண்டும். மணியார்டர் கெடு தப்பிப்போகுமுன் பணம் வாங்கிவிட வேண்டும். கடிதம் வந்து சேரும் என்ற நம்பிக்கையினால் இதை [*]நட்பயிட்டாக அனுப்பினேன்.
சுக்கில வருடம் இங்ஙனம்,
ஆடி மாதம் 27ஆம் தேதி. 1870. சி. சாமிநாத தேசிகன்."
திருவனந்தபுரம்.
------
[*] notpaid ஆக
விலாஸம்.
"இது நாகபட்டணத்தில் வந்திருக்கும் தமிழ் வித்வான் திரிசிரபுரம் ம- ள- ள- ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சமுகத்திற் கொடுக்கப்படுவது."
திருமங்கலக்குடி சேஷையங்கார்.
உ
ஸ்ரீமது சகலகுண சம்பன்ன அகண்டித லஷ்மீ அலங்கிருத ஆசிருத ஜன ரக்ஷக மகாமேரு சமான தீரர்களாகிய கனம் பொருந்திய மகா ராஜமான்ய ராஜஸ்ரீ பிள்ளையவர்கள் திவ்விய சமுகத்திற்கு ஆசிருதன் திருமங்கலக்குடி சேஷையங்கார் அநேக ஆசீர்வாதம்.
" இவ்விடம் தஞ்சையில் தங்கள் பெருங்கருணையால் க்ஷேமமாயிருக்கின்றேன். தங்கள் க்ஷேம சுபாதிசயங்கட்கெழுதியனுப்பும்படி உத்தரவு செய்யப் பிரார்த்திக்கின்றேன். தாங்களன்புடன் வரைந்தனுப்பிய நாளது மாதம் 2ஆம் தேதி உள்ள கடிதம் கிடைத்தது. கோயிலுக்கும் இதற்குமாயலைந்து கொண்டிருந்ததால் பங்கியனுப்பத் தவக்கப்பட்டது. அதை மன்னிக்க வேண்டும். [§]இவ்விடம் வேந்திருக்கைக் கலைமகள் விளக்க இல்லிடத்திலிருந்து எழுதுவித்த ஸ்ரீ அம்பர் க்ஷேத்திர புராணக் கிரந்த புத்தகம் 1- க்கு ஏடு 40; மேற்படி புத்தகத்தை இத்துடன் பங்கி மார்க்கமாய்த் தங்களிடத்திற்கு அனுப்பியிருக்கிறேன். வந்து சேர்ந்ததற்குப் பதில் கடிதமனுப்பப் பிரார்த்திக்கிறேன். சென்னையிலிருந்து ஹைகோர்ட்டு வக்கீல் ஸ்ரீநிவாசாசாரியரும், மற்றொரு துரையும் தரும் நூல் சில வேண்டி அங்ஙனம் பெருநீதியிடத்து உத்தரவு இவ்விடம் கலெக்டருக்குப் பெற்று வந்து ஒரு திங்கள் பிரயாசைப்பட்டுப் பார்த்தும் அகப்படாமையாற் போய்விட்டார்கள். பின்னும் மாயூரம் கலெ. அவர்கள் சில ஸ்தலக் கிரந்தங்களைத் தாம் பார்க்க வேண்டி 200 கிரந்தங்களைக் குறித்து அனுப்ப 40 கிரந்தம் அகப்பட்டு எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இப்படியாய் இன்ன பின்ன பக்கத்திலிருக்கிறதென்றறிய ஒரு நூறு அசாமிகளாய் ஒரு ஆண்டு பிரயாசைப்படினும் அமையாத மிகுதியுள்ள தாயும், பகிரங்கத்திற் கிடைக்கக்கூடாமல் பிரைவேட்டிலாக வேண்டியதாயுமிருந்தும், அத்தல மகாதேவனருளினாலும், கனம் பொருந்திய தங்கள் கீர்த்திப் பிரதாபத்தினாலும் இப்படிப்பட்ட அருமையான தல அபிமானிகள் முப்பணிகளிற் சிறந்த பணி யிஃதேயென்று கருதித் துணிந்த பத்திப் பொருளினாலுமே இந்தக் கிரந்தம் அகப்பட்டதேயன்றி, ஏகதேசம் வழங்கிய பொருட் செலவினாலென்று நினைக்கத் தகாது. வெகு பிரயாசைப்பட்டு 4 - மாதகாலமாய்ப் பரிசீலனை செய்து பார்த்ததில் இனியகப் படாதென்றே நினைத்துவிட்டோம். ஏதோ அகஸ்மாத்தாய் ஒரு பெரும் புத்தகத்தின் மத்தியிலிருப்பதாய்ப் பார்த்து வந்ததில் அகப்பட்டது. ரூ. 20 செலவாயிருக்கிறது.
பிரயாசைப்பட்ட பிராமணருக்கு உயர்ந்த [$] பட்டம் தருவதாயுஞ் சொல்லியிருக்கிறேன். இந்தச் சங்கதியை அத்தல அபிமானிகளுக்குச் சொல்லி அவ்வேதியருக்கு நடப்பித்தால் மிக்க புண்ணியமாகும்.
சுக்கில வருடம் இங்ஙனம்,
மார்கழி மாதம் 7ஆம் தேதி தங்களாசிருதன்,
தஞ்சை . தி. சேஷையங்கார்.
"இந்தப் பங்கியை ரயில் ஸ்டேஷனில் வந்து வாங்கிக்கொள்ளச் செய்ய வேண்டும்."
------
[§] தஞ்சை அரண்மனைச் சரஸ்வதி மகால் புத்தகசாலை.
[$] பட்டம் – ஆடை
விலாஸம்.
“இது நாகபட்டணம் கட்டியப்பர் கோவில் சந்நிதானம் திருவா வடுதுறை மடத்தில் விஜயமாயிருக்கிற திரிசிரபுரம் மகாவித்துவான் ம-ள-ள- ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள் திவ்விய சமுகத்திற்கு வருவது."
-------------------------
பாராட்டு
மாணாக்கர் முதலியவர்கள் இயற்றிய சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் முதலியவற்றில் இவரைப் பாராட்டிய பகுதிகள் வருமாறு :
அழகிரிசாமி நாயகர்.
ஆறுமுகத் தம்பிரான்.
காஞ்சீபுரம் இரகுநாதையர்.
திரு எவ்வுளூர் இராமசாமி செட்டியார்.
இராமசாமி பிள்ளை.
காஞ்சீபுரம் இராமானுஜ பிள்ளை.
ஆறைமாநகர் ஐயாசாமி முதலியார்.
நாகபட்டினம் இராம - அ. கிருஷ்ணசாமி உபாத்தியாயர்.
குப்பு முத்தா பிள்ளை.
காஞ்சீபுரம், சபாபதி முதலியார்.
புரசை, சபாபதி முதலியார்.
புதுவை, சவராயலு நாயகர்.
சவேரிநாத பிள்ளை.
திருவீழிமிழலை, சாமிநாத கவிராயர்.
சி. சாமிநாத தேசிகர்.
உ. வே. சாமிநாதையர்.
சென்னை, சின்னசாமி பிள்ளை.
சுந்தரம் பிள்ளை.
தி. சுப்பராய செட்டியார்.
சி. தியாகராச செட்டியார்.
ச. தெய்வநாயகம் பிள்ளை.
வல்லூர்த் தேவராச பிள்ளை
பாலகுரு உபாத்தியாயர்.
தி. க. பெரியண்ணம் பிள்ளை.
மெய்யூர் பொன்னம்பல நாயகர்.
புரசை பொன்னம்பல முதலியார்.
மழவை மகாலிங்கையர்.
காரைக்கால் முத்துசாமிக் கவிராயர்
மாயூரம் ந. முத்துசாமி பிள்ளை.
முருகப்பிள்ளை.
நாகபட்டினம் வீரப்பசெட்டியார்.
திரிசிரபுரம் வீரராகவ செட்டியார்.
தாராநல்லூர் வீராசாமி நாயகர்.
குளத்தூர் ச. வேதநாயகம் பிள்ளை.
This file was last updated on 02 Dec 2018.
Feel free to send the corrections to the .
-
திருவாவடுதுறை யாதீனத்து மகாவித்துவான்
திரிசிரபுரம் ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்.
இரண்டாம் பாகம்
இது ஷை பிள்ளையவர்கள் மாணாக்கர் மகாமகோபாத்தியாய
தாக்ஷீணாத்ய கலாநிதி டாக்டர் - உ. வே. சாமிநாதையரால் எழுதப்பெற்று,
சென்னபட்டணம் கேஸரி அச்சுக்கூடத்திற் பதிப்பிக்கப்பெற்றது.
ஸ்ரீமுக ஆண்டு மாசி மாதம்
1934
Copyright Registered. (விலை. ரூபா 2-0-0.)
8. திருப்பெருந்துறைப் புராண அரங்கேற்றம்.
விருத்தமும் கீர்த்தனமும்.
பின்பு இப்புலவர் கோமான் தஞ்சையிலிருந்து பட்டீச்சுரத்திற்கு வந்து அங்கே சில தினம் இருந்தனர். அப்பால் திருவாவடுதுறைக்குப் புறப்படுகையில் முன்பு கூறிய பிரான்மலை ஓதுவார், பழனி மாம்பழக் கவிச்சிங்க நாவலர் புதுக்கோட்டை மகாராஜாவாகிய இராமசந்திர தொண்டைமான் மீது இயற்றிய இங்கிலீஷ் நோட்டின் மெட்டுள்ள ஒரு கீர்த்தனத்தைப் பாடிக் காட்டினர். அந்த மெட்டில் ஒரு கீர்த்தனம் சுப்பிரமணிய தேசிகர் மீது செய்ய வேண்டுமென்னும் எண்ணம் இவருக்கு அப்போது உண்டாயிற்று. உடனே ஒரு விருத்தமும், அந்த மெட்டில் ஒரு கீர்த்தனமும் இவர் இயற்றினர். அவை வருமாறு :-
-
(விருத்தம்) {8.1}
"தேடுகயி லாயபரம் பரைத்துறைசை மேயநமச்
சிவாயன் றன்னைக்
கூடுதன்முன் னுள்ளபதி னால்வருமுற் றோன்றலெனக் கொண்டா ரவ்வா
றூடுதவிர் தரக்கொண்டும் பிற்றோன்ற லெனவுங்கொண்
டுவக்குங் கோமான்
நீடுபெரும் புகழமைசுப் பிரமணிய குருமணியை
நினைந்து வாழ்வாம்."
-
{8.2} (கீர்த்தனம்)
ராகம் - கமாசு; தாளம் - ஆதி தாளம்.
(பல்லவி)
துங்கஞ்சார் தருதுறை சையில்வளர்
சுப்பிர மணிய தயாநிதியே
துன்றும்பே ரருணனி பொழிதரு
சுத்தமெய்ஞ் ஞான கலாநிதியே
(அனுபல்லவி)
தூய நயசுகு ணக்கடலே
நேய வுயிர்மரு வற்குடலே
தொண்டென்றுங் கொண்டின்பம் கண்டென்றும்
பண்பொன் றினர்நிறை (துங்கம்)
(சரணங்கள்)
1. மெய்கண்டான் சந்ததி யென்றும்
விளங்கவி ராவிய சூரியனே
மெய்யொன்றா தாழ்பர சமயரை
வென்றுநி லாவிய வீரியனே
வைகுங்கா மாதிய கரிசில்
வளத்தவ ரேபெறு காரணனே
வையந்தா னாதிய பலவு
மறுத்தவை மேலொளிர் பூரணனே
மாண்பார் புலவர்சி காமணியே
காண்பார் பரவுசிந் தாமணியே
மஞ்சொன்றுங் கஞ்சந்தங் கஞ்சம்புஞ்
சங்கொண் டொளிர் தரு (துங்கம்)
2. அடியார்தங் குறைமுழு தொழிதர
ஆரருள் புரிகரு ணாலையனே
அலரேவா னிடைமரு வியபகை
ஆதியி னாளுறு மாலையனே
கடியாரும் உறுகழு நீர்மலர்
காமுறன் மேயபு யாசலனே
கருதாதா ரொருவரு மிலையென
ஓர்பவர் பாசம்வெல் பூசலனே
கமழ்சித் தாந்தசை வப்பொருளே
தமிழிற் காந்தனி மெய்த்தெருளே
கம்பங்கொன் றன்பென்றுந் தங்குஞ்சம்
பந்தந் தந்தருள் (துங்கம்)
3. வந்தெங்கும் பசுமுகில் தவழ்தரு
மாகயி லாயப ரம்பரையாய்
மன்றின்கண் தனிநட நவில்பவ
மாறலி லாகம நூலுரையாய்
நந்தொன்றுங் குழைமறை தரவகன்
ஞாலம்வி ராயப ரம்பரனே
நங்கஞ்சுந் திருவடி வுளைமல
நாளுமி லாமைநி ரம்பரனே
பரவமு தேயெனும் வானவனே
குரவர்சி காமணி யானவனே
பந்தந்தங் கும்பண்பின் றென்றென்றுஞ்
சென்றந் தணர்புகழ் (துங்கம்)
திருவாவடுதுறைக்கு வந்தது.
அப்பாற் பரிவாரங்களுடன் இவர் திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தார். வந்தவுடன் அவ்விருத்தத்தையும் கீர்த்தனத்தையும் சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பிக்கும்படி செய்தார். கேட்ட அவருக்கும் திருக்கூட்டத்தாருக்கும் அவை இன்பத்தை விளைவித்தன. மடத்திலுள்ள முதியவர்கள், தேசிகர் இரவில் ஆலயம் சென்று ஸ்வாமி தரிசனம் செய்துவிட்டு மடத்துக்கு வந்து ஒடுக்கத்திற் பீடத்தில் வீற்றிருந்து அடியார்களுக்கு விபூதிப்பிரசாதம் அளிக்கும்பொழுது மேற்கூறிய கீர்த்தனத்தைப் பாடச்செய்ய விரும்பினார்கள். அவ்வண்ணமே ஓதுவார்கள் நாள்தோறும் அச்சமயத்திற் பாடி வருவாராயினர்.
சுப்பராய செட்டியார் கடிதம்.
ஒருநாள் நாங்கள் பாடங்கேட்டுக் கொண்டிருந்த பொழுது சென்னையிலிருந்த சுப்பராய செட்டியாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், "நான் திருச்சிராப்பள்ளியில் தங்களிடம் படித்துக் கொண்டிருக்கையில் வெஸ்லியன் மிஷன்ஸ்கூலில் எனக்கு வேலை கிடைத்தது. முதல் மாதச் சம்பளமாகிய ரூபாய் பதினைந்தைத் தங்களிடம் கொடுத்து வந்தனம் செய்து பெற்றுக்கொண்ட பொழுது தாங்கள் இந்தப் பதினைந்தைத் திரும்பவைத்தால் என்ன தொகையோ அதனைப்பெற்று வாழ்ந்திருக்கவேண்டுமென்று அருளிச்செய்தீர்கள். அந்தப்படியே தங்களுடைய பெருங்கருணையினால் எனக்கு இன்று ரூ. 50 சம்பளம் ஏற்பட்டது" என்று தெரிவித்திருந்தார். இவருடைய நல்வாக்குப் பலிதமாகுமென்பதைச் சிலராற் கேட்டிருந்த நாங்கள் அக்கடிதத்தால் அச்செய்தி உண்மையென்று அறிந்து மகிழ்ந்தோம்.
திருமாளிகைத் தேவர் பூஜை.
ஒருதினம் மடத்திற் பகற் போசனம் ஆன பின்பு இவர் மடத்தின் முகப்பிலிருக்கையில் மடத்திற்குள்ளே மணியோசை கேட்டது. அந்த ஓசைக்குக் காரணம் என்ன வென்று அங்கே உள்ளவர்களை இவர் வினாவியபொழுது திருமாளிகைத் தேவருக்கு நடக்கும் பூஜாகாலத்தில் அடிக்கப்படும் மணியோசை யென்று சொன்னார்கள். அப்பொழுது இவர் சுப்பிரமணிய தேசிகருக்கு,
-
{8.3}
”பேசு புகழ்ச்சுப் பிரமணிய தேசிகன்பொன்
வீசு கழற்கடியேன் விண்ணப்பம் - நேசம்
வருதிரு மாளிகைத்தே வன்பூசை யாயே
கருதுபந்தி யாதல்வழக் கம் "
என்னும் வெண்பாவை எழுதுவித்தனுப்பினார்.
மடத்திற் கோயில்கொண்டெழுந்தருளியிருக்கும் திருமாளிகைத் தேவருக்குப் பூஜை செய்பவர் ஆதிசைவராதலால் ஸ்ரீ கோமுத்தீசுவரர்க்கு உச்சிக்காலமான பின்பு அர்ச்சகர் அங்கே வந்து பூஜைசெய்வது வழக்கம். அன்றைத்தினம் என்ன காரணத்தாலோ கோயிலில் தாமதித்து உச்சிக்காலம் நடந்தமையின் அவர் அகாலத்தில் வந்து பூசிப்பாராயினர்.
இப்பாட்டைக் கேட்டவுடன் மறுநாள் தொடங்கிக் காலையிலேயே வந்து பூஜை செய்யும்படி தேசிகர் ஸ்ரீ கோமுத்தீசுவரர் கோயில் அர்ச்சகர்களுக்குச் சொல்லி அனுப்பிவிட்டார். அவர்கள் அங்ஙனமே செய்வாராயினர். அப்படியே இன்றும் நடைபெற்று வருகின்றது.
இரத்தினம்பிள்ளையின் உதவி.
முன்பு அம்பலவாணதேசிகர்பிள்ளைத்தமிழை அரங்கேற்றிய பொழுது இவருக்கு மடத்திலிருந்து போடப்பட்ட ஏறுமுக உருத்திராட்ச கண்டியானது பணத்திற்கு முட்டுப்பாடு வரும்போதெல்லாம் அடகு வைக்கப்பட்டிருக்கும்; பணங்கிடைத்தபின் கடன்காரர்களிடத்தில் வட்டியும் முதலுங் கொடுத்து மீட்கப்படும். அந்தப்படியே அது மாயூரத்தில் ஒருவரிடம் அடகு வைக்கப்பட்டிருந்தது. புராணம் அரங்கேற்றுவதற்காகத் திருப்பெருந்துறைக்குப் போகும்பொழுது அதனை மீட்டுத் தரித்துக் கொள்ளவேண்டுமென்று நாங்கள் தெரிவித்துக்கொண்டோம். அப்போது கையிற் பணம் இல்லாமையால் கடன் வாங்கி மீட்பதற்கு இவர் தீர்மானித்தார். சோழன்மாளிகை இரத்தினம் பிள்ளையிடம் ரூ. 300 வாங்கிவர வேண்டுமென்றும் திருப்பெருந்துறைப்புராணம் அரங்கேற்றி வந்தவுடன் அத்தொகையை வட்டியுடன் தாம் சேர்ப்பித்து விடுவதாகச் சொல்லவேண்டுமென்றும் கூறி என்னை அவரிடம் அனுப்பினார். அப்படியே நான் போய்த் தெரிவித்தவுடன் அத்தொகையை அவர் கொடுத்தார். நான் அதனைப் பெற்றுக்கொண்டு புறப்படுங் காலத்தில் அவர், "இத்தொகையை ஐயா அவர்களிடம் மீட்டும் பெறுவதாக எனக்கு உத்தேசமே இல்லை. ஏதாவது என்னால் இயன்றதை அவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற எண்ணம் எனக்கு நெடுநாளாக இருந்தது. அந்த எண்ணத்தைப் பூர்த்தி பண்ணும்படி நேர்ந்த இந்தச் சமயத்துக்கு என்னுடைய வந்தனத்தைச் செலுத்துகிறேன். என்னுடைய வேண்டுகோளை அவர்களிடம் ஸமயம் பார்த்துத் தெரிவிக்க வேண்டும்" என்று சொல்லி என்னை விடுத்தனர். நான் மீண்டு வந்து அவருடைய வேண்டுகோளைத் தெரிவித்ததுடன் தொகையையும் இவரிடம் சேர்ப்பித்தேன். அத்தொகையைக் கண்டு இரத்தினம் பிள்ளையினுடைய அன்பின் மிகுதியை நினைந்து நன்றி பாராட்டி அவருக்கு ஒருகடிதம் எழுதுவித்தார்; வழக்கம்போலவே அக்கடிதத்தின் தலைப்பில் எழுதிய செய்யுள் வருமாறு:
-
(விருத்தம்) {8.4}
"சீர்பூத்த விசும்பினிடை யொருபோகிக் குரியபணி செய்து மேவும்
நீர்பூத்த விரத்தினமோ பழசையிடைப் பலவாய நியம மேய
வார்பூத்த வொருதனியோ கிக்குரிய பணிகள்பல வயங்கச் செய்யும்
ஏர்பூத்த விரத்தினமோ எதுசிறந்த தறிந்துரைமின் இயல்வல் லோரே”
இரத்தினம் பிள்ளை அளித்த அத்தொகையைக் கடன் வாங்கினவரிடம் சேர்ப்பித்துக் கண்டியை மீட்டு இவர் தரித்துக் கொண்டனர்.
திருப்பெருந்துறைக்குப் புறப்பட்டது.
ஒரு நல்ல தினம் பார்த்துத் தேசிகரிடம் விடைபெற்றுக் கொண்டு திருவாதிரைத் தரிசனத்துக்கு இவர் திருப்பெருந்துறை போய்ச் சேரவேண்டுமென்ற எண்ணத்துடன் ஸ்ரீமுக ஆண்டு மார்கழி மாதத்தின் முதலிற் (1873 டிஸம்பரில்) புறப்பட்டனர். கூடவே சென்றோர் பழனிக்குமாரத் தம்பிரான், அரித்துவாரமங்கலம் சோமசுந்தர தேசிகர், சுப்பையா பண்டாரம், கும்பகோணம் பெரியண்ண பிள்ளை, [1] சவேரிநாதபிள்ளை, தில்லை விடங்கன் வேலுஸாமி பிள்ளை முதலியோர். நானும் சென்றேன்.
செல்லும்பொழுது திருவிடைமருதூர்க் கட்டளை மடத்தில் தங்கி அங்கேயிருந்த நெல்லையப்பத் தம்பிரானென்பவரால் உபசரிக்கப்பெற்றார். அப்பாற் புறப்பட்டு மேற்கே சாலைவழியிற் செல்லும்பொழுது, "ஏதாவது படித்துக்கொண்டுவரலாமே" என்று சொன்னார். கையில் வெங்கைக்கோவை ஏட்டுப் பிரதியிருந்தமையால் அதனைப் படித்துப் பொருள்கேட்டுக்கொண்டே சென்றோம். இவர் அதிலுள்ள நயங்களைச் சுவைபட எடுத்துக்காட்டியதுடன் நூலாசிரியருடைய பெருமைகளை இடையிடையே பாராட்டிக்கொண்டும் வந்தார்.
ஒரு பழைய நண்பர்.
அங்ஙனம் செல்லுகையில், கும்பகோணத்திற்குக் கிழக்கே அஞ்சுதலை வாய்க்காலின் தலைப்புள்ள இடத்தை யடைந்தவுடன் அவ்விடத்தில் ஒரு முதியவர் எதிரே வந்தார். அவருக்குப் பிராயம் சற்றேறக்குறைய அறுபத்தைந்து இருக்கலாம். அவர் ஒரு பெரிய மூட்டையைத் தலையில் வைத்துக்கொண்டும் எண்ணெய்க் கலயமொன்றைக் கையில் எடுத்துக்கொண்டும் வந்தார்.
அவர் இவரைக்கண்டு விரைவாக அருகில் வந்து, "என்னப்பா மீனாட்சிசுந்தரம்! செளக்கியமாக இருக்கிறாயா?" என்றார்.
"நீ செளக்கியந்தானா? எங்கே போகிறாய்?" என்று இவர் கேட்கவே அவர், "நீ மிகுந்த சிறப்போடு விளங்குகிறாயென்பதைப் பலபேர் சொல்லக் கேட்டுச் சந்தோஷமடைந்து கொண்டே இருக்கிறேன். நீ நல்ல புண்ணியசாலி. அநேகம் பேர்களுக்குப் பாடஞ் சொல்லுகிறாயென்றும் கேள்விப்பட்டேன். இன்னும் நல்ல செளக்கியத்திலி ருக்கும்படி உன்னைச் செய்விக்க வேண்டுமென்று தாயுமானவரைப் பிரார்த்தித்துக் கொண்டேயிருக்கிறேன். நான் உன்னோடு படித்தவன்தான்; என் அதிர்ஷ்டம் இப்படி இருக்கிறது. என் மகளுக்குப் பிரஸவகாலமாம்; அதற்கு வேண்டிய மருந்துகளை நானே வாங்கி வரவேண்டுமென்று மருமகப்பிள்ளை எழுதினார்; அதற்காக எல்லாம் வாங்கிக்கொண்டு போகிறேன். என்ன செய்வேன்! திருச்சிராப்பள்ளி எங்கேயிருக்கிறது? மாப்பிள்ளை ஊர் எங்கேயிருக்கிறது பார்! ஊரைவிட்டுப் புறப்பட்டு மூன்று நாள் ஆய்விட்டன. வழியில் தங்கித் தங்கி வருகிறேன்; என் கஷ்டத்தை நான்தானே அனுபவிக்கவேணும். மறுபடி ஒருசமயம் வந்து உன்னைப் பார்க்கிறேன். நீ எங்கேயோ ஒரு முக்கியமான காரியமாகப் பலபேரோடு போகிறாயென்று தோன்றுகிறது; நல்லது, போய்வா" என்று சொல்லி இவரிடம் விடைபெற்றுக்கொண்டு போய்விட்டார்.
மீனாட்சிசுந்தரமென்று அவர் அழைத்ததைக் கேட்ட நாங்கள் இவரோடு இந்த மாதிரி ஒருமையாகப் பேசி அளவளாவினவர்களை அதுவரையில் பார்த்திராமையால் வியப்புற்று அவரை இன்னாரென்று தெரிந்துகொள்ளுதற்கு நினைந்து இவருடைய முகத்தைப் பார்த்தோம்; அந்தக் குறிப்பை இவர் அறிந்து, "இவர் என் தகப்பனாரிடத்தில் என்னோடு பள்ளிக்கூடத்திற் படித்துக் கொண்டிருந்தவர். தொண்டை மண்டல வேளாளர். நான் திரிசிரபுரம் வந்த பின்பு அடிக்கடி நூதனமாகப் பெற்றுள்ள ஏட்டுச் சுவடிகளை வாங்கி வாங்கிச் சென்று அதி சீக்கிரத்தில் முற்றும் படித்துவிட்டு ஜாக்கிரதையாகத் திரும்பக் கொண்டுவந்து கொடுத்துவிடுவார். அந்நகரத்தில் இருந்தவரையில் நான் படித்த புத்தகங்களை யெல்லாம் தவறாமல் ஒவ்வொன்றாக வாங்கிச்சென்று படித்தவர் இவர். ஒரு நூலுக்காவது இவருக்குப் பொருள் தெரியாது. பொருள் தெரிந்துகொண்டு படிக்கவேண்டு மென்ற விருப்பமும் இவருக்கு இல்லை. சில சமயங்களில் நான் சந்திப்பதுண்டு. இப்படியே பேசி முடிப்பார். இவரது வறுமை நிலையை உத்தேசித்து ஏதேனும் நான் கொடுக்க முயன்றால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டு விரைந்து சென்று விடுவார். அதைக் குறித்துப் பேசத் தொடங்கினாற் கோபமும் அவருக்கு வந்துவிடும். ஒருபொழுதும் நானிருக்கும் இடத்திற்கு அவர் வந்ததுமில்லை; ஏதாவதொன்றை என்னிடம் பெற்றுக்கொண்டதுமில்லை. பிறரிடத்தும் அப்படியே. அதனால்தான் இப்பொழுது நான் ஒன்றும் கொடுக்கத் துணியவில்லை. கபடமில்லாத மனத்தினர். நல்ல குணமுடையவரே. இளமையிற் பேசியது போலவே அவர் ஒருமையாகப் பேசுவது எப்பொழுதும் வழக்கம்" என்று அன்புடன் சொன்னார்.
வழியில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள்.
அப்பாற் கும்போணம், பாபவிநாசம், தஞ்சாவூர், முத்தாம்பாள்புரம் (ஒரத்தநாடு), பட்டுக்கோட்டை, ஒட்டங்காடு, காலகம் என்னும் ஊர்கள் வழியே சென்று திருப்பெருந்துறையை இவர் அடைந்தார்.
சில சமயங்களில் வண்டியினின்றும் இறங்கி நாங்கள் சாலையிலே நடந்து செல்லுவோம்; அப்போது பாடங் கேட்டுக்கொண்டும் போவோம். முத்தாம்பாள்புரத்தில் முன்பு தஞ்சை அரசரால் ஏற்படுத்தப்பட்டிருந்த பெரியதொரு தர்ம ஸ்தாபனத்தில் தமிழ்ப் பாடம் சொல்லுதற்கு உபாத்தியாயராக நியமிக்கப்பெற்றிருந்தவரும் திருக்கண்ணபுர ஸ்தலபுராணம் முதலியவற்றைச் செய்தவருமாகிய வித்துவான் நாராயணசாமி வாத்தியார் என்பவருடைய குமாரர் வந்து இவருக்கும் மற்றவர்களுக்கும் வேண்டிய சௌகரியங்களைச் செய்வித்தனர்.
இடையிலே உள்ள இடங்களுக்குச் சென்றபோது இவருடைய வரவையறிந்து அங்கங்கேயுள்ள தமிழபிமானிகள் வந்து வந்து, "இங்கே சிலதினமிருந்து எங்களுக்குச் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டும்" என்று குறையிரந்தார்கள். "திருவாதிரைத் தரிசனத்திற்குத் திருப்பெருந்துறைக்குச் செல்லுகிறேன். அங்கே சிலதினம் இருப்பேன். இருந்துவிட்டுத் திரும்பிவரும்போது நேர்ந்தால் இங்கே தங்கிச் செல்வேன்; இப்போது அவகாசமில்லை" என்று அவரவர்களுக்கு ஸமாதானம் கூறினர்.
[2] வேம்பத்தூர்ப் பிச்சுவையர்.
அப்பால் திருப்பெருந்துறையை அடைந்து அதன் தெற்கு வீதியிலுள்ள திருவாவடுதுறை மடத்தில் இவர் பரிவாரங்களுடன் தங்கினார். இவர் அங்கே வந்து விட்டதை ஸ்ரீ ஆத்மநாதஸ்வாமி கோயிற் கட்டளை ஸ்தானத்திலிருந்த ஸ்ரீ சுப்பிரமணிய தம்பிரானுக்குத் தெரிவிப்பதற்குப் பழனிக்குமாரத் தம்பிரானும் நானும் கட்டளை மடத்திற்குச் சென்றோம். அப்பொழுது மடத்தின் வெளியே உள்ள ஒரு மண்டபத்தில் நாட்டுக்கோட்டை நகரத்துத் தனவைசிய கனவான்கள் சிலரோடும், வேம்பத்தூர்ப் பிச்சுவையர் முதலிய தமிழ்ப்பண்டிதர்களோடும் இருந்து வன்றொண்டச் செட்டியார் பேசிக்கொண்டிருந்தார். பிச்சுவையர் பாடல் சொல்லி எல்லோரையும் மகிழ்வித்துக் கொண்டிருந்தனர். அதைக் கவனித்த என்னை நோக்கி, "இவர்தாம் வேம்பத்தூர்ப் பிச்சுவையர்" என்று பழனிக்குமாரத் தம்பிரான் தெரிவித்தனர். அவர் பாடல் சொல்லுதலைக் கேட்டுக்கொண்டே சிறிது நேரம் நின்றுவிட்டு உள்ளே சென்று சுப்பிரமணிய தம்பிரானைப் பார்த்துப் பிள்ளையவர்கள் வந்திருப்பதை நாங்கள் தெரிவித்தோம். இவருடைய வரவை எதிர்பார்த்துக் கொண்டேயிருந்த அவர் அதனைக்கேட்டு மகிழ்ச்சியடைந்தார். அச்சமயத்தில்,
-
(வெண்பா) {8.5}
"இன்றொண்டர் சூழ எழிலார்நின் சேவைசெய
வன்றொண்ட ரோடுகன வான்கள் சிலர் - இன்றொண்டு
பித்தற்கே செய்சுப் பிரமணிய நின்னோலக்
கத்திலே வந்திருந்தார் கள்"
வன்றொண்டர் முதலியவர்கள் வந்து வந்தனம் செய்து தம்பிரானிடம் விபூதிப்பிரசாதம் பெற்றுக்கொண்டார்கள். பிச்சுவையர் நிமிஷப்பொழுதிற் கவிசெய்யும் ஆற்றலைக் குறித்து வியந்து கொண்டே நாங்கள் இக்கவிஞர்பிரான் இருந்த விடுதிக்குச் சென்றோம்.
அவ்விடத்திற் கோயிலார் மரியாதையுடன் வந்து பிரசாதங்களை இவரிடம் கொடுத்துத் தரிசனத்திற்கு வரவேண்டுமென்று அழைத்தார்கள். உடனே இவர் ஆலயத்துக்குச் சென்றார். சுப்பிரமணிய தம்பிரான் அங்கே வந்து இவரை வரவேற்று முன்னே நின்று தரிசனம் செய்வித்தார். அன்றைத் தினம் திருவாதவூரடிகள் கொண்டருளியிருந்த மந்திரிக்கோலக் காட்சி எங்கள் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன.
தரிசனமான பின்பு பிள்ளையவர்களுக்குத் தம்பிரானவர்களாற் காளாஞ்சிகள் கொடுக்கப்பெற்றன. அவற்றை இவர் வாங்கி வேறொருவரிடம் கொடுப்பதற்குத் திரும்பினார். உடனே அங்கே நின்ற வேம்பத்தூர்ப் பிச்சுவையர் வந்து அவற்றை அன்புடன் வாங்கிக்கொண்டனர்; அவரைக்கண்டு இவர், "துவடுக நாததுரை எப்பொழுது வந்தது?" என்று கேட்டனர்.
[3] 'துவடுக நாததுரை' என்று அவரைச் சொன்னதன் காரணத்தை நாங்கள் இவரிடம் பின்பு கேட்டுத் தெரிந்து கொண்டோம். அப்பால் இவர் தமக்கு அமைத்திருந்த விடுதிக்குச் சென்றார். இவருடைய வரவைக் கேட்டதும் அங்கே திருவிழாவிற்கு வந்திருந்த பண்டிதர்கள் பலர் வந்து பார்த்து ஸல்லாபஞ் செய்து கொண்டு உடனிருந்தார்கள்.
மறுநாட் காலையிற் பிச்சுவையர் தாம் ஆலவாயடிகள் திறத்துச் செய்திருந்த நிரோட்டக யமகவந்தாதியை இவரிடம் படித்துக்காட்டிப் பொருள் சொல்லிக் கொண்டிருந்தனர். அப்பொழுது, "இது பிழை, அது பிழை" என்று உடனிருந்த [4] பழனிக்குமாரத் தம்பிரான் அடிக்கடி ஆட்சேபஞ் செய்தனர். பிச்சுவையர் உடனுடன் அந்தப் பதங்களை மாற்றி மாற்றி வேறு வேறு பதங்களை யமைத்துச் சிறிதும் வருத்தமின்றி முடித்துக்கொண்டே வந்தார். இதைக் கண்ட இக்கவிஞர்கோமான் தம்பிரானை நோக்கி, "சாமீ, நிரோட்டகத்தில் யமகமாகப் பாடல்கள் செய்திருக்கும் அருமையைச் சிறிதும் பாராட்டாமல் ஒவ்வொரு பாடலிலும் பல ஆட்சேபங்கள் செய்துகொண்டே செல்வது நன்றாக இல்லை. ஆட்சேபிக்க ஆட்சேபிக்க ஆலோசனை செய்யாமல் உடனுடன் வேறு பதங்களை அமைத்து விரைவில் இவர் முடித்து விடுவதைப் பார்த்து இவருடைய திறமையைப்பற்றி வியக்கவேண்டாமா? மேலே சொல்லும்படி தாராளமாக விட்டுவிடுக. ஊக்கத்தைக் குறைக்கக்கூடாது" என்று சொல்லவே அவர் ஆட்சேபியாமல் சும்மா இருந்துவிட்டனர். பின்னர் அந்நூல் முற்றும் படித்துக் காட்டப்பெற்றது.
இப்படியே வந்தவர்களுள் ஒவ்வொருவரும் தினந்தினம் தாங்கள் செய்துவைத்திருந்த நூல்களை இவரிடம் படித்துக் காட்டித் திருத்திக்கொண்டனர். இவரும் சலிப்பில்லாமற் கேட்டு அவர்கள் விருப்பத்தை நிறைவேற்றி ஆதரித்து வந்தார்.
அங்கே வந்திருந்த சிங்கவனம் சுப்புபாரதியார் முதலியவர்களிடம் ஆகாரம் முதலிய விஷயங்களிற் கவனித்துக் கொள்ளும்படி இவர் என்னை ஒப்பித்தனர்.
சின்னச்சாமி வீரப்பனானது.
பின்பு கட்டளை மடத்தின் கீழ்புறத்திலுள்ள 'சவுகண்டி'யில் இவருக்கு இருப்பிடம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கே இவர் பரிவாரங்களுடன் இருந்து வருவாராயினர். சின்னச்சாமி படையாச்சியென்ற மடத்து வேலைக்காரனொருவன் திருவாவடுதுறை மடத்திலிருந்து இவருடன் அனுப்பப்பட்டிருந்தான். அந்த வேலைக்காரனைத் தவசிப்பிள்ளைகள், "அடே சின்னச்சாமி" என்று அடிக்கடி கூப்பாடு போட்டு அழைத்தலையும், "அங்கே போடா, இங்கே வாடா" என்று சொல்லுதலையும் கேட்ட இவர் அவர்களை அழைத்து, "இங்கே கட்டளைச்சாமியைப் பெரியசாமி யென்றும் உதவியாக இருந்துவரும் ஸ்ரீகாசிநாதசாமியைச் சின்னச்சாமியென்றும் ஸ்தலத்தார் மரியாதையாக வழங்கி வருவது உங்களுக்குத் தெரியுமே. ஆதலால் அவனை இன்று முதல் சின்னச்சாமி யென்றழையாமல் வீரப்பனென்றழையுங்கள்" என்று சொன்னார்; அன்றியும் அவனை அழைத்து, "உன்னை இன்று முதல் சின்னச்சாமியென்று அழைக்கமாட்டார்கள்; வீரப்பனென்றே அழைப்பார்கள்; அழைக்கும்போது நீ ஏனென்று கேட்டு, சொன்ன வேலைகளைச் செய்யவேண்டும்" என்று அறிவித்தார். அதுமுதல் அவன் அவ்வாறே அழைக்கப்பட்டுப் பார்க்கவேண்டிய வேலைகளைப் பார்த்து வந்தான். இதனால் இவருடைய கவனம் ஒரு சிறு விஷயத்திலும் செலுத்தப்பட்டமை விளங்குகின்றது.
புராண அரங்கேற்ற ஆரம்பம்.
நல்லதினத்திற் புராணம் அரங்கேற்ற ஆரம்பிக்கப் பெற்றது. அப்போது தம்பிரானவர்கள் பல இடங்களுக்குச் சொல்லியனுப்பினமையால் சமீபமான இடங்களிலிருந்த சில ஜமீன்களின் பிரதிநிதிகளும், சேர்வைகாரர்கள் முதலியவர்களும், பெரிய மிராசுதார்களும், புதுக்கோட்டை அறந்தாங்கி முதலிய இடங்களில் இருந்த உத்தியோகஸ்தர்களும், பண்டிதர்கள் பலரும் வந்து கூடினார்கள்.
குறிப்பிட்டிருந்த நல்ல முகூர்த்தத்தில் திருப்பெருந்துறைப் புராணத்தின் ஏட்டுப்பிரதியை ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமியின் திரு முன்பு பீடத்தில் வைத்துப் பூசித்துப் பிள்ளையவர்களிடம் [5] ஒரு நம்பியார் கொண்டுவந்து கொடுத்தனர். விபூதிப் பிரசாதத்தைக் கொடுத்து மாலை சூட்டிச் சிரத்திற் பட்டுக்கட்டுவித்த பின்பு இவரை உபசாரத்துடனழைத்து வந்து [6] குதிரைஸ்வாமி மண்டபத்தில் இருக்கச்செய்து தொடங்கச்சொன்னார்கள். இவர் கட்டளைப்படி முதலிலிருந்து பாடல்களை நான் படித்தேன். ஒவ்வொன்றற்கும் அழகாகப் பதசாரஞ் சொல்லி இவர் உபந்யசித்தார். கேட்டு எல்லோரும் இன்புற்றார்கள்.
சுப்பிரமணிய தம்பிரானது கோபம்.
நாள்தோறும் பகல் மூன்று மணி தொடங்கி ஐந்துமணி வரையில் அரங்கேற்றுதல் நடைபெறும். நாகபட்டினத்திலிருந்து வந்து அந்தத் தலத்தில் வாசஞ்செய்துகொண்டிருந்தவர்களும் வடமொழி தென்மொழிகளிற் பயிற்சியுள்ளவர்களும் சிவபக்தியுடையவர்களுமாகிய சைவச் செல்வர்களிருவரும் வன்றொண்டர் முதலியோரும் நாள்தோறும் தவறாமல் வந்து வந்து மற்றவர்களுடன் கேட்டுக்கேட்டு மகிழ்ச்சியுறுவார்கள். ஒருநாள் வழக்கப்படி எல்லோரும் வந்தும் வன்றொண்டரும் மேற்கூறிய இருவரும் வருவதற்குத் தாமதித்தமையால் அவர்கள் வரும்வரையில் படிக்கத் தொடங்கவேண்டாமென்று இக்கவிஞர் கோமான் சொன்னார்; அதனால் நான் படிக்கத் தொடங்கவில்லை. சிறிது நேரத்தில் அவர்கள் வந்தார்கள். வந்தவுடன் புராணப் பிரசங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அங்ஙனம் தாமதித்ததில் சுப்பிரமணிய தம்பிரானுக்கு இவர்மீது மிகுந்த கோபமுண்டாகிவிட்டது. வாசித்து முடியும்வரையில் பூமியை நோக்கிக்கொண்டே ஒருமாதிரியாக இருந்து நிறுத்தியவுடன் ஒன்றும் பேசாமல் திடீரென்று எழுந்து சென்றுவிட்டார். போனதுமுதல் இவரிடம் பேசவேயில்லை.
வழக்கப்படியே மறுநாள் அரங்கேற்று மண்டபத்திற்கு இவர் சென்றார். புத்தகத்தை எடுத்துக்கொண்டு நான் இவருடன் சென்றேன். அங்கே பலர் காத்திருந்தார்கள். தம்பிரானவர்கள் வரவில்லை. இன்ன காரணத்தால் வரவில்லையென்று தெரியாத இவர் புராணப் பிரசங்கத்தைத் தொடங்காமல் அழைத்து வருவதற்கு அவரைத் தேடிச் சென்றபொழுது அவர் கோயிலின் பின்புறத்தில் நடந்துகொண்டிருந்த திருப்பணி வேலையைக் கண்காணித்துக்கொண்டே நின்றார். அங்கே ஸமீபத்தில் போய் இவர் அஞ்சலி செய்து பார்த்தபொழுது ஏறிட்டுப் பாராமலும் யாதொன்றும் பேசாமலும் சரேரென்று அவ்விடத்தை விட்டு வேறிடத்திற்குப் போய்விட்டார். தொடர்ந்து செல்ல மனமில்லாமல் இவர் நின்று விட்டார்.
அப்பால் இவருடைய குறிப்பறிந்து நான் மட்டும் அவரிடம் சென்று மனத்திலுள்ள கவலையை முகத்தில் நன்றாகப் புலப்படுத்திக்கொண்டு வாட்டத்தோடு அருகில் நின்றேன். நின்றதை அறிந்த அவர், "என்ன ஐயா! உங்கள் பிள்ளைக்கு மரியாதையே தெரியவில்லை? நான் வந்து காத்திருக்கையில் யாரோ சிலபேர்கள் வரும்வரையிற் பொறுத்திருமென்று சொன்னாரே. அப்படிச் சொல்லலாமா? ஊரார் என்ன நினைப்பார்கள்? என்னை மதிப்பார்களா? அவர் செய்தது என் முகத்திற் கரியைத் தீற்றியதுபோலவே இருந்தது. அவரைப் புராணம் பாடும்படி செய்து அரங்கேற்றுதற்கு வருவித்து உபசரிக்கின்றவன் நானா அவர்களா?" என்று சொல்லி மண்டபத்திற்கு வாராமல் நின்று விட்டார். அதனால் சிலநாள் வரையில் புராணம் அரங்கேற்றப்படாமல் நின்றிருந்தது. அப்பால் சிலர் வேண்டுகோளால் அவர் சாந்தமடைந்து வழக்கம்போலவே வந்து படிப்பிக்கச்செய்து கேட்டு வருவாராயினர். தம்பிரானுக்குக் கோபம் ஒருவகையாகத் தணிந்தாலும் இப்புலவர்பிரானுக்கு அவர் செய்த அவமதிப்பால் உண்டான வருத்தம் தீரவே இல்லை. அது மனத்தினுள்ளே வளர்ச்சியுற்று வந்தது.
மனவருத்தத்தோடு இயற்றிய செய்யுட்கள்.
அது வரையில் புராணத்தில் பாடப்பட்டிருந்த பகுதிகள் அரங்கேற்றப்பட்டு முடிந்து விட்டமையால் மேலே உள்ள பகுதிகள் காலையிற் பாடி மாலையில் அரங்கேற்றப்பட்டு வந்தன. ஒருநாட் காலை தொடங்கி இவர் பாடிவருகையில் அப்புராணத்தின் உபதேசப் படலத்தில் மாணிக்கவாசகர் குருந்தமூல குருமூர்த்தியைத் துதிக்கும் செய்யுட்களைப் பாடும் சந்தர்ப்பம் வந்தமையின் நேரமாகியும் நிறுத்தாமல் மேலே எழுதும்படி செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். அப்பொழுது தவசிப்பிள்ளைகள் வந்து ஸ்நானம் செய்வதற்கு வற்புறுத்தி அழைத்தும் எழாமல் துதிப்பாடல்களை ஒரு தடையுமின்றி இவர் சொன்னார்; நான் எழுதிக்கொண்டே வந்தேன். அப்போது இவருக்குத் தாரை தாரையாகக் கண்ணீர் பெருகிக்கொண்டேயிருந்தது. முன்னமேயிருந்த வருத்தமிகுதியே அப் பாடல்களாக வெளிப் போந்ததென்று உடனிருந்தவர்கள் அறிந்து மனமுருகினார்கள். அப்பாடல்கள் வருமாறு :--
-
(ஆசிரிய விருத்தம்) {8.6}
1. "தொழுபவ ரொருபால் துதிப்பவ ரொருபால்
துதித்துளம் நெக்குநெக் குருகி
அழுபவ ரொருபால் இவரெலாம் நிற்க
அடியனேன் தனைப்பிடித் தாண்டாய்
பழுதில்நின் கருணைத் திறத்தையென் புகல்கோ
பாண்டிநா டியற்றிய தவத்தால்
கொழுமலர்ச் சோலைத் திருப்பெருந் துறையில்
குருந்தடி யிருந்தருள் பரனே!"
{8.7}
2. "உள்ளுதோ றிழிபை யுள்ளுபு பவஞ்சத்
துழிதரூஉ வொதுங்கிய வெனக்கும்
அள்ளுதோ றன்பூ றாக்கையொன் றருளி
ஆண்டுகொண் டனையிது தகுமே
விள்ளுதோ றப்பா லாய்ப்பொலிந் தோங்கும்
விமலனே விமலமார் சிந்தை
கொள்ளுதோ றுவக்குத் திருப்பெருந் துறையிற்
குருந்தடி யிருந்தருள் பரனே!"
{8.8}
3. "வழிவழி யடிமை யுவந்திலேன் மலடு
மலர்க்கரங் கன்றிடக் கறந்து
கழிதுய ரடைந்து கிடக்கின்ற வெனையும்
கண்டுகொண் டாண்டதெத் திறமோ
மொழிதடு மாற நெஞ்சநெக் குருக
முனிவரத் தொடர்பவர் முதலே
கொழிமலர்ப் பொழில்சூழ் திருப்பெருந் துறையில்
குருந்தடி யிருந்தருள் பரனே!"
{8.9}
4. "ஏலவே யொருப்பட் டெற்றைக்கும் பாழுக்
கிறைத்தொரு பயனுமில் லேனைச்
சீலமார் முனிவர் திருக்குழாத் தோடும்
சேர்த்துநீ யாண்டது தகுமே
காலகா லாகங் காளவே தாள
கணம்புடை சூழ்தர நடிப்பாய்
கோலமார் செல்வத் திருப்பெருந் துறையிற்
குருந்தடி யிருந்தருள் பரனே!"
{8.10}
5. "கனிவிள விருக்கக் காய்கவர்ந் துண்ட
கள்வனா மென்னையும் பற்றி
முனிவரு முனிவர் கூட்டத்து ளொருசார்
முனிவரக் கூடுமா றளித்தாய்
புனிதமென் கனியே புந்தியூ றமுதே
பொங்குமா னந்தவான் பெருக்கே
குனிகொடி மாடத் திருப்பெருந் துறையில்
குருந்தடி யிருந்தருள் பரனே!"
{8.11}
6. "சுவைபடும் அவல்நீத் துமியுணாக் கொள்ளும்
தொழுத்தையேன் தனைவலிந் திழுத்து
நவையிலா னந்த வமுதமூட் டினையால்
நகைவிளைத் திடுமடி யேற்கும்
கவையழ லடைந்த மெழுகென வுருகக்
கற்றநற் றவருளத் துணையே
குவைமலர்ப் பொழில்சூழ் திருப்பெருந் துறையிற் "
குருந்தடி யிருந்தருள் பரனே!"
{8.12}
7. "திருநெடு மாலன் றொருகரு மாவாய்த்
திண்புவி பாதல மிடப்புற்
றொருவற முயன்றுங் காணரு மலர்த்தாள்
ஊத்தையேன் தலைக்கெளி தாமோ
அருமணி விளக்கே யானந்தப் பிழம்பே
அளிகனிந் தெழுசுவைக் கனியே
குருமணி மாடத் திருப்பெருந் துறையிற்
குருந்தடி யிருந்தருள் பரனே!"
{8.13}
8. "அண்டரு முனிவர் கணங்களு மற்றை
யவர்களு நறுமுறுப் படைய
வண்டரு மலர்த்தா ளென்கருந் தலைக்கு
மணிமுடி யாயதற் புதமே
பண்டரு மொழியாள் பங்கவோ மேலாம்
பரமவோ பரவியெஞ் ஞான்றும்
கொண்டலின் முழவார் திருப்பெருந் துறையில்
குருந்தடி யிருந்தருள் பரனே!"
{8.14}
9. "என்னைநான் அறியேன் ஐயகோ பகலோ
டிரவெனப் படுவதும் அறியேன்
முன்னைநான் செய்த தவமெவ னென்னை
முழுமதோன் மத்தனாக் கினையால்
அன்னையே அப்பா ஒப்பிலா மணியே
அடியவர்க் கெய்ப்பினில் வைப்பே
கொன்னைமா மதில்சூழ் திருப்பெருந் துறையிற்
குருந்தடி யிருந்தருள் பரனே!"
{8.15}
10. "செம்மையொன் றில்லாச் சிறியனேன் கவலை
தீர்தர யோகநா யகியாம்
அம்மையோ டெழுந்து வந்தினி தாண்டாய்
ஆன்மநா யகவதற் கடியேன்
இம்மையே செயுங்கைம் மாறெவன் மறுமை
யேனுமொன் றில்லையென் செய்கோ
கொம்மைமா மதில்சூழ் திருப்பெருந் துறையிற்
குருந்தடி யிருந்தருள் பரனே!" (உபதேசப்படலம், 70 - 79.)
[யோகநாயகி : இத்தலத்து அம்பிகையின் திருநாமம்; ஆன்ம நாயகர் : ஸ்வாமியின் திருநாமம்.]
இப் புராணத்தில் மாணிக்க வாசகர் சரித்திரமாகிய திருவாதவூரர் திருவவதாரப் படலம் முதலியன வடமொழியிலுள்ள ஸ்ரீ ஆதிகைலாஸ மாஹாத்மியம், மணிவசன மாஹாத்மியம், திருப்பெருந்துறைப் பழைய தமிழ்ப் புராணங்கள், திருவாதவூரடிகள் புராணம், திருவிளையாடற் புராணம் ஆகிய இவற்றை ஆராய்ந்தே செய்யப் பெற்றன. அரங்கேற்றுகையில் ஒரு நாள் திருவாதவூரடிகள் புராணத்தை ஆராய்ந்து வருங்காலையில் பாண்டியனுடைய தண்டற்காரர்கள் மாணிக்க வாசகரைத் துன்புறுத்தியபொழுது அவர் மனமுருகிச் சிவபெருமானை நினைந்து முறையிட்டனவாக அமைக்கப்பெற்ற,
-
(விருத்தம்) {8.16}
"ஊனுடம் புடைய வாழ்க்கை யொழித்துனக் கடிமை யென்று
மாநிலம் புகலு மாறு வந் துனை யடைந்தேன் றன்னை
மீனவன் றன்பான் மீள விடுத்தனை வேலை நீருள்
ஆனபி னந்நீ ராற்று நீரென வாவ துண்டோ"
{8.17}
"அறத்தனிச் செல்வி பாக வன்பிலே னின்பா லென்று
வெறுத்திடி னடியேற் கிங்கு வேறொரு துணையு மில்லை
செறுத்துயர் புரங்க ளெல்லாஞ் செற்றவ னடியான் றன்னை
நிறுத்தினர் வெயிலி லென்றா னின்புகழ்க் கேற்ற மாமோ"
{8.18}
"வானநா டவர்க்கு மேலோய் வந்துனக் கடிமை யிப்போ
தானநா னிடும்பை யுற்றா லாருனக் கடிமை யாவார்
நானெனா மனத்தார் சொல்லு நல்லுரை யன்றி நின்ற
ஈனனா மொருவன் சொல்வ தேறுமோ வுளத்தி லென்றார்"
(திருப்பெருந்துறைச் சருக்கம், 131 - 3)
ஆத்மநாத பாகவதர்.
அந்த ஸ்தலத்தில் ஆத்மநாத பாகவதரென்று ஒருவர் இருந்தார். அவர் சிவகங்கை ஸமஸ்தானத்தைச் சார்ந்த பெருங்கரை யென்னும் ஊரிலிருந்த கவிகுஞ்சர பாரதியாரின் மருகர்; ஒவ்வொரு நாளும் மாலையில் பூஜாகாலத்தில் ஆத்மநாத ஸ்வாமியின் ஆலயத்தில் கீர்த்தனங்கள் முதலியவற்றைப் பாடும் பணியைப் பெற்றவர்களுள் ஒருவர்; சிவபக்தி வாய்ந்தவர்; அவர் சாரீரம் யாதொரு தடையுமின்றி மூன்று ஸ்தாயிகளிலும் செல்லும் வன்மையுடையதாதலின் அவர் வஜ்ரகண்ட பாகவதரென்றும் கூறப்படுவார். அவர் இக் கவிஞர்பிரானிடம் அடிக்கடி வந்து போவதுண்டு. அக்காலங்களில் கவி குஞ்சர பாரதியாரியற்றிய கந்தபுராணக் கீர்த்தனத்திலிருந்து சில கீர்த்தனங்களையும் வேறு கீர்த்தனங்கள் சிலவற்றையும் இவருடைய விருப்பத்தின்படி பாடிக் காட்டுவார். இவர் கேட்டு இன்புற்று அனுப்புவார். உடனிருப்பவர்களும் கேட்டு மகிழ்வதுண்டு. இங்ஙனம் அக்காலத்தில் வந்து பாடி மகிழ்வித்துச் செல்லும் ஸங்கீத வித்துவான்கள் அங்கே சிலர் இருந்தனர்.
சுப்பு பாரதியாருக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது.
ஒருநாள் சிங்கவனம் சுப்பு பாரதியார் தாம் இயற்றிய மதுரைச் சுந்தரேசர் நெஞ்சமாலை முதலிய மூன்று நூல்களை இவரிடம் படித்துக்காட்டித் திருத்தஞ்செய்துகொண்டு அவற்றிற்குச் சிறப்புப்பாயிரங்களையும் பெற்றுச் சென்றார். அவற்றுள் நெஞ்சமாலையின் சிறப்புப்பாயிரம் மட்டும் கிடைத்தது; அது வருமாறு:
-
(கட்டளைக்கலித்துறை) {8.19}
"ஆரதித் தன்மைய தென்றுரைப் பாரிவ் வகிலத்துளோர்
நாரதி யாய திதைப்படித் தென்பர்பன் னாவலரும்
பேரதி கார முதல்யாவுந் தேர்சுப் பிரமணிய
பாரதி கூட லிறைநெஞ்ச மாலை பகர்ந்தனனே."
சதாவதானம் சுப்பிரமணிய ஐயர் சிறப்புப்பாயிரம்.
தஞ்சைச் சதாவதானம் சுப்பிரமணிய ஐயரென்பவர் வந்து சில தினமிருந்து திருப்பெருந்துறைப்புராணப் பிரசங்கத்தைக் கேட்டு இன்புற்று ஒன்பது பாடல்களைச் சிறப்புக் கவிகளாகச் செய்து சபையிற் படித்துக்காட்டிச் சென்றனர். அவற்றுள் இவரைப் பற்றிப் பாராட்டிய பாடல்களுள் ஒன்று வருமாறு:
-
(ஆசிரிய விருத்தம்) {8.20}
"நாற்கவியாம் நாற்படையா லழுக்காற்றுக் கவிகளென
நவில் குறும்பு
தோற்கவலங் கொண்டவர்பின் துதிக்குறுபாத் திறைகொண்டு
தொல்பார் முற்றும்
கோற்கியலும் புலமையெனு மாழியுருட்டிப் புகழ்வெண்
குடைக்கீழ்க் காத்து
மாற்குநிகர் மீனாட்சி சுந்தரனென் றுரைசெயும்பா
மன்னர் கோவே."
எனக்கு ஜ்வரநோய் கண்டது.
இப்படியிருக்கையில் அப்பொழுது எனக்கு ஜ்வரநோயும் வயிற்றில் ஜ்வரக்கட்டியும் உண்டாகி மிகவும் வருத்தின. அதனால் தளர்ச்சியுடன் படுக்கையிலேயே இருந்து விட்டேன். தக்க பரிகாரங்களை வைத்தியர்களைக் கொண்டு இவர் செய்வித்து வந்தும் ஜ்வரநோய் சிறிதும் தணியவில்லை. அதனால் புராணத்தை ஏட்டிலெழுதும் பணியைக் கும்பகோணம் பெரியண்ணம் பிள்ளை யென்பவரும், அரங்கேற்றும் காலத்துப் படிக்கும் பணியைச் சவேரிநாத பிள்ளையும் ஏற்றுக் கொண்டார்கள்.
புராணம் அரங்கேற்றும் காலமல்லாத மற்றக் காலங்களில் இக்கவிநாயகர் என் பக்கத்திலே இருந்து என்னைக் கவனித்துக் கொண்டும் மேலே அரங்கேற்றுவதற்குரிய பாடல்களைப்பாடி எழுதச்செய்தும் வந்தார்.
ஒருநாள் அரங்கேற்றுதல் ஆனவுடன் பிற்பகலில் என்பால் வந்த இவர் என் பக்கத்திலிருந்து மயக்கம் நீங்கி நான் விழித்துக்கொண்டபொழுது என்னை நோக்கி, "புராணப் பிரசங்கத்தைப் பற்றி மஹாஸந்நிதானத்தினிடமிருந்து (சுப்பிரமணிய தேசிகரிடமிருந்து) கட்டளைச் சாமிக்கு இன்று திருமுகம் எழுந்தருளியிருக்கிறது. அதில், 'புராணப் பாடல்கள் தமக்குத் திருப்தியை யுண்டு பண்ணுவதன்றி அச்செய்யுட்களைச் சாமிநாதையர் படித்தல் தமக்கு ஸந்தோஷத்தைக் கொடுக்கக்கூடுமே' என்று கட்டளை யிட்டிருக்கிறது. உமக்கு உடம்பு இப்படியிருக்கிறதே!" என்று வருத்தம் அடைந்து சொன்னார்.
நான் ஊர் சென்றது.
புராணப் பிரசங்கம் சிறப்பாக நடைபெற்று வந்தது. 'தினந்தோறும் இப்புலவர் கோமானுடைய பிரசங்கத்தைக் கேட்க முடியவில்லையே!' என்ற வருத்தம் என் மனத்தில் வளர்ந்து வந்தது. எனக்கு இருந்த ஜ்வரம் தணியவில்லை. வருபவர்களோடு பேசிக்கொண்டிருப்பதிலும் அரங்கேற்றத்திற்கு வேண்டியவற்றைக் கவனிப்பதிலும் இவருக்கு நேரம் போயினமையின் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்ள முடியவில்லையென்ற வருத்தம் இவருக்கும் இருந்துவந்தது. பலவகை வேலைகளுக்கு இடையில் என்னைப்பற்றிய கவலையையும் இவர் மேற்கொண்டதை அறிந்து நான், "உத்தமதானபுரத்திற்குப்போய்ப் பரிகாரஞ் செய்துகொண்டு ஸெளக்கியம் உண்டான பின்பு வருவேன்" என்று கூறி விடைபெற்றுக்கொண்டேன். இவருக்கு என்னைப் பிரிவதில் வருத்தம் உண்டாயிற்று. நானும் வருந்தினேன். வெண்பாப்புலி வேலுஸாமி பிள்ளையை எனக்குத் துணையாகச் சேர்த்து வேண்டிய செளகரியம் செய்வித்து என்னை இவர் அனுப்பினார். நான் உத்தமதானபுரம் சென்றேன்.
சேக்கிழார் பிள்ளைத்தமிழ்.
இக் கவிசிகாமணியின் பக்கத்திலிருந்து நாள்தோறும் புராணப் பிரசங்கங்கேட்டு வந்த வன்றொண்டச் செட்டியார் மாணிக்க வாசகர் சரித்திரத்தை இவர் அருமையாகச் செய்திருப்பதை அறிந்து ஒருநாள் இவரிடம், "திருத்தொண்டர்களுடைய பெருமைகளை நன்றாக யாவரும் அறியும்படி பெரியபுராணத்தின் வாயிலாகப் புலப்படுத்தியருளிய சேக்கிழார் திறத்தில் பிள்ளைத்தமிழொன்று ஐயா அவர்கள் செய்தருள வேண்டும்" என்று மிகவும் வணக்கமாய்க் கேட்டுக்கொண்டனர். அப்போது 'பெரிய புராணத்திற்கு வன்றொண்டர் வாய்மொழியாகிய திருத்தொண்டத்தொகை காரணமாக இருந்தது; அப்புராணத்தை இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழுக்கு வன்றொண்டச் செட்டியாரது வாய்மொழியே காரணமாயிற்று. இது நல்ல அறிகுறி' என்று இவர் எண்ணி எண்ணி மகிழ்ந்தனர். அவர் கேட்டுக்கொண்டவாறே சேக்கிழார் பிள்ளைத்தமிழைச் செய்யத் தொடங்கி மிக ஆராய்ந்து சில தினங்களிற் பாடி முடித்தனர்.
பெரிய புராணத்திலுள்ள பலவகை நயங்களையும் அறிந்து பலவருடம் அனுபவித்து இன்புற்றும் இன்புறுவித்தும் வந்தவராதலின் இக்கவிஞர் பிரானுக்குச் சேக்கிழார்பாற் சிறந்த பக்தியிருந்ததென்பதை யாவரும் அறிவார். இயல்பாகவே நாயன்மார்களுடைய வரலாற்றைப் பலவகையில் எடுத்தாண்டு தம்முடைய நூற்பகுதிகளை அழகுபடுத்தும் இயல்புடைய இவருக்கு அந்நாயன்மார் சரிதையை விரிவுறவெளியிட்ட சேக்கிழார் பால் அத்தகைய அன்பு மிக்கிருத்தல் தக்கதன்றோ?
சேக்கிழாருடைய குலம், குணம், அதிகாரம், கல்வி, பக்தி, ஞானம் முதலியவற்றின் பெருமைகளைப் பலபடியாக அப்பிள்ளைத் தமிழில் இக்கவிஞர் கோமான் செவ்வனே பாராட்டியிருக்கிறார்.
-
"மண்டலை வேலைப் புவியிற் பத்தி செய் மார்க்க மறிந்தவரார்
வண்சுவை யமுத வொழுக்கென வார்த்தை வழங்கத் தெரிகுநரார்
கொண்டலை நேர்பக டூர்தரு கூற்றங் குதித்துய்ந் திடவலர்யார்
கொற்றக் கைலைக் கணநா தர்களொடு கூடுபு மகிழ்பவரார்
விண்டலை யாரும் பெறலரு மின்பம் விராவுந் திறலினரார்
விமலா நீயவ தாரஞ் செய்யா விடின்” (தாலப். 10)
[வார்த்தை - சைவ பரிபாஷை]
-
”என்றும் பத்தி ரசங்கனி கனியே" (செங்கீரைப், 7)
பத்திச் சுவைநனி சொட்டச் சொட்டப் பாடிய கவிவலவ " (தாலப். 8)
"புலஞ்சார் பத்தி விளைநிலமே" (முத்தப். 5)
"ஒழியாப் பத்திக் கடல் வருக." (வாரானைப். 10.)
காப்புப் பருவத்தில் ஏனைய பிள்ளைத்தமிழ்களில் துதிக்கப்பெறும் திருமால் முதலிய தெய்வங்களை இவர் கூறவில்லை. விரியாகிய பெரிய புராணத்திற்கு அதன் தொகையாகிய திருத்தொண்டத் தொகையிலுள்ள பதினொரு திருப்பாசுரங்களுள் ஒவ்வொன்றிற் கூறப்பட்ட நாயன்மார்களை ஒவ்வொரு செய்யுளால் துதித்துள்ளார். இவ்வாறு காப்புப்பருவத்தில் அமைக்கும் [8]புதுமுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழில் இவரால் முதலில் மேற்கொள்ளப்பட்டது. காப்புப் பருவச் செய்யுளின் தொகைக்கு ஏற்ப அம்முறை இந்த இரண்டு நூல்களிலும் பொருத்தமாக அமைந்த வாய்ப்பைத் தியாகராச செட்டியார் அடிக்கடி பாராட்டுவதுண்டு.
‘பெரிய புராணத்திற் பலவகைச் சொல்லணி, பொருளணி, பொருள்கோள்கள் அமைந்தும், பலவகை அழகுகள் நிரம்பியும், முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முதலியவை காப்பிய இலக்கணப்படி பாடப்பட்டுமுள்ளன. தமிழ் நடை செவ்விதாக அமைந்துள்ளது. தேவாரத்திலுள்ள பலவகை மந்தணப்பொருள்கள் அங்கங்கே வெளிப்படுத்தப்பட்டும் தொண்டர்கள் அருமை பெருமைகள், அவரவர் நிலை, சாதி, குணம், மார்க்கம் முதலியவை விளக்கப்பட்டும் இருக்கின்றன' என்ற செய்திகளை அங்கங்கே அப்பிள்ளைத் தமிழில் இவர் புலப்படுத்தியிருக்கின்றார்:
-
”செய்யமல ராதன மிருந்துபல சாதியும்
சேரப் படைத்ததேவும்
செப்பரிய வாயவவ் வச்சாதி குறிகுணம்
செய்கைகுடி கொளுமிலியல்பு
வெய்யமொழி யுணவுமுன் விரித்தெலா மறியவலர்
மெய்யறிஞ ரெனல்விளக்கி
மேம்பட்ட வேளாண் குலக்கதி ரெனுங்குன்றை
விமலனைக் காக்கவென்றே." (காப்புப். 7)
" ஒப்பரிய தொண்டர்த மருமையும் பெருமையும்
உவக்குமவ ரவர்செய்கையும்
உவமையில் லாச்செய்கை நுட்பமுந் திட்பமும்
உம்பர்கோ னருள்தட்பமும்
தப்பரிய செந்தமிழ்த் தொடைநடையு மடையும்
தவாப்பொரு ளணிச்சிறப்பும்
தமிழ்மறை யடங்குபல மந்தணமும் வெள்ளிடைத்
தவிரும்வெற் பெனவிளங்க." (செங்கீரைப். 3.)
" .............. பொருளணி யாயின எவ்விடனும் வீற்று
வீற்றுக் கிடையிறை பட்டன வமைய விளம்பு வனப்பினொடு
மேய முதற்பொரு ளாதிய மூன்றும் வேண்டுமிடத் தெய்த
ஆற்றுப் புனல்நா மப்பொருள் கோண்முத லறைமற் றுள்ளனவும்
அமையத் தொண்டர் புராணம் நவின்றவ." (தாலப். 9.)
-
"காலாறு வயற்கரும்பின் கமழ்சானூர் கஞ்சாறூர்"
"மண்ணீர்மை நலஞ்சிறந்த வளவயல்க ளுளவயல்கள்"
"எய்தும் பெருமை யெண்டிசையும் ஏறூ ரோமப் பேறூரால்"
"மன்னனா ரருளிச்செய்த மறைத்திரு வாக்கூ ராக்கூர்"
-
"ஈற்றுத் தலையொரு மவுலி புனைந்தா லென்னச் சொல்லணியொன்
றெய்திப் பொலிய" (தாலப். 9)
திருக்குறிப்புத் தொண்ட நாயனார் புராணத்தில் ஐந்திணைகளின் வளத்தைக் கூறுதலுடன் அவ்வத்திணையிலுள்ள சிவதலங்களைச் சொல்லியிருக்கும் முறை முதன்முதலாகப் பெரிய புராணத்திலேதான் காணப்படுகிறது. அதனை இவர் அறிந்தவராதலின் தாம் இயற்றிய புராணங்கள் பலவற்றில் அதனை மேற்கொண்டனர். அம்முறையை அறிவித்தது சேக்கிழார் திருவாக்கே என்பதை,
-
"படியிடை யொருபை திரவரு ணனைபுரி
பாவல ரைந்திணையும்
பகுத்தொரு முப்பொரு ளோடும் விரித்துப்
பயனா கத்தெய்வம்
கடிதலில் சினகர முள்ளன வோதக்
கற்பித்தவ” (சப்பாணிப். 8)
[பைதிரம் – நாடு]
-
" சொல்லும் பொருளு நனிசிறப்பச்
சுருங்கச் சொல்லன் முதலாய
[9] தோட்டி யமைய வமங்கலமாம்
சொற்கள் புணரா தறக்களைந்து
வெல்லுந் தகைய முரண்காட்டி
விலக்கு விலக விதிதழுவி " (முத்தப். 3)
என்று பாராட்டுவார்.
'அமங்கலமாம் சொற்கள் புணராது அறக்களைந்து' என்றது, மெய்ப்பொருள் நாயனார் புராணத்தில் முத்திநாதன் மெய்ப்பொருள் நாயனாரை வாளால் வீழ்த்தினானென்பதை வெளிப்படையாகக் கூறாமல்,
"பத்திரம் வாங்கித் தான்முன் நினைந்தவப் பரிசே செய்ய"
என்று பாடியிருத்தலையும், ஏனாதிநாத நாயனார் புராணத்தில் அதிசூரனென்பவன் ஏனாதிநாத நாயனாரை வாளாலெறிந்ததை அங்ஙனமே,
"முன்னின்ற பாதகனுந் தன்கருத்தே முற்றுவித்தான்"
என்று கூறியிருத்தலையும், இவைபோன்ற பிறவற்றையும் நினைந்தேயாகும்.
சேக்கிழாரைப்பற்றிக் கூறும் இடங்களில்,
-
”மூவரும் புகலும் வேதத் தமிழ்க்கணுள்ள
மெய்ம்மையை விரித்துத் தெரித்தருள்செய் குன்றையூர்
வேந்து” (காப்புப். 3.)
"அருண்மூவ ரருண்மறைப் பொருள்தெரிய முன்னொருவர்
அருண்மறைப் பொருள் விளக்கும்
நம்பறா வித்தியா ரணியமுனி வரனும்
நயப்பயாப் புறவிரித்த நாவலர் பிரான்” (காப்புப். 5)
"அவையகம் வியக்குமுப் புலவரருண் முக்கனி
அருந்தமிழ்ச் சுவையனைத்தும்
ஆராய்ந் தெடுத்துப்பல் செய்யுண்முக மாவறிய
அறிவித்த பெருநாவலன்” (சிறுதேர்ப். 9)
எனத் தேவாரத்தின் பொருள்களை அவர் புலப்படுத்தியிருப்பதையும்,
"தமிழ் நாவலரேறே" (செங்கீரைப். 7)
"வலஞ்சார் பெருநா வலரேறே" (முத்தப். 5)
-
"சகலா கமபண் டிததெய்வச் சைவா" (தாலப். 2)
"சைவப் பயிர்தழை யத்தழை யும்புயல்" (தாலப். 6)
"உலவா தமைந்த சிவபோகம்
கொள்ளுஞ் சைவப் பயிர்வளர்க்கும்
கொண்டல் வருக வருகவே" (வாரானைப். 10)
“வயங்குஞ் சைவப் பெருவாழ்வே" (சிற்றிற். 10)
-
"நெஞ்சம், கனியக் கனியக் கண்ணீர் வாரக்
கவிபா டியவிறைவ" (சப்பாணிப். 7)
"கல்லுங் கரையக் கவிபாடுங்
கனிவாய் முத்தந் தருகவே" (முத்தப். 3)
-
"அறுபதின்மர் மேலு மூவர் சரித்திரமாம்
கருப்பஞ்சாறு பொழிமதுரக் கனிவாய்" (முத்தப் . 1)
"பிதிருந் தரமற வின்பா லளவிப் பிழிசுவை மதுவிரவிப்
பிறங்கிய புல்ல கண்டநி றீஇச்சுவை பெறுகண் டுங்கூட்டி
எதிரும் பொருளில் பலாக்கனி மாங்கனி இவைவா ழைக்கனி முன்
இயையு முழுக்கனி முந்திரி கைக்கனி இவ்விர தமுநாட்டி
அதிருங் கடலமிர் தமுமு ளுறுத்தி அவாங்குழல் வீணையிசை
அத்தனை யும்புக வைத்துச் சிவமணம் அகலா தேகமழ
முதிரு மருட்கவி பாடிய புலவன் " (சிறு பறைப், 6)
-
{8.21}
"அத்தி தருங்கவி யென்மரு நன்றா வறைகுதி ரம்மட்டோ
அவாவிய புத்தி தருங்கவி யென்மரு மதுமட் டோவின்னும்
சித்தி தருங்கவி யென்மரு மெல்லாத் தீர்த்தங் களுமுறுமா
செய்யாச் சுத்தி தருங்கவி யென்மருஞ் செப்பிய வம்மட்டோ
பத்தி தருங்கவி யென்மரு மாகிப் பாரிற் புலவரெலாம்
பல்லா ரோதுபு பாராட் டக்கதி பற்றிய பல்லோர்க்கு
முத்தி தருங்கவி பாடிய புலவன் முழக்குக சிறுபறையே
முழுமணி மாடக் குன்றத் தூரன் முழக்குக சிறுபறையே" (சிறுபறைப். 7)
அவருடைய பலவகை ஆற்றல்களைப் பாராட்டும் பின்வரும் செய்யுள் அறிந்து இன்புறற்குரியது :
-
”நாடிய விரிநூல் சொற்றிடு திறனால்
நன்னூ லாசிரியன்
நகுபா சுரமுத லுரைசெய் தலினால்
நவிலுரை யாசிரியன்
நீடிய பரசம யக்குழி வீழ்ந்தவர்
நீப்பப் போதனைசெய்
நிலையாற் போத காசிரி யன்னிவை
நிகழ்தொறு நிகழ்தோறும்
ஆடிய ஞானத் திறனுற லான்ஞா
னாசிரி யனுநீயென்
றான்றோர் பலரும் புகழப் படுபவ." (சப்பாணிப். 9)
[10]சேக்கிழார் பிள்ளைத்தமிழை இவர்பால் வரும் வித்துவான்களும் பிறரும் கேட்டுக் கேட்டு மகிழ்ந்து பாராட்டி வந்தனர். இவரே அதனை மீண்டும் மீண்டும் படிப்பித்துக் கேட்டு இன்புறுவதுமுண்டு. இவர் இயற்றிய பிள்ளைத் தமிழ்களுள் இறுதியிற் செய்தது அதுதான். தேவாரம் பெரிய புராணம் முதலிய நூல்களில் ஈடுபட்டுள்ள வித்துவான்கள் அந்தப் பிள்ளைத் தமிழில் ஈடுபடாமலிரார்.
அப்புசாமிப் புலவருக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது.
திருப்பெருந்துறையைச் சார்ந்த ஏம்பலென்னும் ஊரிலுள்ள அப்புசாமிப் புலவரென்னும் பரம்பரைக் கல்விமான் ஒருவர் தம்முடைய குமாரரான அருணாசலப் புலவரென்பவரை அழைத்துக்கொண்டுவந்து இவரிடம் விட்டு, "சில வருடம் இவனை உடன் வைத்துப் படிப்பித்து அனுப்பவேண்டும்" என்று பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார்; அவ்வாறே அவருக்கு இவர் பாடஞ் சொல்லிவந்தார்; அப்பால் அப்புசாமிப்புலவர் ஏம்பலிலுள்ள முத்தையனென்னும் ஐயனார் மீது தாம் பாடியிருந்த பிள்ளைத் தமிழொன்றைப் படித்துக்காட்டிச் செப்பஞ் செய்து கொண்டதன்றி இவருடைய சிறப்புப் பாயிரமொன்றையும் பெற்றுச் சென்றார். அச்சிறப்புப் பாயிரம் வருமாறு:
-
(விருத்தம்) {8.22}
"குவளையரு கதன்முதலல் லவைகூடப் பிறையெனவுட் கொண்டு நாணித்
தவளைகுதித் திடுதடஞ்சா ரேம்பல்நகர் முத்தையன் தன்றாட் கேயன்
புவளைதரும் படிபிள்ளைத் தமிழ்சொற்றா னியற்சொல்லும் பொருளும் வாய்ப்பத்
திவளையிலக் கணமுந்தே ரப்புச்சா மிப்புலவன் திறன்மிக் கோனே."
சிங்காரவேலுடையார்.
திருப்பெருந்துறைக்கு அருகிலுள்ள தம்முடைய கிராம மொன்றைப் பார்க்கவந்த [11]தண்ணீர்க்குன்றம் சிங்காரவேலுடையாரென்னும் பிரபு ஒருவர் இவர் திருப்பெருந்துறையில் இருப்பதை அறிந்து சில அன்பர்களுடன் வந்தார். ஒரு தினம் இருந்து புராணப்பிரசங்கத்தைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டியதோடு, "இந்தப் புராணத்தை முடித்துவிட்டுத் திருவாவடுதுறைக்குச் செல்லும்பொழுது தண்ணீர்க்குன்றத்திற்கு வந்து சில தினம் இருக்கவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்; அன்றியும் தம்முடைய ஊருக்கு அருகிலுள்ள திருவெண்டுறையென்னும் ஸ்தலத்துக்கு ஒரு பிரபந்தமாவது புராணமாவது செய்து சிறப்பிக்க வேண்டுமென்றும் வேண்டிக்கொண்டு சென்றார்.
அரங்கேற்றத்தின் பூர்த்தி.
அப்பால் ஒரு நல்ல தினத்தில் திருப்பெருந்துறைப்புராண அரங்கேற்றத்தின் பூர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. அதற்காக அழைக்கப்பட்டுப் பட்டுக்கோட்டைத் தாலூகாவிலுள்ள பாலைவனம், நகரம் முதலிய சில ஜமீன்களிலிருந்து பிரதிநிதிகளும், உத்தியோகஸ்தர்களும், புதுக்கோட்டையிலிருந்து பல உத்தியோகஸ்தர்களும், நாட்டுக்கோட்டைத் தனவைசியப் பிரபுக்களிற் பலரும், வேறு சிலரும் வந்து சிறப்பித்தார்கள். அப்புராணம் ஒரு சிவிகையில் வைத்து ஊர்வலம் செய்விக்கப்பெற்றது. அச் சிறப்பு ஓர் அரசருடைய விவாக ஊர்வலம் போலவே நடைபெற்றது. அப்போது சுப்பிரமணிய தம்பிரான் முதலில் வாக்களித்திருந்தபடியே ரூபாய் இரண்டாயிரம் இவருக்கு ஸம்மானம் செய்ததன்றி உடன் இருந்த மாணாக்கர்களுள் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுடைய தகுதிக்குத் தக்கபடி மரியாதை செய்தார். அத்தொகைகள் அவருடைய சொந்தச் சம்பளத்திலிருந்து மிகுத்து வைக்கப்பெற்றவை.
அந்த விசேஷத்திற்கு வந்திருந்த கனவான்கள் ஊருக்குச் செல்லுகையில் இக்கவிச்செல்வரைக் கண்டு திருவாவடுதுறைக்குப் போகும்பொழுது தத்தம் இடங்களுக்கு வந்து சில தினங்கள் இருந்து சிறப்பித்துச் செல்லவேண்டுமென்று கேட்டுக்கொண்டார்கள்.
அக்காலத்தில் இருந்த ஜமீன்தார்களும் பிரபுக்களிற் பெரும்பான்மையோரும் கல்விமான்களோடு பழகுதலையும் அவர்களை ஆதரித்தலையும் தங்களுடைய கடமையாகக் கருதி வந்தார்கள். வித்துவான்களோடு சம்பாஷித்தலே அவர்களுக்குப் பொழுதுபோக்காக இருந்தது. ஒவ்வொருவரிடத்திலும் வடமொழியிலும் தமிழிலும் ஸங்கீதத்திலும் வல்ல ஒவ்வொருவர் இருந்தே வருவார். அவரவருடைய வருவாயில் வேறு செலவுகள் அக்காலத்தில் அதிகமாக இல்லாமையால் வித்துவான்களை ஆதரிப்பதில் விஞ்சவேண்டுமென்று ஒருவரைவிட ஒருவர் ஊக்கங் காட்டியும் வந்தனர். ஆதலால், பிள்ளையவர்கள் தங்கள் ஊருக்கு வந்து போதலை அவர்கள் பெரிய பாக்கியமாகவே கருதினார்கள்.
திருப்பெருந்துறைப் புராண அமைப்பு.
திருப்பெருந்துறைப் புராணத்தில் முதலில் 27-செய்யுட்களடங்கிய கடவுள் வாழ்த்தும் அவையடக்கமும் திருநாட்டுப் படலம் முதலிய 32-படல உறுப்புக்களும் அமைந்துள்ளன. இதிலுள்ள செய்யுட்களின் தொகை 1659 .
உருவம், அருவம், அருவுருவமென்னும் மூவகைத் திருமேனிகளுள்ளே சிவபெருமான், அம்பிகையும் தாமும் அருவத் திருமேனிகொண்டு எழுந்தருளி விளங்கும் இடம் இந்தத் திருப்பதியே. இதனை இப்புராணத்தில் பல இடங்களிற் புலப்படுத்தியிருக்கிறார் ; அவற்றுள் ஒன்று வருமாறு:
-
(விருத்தம்) {8.23}
"தூயநா மத்தருவ முருவமெவை யெனினுமொரு தோன்றல் போன்றே
பாயநா னிலவரைப்பின் கணுமமர்வா ளெனல்தெரித்த படியே போல
ஆயநா தங்கடந்த வான்மநா தக்கடவுள் அமர்தற் கேற்ப
மேயநா யகிசிவயோ காம்பிகைதன் விரைமலர்த்தாள் மேவி வாழ்வாம்."
(கடவுள் வாழ்த்து, 5)
பிரமதேவர், திருமால், காலாக்கினி யுருத்திரர், மாணிக்க வாசகர், சோழராசன், அதர்மன், இலக்குமி, ஒரு வேடன் என்பவர்கள் செய்தனவாக இந்நூலில் உள்ள துதிச் செய்யுட்கள் மனத்தை உருக்கி அன்பை மிகுவிக்கும்.
இப் புராணத்திலுள்ள அருமையான செய்யுட்களிற் சில வருமாறு:-
- (சபாநாயகர் துதி)
(விருத்தம்) {8.24}
“அரைப்புலித்தோல் மயிருகுப்பக் காற்புலித்தோல் மயிர்முகிழ்ப்ப
அணிபல் பாம்பும்
வரைப்பகன்று குலையவொரு பாம்புநிலை நின்றுநனி
மகிழ மேக்குத்
திரைப்பயமா தலைஇக்கவலக் கிழக்கிளங்கன் னிகையின்பந்
திளைப்ப நீர்சூழ்
தரைப்பயனா மணிமன்றுள் நடநவிலு மொருமுதலைச்
சரணஞ் சார்வாம்."
[இச்செய்யுள் விரோதவணி. அரைப்புலித்தோல்: அரை - இடை; காற்புலி - காலாற்புலியாகிய வியாக்கிரபாதமுனிவருடைய; இவற்றில் அரை, காலென்னும் பின்ன எண்களின் பெயர்கள் தொனிக்கின்றன. வரைப்பு - எல்லை. ஒரு பாம்பு - பதஞ்சலி முனிவர். மேக்கு திரை பயம் மாது - திருமுடி மேலுள்ள அலையையுடைய நீராகிய கங்கை; மேக்கு - மேல்; இதில் திரையையும் அச்சத்தையும் உடைய முதியவளென்னும் வேறொரு பொருள் தோற்றுகின்றது. அலைஇ - அலைந்து. கிழக்கு - கீழ். இளங்கன்னி - சிவகாமியம்மை.]
-
(குமாரக்கடவுள் துதி) {8.25}
"புரமுதல்வென் றுறுபுகழ்மாத் திரங்கொண்ட தந்தையினும்
பொருமோர் யானை
உரனறவென் றதனொடுமூர் தியுங்கொண்டு மிகுசிறப்பை
உறுமுன் னோனும்
பரவுறச்சூர் தடிந்தவற்றோ டோங்குகே தனமொருகை
பற்றப் பெற்ற
விரவுமல மருந்துறையும் பெருந்துறைக் குமாரனடி
மேவி வாழ்வாம்."
-
(அவையடக்கம்) {8.26}
"வென்றசீ ரான்ம நாதர் எனும்பெயர் விழைந்தார் ஞான
நன்றிலா வெனைவி லக்கார் நாவலூ ரருக்கு வெண்ணெய்
அன்றருள் செய்தா ரென்றும் அருச்சனை பாட்டே யென்றார்
ஒன்றநின் பாட்டே யென்னார் உறுதியென் னிதன்மேல் வேண்டும்."
-
(திருவாதவூர்ப் பெருமை)
(கொச்சகக் கலிப்பா.) {8.27}
”வாதவூர் மறையொழுக்க மல்லான்மற் றொன்றுமரு
வாதவூ ரடைந்தாரை மலக்குரம்பை யகத்தினிரு
வாதவூர் சிவானந்த வாரியிடை யழுத்தலொரு
வாதவூ ரெனப்புகலும் வார்த்தைவா னிடத்துமுள."
(திருவாதவூரர் திருவவதாரப். 11.)
[இருவாத - இருத்தாத. ஒருவாத - நீங்காத.]
படலந்தோறும் முதற்கண் உள்ள திருவாதவூரடிகளின் துதிகளுள்ளே சில வருமாறு:
-
(விருத்தம்) {8.28}
"நண்ணிய மூகை பேச நல்லருள் நாட்டம் வைத்த
புண்ணிய வாத வூரர் பொன்னடி சென்னி சேர்த்தாம்
எண்ணிய விப்பு ராண மொன்றுகொ லெல்லாம் பாடத்
தண்ணிய வாக்கு முன்னா யாவையுந் தருவ ரன்றே."
(புராண வரலாறு, 1.)
{8.29}
"சீரடி யாள்செய் நிந்தையில் வெந்தை
திருத்தக நாடொறு முண்டார்
பாரடி யுள்ளாக் கியநெடு மால்கொள்
பாகமுள் ளார்க்குமீ னவனால்
ஓரடி கொடுப்பித் தார்நெடு மால்கொள்
பாகமில் லேற்கொரு தாமே
ஈரடி கொடுத்தார் ஞாயிறெங் கெழினும்
எவனென இருப்பன்யா னினியே." (பிரமனுபதேசப். 1)
திருவாதவூரடிகளுடைய வரலாற்றைக் கூறும் பகுதிகள் பெரிய புராணத்தைப் போன்ற அமைதியையும் அழகையும் உடையனவாக விளங்கும். நைமிசமுனிவர் பெருந்துறை யடைந்து பூசித்த படலத்தில், திருப்பெருந்துறையைத் தரிசித்தற்கு வரும்பொழுது சூதமுனிவர் சவுனகாதியருக்கு இடையிலுள்ள தலங்களைக் காட்டுவதாக உள்ள பகுதியில் அறுபத்து மூன்று தலங்கள் வெளிப்படையாகக் கூறாமல் பலவகைக் குறிப்புக்களால் கூறப்பட்டுள்ளன. அவற்றால் அத்தலங்களின் வரலாறுகளுள் அரியனவாகிய சில செய்திகள் புலப்படும்.
----------------------
[1] இவர் பிள்ளையவர்களிடத்துப் படிக்க வந்த சில தினத்திற்குப் பின்பு மற்றவர்களைப்போலே தாமும் இருக்கவேண்டுமென்றெண்ணித் திரு நீறு தரித்துக்கொள்வாராயினர். அதனைக் கண்ட பிள்ளையவர்கள், "இனிச் சவேரிநாதைச் சிவகுருநாத பிள்ளையென்றே அழையுங்கள்" என்று சொன்னார். மடத்திலும் பிற இடங்களிலுமுள்ள யாவரும் அதுமுதல் அவ்வாறே அழைப்பாராயினர்.
[2]வேம்பற்றூரெனவும் வழங்கும்.
[3] ஒருகாலத்திற் சிவகங்கை ஸமஸ்தானத் தலைவராக இருந்த முத்துவடுகநாத
துரையென்பவர் மீது பிச்சுவையர், காதலென்னும் ஒரு பிராபந்தம் செய்து அரங்கேற்றி ஸம்மானம் பெற்றனர். அப்பொழுது அங்கே ஆஸ்தான பண்டிதராக இருந்த முத்துவீரப்பப்பிள்ளை யென்பவர் அவரைப்பார்த்து, முத்துவடுகநாத துரையென்பதை ஒரு வெண்பாவிலமைத்து ஐந்து நிமிஷத்திற் பாட வேண்டுமென்று கூறினார். பிச்சுவையர் அப்படியே செய்துவிட்டார். அச்செய்யுளின் முன்னிரண்டடிகள் எனக்குக் கிடைக்கவில்லை. பின் இரண்டடிகள் மட்டும் கிடைத்தன. அவை வருமாறு :
"கவடுக நாதனையே கைதொழுது வாழ்முத்
துவடுக நாத துரை"
[கவடு உகத் தொழுதென்க; கவடு - வஞ்சனை. நாதன் - சிவபெருமான்.]
அந்த வரலாற்றை ஒரு சமயம் பிள்ளையவர்கள் கேட்டு வியப்புற்று அது தொடங்கி அவரைக் காணுந்தோறும் 'துவடுக நாத துரை’ என்றே அன்புடன் அழைப்பாராயினர்.
[4] இவரும் பிச்சுவையரும் சின்னப்பட்டம் ஸ்ரீ நமச்சிவாய தேசிகரிடம் கல்லிடைக்குறிச்சியிற் படித்தவர்கள்.
[5] இவர் ஸ்ரீ ஆத்மநாத ஸ்வாமியை அர்ச்சிப்பவர்; அத்தலத்தில் உள்ள அந்தணர் முந்நூற்றுவர்களைச் சார்ந்தவர்.
[6] இதன்பால் ஸ்வாமி அசுவாரூட மூர்த்தியாக எழுந்தருளியிருக்கின்றமையின் இஃது இப்பெயர் பெற்றது; இத்தலத்துள்ள ஸபைகள் ஆறனுள் இது கனகஸபையென்று கூறப்படும்.
[7] இப்புத்தகம் 116 - ஆம் பக்கம் பார்க்க.
[8] முதற்பாகம், 224 - ஆம்பக்கம் பார்க்க.
[9] தோட்டி - அழகு.
[10] இந்நூல் பிற்காலத்தில் இவருடைய மாணாக்கராகிய ஆறுமுகத் தம்பிரானவர்களால் சிறப்புப்பாயிரத்தோடு தனியே பதிப்பிக்கப் பெற்றது; மீ.பிரபந்தத்திரட்டு, 722-824.
[11] இது மன்னார்குடி தாலூகாவிலுள்ளதோரூர்.
---------------------
9. பல ஊர்ப்பிரயாணம்.
திருப்பெருந்துறையினின்றும் புறப்பட்டது.
பின்பு இக் கவிஞர்பெருமான் திருப்பெருந்துறையினின்றும் புறப்பட எண்ணிச் சுப்பிரமணிய தம்பிரானிடம் பிரியாவிடைபெற்றுக் கொண்டார். இருவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிதற்கு மனமில்லாதவராகி வருந்தினார்கள். பின்பு ஒருவாறு ஆறுதல் கூறி விடைபெற்று இவர் புறப்பட்டார்.
குன்றக்குடி சென்றது.
அப்பொழுது இவரை அழைத்து வரவேண்டுமென்று குன்றக்குடியிலுள்ள திருவண்ணாமலை ஆதீனத் தலைவரான ஸ்ரீ ஆறுமுக தேசிகர் அனுப்ப, அவ்வாதீனத்தில் முதற் குமாஸ்தாவாக இருந்தவரும் சிறந்த தமிழ்க் கல்விமானும் அருங்கலை விநோதருமாகிய அப்பாப்பிள்ளை யென்பவர் வந்து அழைத்தார். அவருடன் புறப்பட்ட இவர் இடையிலேயுள்ள அன்பர்களின் வேண்டுகோளின்படி அவ்வவ்விடங்களுக்குச் சென்றுவிட்டுக் குன்றக்குடி சென்றார். அங்கே ஆதீனத் தலைவர் இவரை வரவேற்று உபசரித்துச் சில தினங்கள் இருக்கும்படி செய்து தக்க ஸம்மானங்கள் வழங்கிப் பின்பு பல்லக்கு வைத்து அனுப்பினார். அக்காலத்தில் அவர் மீது இவர் இயற்றிய சில பாடல்கள் உண்டு. அவை இப்பொழுது கிடைக்கவில்லை.
குருபூசை மான்மியம்.
அப்பால் இவர் வன்றொண்டச் செட்டியார், சத்திரம் அருணாசல செட்டியார், வெளிமுத்தி வைரவ ஐயா என்பவர்களால் அழைக்கப்பட்டுத் தேவகோட்டைக்குச் சென்று சிலநாள் இருந்து அங்கேயுள்ள கனவான்களால் உபசரிக்கப்பெற்றார். பிறகு காரைக்குடி சென்று அங்கே அறுபத்து மூவர் குருபூசை மடத்தில் தங்கினார். அங்கே சில தினம் இருந்தபொழுது குரு பூசையின் பெருமையைப் புலப்படுத்திச் சில செய்யுட்கள் இயற்றித் தரவேண்டுமென்று அங்கேயிருந்த மெ.பெரி. ராம. மெய்யப்ப செட்டியா ரென்பவர் கேட்டுக்கொள்ளவே, குருபூசை மான்மியமென்ற ஒரு நூல் விரைவில் இயற்றி இவரால் அளிக்கப்பெற்றது. அது பதினைந்து செய்யுட்களையுடையது; அச்சிடப்பெற்று வழங்குகின்றது. மெய்யப்ப செட்டியார் கேட்டுக்கொண்டதையும் உடனே விரைவில் யாதொரு தடையுமின்றி இவர் இயற்றியளித்ததையும் உடனிருந்து பார்த்தவராகிய காரைக்குடி சொக்கலிங்கையா அடிக்கடி சொல்லிப் பாராட்டிக்கொண்டேயிருப்பார். அம் மான்மியத்திலுள்ள முக்கியமான செய்யுட்கள் வருமாறு:
-
(விருத்தம்) {9.1}
"கருதுமொரு மலமுமிரு வினையுமும்மா யையுமகலக் கழற்றி நாளும்
ஒருவரிய சிவபோகச் செழுந்தேறல் வாய்மடுப்பான் உள்ளங் கொண்டாம்
பருமணிமா ளிகைக்காரைக் குடிவயங்கப் பொலியுமறு பத்து மூவர்
திருமடத்தில் வீற்றிருக்கு மனுகூல மழகளிற்றைச் சிந்திப் பாமால்."
{9.2}
"அருவாகி யுருவாகி யருவுருவ மாகியிவைக் கப்பா லாய
திருவாகி யநாதிமுத்தத் திரமாகி யானந்தத் திரட்சி யாகிக்
கருவாகிக் கண்ணாகிக் கண்ணுண்மணி யாகியுயிர்க் கணங்கட் கெல்லாம்
குருவாகி நிறைபரம சிவமொன்றே யனைத்துலகும் குறிக்கொ டேவாம்."
{9.3}
"அடியார்யார் அவர்பூசை செயும்விதமென் னெனவினவின்
அறைவாங் கேண்மோ
வடியார்வெண் ணீறணிவா ரதனொடுகண் மணிமாலை
வயங்கப் பூண்பார்
கடியார்சூற் படையானை யருட்குறிமுற் பலவினுட்க
னியப்பூ சிப்பார்
படியார்நந் தனம்புகுந்து மலர்பறித்துத் தொடுத்துதவும்
பணிமேற் கொள்வார்."
{9.4}
"தளிபுகுந்து திருவலகுப் பணிபுரிவார் திருமெழுக்குச் சமையச் செய்வார்
ஒளிகிளர்பல் விளக்கமைப்பார் மணங்கமழும் படிபுகைப்பார் உம்ப ராரும்
தெளிவரிய தமிழ்மறைபல் காலும்பா ராட்டிடுவார் சிவபு ராணம்
அளியமையச் சிரவணஞ்செய் பவரிவரெ லாம்பரமன் அடியா ராவார்."
{9.5}
"இன்னவடி யவர்வயிற்றுப் பசிதீர அனம்படைத்தல் இன்னன் மேனி
மன்னவரு பிணியகல மருந்துதவல் குளிர்க்காடை வாங்கி நல்கல்
சொன்னமுதல் யாதானும் வேண்டியவை மனமகிழ்ச்சி தூங்க நல்கல்
நன்னரிடங் கொடுத்தலிவை முதற்பலவும் பூசையென நவில்வர் நல்லோர்."
{9.6}
"இந்தவித மடியவரைப் பூசித்த லெந்நாளும் இனிய தேனும்
சந்தமிகு மரிபிரமா தியர்களெலா மேத்தெடுக்கும் தகைய ராய
பந்தமிலோ ரறுபத்து மூவர்திரு நாள்வரவு பார்த்துச் செய்யின்
மந்ததர முதனான்கு மொருவியருட் கலப்பினுறும் வாழ்க்கை கூடும்."
{9.7}
"நலமலிசெய் கையராய வறுபத்து மூவரா நாயன் மார்கள்
வலமலிமா தேவனடி யடைந்தநாட் சிவநேய மாண்பி னார்க்கு
நிலமலிவண் டிருவமுதுங் கறியமுதுஞ் சிற்றுணவும் நெய்யும் பாலும்
தலமலிய நிறைத்தூட்டித் தொழுநர்பெறும் பேற்றினையார் சாற்ற வல்லார்."
{9.8}
”நாடியவத் தினத்திலமு தூட்டுசிறப் பொடுமவ்வந் நாயன் மார்க்குக்
கூடியமட் டுஞ்சிறப்ப வபிடேக நிவேதனமுங் குலவச் செய்து
நீடியவுற் சவமுநடத் திடுதலதி விசேடமென நிகழ்த்தா நிற்பர்
பாடியபன் னூலுமுண ராசார வொழுக்கமிகு பண்பி னோரே."
{9.9}
“இந்தவிதம் பூசனைசெய் புண்ணியர்க ளெந்நாளும் இனிமை மேய
சந்தமனை வியர்மக்கள் தவாதகடும் பினர்பலரும் தழுவ வாழ்ந்து
கந்தமலர்க் கற்பகநா டாதியபல் போகமெலாம் களிப்பத் துய்த்துப்
பந்தமினம் பரமசிவ னடிக்கலப்பாம் பெருவாழ்வும் பற்று வாரால்."
காரைக்குடியி லிருந்தபொழுது அவ்வூரிலும் அயலூரிலும் இருந்த தமிழ் வித்துவான்கள் வந்துவந்து இவரைப் பார்த்துத் தத்தம் கருத்துக்களை நிறைவேற்றிக்கொண்டு சென்றார்கள். அவர்களுள், மழவராயனேந்தலென்னும் ஊரினராகிய அஷ்டாவதானம் பாலசுப்பிரமணிய ஐயரென்பவர் இயற்றிய குன்றைத் திரிபந்தாதியைக் கேட்டு மகிழ்ந்து அவருடைய விருப்பத்தின்படியே இவர் ஒரு சிறப்புப் பாயிரம் அளித்தனர்; அது வருமாறு:
-
(நேரிசை ஆசிரியப்பா) {9.10}
[1] "திருமா மகளுஞ் சிறந்தவெண் டிங்களும்
ஒருவா ரணமு முயரிரு நிதிகளும்
கோட்டிள முலைநயங் காட்டர மகளிரும்
வாட்டமற் றண்டர் கூட்டுணு மமுதமும்
தருகவென் றிரப்பார் தரமுணர்ந் தன்னோர்
இருகரங் கொளவெலா மீந்தகற் பகமும்
வந்தா ருளத்துனு மாண்பொரு ளளிக்கும்
சிந்தா மணியுஞ் செழுங்காம தேனுவும்
இனையபல் வளனு மீன்றிடு முததி
புனையுடை யாகப் பொருந்துபு பூமகள்
வதனமா விலங்கு மழவையம் பதியான்
புதனிவ னாமெனப் புலவர் குழாமும்
பார்க்கவ னிவனெனப் பார்த்திபர் பலரும்
தீர்க்கமா நவிலுந் திடத்தகல் வியினான்
கயிலையங் கிரியிற் கண்ணுதன் முன்னாள்
அயிலிலங் கியவே லரசினை யளித்தோன்
பருப்பதம் பயந்த பசுங்கிளி நெடுநாள்
விருப்பமுற் றணையு மெய்யுடை வேதியன்
அட்டமூர்த் தம்பெற் றளவிலாப் பேதம்
தட்டறக் காட்டுந் தகையே போல
அட்டாவ தானியென் றானாப் பெயருறீஇ
மட்டடங் காவவ தானம் புரிவோன்
காரை நகர்க்கொரு கண்ணா னவன்பெரி
யோரை வழிபடு முத்தம குணத்தான்
மறையவர் குலசிகா மணிமறை யொழுக்கினும்
திறனுடைச் சிதம்பர தீக்கிதர் புத்திரன்
தோமிலாப் பால சுப்பிர மணிய
நாமனெவ் வுலகும் நாட்டிய புகழான்
ஆறம் புலிமுய லன்றிவிண் ணிடத்தில்
வீறுட னிருக்கிலோர் விதநேர் தருமென
ஆன்றோ ருரைசெயு மாறுமா முகத்தோன்
தோன்றுகுன் றைக்குடித் தொன்னகர்ப் பாலதாத்
திரிபந் தாதி செப்பினன்
விரிகலை யுணர்ந்தோர் மிகவியப் புறவே."
அதன்பின்பு முற்கூறிய பாலைவனம் முதலிய இடங்களுக்குச் சென்று அங்கங்கேயுள்ள ஜமீன்தார்களால் உபசரிக்கப்பெற்றுச் சில தினங்கள் இருந்தார். அங்ஙனம் சென்ற இடங்களில் தம்மை அன்புடன் ஆதரித்தவர்கள் திறத்தில் நன்றி பாராட்டி இவர் செய்த தனிப்பாடல்கள் பல உண்டு. அவை இப்பொழுது கிடைக்கவில்லை.
சிங்கவனம் சென்றது.
இவருடைய மாணாக்கராகிய சுப்பு பாரதியாரையும் அவர் பரம்பரையினரையும் ஆதரித்து வந்த சிங்கவனம் ஜமீன்தார் அந்தப்பாரதியார் முதலியவர்களை அனுப்பி இவரை அழைத்து வரச் செய்து சில தினம் உபசாரத்துடன் வைத்திருந்து சம்பாஷணை செய்து இன்புற்றார். அந்த ஜமீன்தாருடைய நற்குண நற்செய்கைகளையும் அவருக்குத் தமிழில் இருந்த ஈடுபாட்டையும் அறிந்து மகிழ்ந்து அவர்மீது இவர் செய்த பாடல்கள் வருமாறு:
-
(விருத்தம்) {9.11}
(1) "பூமேவு சிங்கவனம் புகுந்தனமப் பெயராய பொருண்மை தேர்ந்தேம்
பாமேவு புருடசிங்கம் ராசசிங்கங் கல்விநலம் பயின்ற சிங்கம்
மாமேவு மகராச மெய்க்கங்கோ பாலனெனும் வள்ளற் சிங்கம்
தாமேவும் படிகண்டோ மதனாலிப் பெயரென்றும் தக்க தாமே."
{9.12}
(2) "குணங்கொள் செவ்வாய் விசயரகு நாதமக ராசமெய்க்கங் கோபா லப்பேர்
மணங்கொண்மகா புருடனிரம் பியதிருவும் பெருங்கல்வி மாண்புஞ் சேர்ந்தே
இணங்குதிறத் தினனிதனால் யாவோரும் வியப்புறுவார் இயல்செந் நாவார்
அணங்கிருவே [2] றுலகத்தி யற்கையெனற் கிரங்கானாய் அன்புற் றானே."
அப்பால் வழியிலுள்ள ஊர்களிற் பல கனவான்களால் உபசரிக்கப்பட்டுத் திருவாவடுதுறையை நோக்கிவருகையில் புதுக்கோட்டையைச் சார்ந்த திருக்கோகர்ணம் சென்று அந்த ஸமஸ்தான வித்துவானான கணபதி கவிராயர் வீட்டில் தங்கினார்.
இவர் வரவைக் கேள்வியுற்ற புதுக்கோட்டையிலுள்ள தமிழபிமானிகள் பலர் வந்துவந்து விசாரித்துவிட்டுச் சம்பாஷித்து வேண்டியவற்றை அப்பொழுது அப்பொழுது அளித்து வந்ததன்றிச் சிலதினம் இருந்து செல்லும்படிக்கும் கேட்டுக்கொண்டார்கள்.
புதுக்கோட்டை மன்னராகிய கெளரவம் பொருந்திய இராமசந்திர தொண்டைமானவர்களுடைய மூத்த தேவியாரான ஸ்ரீ பிரகதம்பா பாய்சாகேபவர்கள் அங்கே இவர் வந்திருத்தலைக் கேள்வியுற்றுத் தக்கவர்களை அனுப்பி இவரை அரண்மனைக்கு அழைத்துவரச் செய்து நாடோறும் பல அரிய விஷயங்களைக் கேட்டார்கள். தேவாரங்கள் சிலவற்றிற்கும் பெரிய புராணத்திலுள்ள பாடல்கள் சிலவற்றிற்கும் பொருள் கேட்டு அறிந்து தக்க ஸம்மானங்கள் பல செய்வித்து இவருடைய பூஜைக்கு வேண்டிய பாத்திரங்களை வெள்ளியினாலே செய்வித்து அளித்தார்கள்.
பின்பு இவர் புதுக்கோட்டையிலேயே ஒரு மாதம் இருந்தார். அப்பொழுது சிறந்த உணவுப்பொருள்கள் இவருக்கு அரண்மனை உக்கிராணத்திலிருந்து நாள்தோறும் அனுப்பும்படி திட்டம் செய்யப்பட்டிருந்தது. அப்பொழுது பாய்சாகேப் அவர்களுடைய அன்புடைமையைப் பாராட்டி இவர் ஐந்து பாடல்கள் இயற்றினார். அவை கிடைக்கவில்லை. அப்பால் ஆறுமுகத்தா பிள்ளை முதலிய அன்பர்கள் இவர் புதுக்கோட்டைக்கு வந்திருப்பதைக் கேள்வியுற்று இவரைப் பட்டீச்சுரத்துக்கு அழைத்துச் செல்வதற்கு அங்கே வந்து இவருடன் சில தினம் இருந்தார்கள்.
திருவரன்குளப் புராணம்.
புதுக்கோட்டைக்கு அருகிலுள்ளதான திருவரன்குளமென் னும் சிவஸ்தலத்து அபிமானிகளாகிய வல்லநாட்டுப் பெருங்குடி வணிகர் சிலர் வந்து இவரைப் பார்த்துப் பேசி மகிழ்ச்சியுற்றனர்; திருவரன்குளத்திற்கு வந்து ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு போகவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அங்ஙனமே இவர் அங்கே சென்று ஸ்ரீ ஹரதீர்த்தஸ்தலேசரையும் பெரிய நாயகியம்மையையும் தரிசனம் செய்தனர். அக்காலத்தில் அத் திருக்கோயில் அர்ச்சகர்களாகிய ஆதிசைவர்களும் தருமகர்த்தர்களாகிய மேற்கூறிய வணிகர்களும் அத்தலத்திற்கு ஒரு வட மொழிப் புராணம் இருப்பதைச் சொல்லி அதனை மொழிபெயர்த்துத் தமிழ்க் காப்பியமாகப் பாடித் தரவேண்டுமென்று கேட்டுக்கொண்டனர். அங்ஙனமே செய்வதாக இவர் வாக்களித்து வடமொழிப் புராணத்தை வாங்கிக்கொண்டு சென்றனர். புதுக்கோட்டைக்கு மீண்டு வந்த பின்பு அங்கேயே இருந்து அந் நூலிற் சில பாடல்களை இயற்றினர்; திருவாவடுதுறைக்கு வந்தபின்பும் சில செய்யுட்கள் இயற்றப்பெற்றன. [3] கடவுள் வாழ்த்து, ஆக்குவித்தோர் வரலாறு, அவையடக்கமென்பனவும் திருநாட்டுப் படலத்தில் பத்துப் பாடல்களுமே இவராற் செய்யப்பெற்றன. பின்பு அது பூர்த்திசெய்யப் பெறவில்லை. அதிலுள்ள சில செய்யுட்கள் வருமாறு:
-
(அவையடக்கம்)
(விருத்தம்) {9.13}
"சுவைபடு கருப்பங் காட்டிற் றோன்றவீற் றிருந்து ளோனச்
சுவைபடா வேப்பங் காட்டுந் தோன்றவீற் றிருத்த லாலே
நவைபடாப் பெரியோர் சொற்ற நயக்குமின் பாட லோடு
நவைபடு மடியேன் சொற்ற பாடலு நயந்து கொள்வான்."
[இத் தலவிருட்சம் வேம்பு.]
{9.14}
"விட்புனன் முடிமேற் கொண்டு மேவினோர் குடங்கர் கொண்டு
மட்புனன் முகந்தே யாட்டி வழுத்திட வுவப்பர் மேன்மேற்
கட்புனல் பொழிந்து நால்வர் கரைந்தபா வேற்றார் கண்ணில்
எட்புன லுந்தோற் றாவென் பாட்டுங்கேட் டினிது வப்பார்."
[ விட்புனல் - கங்கை . குடங்கர் - குடம். எட்புனல் - எள்ளளவு நீர்.]
(நாட்டு வளம்)
(கலிநிலைத் துறை) {9.15}
"முதிரு மாக்கனி பலபடு விடபமேன் முழங்கி
அதிரும் வானரம் பாய்தர வாங்குதிர் கனியால்
உதிரு நெற்பல வேனைநாட் டறுத்தடித் துறச்செய்
பிதிரு றாதநெற் பொலியெனப் பிறங்குவ நாளும்."
[விடபம் - மரக்கொம்பு]
அப்பால் அந்நகரிலிருந்து புறப்பட்டுத் தஞ்சை வழியாகக் கும்பகோணம் வந்து தியாகராச செட்டியார் வீட்டில் தங்கினார். அப்பொழுது திருப்பெருந்துறையிற் கிடைத்த ரூ. இரண்டாயிரமும் இடையிடையே சில ஜமீன்தார் முதலியவர்களால் கிடைத்த ரூ. இரண்டாயிரமும் ஆக ரூபாய் நாலாயிரமும் இவரிடம் இருப்பதை உடன் வந்தவர்களால் அறிந்த தியாகராச செட்டியார் இவரைப் பார்த்து, "இந்தத் தொகையை என்னிடம் கொடுத்தால் வட்டிக்குக் கொடுத்து விருத்திபண்ணி வட்டியை அவ்வப்பொழுது ஐயா அவர்களுடைய குடும்ப ஸெளகரியத்திற்காக அனுப்பிவருவேன். அந்த நாலாயிரமும் குடும்பத்துக்கு மூலதனமாக இருக்கும். உங்கள் கையிலிருந்தால் சில தினங்களிற் செலவழித்து விடுவீர்கள். இளமைப் பருவத்தில் நீங்கள் பணத்தின் அருமையை அறிந்ததுபோல இப்பொழுது அறிந்து கொள்ளவில்லை. உங்களுக்கு என்னைப்போலச் சொல்லுபவர்கள் ஒருவருமில்ல; நான் சொல்வதைக் கேட்கவேண்டும்" என்றார். அதற்கு இவர் சிறிதும் உடன்படவில்லை. இவர் இளமையில் வறுமையால் துன்புற்றதை அவர் விரிவாக அறிவித்துப் பல முறை வற்புறுத்தியும் இவர் கேட்கவில்லை.
அப்பொழுது பிள்ளையவர்களுடன் இருந்த சுப்பையா பண்டாரத்தைத் தியாகராச செட்டியார் பார்த்து, "நீரும் உடன்போய் வந்தீரா? யாராவது உம்மைத்தெரிந்து கொண்டார்களா?" என்று கேட்டார். அவர், "ஐயா அவர்களைக் கேட்டால் தெரியும்" எனவே, செட்டியார் பிள்ளையவர்களைப் பார்த்தனர்; இவர், "நான் சென்ற இடங்களில் பெரும்பான்மையானவர்கள் இவருக்குத் தெரிந்தவர்களாகவே இருந்தனர்; இவர் உடன் இருந்தது அவர்களுடன் பழகுவதற்கு எனக்கு அநுகூலமாக இருந்தது" என்றார். கேட்ட செட்டியார் வியப்புற்றார்.
பட்டீச்சுரம் சென்றது.
பின்பு ஆறுமுகத்தாபிள்ளையினது வேண்டுகோளால் இவர் அங்கிருந்து பட்டீச்சுரம் சென்று சில தினம் இருந்தார். அங்கே இருந்த நாட்களுள் ஒருநாள் இரத்தினம் பிள்ளை சோழன் மாளிகைக்கு இவரை அழைத்துச் சென்று உபசரித்தனர். அவருடைய அன்புடைமையை நினைந்து இவர்,
-
(விருத்தம்)
"சீர்பூத்த சிவபத்தி சிவனடியார் பத்திமிகு சீலம் வாய்மை
கார்பூத்த கொடைமுதலா கியநலங்க ளொருங்குற்றுக் கவினு கின்ற
பேர்பூத்த விரத்தினமொன் றினைச்சோழன் மாளிகையிற் பிறங்கக் கண்டேன்
பார்பூத்த விதனுண்மை தனைநேரிற் கண்டுணர்வீர் பாவல் லோரே"
திருவாவடுதுறைக்கு வந்துசேர்ந்தது.
சில தினங்களுக்கப்பால் இவர் பட்டீச்சுரத்திலிருந்து திருவாவடுதுறைக்கு வந்து சேர்ந்தார். வந்தவுடன் திருப்பெருந்துறை முதலிய இடங்களில் நிகழ்ந்தவற்றை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரிடம் விண்ணப்பிக்க அவர் கேட்டு மிகவும் சந்தோஷித்தார். புராணத்திலுள்ள சில பகுதிகளையும் சேக்கிழார் பிள்ளைத்தமிழையும் படிக்கச் சொல்லி மெல்லக் கேட்டுக் கேட்டுப் பிள்ளையவர்களுடைய பெருமையை உடனுடன் பாராட்டிக் கொண்டே வந்தார்.
கொண்டுவந்த தொகையில் அவசரமாகக் கொடுக்க வேண்டிய கடன்களைத் தீர்த்த பின்பு எஞ்சியதைத் தாமே வைத்துக் கொண்டு சில தினங்களில் சிறிதும் பாக்கியில்லாமல் தாராளமாக இவர் செலவழித்து விட்டனர்.
கஞ்சனூர்ச் சாமிநாதையர்.
திருவாவடுதுறைக்கு வடமேற்கிலுள்ள கஞ்சனூரில் சாமிநாதையரென்ற ஒரு மிராசுதார் இருந்தனர். அவ்வூரிலுள்ள சில தமிழ்க்கல்விமான்களுடைய பழக்கத்தால் சில பிரபந்தங்களையும் நைடதம் திருவிளையாடல் முதலியவற்றையும் அவர் படித்தறிந்தார். இவரிடம் படிக்கவேண்டுமென்ற எண்ணத்துடன் இவர்பால் வந்து தம்முடைய விருப்பத்தைப் புலப்படுத்தி ஆங்கிரஸ வருஷந் தொடங்கிப் பாடங் கேட்டு வந்தார். அடிக்கடி இவரை மாணாக்கர்களுடன் தம்மூருக்கு அழைத்துச் சென்று விருந்து செய்வித்து அனுப்புவார்; சிவபக்திச் செல்வம் வாய்ந்தவர். அவரிடத்தில் இவருக்கும் விசேஷ அன்புண்டு. தம்முடைய தவசிப் பிள்ளைகளுள் ஒருவராகிய சாமிநாத செட்டியாரென்பவருக்கு வீடு கட்டுதற்கு விட்டம் முதலியவற்றிற்காக மரங்களை விலைக்கு வாங்கி அனுப்பவேண்டுமென்று இவர் அவருக்கு ஒரு கடிதம் எழுதி அதன் தலைப்பில்,
-
(விருத்தம்) {9.17}
"திருவாத வூரர்முதற் சிறந்தவர்போற் சிவபத்திச் செல்வம் வாய்ந்து
பெருவாய்மை கல்வியறி வொழுக்கத்தா லளவாத பெருமை மேவி
வெருவாத வொப்புரவு முதலியநற் குணங்களெலாம் விட்டோர் போதும்
ஒருவாத புகழ்ச்சாமி நாதமா மறையவனீ துவந்து காண்க"
[ஓர்போதும் ஒருவாத - ஒருபோதும் நீங்காத.]
அவர் அதைப் பார்த்துவிட்டு உடனே ரூ. 200 மதிப்புள்ள மரங்களை வாங்கி அனுப்பினார். அவற்றின் விலையை இவர் கொடுக்கத் தொடங்குகையில் அவர் வேண்டாமென்று மறுத்து விட்டார். அம்மரங்களைக் கொண்டு வீடு கட்டப்பட்டு நிறைவேறியது; அவ்வீடு இன்றும் உள்ளது.
வீழிதாஸ நயினார்.
ஒரு சமயம் திருவீழிமிழலையிலிருந்து வீழிதாஸ நயினாரென்னும் ஒரு பிரபு திருவாவடுதுறைக்கு வந்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரைத் தரிசித்தார். அவர் திருவீழிமிழலை ஆலயத்திற்குப் பெரும்பொருள் செலவிட்டுப் பலவகைத் திருப்பணிகளைச் செய்தவர். பிள்ளையவர்களைக் கொண்டு அத்தலத்துக்குப் புதிதாக ஒரு புராணம் இயற்றுவிக்க வேண்டுமென்பது அவருடைய விருப்பம், அதற்காக அத்தலத்திற்குரிய வடமொழிப் புராணத்தையும் பழைய தமிழ்ப்புராணத்தையும் கொணர்ந்திருந்தார். அவற்றை இக்கவிஞர்பெருமானிடம் கொடுத்துத் தம்முடைய விருப்பத்தை வெளியிட்டார். இவர் அவற்றை வாங்கி வைத்துக்கொண்டு அங்ஙனமே செய்வதாகக் கூறினார். ஆனாலும், இவருக்கு உண்டான தேக அஸெளக்கியத்தால் அது பாடுதற்குத் தொடங்கப்படவேயில்லை.
[4] மருதவாணர் பதிகம்.
பவ வருஷத்தில் குமாரசாமித் தம்பிரானுக்குத் தேக அசெளகரியம் உண்டாயிற்று. ஆதீனத் தலைவருடைய கட்டளையின்படி திருவிடைமருதூர் சென்று கட்டளை மடத்தில் தங்கி அங்கேயுள்ள தக்க வைத்தியர்களிடம் மருந்து வாங்கி உட்கொண்டு வந்தார். அப்பொழுது அவரைப் பார்க்கச் சென்ற இவர் அவர் தேக நிலையையறிந்து வருத்தமுற்றார். அவர், "தினந்தோறும் நான் ஸ்தோத்திரம் பண்ணும்படி ஸ்ரீ மகாலிங்க மூர்த்தியின் மீது ஒரு பதிகம் இயற்றித்தரல் வேண்டும்" என்று விரும்பவே, இவர் ஒரு பதிகம் இயற்றினார். அது மருதவாணர் பதிகமென்று வழங்கும். அதை அவர் தினந்தோறும் பாராயணம் செய்து கொண்டு வந்தார்.
அப்பதிகத்திலுள்ள 1, 4, 9- ஆம் செய்யுட்களால் நோயை நீக்கவேண்டுமென்று விண்ணப்பித்திருத்தல் விளங்கும். சில தினத்தில் அவருக்குப் பிணி நீங்கிவிட்டது. அப்பால் அவர் திருவாவடுதுறைக்கு வந்து வழக்கம் போலவே பாடங் கேட்டு வந்தார்.
'சூரியமூர்த்தி சாட்சி.'
ஒருநாள் முன்ஸீப் வேதநாயகம் பிள்ளை சில உத்தியோகஸ்தர்களோடு மாயூரத்திலிருந்து ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய தரிசனத்திற்கு வந்தார்; அவர்களுள் டிப்டி கலெக்டராக இருந்த சூரியமூர்த்தியா பிள்ளை யென்பவர் முக்கியமானவர். தேசிகருடைய குணங்களில் ஈடுபட்ட வேதநாயகம் பிள்ளை தாம் இயற்றிய சில புதிய பாடல்களைச் சொல்லிக் காட்டினர். அப்பொழுது மகிழ்ந்து இவர் சொல்லிய பாடல் வருமாறு :
-
(விருத்தம்) {9.18}
"மாமேவு புகழ்த்திருவா வடுதுறைச்சுப் பிரமணிய வள்ளற் கோமான்
பாமேவு சந்நிதியிற் பாக்கள்பல செய்துடனே பயிலச் செய்தான்
நாமேவு வேதநா யகசுகுணன் சான்றெவரோ நவில்க வென்னிற்
கோமேவு பலர்புகழ்சூ ரியமூர்த்திச் செம்மலிது குறிக்கொள் வீரே."
ஷஷ்டியப்த பூர்த்தி.
இவருக்கு அப்போது பிராயம் 60 ஆகிவிட்டமையால் அதனை யறிந்த சுப்பிரமணிய தேசிகர் அக்காலத்தில் இவருக்கு நடத்த வேண்டிய ஷஷ்டியப்த பூர்த்தி யென்னும் விசேஷத்தைப் பங்குனி மாதத்தில் மடத்துச் செலவிலிருந்தே மிகவும் சிறப்பாக நடத்துவித்தார்.
அம்பர் சென்றது.
அம்பர்ப்புராணம் பூர்த்தியாகியும் அரங்கேற்றப்படாமல் இருந்ததையறிந்த சுப்பிரமணிய தேசிகர் அப்புராணத்தை ஆக்குவித்தோராகிய அம்பர் [5]வேலாயுதம் பிள்ளை யென்பவருக்கு அந் நூலை விரைவில் அரங்கேற்றுவித்தல் உத்தமமென்று ஒரு திருமுகம் அனுப்பினார். அவர் அதனைச் சிரமேற்கொண்டு விஷயத்தைப் படித்தறிந்து உடனே திருவாவடுதுறைக்கு வந்து தேசிகரைத் தரிசனம் செய்துவிட்டுப் பரிவாரங்களுடன் இக்கவிநாயகரை அழைத்துக் கொண்டு சென்றார்; அங்கேயிருந்த சொர்க்கபுர ஆதீன மடத்தில் இவரைத் தங்கும்படி செய்து வேண்டிய சௌகரியங்களைச் செய்வித்து நாடோறும் சென்று ஸல்லாபம் செய்து வந்தனர்.
நான் அம்பருக்குச் சென்று இவரைப் பார்த்தது.
முன்பு திருப்பெருந்துறையிலிருந்து இவரிடம் விடைபெற்றுப் பிரிந்த நான் விரைவிற்கொடுத்துத் தீர்க்கவேண்டிய கடனுக்காகப் பொருளீட்டும் பொருட்டுப் பெரும்புலியூர் (பெரம்பலூர்)த் தாலூகாவிலுள்ள காரையென்னும் ஊருக்குச் சென்று அங்கே உள்ள சின்னப்பண்ணைக் கிருஷ்ணஸாமி ரெட்டியாரென்பவர் முதலிய அன்பர்களின் விருப்பத்தின்படி திருவிளையாடற் புராணத்தைப் படித்துப் பொருள் சொல்லிக் கொண்டு வந்தேன். இடையிற் சில நாட்கள் ஓய்வு ஏற்பட்டமையால் இவரைப் பார்த்து வரவேண்டுமென்னும் அவாவோடு திருவாவடுதுறைக்கு வந்து இவர் புராணம் அரங்கேற்றுதற்கு அம்பர் சென்றிருப்பதைக் கேள்வியுற்று ஒருநாள் அங்கே சென்று பார்த்து ஆறுதலடைந்தேன்.
அன்று பிற்பகலில் திருக்கோயிற்குச் சென்று தரிசனம் செய்கையில் ஒவ்வொரு விசேடத்தையும் சொல்லி வந்தார்; ஒரு பஞ்ச காலத்திற் பொருளில்லாமல் வருத்தமுற்ற நந்தனென்னும் அரசனுக்கு நாள்தோறும் படிக்காசு அருளினமையால் அத்தல விநாயகருக்குப் படிக்காசுப் பிள்ளையாரென்னும் திருநாமம் அமைந்ததை எனக்கு விளங்கச் சொன்னதன்றி, அங்கே யிருந்த தீர்த்தத்தைக் காட்டி, "இதுதான், [6] 'அன்னமாம் பொய்கை சூழ் அம்பரானை' எனத் தேவாரத்திற் சொல்லப்பட்டுள்ள அன்னமாம் பொய்கை; அன்னவடிவங் கொண்ட பிரமதேவர் உண்டாக்கிய தீர்த்தம் இது" என்று கூறினார். சுவாமி எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலைக் காட்டி, "இது கோச்செங்கட் சோழ நாயனாரால் திருப்பணி செய்யப்பெற்ற பெருமை வாய்ந்தது; இத்தலத்துத் [7] தேவாரங்களால் இது விளங்கும்" என்று சொன்னார்;
பின்னும், "இந்த ஊர் மிகப் பழைய நகரம். திவாகரத்தில், 'ஒளவை பாடிய அம்பர்ச் சேந்தன்' என்றதிற் கூறப்பட்டதும், ‘தண்ணீருங் காவிரியே தார்வேந்தன் சோழனே, மண்ணாவ துஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள், அம்பர்ச் சிலம்பி யரவிந்த மேமலராம், செம்பொற் சிலம்பே சிலம்பு' என்ற தனிப்பாடலிற் சொல்லப்பட்டதும் இந்த அம்பரே" என்று அந்நகரத்தின் சிறப்பை விரித்துச் சொல்லி வந்தார்.
அப்போது சில நாட்கள் உடன் இருந்து இவரிடம் சில நூல்களைப் பாடங்கேட்டேன். இவர் குறிப்பிட்டபடி அங்கே இருந்த குழந்தைவேற்பிள்ளை யென்னும் கனவானுக்குத் திருவிடைமருதூருலாவைப் பாடஞ்சொன்னேன். அது முற்றுப்பெற்ற பின்பு இவரே சில நூல்களை அவருக்குப் பாடஞ் சொல்லி வந்தார்.
கொங்குராயநல்லூர் சென்றது.
ஒருநாட் காலையிற் பக்கத்திலுள்ளதாகிய கொங்குராயநல்லூரில் இருந்த ஒரு வேளாளப் பிரபுவின் வீட்டிற்கு அவருடைய விருப்பத்தின்படி இவர் சென்றார். அப்பொழுது அவர் குமாரராகிய ஐயாக்கண்ணுப் பிள்ளைக்கு முத்துவடுகநாத தேசிகரென்னும் வித்துவான் தமிழ்ப்பாடஞ் சொல்லிக்கொண்டிருந்தார். அத் தேசிகர் இலக்கண விளக்க ஆசிரியர் பரம்பரையில் இருந்த ஒரு பெரியாரிடம் முறையே பாடங்கேட்டுத் தேர்ந்தவர்; வடமொழியில் தர்க்க சாஸ்திரத்திலும் காவிய நாடகங்களிலும் நல்ல பயிற்சி யுடையவர்; நன்மதிப்புப் பெற்றவர்.
மேற்கூறிய பிரபு இவரைப் பார்த்துத் தம் குமாரரைப் பரீட்சிக்கும்படி கேட்டுக்கொண்டார்; "ஏதாவது ஒரு பாட்டுச் சொல்லப்பா" என்று இவர் வினாவினர். அவர் திருவிளையாடலில் திருநாட்டுச் சிறப்பின் முதற் பாடலாகிய,
-
(கலிநிலைத்துறை) {9.19}
"கறைநி றுத்திய கந்தரச் சுந்தரக் கடவுள்
உறைநி றுத்திய வாளினாற் பகையிரு ளொதுக்கி ,
மறைநி றுத்திய வழியினால் வழுதியாய்ச் செங்கோல்
முறைநி றுத்திய பாண்டிநாட் டணியது மொழிவாம்"
அப்பால் முத்துவடுகநாத தேசிகர் இவரிடம் நாள்தோறும் பிற்பகலில் வந்து இலக்கணக் கொத்தைப் பாடம் கேட்டு முடித்தார். அம்பர்ப் புராணம் அரங்கேற்றி முடிந்த தினத்தில் அவர் இயற்றிய சிறப்புப்பாயிரத்துள்ள,
-
"சிவபெரு மாற்குச் சிறந்திடு பூசனை
நாடொறு மன்பால் நடத்திடு நல்லோன்
தொல்காப் பியமும் தொல்காப் பியமும்
பல்காற் கூர்ந்து பயின்றோ னின்றமிழ்
நூலுள் முழுதுணர் நுண்மாண் தேர்ச்சியன்
கோவையந் தாதி குலவுசீர்ப் புராணம்
பிள்ளைத் தமிழ்முதற் பிரபந் தம்முள
முழுது மியற்றிய மூதறி வாளன்.
இலக்கணக் கொத்தெனு மிருநூற் பொருளென்
கருத்துத் தெருட்டியென் கருத்தினுங் கண்ணினும்
நீங்கா தென்றும் நிகழ்புகழ்க் குன்றம்
.................. . .......... ......................
மாட்சியால் வாழ்மீ னாட்சி
சுந்தர னென்னுஞ் செந்தமிழ்க் கடலே”
நான் மீண்டும் காரைக்குச் சென்றது.
திருவிளையாடலைப் பூர்த்திசெய்ய வேண்டியவனாக இருந்தமையின், ”என்னை ஊருக்கு அனுப்பவேண்டும்" என்று நான் கேட்டுக்கொண்டேன். பழக்கம் இல்லாமலிருந்தும் மேற்கூறிய கிருஷ்ணசாமி ரெட்டியாரென்பவருக்கு இவர் ஒரு பாடல் இயற்றித் தலைப்பில் அமைத்து, "திருவிளையாடற் புராணத்தை விரைவிற் பூர்த்தி செய்வித்துச் சாமிநாதையரை இங்கே அனுப்பினால் எனக்குத் திருப்தியாயிருக்கும்" என்று ஒரு கடிதம் எழுதுவித்துத் தந்தார். நான் விடைபெற்றுச் சென்று காரை சேர்ந்து அந்த ரெட்டியாரிடம் கடிதத்தைச் சேர்ப்பித்தேன். அவர், "நான் அறியாதவனாக இருந்தும் என்னையும் ஒரு பொருட்படுத்திப் பிள்ளையவர்கள் கடிதம் எழுதினார்களே; பாக்கியசாலியானேன்; இதற்குக் காரணம் உங்கள்பால் அவர்களுக்குள்ள அன்பே" என்று வியந்தனர்; கடிதத்திற் கண்டவாறே என்னை விரைவில் அனுப்ப அவர் முயன்று வருவாராயினர்.
அம்பர்ப்புராண அரங்கேற்றம்.
நல்ல தினம் பார்த்து அம்பர்ப் புராணம் அரங்கேற்றத் தொடங்கப்பெற்றது. அதனை அறிந்து பல வித்துவான்களும் கனவான்களும் பல ஊர்களிலிருந்து வந்து நாள்தோறும் கேட்டு வருவாராயினர். பழைய மாணாக்கராகிய [8] சொக்கலிங்க முதலியாரென்பவர் அங்கே வந்து உடனிருந்து இவருக்கு ஆக வேண்டிய காரியங்களைக் கவனித்துச் செய்து வருவாராயினர். அரங்கேற்றம் நிறைவேறிய தினத்தன்று சிறப்புடன் புராணச் சுவடி ஊர்வலம் செய்யப்பெற்றது. பிள்ளையவர்களுக்கு வேலாயுதம் பிள்ளை தம்முடைய குடும்பத்தாருடன் சேர்ந்து தக்க ஸம்மானஞ் செய்தார். அப்போது உடனிருந்த மாணாக்கர்களும் பிறரும் வேலாயுதம் பிள்ளையையும் பிள்ளையவர்களையும் நூலையும் பாராட்டிச் சிறப்புக்கவிகள் இயற்றிப் படித்தார்கள்.
சிவராமலிங்கம் பிள்ளை.
அன்றைத்தினத்தில் தற்செயலாகத் திருவனந்தபுரம் வலிய மேலெழுத்துச் சிவராமலிங்கம் பிள்ளை யென்பவர் சிவஸ்தல யாத்திரை செய்து கொண்டே அங்கே வந்து ஸ்வாமி தரிசனஞ் செய்து விட்டுப் புராணப் பூர்த்தி விழாவையும் கண்டு மகிழ்ந்து இப்புலவர்திலகருக்குத் தம்மாலியன்ற ஸம்மானத்தைச் செய்து வேறு ஸ்தல தரிசனத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். [9]திருநணா வென்பது இன்ன பெயரால் வழங்குகின்றதென்பது அவருக்கு விளங்கவில்லை. அதனையும் சில தேவாரங்களுக்குப் பொருளையும் அவர் இவர்பால் கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அம்பர்ப் புராணம் 15 - படலங்களையும் 1007 - செய்யுட்களையும் உடையது. சோமாசிமாற நாயனார் வரலாறும் கோச்செங்கட் சோழநாயனார் வரலாறும் இப்புராணத்தில் உள்ளன. அப்பகுதிகள் இவருக்கு நாயன்மார்கள்பாலுள்ள பேரன்பையும் சிறிய வரலாற்றையும் விரிவாக அமைத்துப்பாடும் வன்மையையும் புலப்படுத்தும். இந்நூலிலிருந்து சில செய்யுட்கள் வருமாறு:
(முருகக்கடவுள் துதி) (விருத்தம்) {9.20}
"வள்ளியபங் கயக்கிழவன் முடிகொடுத்த லொடுவணங்கி மற்றை வானோர்
தெள்ளியபொன் முடிகொடுத்த புறச்சுவட்டுப் பொலிவினொடும் சிறிய நாயேம்
கொள்ளியசூட் டலினெமது முடிகொடுத்த வகச்சுவடும் குலவக் கொள்ளும்
ஒள்ளியகை காலொடம ரொருமுருகப் பெருமாளை உன்னி வாழ்வாம்."
-
(சேக்கிழார் துதி) {9.21}
"ஓங்கு சைவத் துயர்பரி பாடையும்
வீங்கு பேரொளிப் பத்திசெய் மேன்மையும்
தேங்கு பேறுந் தெரித்தருள் சேக்கிழான்
பாங்கு சேர்மலர்ப் பாதம் பரசுவாம்."
(ஆக்குவித்தோர்) {9.22}
"சொற்கொண்ட திருவம்பர் நகர்புரக்குங் கோமான்
தூயகங்கா குலன்மேழித் துவசன்மணக் குவளை
கற்கொண்ட புயத்தணிவோ னிராமலிங்க வள்ளல்
கனதவத்தில் வந்துதித்த வேளாளர் பெருமான்
விற்கொண்ட புருவவய லார்பொல்லா னென்று
விளம்புநல்லா னல்லொழுக்க முருக்கொண்டா லனையான்
நற்கொண்டல் பொருங்கரத்தான் சைவசிகா மணிநன்
னாவலர்கொண் டாடுவே லாயுதபூ பாலன்."
{9.23}
"பெருமையிற் பொலியு மம்பர்ப் பெருந்திருக் கோயின் மேய
கருமையிற் பொலியுங் கண்டக் கடவுளர் திருப்பு ராணம் -
அருமையிற் பாடு கென்ன வடமொழி யனைத்து மாராய்ந்
தொருமையிற் பாட லுற்றேன் தமிழினா லுரைம றாதே."
(அவையடக்கம்) {9.24}
“செறிகுறி லுடையைந் தோடு குறிலிலா விரண்டுஞ் சேர்த்து
மறிவினெட் டுயிரே யென்று மாத்திரை நோக்கிக் கொள்வார்
அறியிய லுடைய பாவோ டியலிலா வடியேன் பாவும்
குறியிலான் சரிதநோக்கிக் குறிகொள்பா வென்றே கொள்வார்."
(அம்பர் நகர்ச் சிறப்பு)
(கொச்சகக் கலிப்பா) {9.25}
“பூமேவு தமிழரும்பும் பொதியவரைக் காலரும்பத்
தேமேவு மாந்தருவிற் செய்யபசுந் தளிரரும்பும்
காமேவு மகத்தூமங் கண்டுமுகி லெழுந்ததெனத்
தாமேவு சிறைமஞ்ஞை நடமாடுந் தனியம்பர்."
(சோமாசிமாற நாயனார் யாகம் செய்ய எண்ணுதல்) {9.26}
"இகமொன்று களிப்படைய வீரிரண்டு சூழநடு
முகமொன்று கொண்டபிரான் மொய்பனிகூர் வான்றடவும்
நகமொன்று மங்கையொடு நண்ணியவி யுணாக்கொள்ள
மகமொன்று செயல்குறித்தார் மாதவத்து மாறனார்."
(மாற நாயனார் வழிபடு படலம், 1, 20.)
(பஞ்சகால வருணனை)
(விருத்தம்) {9.27}
"மாறுவேண் டினரலர் மள்ளர் மாதவப்
பேறுவேண் டினரலர் பெரிய ராடுதற்
காறுவேண் டினரல ரந்த ணாளருண்
சோறுவேண் டினர்பலர் துறையு ளார்களும்."
{9.28}
"ஒருவருண் டிடுபொழு தொருவ ரீர்ப்பர்மற்
றிருவரு மீர்ப்பர்மிக் கிவர்க லாய்த்திட
மருவரு மயலுளார் வந்து பற்றுவார்
பெருகுவற் கடம்புரி பெற்றி யென்சொல்கேன்."
[வற்கடம் – பஞ்சகாலம்]
(பஞ்ச நீக்கம்) {9.29}
"உழவொலி யெழுந்தன வுறுசெய் யெங்கணும் ,
முழவொலி யெழுந்தன மொய்த்த வில்லெலாம்
மழவொலி யெழுந்தன வானு நாணுற
விழவொலி யெழுந்தன மேய கோயிலே."
(நந்தன் வழிபடு படலம், 116, 119, 138)
அம்பர்ப் புராணம் அரங்கேற்றிய பின்பும் இவர் அம்பரிலேயே சிலதினம் இருந்தார்.
சுப்பிரமணிய தேசிகருக்கு எழுதிய விண்ணப்பம்.
அங்கே இருக்கும் நாட்களுள் ஒருநாள் இவர் ஒரு ஸ்தல தரிசனத்திற்குச் சென்றிருந்தார். சென்றபொழுது அத்தல விசாரணைக் கர்த்தரும் ஓர் ஆதீனத் தலைவருமாகிய ஒருவர் இவரைச் சிறிதும் மதியாமலும், இவரை இன்னாரென்று அங்கே உள்ளவர்கள் எடுத்துச் சொல்லவும் கவனியாமலும் தம்முடைய பெருமைகளை மட்டுமே பாராட்டிக்கொண்டு இவரை மதியாமலே இருந்து விட்டார். அப்பால் ஸ்வாமி தரிசனம் செய்துகொண்டு இவர் அம்பருக்கு வந்தார்.
விசாரணைக் கர்த்தரைக் கண்டு பேசி அளவளாவி வரவேண்டுமென்று எண்ணியிருந்த இவருக்கு அவருடைய இயல்பு வருத்தத்தை உண்டாக்கியது. ஓர் ஆதீன கர்த்தராக இருப்பவர் பிறரை மதியாமலும் வந்தவர்களை விசாரியாமலும் இருப்பதைப் பார்த்த இவருக்கு எல்லா விதத்திலும் உயர்ந்த நிலையில் இருந்து விளங்கும் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய ஸௌலப்யகுணம் ஞாபகத்துக்கு வந்தது. எந்த வித்துவான் வந்தாலும் முகமலர்ந்து ஏற்றுப் பேசி ஆதரிக்கும் அவருடைய பெருந்தன்மை இவருடைய மனத்தை உருக்கியது. "நிழலருமை வெய்யிலிலே நின்றறிமின்" என்பது உண்மையல்லவா?
உடனே இவர், அம்பர்ப்புராண அரங்கேற்றம் பூர்த்தியானதையும் விரைவில் வந்து தரிசனம் பண்ணிக் கொள்ள எண்ணியிருப்பதையும் புலப்படுத்தி ஒரு விண்ணப்பக் கடிதம் சுப்பிரமணிய தேசிகருக்கு எழுதி ஒருவர்வசம் அனுப்பினார். அதன் முதலில் இவர் எழுதுவித்த பாடல் வருமாறு :
-
(விருத்தம்) {9.30}
"ஒப்புயர்வில் லவன்சிவன்மூன் றும்முடைமை யாலிரண்டும் ஒன்று மேற்றோர்
தப்பறத்தாழ்ந் தவரெனல்தேர்ந் தனந்திருவா வடுதுறைநற் றலத்துள் வார்தம்
வைப்பனைய சுப்பிரம ணியகுரவன் றன்பெயரை வகித்து ளாரை
எப்படியும் விலக்கலின்மற் றிவன்மூன்று மிலனென்றே இயம்பு வோமே."
[மூன்று - சிருஷ்டி முதலிய மூன்று தொழில்கள். மூன்றும் இலன்; மூன்று - ஒப்பு, உயர்வு, தாழ்வு]
திருவாவடுதுறைக்குத் திரும்பியது.
அம்பர்ப்புராணம் அரங்கேற்றப்பெற்றபின் சில ஸ்தலங்களுக்குப் போய் ஸ்வாமி தரிசனம் செய்து வரலாமென்று நினைத்திருந்தார். இவருக்கு ஒரு வகையான சரீரத்தளர்ச்சி ஏற்பட்டமையால் இவர் அவ்வாறு செய்வதை நிறுத்திக்கொண்டு திருவாவடுதுறைக்கே போய்ச்சேர எண்ணினார். வேலாயுதம் பிள்ளை முதலியவர்கள் தங்களுடைய பேரன்பையும் இவருடைய பிரிவால் உண்டான துயரத்தையும் புலப்படுத்தினார்கள். பின்னர் இவர் எல்லோரிடத்தும் விடைபெற்றுக்கொண்டு மாணாக்கர்களுடன் திருவாவடுதுறையை அடைந்தார்.
-------------
[1] பின்பு கிடைத்தமையால் இச்செய்யுள் பிள்ளையவர்கள் பிரபந்தத் திரட்டிற் பதிப்பிக்கப் பெறவில்லை.
[2] "இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு " (திருக்குறள்.)
[3] மீ. பிரபந்தத்திரட்டு, 3370 - 3408.
[4] மீ. பிரபந்தத்திரட்டு, 21 - 30.
[5] இவர் பெயர் வேலுப்பிள்ளையெனவும் வழங்கும்.
[6] திருநா. திருநாகைக்காரோணம்.
[7] "அரிசிலம் பொருபுன லம்பர் மாநகர்க், குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே", "ஐயகன் பொருபுன லம்பர்ச் செம்பியர், செய்யக ணிறைசெய்த கோயில் சேர்வரே", "அங்கணி விழவம ரம்பர் மாநகர்ச், செங்கண லிறைசெய்த கோயில் சேர்வரே" திருநா.தே. திருவம்பர்ப் பெருந்திருக்கோயில்.
[8] இவர் பிற்காலத்தில் துறவியாகித் தொண்டர் சீர் பரவுவாரென்னும் நாமம் பூண்டு பலராலும் மதிக்கப்பெற்று விளங்கி வந்தார்.
[9] திருநணா-பவானியென வழங்கும் ஸ்தலம்.
--------------------
10. தேக அசெளக்கிய நிலை.
அக்காலத்தில் நான் என்னுடைய வேலைகளையெல்லாம் ஒருவாறு முடித்துக்கொண்டு திருவாவடுதுறைக்கு வந்து இவரைப் பார்த்தேன். பார்த்ததுமுதல் இவரது குறிப்பறிந்து முன்பு நான் செய்து வந்த காரியங்களைச் செய்து வரத் தொடங்கினேன்.
கம்பராமாயணம் பாடஞ்சொல்லியது.
பின்பு எங்களுடைய வேண்டுகோளின்படியே இவர் கம்பராமாயணத்தை ஆரம்பத்திலிருந்து பாடம் சொல்லத் தொடங்கினார். தேக அசெளக்கியத்தால் வழக்கமாக நடக்கிறபடி அதிகச் செய்யுட்கள் நடைபெறவில்லை. நூறு அல்லது நூற்றைம்பது செய்யுட்களே நடைபெற்றன. முக்கியமான இடங்களுக்குமட்டும் பொருள் தெரிந்து கொண்டு வந்தோம். அதைப் படித்துக்கொண்டே வருகையில் இவர், "இவை எவ்வளவு அழகாக இருக்கின்றன! இவையெல்லாம் யோசித்துப் பாடிய பாட்டுக்களா?" என்று மனமுருகிக் கூறிச் சில சமயங்களிற் கண்ணீர் விடுவதுமுண்டு.
சூரியனார் கோயில் ஸ்ரீ அம்பலவாண தேசிகர்.
பிள்ளையவர்களுக்கு இளமையில் கம்பரந்தாதியைப் பாடஞ் சொன்னவரும் திருவாவடுதுறை யாதீனத்தில் நெடுங்காலம் இருந்தவருமாகிய [1]அம்பலவாண முனிவர் பின்பு சூரியனார் கோயிலாதீனகர்த்தராக நியமிக்கப்பெற்று அம்பலவாண தேசிகரென்ற பெயருடன் விளங்கி வந்தார். முதுமைப்பருவமுடைய அவர் ஒருநாள் பரிவாரங்களுடன் திருவாவடுதுறை மடத்துக்கு விஜயம் செய்திருந்தார். பிள்ளையவர்கள் அவரைப் பற்றியும் அவர்பால் தாம் பாடங்கேட்டதைப்பற்றியும் எங்களிடம் முன்னரே சொல்லியிருப்பதுண்டு. ஆதலின் அந்தப் பெரியவரைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் எங்களுக்கு மிகுதியாக இருந்தது.
மடத்தின் ஓரிடத்தில் நானும் உடன்படிப்பவர்கள் சிலரும் பழைய பாடங்களை வாசித்துச் சிந்தித்துக்கொண்டிருந்தோம். கம்பராமாயண அச்சுப்பிரதிகள் எங்கள் கையில் இருந்தன. அப்பொழுது அவ்வழியே முற்கூறிய அம்பலவாண தேசிகர் வந்தார். நாங்கள் அவரை இன்னாரென்று அறிந்து எழுந்து நின்றோம். அவர் நாங்கள் புத்தகங்களை வைத்துப் படித்துக்கொண்டிருந்ததைப் பார்த்து, "என்ன வாசித்துக் கொண்டிருக்கிறீர்கள்? கையில் இருப்பது என்ன புத்தகம்?" என்று கேட்டார். "கம்பராமாயணம்" என்று விடை கூறினோம். உடனே அவர் வியப்பையடைந்து, "ஓகோ! இதைக்கூடப் ‘புக்குப்’ போட்டுவிட்டானா?” என்று கூறினார். அந்த நூல் அச்சிற் பதிப்பிக்கப்பட்டதற்காக ஆச்சரியப்பட்டனரென்று நாங்கள் அறிந்தோம். உலக இயல்பு அதிகம் அவருக்குத் தெரியாதென்பதையும் சிவபூஜை செய்தல் புஸ்தகங்களைப் படித்தல் முதலியவற்றில் நல்ல பழக்கமுள்ளவ ரென்பதையும் பிள்ளையவர்கள் மூலமாக நாங்கள் அறிந்திருந்தோமாதலின் அப்பொழுது அவர் கூறிய வார்த்தைகள் எங்களுக்குச் சிரிப்பை உண்டாக்கிவிட்டன. அவர் போகும் வரையில் சிரிப்பை அடக்கிக்கொண்டே இருந்து போனபின்பு சிரித்தோம். எல்லாப் புத்தகங்களையும் வெள்ளைக்காரர்களே அச்சிற் பதிப்பிப்பவர்க ளென்ற எண்ணம் அவருக்கு இருந்து வந்தது.
அம்பலவாண தேசிகர் தொடுத்த வழக்கு.
இந்த அம்பலவாண தேசிகர் தம்முடைய மடத்தைச் சார்ந்த மிராசுதார் ஒருவர் ஏதோ நிலத்தின் விஷயத்திற் சரியாக நடக்கவில்லையென்று எண்ணி அவர்மேல் நீதிஸ்தலத்தில் ஒரு வழக்குத் தொடுத்தனர். மிராசுதார்பால் பொறாமை கொண்ட சிலர் இந்த அம்பலவாண தேசிகரிடம் வந்து மிராசுதாரைப்பற்றிப் பலவகையாகக் குறைகூறி வழக்கை ஊக்கத்துடன் நடத்தும்படி தூண்டிவிட்டார்கள். அவர் வழக்கின்முறை, நியாயம் முதலிய விஷயங்களிற் சிறிதும் பயிற்சி இல்லாதவர்; பிறர் செய்யும் மரியாதையையும் உபசாரங்களையுமே அதிகமாக எதிர்பார்ப்பவர்; ஆதலால் அந்த மிராசுதார் தம்மிடத்தில் மரியாதையாக நடந்து கொள்ளாமையால் பெருங்குற்றம் செய்துவிட்டாரென்றும் அதற்குரிய தண்டனையை நியாயஸ்தலத்தின் மூலம் விதிக்கச் செய்வதே முறையென்றும் எண்ணிப் பிடிவாதமாக வழக்காடினார்.
தூண்டுபவர்களுடைய வார்த்தை அவருக்கு மேன்மேலும் ஊக்கத்தை உண்டாக்கியது. வழக்கின் இயல்பு தெரிந்தவர்களும் தக்கவர்களுமாகிய சிலர் அவர்பாற் சென்று அவ்வழக்குப் பயன்படாதென்று சொல்லிப் பார்த்தும் அவர் கேட்கவில்லை. மிராசுதார் இறுதியில் தமக்கே வெற்றியுண்டாகு மென்பதை நன்றாக அறிந்திருந்தாலும் இடையில் வீண் செலவாதலையும் அதனால் தமக்கு மிக்க துன்பமுண்டாகுமென்பதையும் எண்ணிச் சமாதானமாதற்காகப் பலவகையான முயற்சிகளைச் செய்தார். ஒன்றும் பலிக்கவில்லை.
பின்பு அவர் பிள்ளையவர்களைக்கொண்டு சொல்லச் செய்தால் ஒருகால் தேசிகர் உண்மையை உணர்வாரென எண்ணிச் சில கனவான்களைக்கொண்டு இக்கவிஞர்பிரானுக்குச் சொல்லும்படி செய்தார். அவர்கள் இவரிடம் வந்து விஷயங்களை விளக்கிச் சொன்னார்கள். உடனே இவர் சூரியனார் கோயில் சென்று அம்பலவாண தேசிகருக்குப் பலவாறு நியாயங்களை எடுத்துக் கூறி வழக்கை நடத்தாமல் நிறுத்திக்கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். தேசிகருடைய பிடிவாதம் குறையவில்லை. துர்மந்திரிகளுடைய போதனை அவர் மனத்தில் அதிகமாக உறைத்திருந்தது. இந்தக் கவிநாயகர் பின்பு திருவாவடுதுறைக்கு வந்து விட்டார் .
பின்னரும் வழக்கானது தொடர்ந்து நடைபெற்று வந்தது. வேறு சிலர் பிள்ளையவர்கள்பால் வந்து முறையிட்டனர். அப்பொழுது இக் குணமணி அம்பலவாண தேசிகருக்கு,
-
(விருத்தம்)
{10.1}
”வாய்ந்ததிரு வடிக்கன்பன் மீனாட்சி சுந்தரநா வலவன் மாற்றம்
ஆய்ந்த[2]கதி ரவன்றளியம் பலவாண தேசிகன்பே ரருளின் ஓர்க
வேய்ந்தவழக் கால்வீணே பொருட்செலவா மெனல்விளம்ப வேண்டுங் கொல்லோ
ஆய்ந்தசிலர் சொற்படிச மாதான மாதன்மிக அழகி தாமே"
என்ற செய்யுளை எழுதி யனுப்பினார். அதனைப் பார்த்து அவர் சிறிது நேரம் யோசித்தார்; "மகாவித்துவானும் நமக்கு வேண்டியவரும் மதிப்புப் பெற்றவருமாகிய இவருடைய வார்த்தையை அவமதிக்கலாமா?" என்று எண்ணினார்.
இத்தகைய சந்தர்ப்பங்களில் தூண்டிவிட்டு வாதிப்பிரதிவாதிகளுக்குள் மேன்மேலும் மனஸ்தாபத்தையும் கலகத்தையும் விளைவித்து அதனால் வரும் வருவாயால் பிழைக்கும் இயல்புடைய சிலர், "புராணம் பாடுவதற்குத்தான் மகா வித்துவானேயல்லாமல் வியாஜ்ய விஷயங்களில் அவருக்கு என்ன தெரியும்? தமிழ்ப் பாடல்களிற் சந்தேகம் இருந்தால் அவர் சொல்வதைக் கேட்கலாம். சட்ட விஷயத்தில் அவர்பால் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன இருக்கிறது? ஸந்நிதானத்தில் தொடுத்த வழக்கைப் பாதியில் நிறுத்திக்கொண்டால் பிரதிவாதியினுடைய கொட்டம் எப்படி அடங்கும்? செலவையும், தப்பு வழக்கென்பதையும் எண்ணிப் பயந்து நிறுத்திக்கொண்டார்களென் றல்லவோ ஊரார் கூறுவார்கள்? இன்றைக்கு இந்த வழக்கில் இப்படிச் செய்து விட்டால் நாளைக்கு வேறொருவன் வேண்டுமென்றே அக்கிரமம் பண்ணுவான். 'கொட்டினால் தேள், கொட்டாவிட்டால் பிள்ளைப்பூச்சி' என்பது போலக் கொஞ்சம் சூடு போட்டு வைத்தால் தானே இவர்களெல்லாம் அடங்கியிருப்பார்கள்? பெரிய இடத்தை எதிர்க்கக் கூடாதென்பதை இவர்கள் எப்படித்தான் உணர்ந்து கொள்வது? நம்முடைய கட்சியில் நியாயம் இருக்கும்போது ஸந்நிதானத்தில் யோசிப்பதற்கு என்ன இருக்கிறது? பத்துப் பேர் பத்து விதம் சொல்வார்கள். ஆதீன நிர்வாகப் பொறுப்பு அவர்களுடையதா? ஸந்நிதானத்தினுடையதா?" என்று பலவகையில் தூபம் போட்டார்கள். பாவம்! பெரியவருக்கு அவர்களுடைய மாய வார்த்தைகள் உண்மையாகவே பட்டன. வழக்கைப் பின்னும் நடத்திவந்தார். வழக்கின் முடிவில் பலர் எதிர்பார்த்தபடியே தேசிகர் பக்கம் அபஜயந்தான் ஏற்பட்டது. திருவாவடுதுறைக்கு வந்த சில பிரபுக்கள் இந்தச் செய்தியை இவருக்கு அறிவித்தனர். இப் புலவர்கோமான் கேட்டு, "அம்பலவாண தேசிகரவர்கள் பரமஸாது; திருவாவடுதுறையில் இருக்கும்போது பூஜையும் புஸ்தகமுமே அவர்களுக்குத் தெரியும். உலக வழக்கமே தெரியாது. இப்பொழுது ஆதீனத் தலைமை பெற்றவுடன் அவ்வழக்கம் எப்படிப் புதிதாகத் தெரியவரும்? பிடிவாதமும் கடின சித்தமும் இப்பொழுது உண்டாயிருக்கின்றன. பணம் பண்ணும் வேலை அது; ' [3]அறநிரம்பிய அருளுடை யருந்தவர்க்கேனும் , பெறலருந்திருப் பெற்றபின் சிந்தனை பிறிதாம்' என்று சொன்ன கம்பர் வாய்க்குச் சர்க்கரை போடவேண்டும்" என்று சொன்னார்.
சிங்கப்பூர் நாராயணசாமி நாவலர்.
சிங்கப்பூரில் நாராயணசாமிநாவலரென்னும் ஒருவர் இருந்தார். அவர் இவருடைய புலமைத் திறத்தைப் பலர் வாயிலாக அறிந்தவர். இவருடைய பழக்கத்தைப் பெறவேண்டுமென்னும் விருப்பம் அவருக்கு மிகுதியாக உண்டு. ஆயினும் நேரிற்கண்டு பழகுவதற்கு இயலாத நெடுந் தூரத்தில் இருந்தவராதலின், கடிதங்கள் மூலமாகத் தம்மை அறிவித்துக்கொண்டார். இவருடைய பூஜைக்கு வேண்டிய பொருள்களையும் நல்ல பழங்களையும் சிறந்த பிற பொருள்களையும் அனுப்பிவந்தார். இவர் விஷயமாகச் செய்யுட்களும் எழுதியனுப்பியதுண்டு. கம்பராமாயணம் முதலியவற்றில் தமக்கு விளங்காத பகுதிகளை எழுதியனுப்பி இவரிடமிருந்து விடைபெற்றுத் தெரிந்து கொண்டனர்; தமக்கு வேண்டிய சில நூல்களை எழுதுவித்து வருவித்துக் கொண்டார்.
நோயின் தொடக்கம்.
அக்காலத்தில் இவருடைய காலிலும் அடிவயிற்றிலும் வீக்கத்தைத் தோற்றுவித்துக்கொண்டு ஒருவகையான நோய் உண்டாயிற்று; இவருடைய தேகம் வரவரத் தளர்ச்சியடையத் தொடங்கியது; ஆகாரம் செல்லவில்லை. அதனால் இவர் நூலியற்றுதலும் பாடஞ் சொல்லுதலும் வழக்கம்போல் நடைபெறாமல் சில சமயத்துமட்டும் நடைபெற்று வந்தன.
[4] திருவிடைமருதூர்த் திரிபந்தாதி.
இவருடைய மாணாக்கர்களுள் ஒருவர் அப்போது திருவாவடுதுறை ஸ்ரீ மாசிலாமணியீசர்மீது திரிபந்தாதியொன்று இயற்றி அதைப் பல அன்பர்களுக்கு இடையே இருந்து இவரிடம் திருத்தம் செய்துகொள்வதற்காகப் படித்துக் காட்டினார். இவர் அதனை முற்றுங் கேட்டு முடித்தனர். பின்பு அவர் இல்லாத சமயம் பார்த்து, "இந்த அந்தாதி சிறிதும் நன்றாக இல்லை; மிகவும் கடினமாக இருக்கின்றது; சரியான இடத்தில் மோனையில்லை; பொருள் நயமுமில்லை; அவருடைய நிர்ப்பந்தத்தினால் ஒப்புக்கொள்ள வேண்டியிருந்தது. இவ்விடத்துவாக்கினால் இந்தத் தலத்திற்கு ஓரந்தாதி செய்துதர வேண்டும்" என்று மாணாக்கர்கள் எல்லாரும் இவரைக் கேட்டுக்கொண்டார்கள்.
இவர், "அவர் செய்திருக்கும்பொழுது இத்தலத்திற்கு நான் செய்வது முறையன்று; வேண்டுமானால் திருவிடைமருதூருக்குச் செய்வேன்" என்று கூறி அவ்வாறே செய்யத் தொடங்கி விநாயகர் காப்பை முடித்தவுடன் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருடைய துதி செய்ய ஆரம்பித்தார். அப்பொழுது நான், "ஐயா அவர்கள் உடையவர் பூஜை எழுந்தருளப் பண்ணிக் கொண்டபோது குரு ஸ்தோத்திரமாக ஒரு செய்யுள் செய்ததுண்டு; எனக்கு அது ஞாபகமிருக்கிறது" என்று சொன்னேன். அதைச் சொல்லச் சொல்லிக் கேட்டு அதைச் சேர்க்கும்படி சொன்னமையால் அப்படியே அது சேர்க்கப்பட்டது. சில தினங்களில் அவ்வந்தாதி முற்றுப் பெற்றது. அந்த நூல்தான் இறுதியில் இவராற் பாடப்பெற்றவற்றுள் முற்றுப் பெற்ற பிரபந்தம். அந்நூலிற் சில பாடல்கள் திருவிடைமருதூருக்குச் சென்றிருந்தபொழுது பாடப்பெற்றன.
அதன்பாலுள்ள சில செய்யுட்கள் வருமாறு :
-
(கட்டளைக் கலித்துறை)
{10.2}
"இளங்கொடி யான வுமைபாகன் வாழு மிடைமருத
வளங்கொடி யானஞ் செயேன்பூச நீர்த்துறை வாஞ்சைவையேன்
களங்கொடி யானலை வேனையை யோவென்ன கன்மந்திரு
வுளங்கொடி யான னினைத்ததென் னோவொன்று மோர்கிலனே." (28)
[இடைமருதவளங்கொள் தியானத்தை. கள்ளங்கொடு யான் அலைவேன், திருவுள்ளம் கொடி ஆனன் நினைத்தது; கொடி ஆனன் - விடைக் கொடியையுடையவன்.]
“சொல்லையப் பாக முறுவெ னுலாவுங்கொள் தூயவ" (93)
எனக் குறிப்பித்திருக்கின்றார்.
-
{10.3}
"திறப்பா வனைய மனமோ ரணுத்துணை செப்பலென்ன
மறப்பா வனைய மனமிலை யோவிடை மாமருதும்
சிறப்பா வனைய மருதருந் தேவியுந் தேவிடையும்
அறப்பா வனையக் கொடுவைக வென்னு ளடக்கியதே" (30)
[திறப்பாவனைய - பலதிறப்பட்ட பாவனைகளை உடைய. மறப்பாவம் - மிகக் கொடிய பாவம். நைய மனம் இலையோ - அணுவென்பவர்களுக்கு நைய மனம் இல்லையோ; நையவேண்டும் என்றபடி. சிறப்பா அனைய. தே - தெய்வத்தன்மை. அறப்பாவை வனையக்கொண்டு; கொடு: தொகுத்தல்விகாரம். மனம் அடக்கியது.]
இங்ஙனம் விநாயகர் முதலியோர் தனித்தனியே சிறப்புற்று விளங்கும் ஸ்தலங்களையே பரிவார தேவதைகளுக்குரிய ஸ்தானங்களாகக் கொண்ட ஸ்தலம் வேறொன்றுமில்லை. இதனாலேதான் அடைமொழியின்றி மகாலிங்கமென்று வழங்கும் திருநாமம் இத்தலத்து மூர்த்திக்கே அமைந்துள்ளது. இங்ஙனம் பல வகையாலும் பெரியனவாயுள்ள தலத்தையும் மூர்த்தி முதலியவற்றையும் தியானத்தால் தன்பால் அடக்கியுள்ள மனத்தை அணுவென்பது பிழையென்னும் கருத்து இதில் அமைக்கப்பெற்றுள்ளது" என்று விரித்துக் கூறினார். நாங்கள் கேட்டு மகிழ்ந்தோம்.
[6] வண்டானம் முத்துசாமி ஐயர்.
அக்காலத்தில் அயலிடத்திலிருந்து வந்தவர்களில் பெரியோர்கள் சுப்பிரமணிய தேசிகரிடத்திலும் ஏனையோர் இவருடைய மாணாக்கர்களிடத்திலும் தாங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய நூல்களைப் பாடங்கேட்டுச் சென்றனர். குமாரசாமித் தம்பிரானிடம் முத்துசாமி ஐயரென்ற ஒருவர் படித்துக்கொண்டிருந்தார். அவருடைய ஊர் எட்டையபுரத்தைச் சார்ந்த வண்டானமென்பது. சூடாமணி நிகண்டிலுள்ள பன்னிரண்டு தொகுதிகளும் அவருக்கு மனப்பாடம் உண்டு. சில சிலேடை வெண்பாக்கள், சில அந்தாதிகள் முதலியவற்றை முறையாகப் பாடங் கேட்டார்.
இயல்பாகவே தமிழறிவுடைய குடும்பத்திற் பிறந்தவராகையால் நல்ல தமிழ்ப்பயிற்சியை யடைந்தார். அவர் பிறரிடத்திற் பேசுதல் மிக அருமை; பிறர் சொல்வதையும் முகங் கொடுத்துக் கேளார்; யாரோடும் கலந்து பேசார்; எப்பொழுதும் தனியே இருப்பதன்றி மெளனமாகவும் இருப்பார்; அகங்காரத்தினால் அவ்வாறிருந்தவரல்லர். அவருடைய இயல்பே அது. சிலேடையாகப் பேசுவார்; அவர் ஜனங்களோடு பழக விரும்பாதவராகையால் எல்லாரும் உண்ட பின்னரே மடத்தைச் சார்ந்த சத்திரத்தில் அகாலத்தில் வந்து ஆகாரம் செய்து கொள்ளுவார். அவருடைய நிலைமையை உத்தேசித்து எல்லோரும் அவரை, "வண்டானம் வந்தது, போயிற்று" என்று அஃறிணையொருமையாகவே வழங்குவார்கள். படித்த கோஷ்டிக்கு அவரிடம் மதிப்புக் கிடையாது. அவர் வஸ்திரம் அழுக்கு மலிந்திருக்கும்.
ஒருநாள் சத்திரத்தின் சுவரில் கீழேகண்ட பாடல் மாக்கல்லால் எழுதப்பட்டிருந்தது :
-
(விருத்தம்)
{10.4}
"இந்தவறச் சாலைதனி லேயிரவும் பகலும்
வந்தவரி முதன்மதிதம் வரைவாங்கிக் கொண்டே
அந்தணருக் கடிசிலிட யாதுமிலை யெனலால்
சுந்தரசுப் பிரமணிய தேவனிடம் சொன்மின்."
[வந்த அரி - வந்த அரிசி. மதிதம் - மோர்.]
அப்பொழுது குமாரசாமித்தம்பிரான், "வண்டானம் எழுதியிருக்கலாம்; அது பெரும்பாலும் அகாலத்திலேதான் சென்று உண்ணுவது வழக்கம்; தனக்கு ஆகாரம் சரியாக ஒன்றும் கிடைக்கவில்லையென்று சில சமயங்களில் என்னிடம் சொல்லியிருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும்" என்றார். சாப்பிடும் இடத்தில் விசாரிக்கையில் சமையற்காரர், வண்டானந்தான் ஏதோ நேற்றுக் கிறுக்கிக்கொண்டிருந்தது" என்றார். உடனிருந்தவர்களுக்கு அவரை எப்படியேனும் கண்டுபிடித்து அழைத்து வர வேண்டுமென்ற விஷயத்தில் ஊக்கம் உண்டாயிற்று. இரண்டு மூன்று பேர்கள் விரைந்து சென்று ஊருக்குள்ளே தேடிப் பார்க்கையில் எங்கும் அகப்படவில்லை. அப்பால் வடக்கு மடத்துத் தோட்டத்தில் ஒரு மரத்தின் அடியிலுள்ள மேடையில் ஏதோ யோசனை செய்து கொண்டு உட்கார்ந்திருந்தார். கண்டு அழைக்கையில் அவர் விரைவில் எழவில்லை. சென்றவர்கள் வலிய அவரை இழுத்துக்கொண்டுவந்து பிள்ளையவர்களுக்கு முன்னே நிறுத்தினார்கள்.
அவரை இவர் இருக்கச்செய்து, "இந்தப் பாடலைச் செய்தவர் யார்?" என்று கேட்டார். அவர், "நான் செய்யவில்லை" என்று கூறிவிட்டார். பின்னும் வற்புறுத்திக் கேட்கையில் அவர், "சரியாக நடந்து கொள்ளாமற் போனால் பின் என்ன செய்கிறது?" என்றார். குமாரசாமித் தம்பிரான், "நீ அகாலத்திற்போனால் உனக்கு என்ன கிடைக்கும்? உன்னுடைய தவறு அது" என்று கோபத்துடன் சொல்லுகையில், "சாமி, சும்மா இருக்க வேண்டும்; கோபித்துக் கொள்ளக்கூடாது" என்று பிள்ளையவர்கள் கையமர்த்திவிட்டு, "இந்தச் செய்யுளின் நடையைப் பார்க்கும் பொழுது, இதற்குமுன் இவர் பல பாடல்கள் செய்து பழகியிருக்கவேண்டுமென்று தோற்றுகின்றது. அதைப்பற்றி விசாரிக்க வேண்டும்" என்றார். விசாரித்ததில் அவர், ”யாதொன்றும் செய்ததில்லை" என்று அஞ்சிச் சொன்னார். "பாடுதலில் நீர் பழக்கமுள்ளவரென்பதை இப்பாடலே தெரிவிக்கின்றது; செய்திருந்தால் அச்சமின்றிச் சொல்லும்" என்று பின்னும் இவர் வற்புறுத்திக்கேட்கவே, அவர் பல திரிபு, யமகம், சிலேடை முதலியன தாம் செய்தனவாகச் சொல்லிக் காட்டினர். அவற்றுள் பிள்ளையவர்கள் செய்துள்ள, "துங்கஞ்சார்" என்ற நோட்டின் மெட்டில், தம்மை ஆதரித்த பிச்சுவையரென்பவர்மேல் இயற்றிய கீர்த்தனம் ஒன்றைச் சொன்னார்; "உச்சஞ்சார் வண்டானத் துறை பிச்சுவைய தயாநிதியே" என்ற அதன் பல்லவி மட்டும் என் ஞாபகத்தில் இருக்கிறது.
அவற்றைக் கேட்ட இக்கவிஞர்பெருமான் அவரைப்பார்த்து மிகவும் வருந்தி, "இவர் இவ்வளவு அழுக்கான வஸ்திரத்தை உடுத்திக்கொண்டு தமிழருமையறிந்த இந்த ஊரில் அநாதரவுடன் இருத்தல் மிகுந்த வருத்தத்திற்கு இடமாக இருக்கிறது" என்று சொல்லி வஸ்திரங்கொடுக்க வேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகர் விஷயமாக ஒரு செய்யுள் பாடும்படி சொன்னார். அவ்வாறே அவர் உடனே,
-
(விருத்தம்)
{10.5}
“மாசாரக் கவிநுவல்வோர் குறைகள்தமை யடியோடே மாற்ற வெண்ணித்
தூசார நிதியமுண வடிகள்தரல் தெரிந்துபெறத் துணிந்து வந்தேன்
ஏசார வறுமையெனுங் கொடும்பிணியா னெடுந்துயருற் றிருக்கின் றேற்கின்
றாசார மளித்தருள்சுப் பிரமணிய தேசிகமெய் யறிஞ ரேறே"
[மா சாரம் - மிக்க சுவையையுடைய. தூசு ஆரம் நிதியம் உணவு ஆகிய இவற்றை அடிகள் தருதலைத் தெரிந்து. ஏசு - பழிக்கப்படுதல். ஆசாரம் - ஆடை.]
என்னும் ஒரு செய்யுளைச் சொன்னார்.
இதைக்கேட்ட இவர் மகிழ்ந்தார். "இச் செய்யுளைச் சந்நிதானத்தினிடம் விண்ணப்பம் செய்யும்" என்று சொல்லி அவரை அனுப்பியதன்றி உடன் சென்று வரும்படி எனக்கும் உத்தரவு செய்தார். கேட்ட அவர் பிள்ளையவர்களது முன்னே நிகழ்ந்தவற்றையும் அறிந்து மகிழ்ந்து கரைபோட்ட இரண்டு ஜோடி வஸ்திரங்களை வழங்கி அவற்றைக் கட்டிக்கொண்டு பிள்ளையவர்களிடம் சென்று காட்ட வேண்டுமென்று கட்டளையிட்டார். அப்படியே உடுத்திக்கொண்டு பிள்ளையவர்களிடம் முத்துசாமி ஐயர் வரவே, இவர் கண்டு மகிழ்ந்தார்.
’இந்தியா மீனாட்சிசுந்தரம் பிள்ளை.’
ஒருநாள் இவருக்கு லண்டனிலிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் 'மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, இந்தியா' என்று மட்டும் விலாஸத்தில் எழுதப்பட்டிருந்தது. அது யாதொரு தடையுமின்றி இவருக்குக் கிடைத்தது. அதற்குக் காரணம் இவருடைய பெரும்புகழென்பதை அறிந்து மாணவர்களும் அன்பர்களும் மகிழ்ந்தார்கள். சுப்பிரமணிய தேசிகரும் இதனை யறிந்து பாராட்டினார்.
சுந்தரதாஸ பாண்டியருக்குச் சிறப்புப்பாயிரம் அளித்தது.
சேற்றூர் ஜமீன்தாராகிய முத்துசாமி பாண்டியருடைய குமாரரும் தமிழ்க்கல்வி கேள்விகளிற் சிறந்தவரும் ஆகிய சுந்தரதாஸ பாண்டிய ரென்பவருக்கும் திருவநந்தபுரம் அரசராயிருந்த ராமவர்மாவென்பவருக்கும் நட்புண்டு. ஒருசமயம் பாண்டியர் திருவநந்தபுரத்து அரசர் மீது ஒரு வண்ணம் பாடினார். அதற்குத் தக்க வித்துவான்களால் சிறப்புப் பாயிரம் பெறவேண்டுமென்பது அவருடைய விருப்பம். சேற்றூரிலிருந்த வித்துவான்கள், பிள்ளையவர்களிடமிருந்து பெற்றால் சிறப்பாக இருக்குமென்று தெரிவித்தார்கள். சுந்தரதாஸபாண்டியருக்கும் அங்ஙனம் பெற வேண்டுமென்னும் வேணவா உண்டாயிற்று. ஆனால், அவருக்கும் இக்கவிஞர்பிரானுக்கும் பழக்கமில்லை. அதனால் ஸ்ரீசுப்பிரமணிய தேசிகருக்கு அவ்வண்ணத்தை அனுப்பித் தம்முடைய விருப்பத்தையும் விண்ணப்பஞ் செய்து கொண்டார். தேசிகர் பிள்ளையவர்களிடம் அதனை அளித்தனர். இவர் அவர் கட்டளைப்படியே உடனே அந்த வண்ணத்தைச் சிறப்பித்து ஐந்து செய்யுட்கள் இயற்றி யனுப்பினார். அவற்றில் திருவநந்தபுர ஸமஸ்தானத்தைப்பற்றிச் சொல்லுகையில், 'இந்தக் கலிகாலத்தில் மற்றத்தேசங்களில் ஒரு காலால் நடக்கும் தர்மமாகிய ரிஷபம் நான்கு காலாலும் நடக்கும் இடம்' என்னும் கருத்தை அமைத்திருந்தார். அன்றியும் வண்ணத்தின் இலக்கணங்களையும் புலப்படுத்தியிருந்தார். அச்செய்யுட்களைச் சுப்பிரமணிய தேசிகர் சுந்தரதாஸ பாண்டியருக்கு அனுப்பினார். அவற்றைப் பெற்ற அவர் பிள்ளையவர்கள் தம்மை அறியாமலிருந்தும் தம் பாடலை மதித்துச் சிறப்புப்பாயிரம் அளித்ததைப் பாராட்டி நேரே இக்கவிஞர்பிரானுக்குத் தம் வந்தனத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியனுப்பினார்.
[7] ஸ்ரீ சிவஞான யோகிகள் சரித்திரம்.
சிவஞான யோகிகள் சரித்திரத்தைத் தமிழ்ச் செய்யுளாக இயற்றவேண்டுமென்றும் அதில் ஆதீனத்தின் பரம்பரை வரலாறுகள் முறையே கூறப்பட வேண்டுமென்றும், ஆதீனத்து அடியார்கள் பலர் நெடுநாளாக விரும்பியதை யறிந்து சுப்பிரமணிய தேசிகர் இவருக்குக் குமாரசாமித் தம்பிரான் மூலமாகத் தெரிவித்தார். அங்ஙனம் செய்யவேண்டுமென்று தமக்கு நீண்ட நாளாக எண்ணம் இருந்ததென்றும் கட்டளையிட்டது அனுகூலமாயிற் றென்றும் சொல்லிச் செய்வதற்கு இவர் உடன்பட்டார்.
கச்சியப்ப முனிவருடைய நூல்களில் இவர் மிக்க மதிப்பு வைத்துப் படித்தும் பாடஞ் சொல்லிக்கொண்டும் வந்தவராதலால், அவரிடம் இவருக்குப் பக்தி அதிகம். அவர் சிவஞான யோகிகளைப் போலவே புலமை வாய்ந்தவரென்பதும் உடன் படித்தவரென்பதும் இவருடைய கருத்து. இதனை அடிக்கடி எங்களிடத்தும் பிறரிடத்தும் இவர் சொல்லி வருவதுண்டு. சிவஞான யோகிகள் இயற்றிய செய்யுள் நூல்களிலும் வசன நூல்களிலும் மிக்க பயிற்சியுடையவராகையால் அவருடைய பயிற்சி உயர்ந்த தென்பதும், கச்சியப்ப முனிவர் அவருடைய மாணாக்கரென்பதும் சுப்பிரமணிய தேசிகருடைய கருத்து.
இந்த விவாதம் நெடுநாளாக நிகழ்ந்து வந்ததுண்டு. இரு திறத்தாரும் தம்பால் வந்தவர்களோடு பேசிக்கொள்வதேயன்றிச் சந்தித்தபொழுது நேரே தம்முள் பேசிக் கொண்டதில்லை. இவர், சிவஞான யோகிகளோடு கச்சியப்ப முனிவர் படித்தவரென்று பாடிவிடுவாரென நினைந்து கச்சியப்ப முனிவரைச் சிவஞான யோகிகளுடைய மாணாக்கரென்று பாடவேண்டுமென்று தேசிகர் இவருக்குத் தெரிவித்தார். அதற்கு இவருடைய மனம் உடன்படவில்லை. அது தெரிந்த தேசிகர் மடத்துப் புத்தகசாலையிலிருந்த பழஞ்சுவடி ஒன்றை எடுத்து வரச்செய்து அதில் கச்சியப்ப முனிவர் சிவஞான முனிவருடைய மாணாக்கரென்று குறிப்பிட்டிருந்த,
-
(விருத்தம்)
{10.6}
"ஏர்தரு சாலிவாகன சகாத்தம்
ஆயிரத் தெழுசதத் தொருபத்
திரண்டின்மேற் சாதா ரணவரு டத்தில்
இயைதரு சித்திரைத் திங்கள்
சார்தரு தேதி பத்தினோ டொன்று
தகுசெவ்வாய் வாரம்பூ ருவத்திற்
சத்தமி புனர்பூ சத்திரு நாளில்
தவலருங் கும்பலக் கினத்திற்
சீர்தரு துறைசை வாழ்சிவ ஞான .
தேவன்மா ணாக்கரின் முதன்மை
திகழ்ந்துள கச்சி யப்பமா முனிவன்
திருப்பெருங் காஞ்சியி லெய்திச்
சேர்தரு மடியார் தமதக விருளைத்
தினகரன் முன்னிரு ளென்னத்
திருந்துதன் னருளா லகற்றிவீ டுறுத்திச்
சிறந்தபூ ரணமடைந் தனனே"
என்ற ஒரு செய்யுளைப் படித்துக் காட்டச்செய்தார்.
அப்பால் இவர் தேசிகருடைய நோக்கத்தை அறிந்து அங்ஙனமே செய்வதாக ஒப்புக்கொண்டு அக்கருத்தை அமைத்துப் பாடுவாராயினர். அது சிவஞான யோகிகள் சரித்திரத்திலுள்ள,
-
(விருத்தம்)
{10.7}
[8] "திருக்கிளர் முனிவ னாஞ்சத் தியஞான தரிச னிக்குக்
கருக்கிளர் தரஞ்சா ராத பரஞ்சோதி கிடைத்த காட்சி
உருக்கிளர் துறைசை யெங்கள் சிவஞான யோகிக் குண்மைப்
பொருட்கிளர் கச்சி யப்ப முனிவரன் புணர்ந்த தொக்கும் "
என்னும் செய்யுளால் விளங்கும். அந்நூல் திருவாவடுதுறையில் தொடங்கப்பெற்றுத் திருவிடைமருதூருக்கு அசெளக்கிய நிவிர்த்திக்காக இவர் போயிருந்தபொழுதும் செய்யப்பட்டு வந்தது; நடுநாட்டு வருணனையிற் பத்துப்பாடல்கள் வரையில்தான் நடைபெற்றது; எழுதியவன் யானே. அப்பால் தேகத் தளர்ச்சி இவருக்கு அதிகரித்து வந்தமையால் மேலே செய்யப்படாமற் போயிற்று.
அந்நூலில் இவர் செய்த இறுதிச் செய்யுள்,
-
(கொச்சகக்கலிப்பா)
{10.8}
[9] "மருவுலகங் களிதூங்க [10] வண்சமயா சாரியராம்
இருவர்களுஞ் சந்தானத் திருவர்களு மவதரிக்கப்
பெருகுதவஞ் செய்ததெனிற் பிறங்குவள நடுநாட்டின்
அருகுதவிர் சிறப்புரைக்க வடியேனா லாகுவதோ”
என்பது. அதன் இறுதியடியில் உள்ள ”அடியேனாலா குவதோ" என்ற தொடர் மேலே இவர் இயற்ற இயலாராயினாரென்பதைத் திருவருள் குறிப்பிக்கின்றதென்று எல்லாரும் பலநாள் கழித்துச் சொல்லத் தொடங்கினார்கள்.
அது குமாரசாமித் தம்பிரான் விருப்பத்தின்படி செய்யப்பெற்றதென்பதும், கச்சியப்பமுனிவரே அச்சரித்திரத்தைப் பாட வல்லவரென்பதும் பின்வரும் பாடல்களால் விளங்கும்:
-
(ஆக்குவித்தோர்)
(விருத்தம்)
{10.9}
"குலவுமுரு கக்கடவுள் கருணையினோ தாதனைத்தும் கூட வோர்ந்தே
உலவுபுகழ்க் குமரகுரு பரமுனிவ னுதித்தமர புதித்த மேலோன்
நிலவுபுக ழிலக்கணமு மிலக்கியமும் வரம்புகண்டோன் நிகரொன் றில்லோன்
கலவுசிறப் புத்தமநற் குணங்களெலா மோருருக்கொள் காட்சி போல்வான்."
{10.10}
"கூடுபுகழ்க் கோமுத்திக் குருநமச்சி வாயனருள் கொண்ட மேலோன்
பாடுபுகழ்ச் சித்தாந்த பர்டியமுற் றொருங்குணர்ந்த பான்மை யாளன்
நீடுபுகழ்த் துறவொழுக்கமந் தவறாது காத்தோம்பும் நெறியில் வல்லோன்
தேடுபுகழ் வளர்குமர சாமிமுனி வரன்முனிவர் செயசிங் கேறே."
(அவையடக்கம்)
{10.11}
"அன்னமுனி வரன்கனிவிற் சிவஞான யோகிவர லாறு முற்றும்
நன்னர்வள முறப்பாடித் தருகவெனச் சொற்றமொழி நலத்தை யோர்ந்தே
என்னவலி யுளமெனப்பா டுதற்கிசையேன் மறுப்பதற்கும் இசையே னேனும்
சொன்னமொழி மறாததிற மென்றொருவா றோதுதற்குத் துணிபுற் றேனால்."
{10.12}
"நலம்பூத்த தென்கலையும் வடகலையும் பணிசெய்சிவ ஞான யோகி
புலம்பூத்த வரலாற்றை யான்பாடப் புகுந்ததிறம் புலவோர் தேரின்
வலம்பூத்த விலாமுறிய நகைப்பரெனும் வருத்தமுமென் மனநீங் காதித்
தலம்பூத்த வஃதியற்றீர் தவிருதிரென் பாரொருவர் தமைக்கா ணேனே."
{10.13}
"ஏய்ந்தவிளம் பூரணர்சே னாவரையர் நச்சினார்க் கினியர் மேலும்
வாய்ந்தபரி மேலழகர் மயங்குசிவ ஞானமா தவத்தோன் சீர்த்தி
தோய்ந்தபுகழ்க் கச்சியப்ப முனிவர்பிரான் சொலிற்சொலலாம் சொல்லா
ரொன்றும்
பாய்ந்தநில வரைப்போர்மற் றகத்தியனு மகத்துவமாப் பாலிப் பானே"
{10.14}
"மிகப்பெரிய னாகியசீர்ச் சிவஞான முனிவரன்சீர் விளம்ப லாகும்
இகப்பின்மட முடையேனு மெவ்வாற்றா னென்னின்முனம் இருவர் தேறா
நகப்படிவ மாய்வளர்ந்த சோதியையா ராதனைசெய் நன்மை பூண்டோர்
உகப்பரிய மூன்றிழைநான் கிழைத்தீப மல்லாமல் உஞற்ற லுண்டோ
"திருவாவடுதுறைக்குச் சுந்தரலிங்க முனிவரென்பவராற் செய்யப்பெற்ற புராணம் ஒன்று உண்டு; இருந்தாலும் அது சிவஞான யோகிகளுடைய முறைப்படியே காப்பிய இலக்கணங்கள் அமையப்பெறவில்லை. அம்முறையில் ஸ்தல புராணங்கள் பாடிவரும் பிள்ளையவர்கள் இந்தத் தலத்திற்குப் புராணம் இக்காலத்திற்கு ஏற்றபடி செய்தால் நாம் அதற்காகவும் இதுவரையில் இங்கிருந்து சிறப்பித்து வந்ததற்காகவும் மூன்றுவேலி நிலங்கள் வாங்கித் தருவோம்" என்று சுப்பிரமணிய தேசிகர் சொல்லியனுப்பினார்; இவருக்கும் அங்ஙனம் செய்தலில் உடன்பாடே; அங்ங்னமே செய்யலாமென்றெண்ணியும் அஸெளக்கிய மிகுதியால் அதனைப் பாடத் தொடங்கவில்லை.
திருவாவடுதுறைச் சிலேடை வெண்பா.
தென்னாட்டிலிருந்து வந்த முதிய கவிராயர் ஒருவர் திருவாவடுதுறைக்குச் சிலேடை வெண்பா ஒன்றை இயற்றிக்கொணர்ந்து ஆதீனத் தலைவருக்கு அதனைப் படித்துக் காட்டினார். அதில் பல பொருளொரு சொல்லே சிலேடையாக அமைக்கப் பெற்றிருந்தது; ஒருவரும் பாராட்டவில்லை. ஆனாலும் வந்தவரைச் சும்மா அனுப்பக்கூடாதென்று நினைத்துத் தேசிகர் அவருக்கு ஸம்மானம் செய்து அனுப்பிவிட்டார். அதில் சில பாடல்களைக் கேட்ட தம்பிரான்களிற் சிலர், "சிவஞான முனிவர் முதலிய பெரிய கவிகள் எழுந்தருளியிருந்த இடமும், நீங்கள் பாடஞ் சொல்லிக்கொண்டும் நூல்களை இயற்றிக் கொண்டும் விளங்கும் இடமும் ஆகிய இந்தத் தலத்திற்குச் செய்யுள் செய்யும் ஆற்றலில்லாத அக்கவிராயரா சிலேடை வெண்பாச் செய்கிறது? உங்களுடைய அருமையான வாக்கினால் ஒரு சிலேடை வெண்பா இயற்றித் தரவேண்டும்" என்று கேட்டுக்கொள்ள அவ்வாறே இவர் இயற்றத் தொடங்கினார். அதிற் காப்புச்செய்யுளும் நூலில் ஒரு செய்யுளுமே இயற்றப்பட்டன. தேகம் வரவர மெலிவடைந்து வந்த காலமானபடியால் அந்நூல் முற்றுப்பெறவில்லை; காப்புச் செய்யுளின் முற்பாதியாகிய,
-
" சீர்வெண்பா மாலைத் திருவாவடுதுறையார்க்
கூர்வெண்பா மாலை யுரைப்பவே "
திருவிடைமருதூர் சென்றது.
அப்பால், கால் வீக்கம், அடிவயிற்று வீக்கம், தோள்களின் மெலிவு, அன்னத்துவேஷம் முதலியவை அதிகரித்து இவரை வருத்தின. வந்து பார்த்த வைத்தியர்கள் அதனை இரத்தபாண்டு வென்னும் நோயென்று சொன்னார்கள். அந்நோயைப் பரிகரித்தற் பொருட்டுச் சுப்பிரமணிய தேசிகர் திருவிடைமருதூருக்கு இவரை அனுப்பி அங்கேயுள்ள கட்டளை மடத்திலேயே தக்க வஸதி ஏற்படுத்தித் திருவிடைமருதூர் அரண்மனை வைத்தியர்களைக் கொண்டு பார்க்கும்படி செய்வித்தார்.
இரவில் ஆகாரஞ்செய்துகொண்டு இரண்டு நாளைக்கு ஒரு முறை திருவாவடுதுறையிலிருந்து சென்று நானும் பிறரும் இவரைப் பார்த்து வந்தோம்.
இவருக்கு இரவிற் பெரும்பாலும் நித்திரை இராது. அக்காலத்தில் பெரியபுராணம் முதலாகிய நூல்களிலுள்ள பாடல்களைப் படிக்கச் சொல்லியும் முத்துத்தாண்டவராயர், பாவநாச முதலியார், மாரிமுத்தா பிள்ளை முதலிய பெரியோர்கள் செய்த தமிழ்க் கீர்த்தனங்கள், அருணாசல கவிராயரியற்றிய இராமாயணக் கீர்த்தனம், நந்தன் சரித்திரக் கீர்த்தனம் முதலியவற்றைச் சொல்லச் சொல்லியும் கேட்டு இவர் பொழுது போக்குவார்,
மஹந்யாஸ ஜபம்.
தேக அசௌகரியம் இவருக்கு அதிகரித்தபொழுது சிறந்த வைதிகப் பிராமணர்களை வருவித்து அவர்களைக்கொண்டு யுவ வருஷம் புரட்டாசி மாதத்தில் ஸ்ரீ மஹாலிங்க மூர்த்திக்கு மஹந்யாஸ ஜபத்தோடு கால் மண்டலம் அபிஷேகம் முதலியனவும் இவர் செய்வித்தனர்; அதனாற் பிணி சிறிது நீங்கியும் சிலநாள் சென்றபின் திரும்பத்தோன்றி வருத்தத் தொடங்கிவிட்டது;
-
{10.15}
"ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்"
நாளுக்கு நாள் இவருடைய நல்லுடல் மெலிவுறுவதை யறிந்து, சுப்பிரமணிய தேசிகர் திருவிடைமருதூருக்கு விஜயஞ்செய்து ஸ்வாமி தரிசனஞ் செய்துவிட்டு மடத்திற்கு வந்து இவரைப் பார்த்தனர்; அப்பொழுது இவர் திடுக்கிட்டு எழுந்து இரண்டு கைகளையுஞ் சிரமேற் குவித்துக்கொண்டே ஒன்றும் பேசாமல் நின்றுவிட்டார். அவர் சற்று நேரம் நின்று கவனித்து, ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்ளும்படி அங்கேயுள்ளவர்களிடம் சொல்லிவிட்டுத் திருவாவடுதுறைக்குச் சென்றனர். ஆதீனகர்த்தர் இங்ஙனம் செய்வது வழக்கமல்லாமையால் எல்லோரும் வியப்புற்று இவர்பால் தேசிகருக்கு இருந்த நன்மதிப்பை நன்றாக அறிந்து பாராட்டினார்கள்.
திருவாவடுதுறைக்கு வந்தது.
வியாதி குணப்படாமையைத் தெரிந்து இவரைத் திருவாவடுதுறையிலேயே வந்திருக்கும்படி தேசிகர் இவருக்குத் திருமுகம் அனுப்பினார். அப்படியே இவர் திருவாவடுதுறைக்கு வந்துவிட்டார். பூஜை செய்வதற்கு முடியாமல் இவர் வருந்துவதை அறிந்த குமாரசாமித்தம்பிரான் நாள்தோறும் தம்முடைய பூஜையை முடித்துவிட்டு வந்து இவர் செய்துவரும் முறைப்படியே பூஜையை இவருடைய பார்வையிலேயே இருந்து செய்து பிரஸாதத்தை அளித்து வந்தார். அப்பொழுது சின்ன ஒடுக்கப்பணி பார்த்து வந்த சுந்தரலிங்கத் தம்பிரானென்பவர் தேசிகருடைய கட்டளையின்படி இவருக்கு எந்தச் சமயத்தில் எந்தப் பொருள் வேண்டுமோ அதனை விசாரித்து உடனுடன் சேர்ப்பித்து வந்தார்.
புதியவர்களாகப் பாடங்கேட்க வந்தவர்களுக்கு மாணாக்கர்களே பாடஞ்சொல்லி
வந்தார்கள்; கடினமான பாகங்களை மட்டும் இவரிடம் கேட்டுத் தெளிந்து கொள்வார்கள்.
இரவில் தேவாரம் திருவாசகம் முதலியவற்றைப் படிப்பித்துக் கேட்டு வருவார். கடினமான பதங்களைப்பற்றியோ விஷயங்களைப்பற்றியோ கேட்டால் சுருக்கமாக விடையளிப்பார்.
மாயூரம் சென்றது.
அப்பால் துலாமாதத்தில் தீபாவளி ஸ்நானத்திற்கு வர வேண்டுமென்று இவருடைய குமாரர் சிதம்பரம்பிள்ளை வந்து அழைக்கவே, மாயூரஞ் செல்லுதற்கு இவர் புறப்பட்டார். அதனை யறிந்த சுப்பிரமணிய தேசிகர் தீபாவளி ஸ்நானம் செய்த பின்பு தரித்துக் கொள்ளும்படி வழக்கம்போலவே அப்பொழுது இவருக்கும் உடனிருந்தவர்களுக்கும் வஸ்திரங்கள் கொடுத்து மேனாப் பல்லக்கை வருவித்துச் சௌக்கியமாக அதிற் செல்லும்படி செய்வித்து உடன் செல்லக் கூடியவர்களையும் அனுப்பினார். நான் மட்டும் இவருடைய கருத்தின்படியே திருவாவடுதுறையில் இருந்துகொண்டு இடையிடையே மாயூரம் சென்று பார்த்து வந்தேன்.
எனக்கு வஸ்திரம் வாங்கி அளித்தது.
தீபாவளிக்கு முதல்நாள் திருவாவடுதுறையில் மடத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மற்ற அன்பர்களுக்கும் தேசிகர் வஸ்திரம் அளிப்பது வழக்கம். நான் இருப்பது அவருடைய ஞாபகத்துக்கு வராமையால் எனக்கு வஸ்திரம் கொடுக்கப்படவில்லை. நானும் அதனைப் பெறவேண்டுமென்று முயலவில்லை. அதற்கு முன்னர்ப் பலமுறை பெற்றவற்றை நினைந்து அப்போது அளியாததைக் குறித்து வருந்தவுமில்லை. எனக்கு வஸ்திரம் கொடுக்கப்படவில்லை யென்பதை அப்பொழுது திருவாவடுதுறையிலிருந்து மாயூரம் சென்ற காரியஸ்தரொருவர் முகமாகத் தெரிந்து இவர் வருத்தமடைந்தார்.
துலா மாஸமானவுடன் இவர் திருவாவடுதுறைக்கு வர எண்ணியிருப்பது தெரிந்தமையால் கூட இருந்து அழைத்து வருதற்காக மாயூரம் சென்று இவரைப் பார்த்தேன். பார்த்தவுடன், "தீபாவளிக்கு மடத்திலிருந்து வஸ்திரம் கிடைக்கவில்லையாமே" என்று சொல்லிவிட்டுக் கடையிலிருந்து விலைகொடுத்து ஒரு புதிய பத்தாறு மடி வருவித்து மஞ்சள் தடவி என்னிடம் கொடுத்து அதைத் தரித்துக் கொள்ளவேண்டுமென்று சொன்னார். அப்படியே தரித்துக் கொண்டேன்.
இராமாயணப் புத்தகங்கள்.
அப்பால் சில தினங்கள் மாயூரத்திலேயே இருந்தேன். ஒரு நாள் கடைத்தெருவிற்குப் போய்ப் பார்த்தபோது ஒரு புஸ்தகக் கடையில் கம்பராமாயணம் ஆறு காண்டங்களும் உத்தர காண்டமும் இருந்தன. ஏழு ரூபாய் விலையென்று கடைக்காரர் சொன்னார். அதற்கு முன்பு அந்நூலைப் பாடங்கேட்கையில் புத்தகமில்லாமல் இரவற் புத்தகத்தை வைத்துப் படித்துக்கொண்டிருந்த எனக்கு அவற்றை வாங்கிவிட வேண்டுமென்ற அவா அதிகமாக இருந்தது. ஆனால் வாங்குதற்கோ கையிற் பணமில்லை. உடனே புறப்பட்டுத் திருவாவடுதுறைக்குச் சென்று அங்கே இருந்த என் சிறிய தந்தையாரிடம் (சிறிய தாயாரின் கணவரிடம்) ஏழு ரூபாய் கடன் வாங்கிக்கொண்டு வந்து அந்தப் புஸ்தகங்களை விலைக்குப் பெற்றுக்கொண்டேன். எனக்கு அப்போது உண்டான மகிழ்ச்சிசிக்கு அளவே இல்லை. உடனே சென்று பிள்ளையவர்கள் கையால் அவற்றைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்று நினைத்து இவரிடம் கொடுத்தேன். "என்ன புஸ்தகங்கள்?" என்றார். "இராமாயணம்; இவற்றை ஐயா அவர்கள் கையாற் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பது என்னுடைய விருப்பம்" என்றேன். "எப்படி இவை கிடைத்தன?" என்று இவர் வினவவே நான், "விலைக்கு வாங்கினேன்" என்றேன். "பணம் ஏது?" என்றபோது நடந்ததைச் சொன்னேன். இக்கவிச்சக்கரவர்த்தி புஸ்தகங்களை வாங்கிப் பார்த்துவிட்டு, "எதற்காகச் சிரமப்பட்டு விலை கொடுத்து வாங்க வேண்டும்? என்னிடம் சொல்லக் கூடாதா? என்னிடமுள்ள புத்தகங்களை எடுத்துக்கொள்ளலாமே" என்று சொல்லிவிட்டு அவற்றை எனக்கு அன்புடன் அளித்தார். எனக்கு ஒருவிதமான கவலையும் ஏற்படக்கூடாதென்று இவர் எண்ணியிருந்ததை இவருடைய அன்பார்ந்த செயல்களும் வார்த்தைகளும் புலப்படுத்தின.
திருவாவடுதுறைக்கு வந்தது.
அப்பால் மாயூரத்திலிருந்து மேனாவிலேயே இவர் திருவாவடுதுறைக்கு வந்தார். நானும் மற்றவர்களும் உடன் வந்துவிட்டோம்.
நோய் வரவர அதிகப்பட்டுக் கொண்டே வந்தது. வைத்தியர்கள் தக்க மருந்துகள் கொடுத்துவந்தும் அது தணியவே இல்லை. இவருக்கு விருப்பமுள்ள உணவுகள் இன்னவையென்று எனக்குத் தெரியுமாதலால், அக்காலத்தில் அவ்வூரில் இருந்த என் சிறிய தாயாரிடம் சொல்லி அவற்றைச் செய்வித்து எடுத்துச் சென்று இவருக்குக் கொடுத்து வந்தேன்; இவர் பிரியமாக உண்டு வந்தனர்.
நெல்லையப்பத் தம்பிரான் வெள்ளித்தொன்னை அளித்தது.
தம்மிடமிருந்த வெள்ளிப் பாத்திரங்கள் எல்லாவற்றையும் பூஜைக்கே இவர் உபயோகப்படுத்தி விட்டமையால் கஞ்சி பால் முதலியவற்றை உண்ணுவதற்குத் தக்க வெள்ளிப் பாத்திரம் இல்லை. நாங்கள் கேட்டுக்கொண்டபடி ஒரு வெள்ளித்தொன்னை செய்வித்து அனுப்ப வேண்டுமென்பதைக் குறிப்பித்து இவர் திருவிடைமருதூர்க் கட்டளை விசாரணைத் தலைவராக அப்போது இருந்த நெல்லையப்பத் தம்பிரானுக்கு ஒரு கடிதம் எழுதுவித்து, அதன் தலைப்பில்,
-
(விருத்தம்)
{10.16}
"எல்லையப்ப னாயவிதி யிவற்குமேற் போயவிது இவரே மாறச்
சொல்லையப்பன் மலங்கடிந்து துகளிலாச் சிவானந்தத தோயந் தோயத்
தொல்லையப்பன் றுறைசைநமச் சிவாயவப்பன் திருவடியே சூட்டுஞ் சென்னி
நெல்லையப்ப முனிவர்பிரா னிக்கடிதம் நோக்கிமகிழ் நிரம்ப மாதோ ?
[எல்லை அப்பனாய - யுகாந்தப் பிரளய வெள்ளத்தை உடையவனாகிய; அப்பு - நீர். விது - திருமால். சொல் ஐயம் ; சொல் லயமென்று பிரித்தலும் பொருந்தும்.]
என்னும் பாடலை இயற்றி அமைப்பித்து அனுப்பினார். உடனே அவர் தமது சம்பளத் தொகையிலிருந்து வெள்ளித்தொன்னை ஒன்று செய்வித்துக் கொடுத்தனுப்பினர். அது பின்னர் இவருக்கு மிக உபயோகமாக இருந்து வந்தது.
'கொடுப்பவன் கேட்பானா?'
மடத்திற்கு வருகிற பிரபுக்களும் வடமொழி தென்மொழி வல்லுநரும் ஏனையோரும் வந்துவந்து பார்த்து விட்டு இவருடைய தேக நிலைமையை அறிந்து மனம் வருந்திச் செல்வார்கள். ஒரு நாள் பெரிய உத்தியோகஸ்தர் ஒருவர் இவரைப் பார்த்தற்கு வந்தார்; அவர் இவருக்கு இளமையிலிருந்தே நண்பராக உள்ளவர். அவர் இவருடைய தளர்ச்சியை அறிந்து அருகில் வந்து இவரை நோக்கி, "ஐயா, இனித் தங்களைப்போன்ற மகான்களை எங்கே பார்க்கப் போகிறோம்? தமிழ் நாட்டிற்கும் இந்த மடத்திற்கும் அணிகலனாக விளங்கும் நீங்கள் இவ்வளவு மெலிவை யடைந்திருப்பது என் மனத்தை வருத்துகின்றது. நாங்கள் இனி என்ன செய்வோம்? தங்கள் விஷயத்தில் தக்க உதவி செய்ய வேண்டுமென்று நெடுநாளாக எனக்கு ஓரெண்ணம் இருந்து வந்தது. இப்போது அதனை விரைவில் செய்யவேண்டுமென்று தோற்றுகின்றது. என்ன செய்யச் சொன்னாலும் செய்யக் காத்திருக்கிறேன்; உத்தரவு செய்ய வேண்டும்" என்று வருந்திக் கேட்டுக்கொண்டனர். இவர் அவரைப் பார்த்து, "இங்கே என்ன குறைவு இருக்கின்றது? குறைவில்லாமல் ஸந்நிதானம் எல்லாம் செய்வித்து வருகிறது. ஏதேனும் குறை இருப்பதாகத் தெரிந்தாலல்லவோ உங்களிடம் நான் சொல்லுவேன்?" என்று விடையளித்தார்.
கேட்ட அவர் விட்டுவிடாமல் மேலே மேலே, "அடியேனிடத்தில் தங்களுக்குக் கிருபையில்லை; என் வேண்டுகோளை ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்று வற்புறுத்திப் பலமுறை போராடினார். இவர் ஒன்றும் வேண்டுவதில்லையென்பதை வார்த்தைகளாற் கூறாமல் சிரத்தாலும் கரத்தாலும் குறிப்பித்தார். அப்பால் அவர், "நான் என்ன செய்வேன்! இவர்கள் விஷயத்தில் யாதொரு பணியும் செய்வதற்கு இயலவில்லையே" என்று வருந்தி விடைபெற்றுக் கொண்டு போய்விட்டார்.
அப்பால் இந்நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டும் இவர் வேண்டாமென்று சொன்னது பற்றிக் கோபமுற்றும் அங்கே அயலில் நின்ற சவேரிநாதபிள்ளை இவரைப் பார்த்து, "நீங்கள் இதுவரையில் எத்தனையோ ஆயிரக்கணக்கான திரவியங்களைச் சம்பாதித்தும் குடும்பத்திற்கு யாதொரு செளகரியமும் செய்விக்கவில்லை; வேறு வருவாயும் இல்லை; இதற்காகப் பிறரிடத்தே சென்று கேட்டு வாங்கிக்கொடுக்க வேண்டுமென்று இப்பொழுது நான் தங்களுக்கு விண்ணப்பம் செய்து கொள்ளவில்லை. தக்க கனவானாகிய ஒருவர் வலியவந்து உதவி செய்வதாக வற்புறுத்துங் காலத்திலும் தாங்கள் ஒன்றும் வேண்டாமென்று சொல்லி விடலாமா? எத்தனையோ லட்சக்கணக்கான திரவியங்களை உடைய அவருக்கு எதையேனும் உங்களுக்குக் கொடுப்பதனாற் குறைந்து போமா? நல்ல மனமுடையவர்போற் காணப்படுகிறாரே. இப்பொழுது உங்களுக்குக் கடன் மிகுதியாக இருப்பதனால் ஏதேனும் திரவியம் கேட்கலாம்; இல்லையாயின் குமாரருக்கு ஒரு வேலை செய்விக்க வேண்டுமென்றும் சொல்லலாம்; செய்வித்தற்கு அவருக்கு ஆற்றலும் உண்டு. ஒன்றையும் வேண்டாமல் அவருடைய விருப்பத்தை மறுத்தது எனக்கும் பிறருக்கும் மிகவும் வருத்தத்தை உண்டு பண்ணுகின்றது. இனிமேல் இப்படியிருத்தல் கூடாது; குடும்பத்திற்குத் தக்க ஸெளகரியம் பண்ணுவிக்க வேண்டும். மிகவும் சுகமாகவே இதுவரையில் வாழ்ந்துவந்த சிதம்பரம்பிள்ளை இனி என்ன செய்வார்? நான் கேட்டுக்கொள்கிற வரம் இதுதான். இனிமேல் கவனிக்கவேண்டும்" என்று அன்போடும் வருத்தத்தோடும் தெரிவித்து மேலும் மேலும் அதைப் பற்றியே சொல்லிக்கொண்டு வந்தனர்.
இவர் இடையிலே பேச்சை நிறுத்தும்படி குறிப்பித்து, "என்னப்பா, தோற்றினபடியெல்லாம் பேசுகிறாய்? கொடுப்பவனாக இருந்தால் என்னைக் கேட்டுத்தானா கொடுப்பான்? அவன் எந்தக் காலத்திலும் பிறருக்கு ஒன்றும் கொடுத்ததேயில்லை. எனக்கு அது நன்றாகத் தெரியும். நான் வேண்டாமென்று சொல்லியபின்பு பலமுறை வற்புறுத்தியதைக் கொண்டே அவனுடைய நிலைமையை அறிந்து கொள்ளலாமே. நான் கேட்டிருந்தால் அவன் ஒன்றையுமே கொடான். கேட்டேனென்ற அபவாதந்தான் எனக்கு உண்டாகும். இளமை தொடங்கி அவனுடன் பழகியிருக்கிறேன். அவன் யாருக்கும் கொடுத்ததே இல்லை. பொருளைச் சம்பாதித்தலில் அதிக முயற்சியும் விருப்பமும் உடையவன். நான் கேளாமலிருந்தது உத்தமம். கேட்டிருந்தால் ஒன்றும் கொடாமற் போவதுடன் இவன் பல இடங்களில் நான் கேட்டதாகச் சொல்லிக்கொண்டு திரிவான். இனிமேல் இப்படிச் சொல்லாதே. உசிதமாகத் தோற்றினால் நான் கவனியாமல் இருப்பேனா?" என்றார். அப்பால் சவேரிநாத பிள்ளை விஷயம் தெரிந்து சமாதானமுற்றிருந்தனர்.
திருவாரூர்க்கோவை.
இவர் நித்திரை செய்யாமல் தளர்வுற்று இருத்தலையறிந்து ஒருவர் மாறி ஒருவர் இவரைக் கவனிப்பதற்கு விழித்துக் கொண்டே இருப்போம். அங்ஙனம் இருக்கும் நாட்களுள் ஒரு நாள் ஓசையுண்டாகாமல் மெல்லப் படித்துக் கொண்டேயிருக்க நினைந்து திருவாரூர்க் கோவைச் சுவடியைக்கையில் வைத்திருந்தேன். அதை இன்ன நூலென்று அறிந்து முதலிலிருந்தே படிக்கும்படி இவர் சொன்னார்; அங்ஙனம் படிக்கும் பொழுது,
-
(கட்டளைக்கலித்துறை)
{10.17}
(ஐயம்)
"வேதாவின் தண்ணிட மோமக வானுறை விண்ணிடமோ
வாதா சனவிறை நண்ணிட மோவிந்த மண்ணிடமோ
காதாருங் கண்ணி யிடத்தார் தியாகர் கமலையன்னார்
பாதார விந்தத் துகள்வீழ மாதவம் பண்ணியதே"
{10.18}
(துணிவு)
"கார்க்குன் றுரித்தவர் செம்பொற் றியாகர் கமலையன்னார்
வார்க்குன் றிரண்டினும் வேரோடும் வல்லியும் வள்ளையிலே
சேர்க்கின்ற தோடும் பிறைமே லிருக்குந் திலகமுநாம்
பார்க்குந் தொறுமிவர் பாராரென் றென்று பகர்கின்றவே"
என்ற செய்யுட்களைக் கேட்டு, "மிகவும் நன்றாயிருக்கின்றன" என்று சொன்னதுடன் மேலே வாசிக்கும்படிக்கும் சொன்னார். அப்படியே படித்து வருகையில் அங்கங்கேயுள்ள செய்யுட்களின் நயத்தையும் நடையையும் அந்த நூலாசிரியருடைய குண விசேடங்களையும் மெல்லப் பாராட்டிக்கொண்டே யிருந்தார்.
ஐயங்களைப் போக்கியது
மற்றொருநாள் இரவில் அகத்தியத் திரட்டைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் உள்ள, "தில்லைச் சிற்றம்பலம் " என் னும் பதிகத்தில் 10-ஆவது செய்யுளில் வந்துள்ள 'ஊற்றத்தூர்' என்னும் ஸ்தலம் எங்குள்ளதென்று கேட்டபொழுது அது வைப்புஸ்தலங்களுள் ஒன்றென்றும் ஊட்டத்தூரென்று வழங்கப்படுகின்றதென்றும் அதிலுள்ள மூர்த்திக்குச் சுத்தரத்தினேசுவரரென்பது திருநாமமென்றும் நாவின் குழறலுடன் சொன்னார். அப்பால், திருவாசகத்தில் திருக்கோத்தும்பி என்னும் பகுதியைப் படிக்கும்படி சொன்னார்; அதைப் படித்து வருகையில், "நோயுற்று மூத்துநா னுந்துகன்றா யிங்கிருந்து" என்பதிலுள்ள 'நுந்து கன்றாய்' என்பதற்குப் பொருள் விளங்கவில்லை என்றேன். 'வெறுத்துச் செலுத்தப்பட்ட கன்றைப்போன்று' என்று அதற்கு நாக்குழறலுடன் விடையளித்தார். அப்பொழுதுள்ள இவருடைய நிலைமையைப் பார்த்து ஒன்றுந் தோற்றாமல், "எவ்வளவோ அரிய விஷயங்களை எளிதிற் சொல்லும் பெரியாரை அடுத்திருந்தும் இதுவரையில் விசேஷமாக ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே. இனி அரிய விஷயங்களை யார் சொல்லப் போகிறார்கள்?" என்ற மன வருத்தத்துடன் இவரைக் கவனித்துக் கொண்டே இருந்தேன்.
இவருடைய தேக நிலையை அறிந்து மாயூரத்திலிருந்து இவருடைய தேவியாரும், குமாரரும் திருவாவடுதுறைக்கு வந்து ஸ்திரமாக இருந்து கவனித்துக்கொண்டு வந்தார்கள்.
வைத்தியன் கூறியது.
இவருடைய தேகஸ்திதி வரவர மெலிவையடைந்து வருவதைத் தெரிந்து கொண்ட சுப்பிரமணிய தேசிகர் வலய வட்டமென்னும் ஊரிலுள்ள தனுக்கோடி யென்ற சிறந்த வைத்தியனை வருவித்து இவருடைய கையைப் பார்த்து வரும்படி அனுப்பினார். அவன் வந்து கை பார்த்துவிட்டு இவரிடத்தில் ஒன்றும் சொல்லாமல் புறத்தே வந்து எங்களிடம், "இன்னும் மூன்று பொழுதிலே தீர்ந்துவிடும்" என்று 'வெட்டென’ச் சொல்லிவிட்டுச் சென்றான். அவன் அங்ஙனம் கூறியது எங்களுக்கு இடி விழுந்தது போல இருந்தது. 'மிகவும் துக்ககரமான செய்தியைச் சொல்லுகிறோம்' என்பதையேனும், 'கிடைத்தற்கரிய ஒருவருடைய வியோகத்தைப் பற்றித் துணிந்து சொல்லுகிறோம்' என்பதையேனும் நினையாமல் அந்த வைத்தியன் பளிச்சென்று சொன்னது கேட்டு ஒருபாற் சினமும் ஒருபால் வருத்தமும் உடையவர்களானோம். நோயின் இயல்பையும் மருந்து கொடுக்கவேண்டும் முறையையும் அல்லாமல் வேறொன்றையும் அறியாத அவன் நோயாளிகள் யாவரையும் ஒரு தன்மையினராகவே பாவிப்பானென்பதை நாங்கள் அறிந்து கொண்டோம். அவன் சொல்லியதை இவருக்கு நாங்கள் சொல்லவில்லை. அவ்வைத்தியன் தாதுக்களைப் பார்த்துச் சொல்வதில் அதிசமர்த்தனாகையால் அவன் வார்த்தையை நம்பினோம்.
சவேரிநாத பிள்ளைக்காகக் கடிதங்கள் எழுதுவித்தது.
தம்முடைய தேகஸ்திதி மிகவும் தளர்ச்சி அடைந்து கொண்டு வருவதையறிந்த இவர், தம்மிடத்திற் படிக்கும் வியாஜத்தை வைத்துக்கொண்டு பல வருஷங்களாக இருந்து வேறொரு பயனையுங் கருதாமல் தமக்குப் பணிவிடை செய்துகொண்டும் தமது குடும்பக் காரியங்களைக் கவனித்துக்கொண்டும் உண்மையாக நடந்துவந்த சவேரிநாத பிள்ளைக்கு விவாகம் செய்வித்து ஏதேனும் உபகாரம் செய்து ஸெளகரியப்படுத்தி வைக்கவேண்டுமென்று எண்ணினார். தம்முடைய நண்பர்களாகிய முன்ஸீப் வேதநாயகம் பிள்ளை, வரகனேரி சவரிமுத்தா பிள்ளை, புதுச்சேரி சவராயலு நாயகர், காரைக்கால் தனுக்கோடி முதலியார் முதலிய கிறிஸ்தவ கனவான்களுக்கும், பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளை, சோழன் மாளிகை இரத்தினம் பிள்ளை முதலியவர்களுக்கும் தம் எண்ணத்தைப் புலப்படுத்தித் தனித்தனியே கடிதமெழுதும்படி என்னிடம் சொன்னார். அப்படியே இவருடைய குறிப்பறிந்து எழுதினேன். ஒவ்வொரு கடிதத்தின் தலைப்பிலும் வழக்கம்போலவே அவர்கள் மீது ஒவ்வொரு பாடல் இவரால் அந்தத் தளர்ந்த நிலையிலும் இயற்றிச் சேர்ப்பிக்கப்பெற்றது. அச்செய்யுட்கள் மிகவுஞ் சுவையுடையனவாக இருந்தன. சொல் மாத்திரம் தளர்ச்சி மிகுதியால் குழறி வந்ததேயன்றி அறிவின் தளர்ச்சி சிறிதேனும் உண்டாகவில்லை. சவேரிநாத பிள்ளையை அழைத்து அக்கடிதங்களை அளித்து, "அப்பா, சவேரிநாது, இக்கடிதங்களை உரியவர்களிடம் கொடுத்து அவர்கள் செய்யும் உதவியைப் பெற்று விவாகம் செய்துகொண்டு ஸெளக்கியமாக வாழ்ந்திருப்பாயாக ; உன்னுடைய செயல் மிகவும் திருப்தியைத் தந்தது" என்றார். அவர் கண்ணீரொழுக அக்கடிதங்களை வணக்கஞ்செய்து பெற்றுக் கொண்டார்.
ஸ்ரீ அக்கினிலிங்க சாஸ்திரிகள்.
மடத்திற்கு வரும் ஸம்ஸ்கிருத வித்வான்களும் பிற வித்வான்களும் சுப்பிரமணிய தேசிகரைப் பார்த்து அவரோடு ஸல்லாபம் செய்துவிட்டு இவருக்குள்ள அஸெளக்கியத்தைப் பற்றிக் கேள்வியுற்று வந்து வந்து பார்த்துச் சிறிதுநேரம் இருந்து இவர் தளர்ச்சி அடைந்திருப்பதை அறிந்து வருந்திச் செல்வார்கள். ஸ்ரீ ஹரதத்த சிவாசாரியார் கிரந்தங்களிலும் திருவியலூர் ஐயா அவர்கள், ஸ்ரீமத் அப்பைய தீக்ஷிதர், ஸ்ரீமத் நீலகண்ட தீக்ஷிதர் கிரந்தங்களிலும் நல்ல பழக்கமுடையவரும் சிவபக்திச் செல்வம் வாய்ந்தவரும் விபூதி ருத்திராக்ஷதாரணமுடையவரும் தோற்றப் பொலிவுள்ளவரும் இவர்பால் மிக்க அன்புடையவரும் வயோதிகருமாகிய கஞ்சனூர் ஸ்ரீ அக்கினிலிங்க சாஸ்திரிகளென்பவர் பார்க்க வந்தார்; இவருடைய தேக நிலையை அறிந்து வருத்தமடைந்தார். அவருடைய சைவத் திருக்கோலத்தைக்கண்டு இவர் அதில் மிகவும் ஈடுபட்டு உள்ளங் குளிர்ந்து உருகிக் கண்ணீர் வீழ்த்தினார். பின்பு சாஸ்திரிகளை நோக்கி ஏதாவது சொல்ல வேண்டுமென்று இவர் குறிப்பித்தார். அப்படியே அவர் மேற்கூறிய பெரியோர்களுடைய வாக்கிலிருந்து சிவபெருமானுடைய பரத்துவத்தைத் தெரிவிக்கும் சில சுலோகங்களைச் சொல்லிப் பொருளும் கூறிக்கொண்டே வந்து ஸ்ரீ சங்கராசாரியார் செய்த சிவானந்தலஹரியிலுள்ள , "ஸதாமோஹாடவ்யாம்" என்ற சுலோகத்தைச் சொல்லிப் பொருளும் சொன்னார். இப்புலவர் சிரோமணி அதில் ஈடுபட்டு அவரைச் சும்மா இருக்கும்படி குறிப்பித்துவிட்டு ஓர் ஏடும் எழுத்தாணியும் கொண்டுவரும்படி குறிப்பித்தார். நான் அவற்றைக் கொண்டுவரவே அந்தச் சுலோகத்தின் மொழிபெயர்ப்பாகச் செய்யுளொன்றை இயற்றி மெல்லச் சொன்னார். நான் எழுதிக் கொண்டேன். அச்செய்யுள் வருமாறு:
-
{10.19}
(விருத்தம்)
மோகமா மடவி திரிந்தரி வையர்தம்
முலைக்குவட் டிடைநட மாடித்
தாகமா ராசைத் தருக்குலந் தோறும்
தாவுமென் புன்மனக் குரங்கைப்
பாகமார் பத்தி நாண்கொடு கட்டிப்
பலிக்குநீ செல்கயான் கொடுத்தேன்
ஏகநா யகனே தில்லையி லாடும்
இறைவனே யெம்பெரு மானே."
பின்பு அந்தச் சாஸ்திரிகள் ஈசுவரத்தியானம் செய்துகொண்டே இருக்கவேண்டுமென்று சொல்லிவிட்டுப் பிரிவாற்றாமல் இவரிடம் விடை பெற்றுக்கொண்டு சென்றார்.
பிறரும் நானும் இவரை இடைவிடாது பாதுகாத்துக் கொண்டே வந்தோம். அப்போது திருவாவடுதுறையில் ஸ்ரீ கோமுத்தீசுவரருக்குப் பிரம்மோத்ஸவமும் மடத்தில் தைக் குரு பூஜையும் நடைபெற்று வந்தனவாதலால் தம்பிரான்கள் முதலியவர்களுடைய திருக்கூட்டமும் பல இடங்களிலிருந்து வந்த ஸம்ஸ்கிருத வித்துவான்களுடைய குழாமும் தமிழ் வித்துவான்களுடைய கூட்டமும் சைவப்பிரபுக்களின் குழுவும் மற்றவர்களின் தொகுதியும் நிறைந்திருந்தன; மடத்திலும் கோயிலிலும் திருவீதி முதலிய இடங்களிலும் அலங்காரங்கள் செய்யப்பெற்றிருந்தன; அவற்றால் திருவாவடுதுறை சிவலோகம்போல் விளங்கியது.
சுப்பிரமணிய தேசிகர் விசாரித்துக்கொண்டே இருந்தது.
இவருடைய அசெளக்கிய மிகுதியைத் தெரிந்து சுப்பிரமணிய தேசிகர் அடிக்கடி
பார்த்துவரும்படி தக்கவர்களை அனுப்பித் தெரிந்து கொண்டேயிருந்ததன்றி அடிக்கடி வந்து சொல்லும்படி எனக்கும் கட்டளையிட்டிருந்தார். அப்படியே அடிக்கடி சென்று இவருடைய நிலையைத் தெரிவித்துக்கொண்டு வரலாயினேன்.
தை மாதம் 20-ஆம்தேதி மங்களவாரம் (1-2-1876) காலையிலிருந்து இவருக்குத் தேகத்தளர்ச்சி முதலியன அதிகரித்துக்கொண்டே வந்தன. அன்று இரவில் ஐந்து நாழிகைக்கு மேற்பட்டு இவருடைய உறவினர் ஒருவர் மீது ஏதோ ஒரு பெண் தெய்வம் ஆவேசமாகவந்து, "நான் இவர்களுடைய குலதெய்வமாகிய அம்மன்; பலவருஷங்களாக எனக்குப் பூசை போடுதலை இவரும் இவரைச் சார்ந்தவர்களும் மறந்துவிட்டார்கள். அதனாலே தான் இவ்வளவு அசெளக்கியங்கள் இவருக்கு நேர்ந்தன. இனிமேலாவது எனக்குப் பூசைபோட்டால் இவருடைய அசெளக்கியத்தைத் தீர்த்து விடுவேன். நீங்கள் கவலைப்பட வேண்டாம். இவர் மிகவும் நல்லவராதலால் நான் வலியவந்து சொன்னேன். இனி அதைச் செய்வதற்குப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளுங்கள்" என்று சொல்லியது.
அதை இவருடைய தேவியாராகிய காவேரியாச்சி ஒப்புக் கொண்டனர். இவரும் அக்குலதெய்வம் உண்மையையும் அதற்குத் தாம் பூசை போடாதிருத்தலையும் தம்முடைய முகபாவத்தாற் குறிப்பித்தார். ஆனால் ஆவேசங் கொண்டோரிடத்தில் இவருக்கு நம்பிக்கையில்லை. மற்றவர்கள் பூசைபோட்டால் நல்லதென்று சொன்னார்கள். அந்தப்படியே ஒரு ரூபாயை மஞ்சள் நீரில் நனைத்த துணியில் இவருடைய தேவியார் முடிந்து வைத்துப் பிரார்த்தனை செய்துகொண்டார். அப்படிச் செய்தாற் செளக்கியப்படலாமென்ற எண்ணம் சிலருக்கு உண்டாயிற்று.
அன்றைத் தினம் கோயிலில் ரிஷபவாகனக் காட்சியாதலால் ஸ்ரீ கோமுத்தீசர் ரிஷபாரூடராய்க் கோபுரவாயிலில் எழுந்தருளியிருப்பதை அறிந்து தரிசனத்திற்கு நான் அங்கே சென்றேன். அப்போது பரிவாரங்களுடன் வந்து தரிசனம் செய்து கொண்டே நின்ற சுப்பிரமணிய தேசிகர் என்னை அழைத்துப் பிள்ளையவர்களுடைய தேகஸ்திதியைப் பற்றிக் கவலையுடன் விசாரித்தார்; பிறர் பேசுவதை அறிந்து கொள்கிறார்கள்; உத்தரம் கூறுவதற்கு மாத்திரம் அவர்களால் இயலவில்லை" என்றேன். அதனை அவர் கேட்டு மிகவும் வருத்தமடைந்ததுடன், "இந்த நிலையிலாவது பிள்ளையவர்கள் இங்கே இருக்கிறார்களென்ற பேச்சிருந்தால் மடத்திற்கு மிகவும் கெளரவமாக இருக்கும். ஸ்ரீ கோமுத்தீசர் திருவருள் என்ன செய்கின்றதோ!" என்று சொல்லிவிட்டு, போய்க் கவனித்துக்கொண்டிருக்கும்படி எனக்குக் கட்டளையிட்டார்.
'அடைக்கலப் பத்து'
உடனே சென்று நானும் சவேரிநாத பிள்ளை முதலியோரும் இவரைக் கவனித்துக் கொண்டு அயலிலே இருந்தோம். பால் சிறிது சிறிதாகக் கொடுத்து வந்தோம். ஸ்ரீ கோமுத்தீசுவரர் ரிஷபாரூடராகத் திருவீதிக்கு எழுந்தருளினார். இவருடைய குறிப்பின்படி நாங்கள் தேங்காய் பழம் கற்பூரம் முதலியவற்றை எடுத்துக்கொண்டு சென்று தீபாராதனை செய்வித்து ஆதிசைவர் கொடுத்த விபூதிப் பிரசாதத்தைக் கொணர்ந்து இவர்பாற் சேர்ப்பித்தோம். அதை இவர் மெல்ல வாங்கித் தரித்துக் கொண்டார்.
சிவபதமடைந்தது.
பதினைந்து நாழிகைக்கு மேற்பட்டு இவருக்கு ஸ்வாதீனத்தப்பும் தேகத்தில் ஒரு துவட்சியும் உண்டாயின. அதனையறிந்த சவேரிநாத பிள்ளை இவருடைய பின்புறத்திற் சென்றிருந்து இவரைத் தம்முடைய மார்பிற் சார்த்தி ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொண்டார். அப்பொழுது சில நாழிகை வரையில் இவருக்குப் பிரக்ஞை இல்லை; சிலநேரம் கழித்துப் பிரக்ஞை வந்தது. உடனே திருவாசகத்தில் ஏதேனும் ஒரு பாகத்தைப் படிக்கவேண்டும் என்னுங் குறிப்போடு, "திருவா" என்றார். அக்குறிப்பை அறிந்து அப்புத்தகத்தை எடுத்துவந்து அடைக்கலப்பத்தை வாசித்தேன்; கண்ணை மூடிக்கொண்டே இவர் கேட்டுவந்தார். அப்பொழுது இவருக்கு உடலில் ஓர் அசைவு உண்டாயிற்று. உடனே நாங்கள் சமீபத்திற் சென்றபொழுது வலக்கண்ணைத் திறந்தார். அதுதான் ஸ்ரீ நடராஜமூர்த்தியினுடைய குஞ்சித சரணத்தை இவர் அடைந்த குறிப்பாக எங்களுக்குத் தோற்றியது. அப்போது இவருக்குப் பிராயம் 61. அந்தச் சமயத்தில் இவருடைய சரீரத்தைச் சார்த்திக்கொள்ளும் பாக்கியம் பெற்றிருந்த சவேரிநாதபிள்ளை அந்த நல்லுடலை உடனே படுக்கையிற் கிடத்தி விட்டு மற்றவர்களோடு புலம்பிக் கொண்டே அயலில் நின்றார். இவருடைய தேவியாரும் குமாரரும் மற்ற உறவினரும் கண்ணீர் விட்டுப் புலம்பினார்கள். அங்கேயிருந்த எல்லோருக்கும் உண்டான வருத்தத்திற்கு எல்லையேயில்லை.
அபரக்கிரியை.
இக்கவிரத்னம் மண்ணுலக வாழ்வை நீத்தசெய்தி ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குத் தெரிந்தது. காளிதாஸன் இறந்தது கேட்டுப் போஜன் வருந்தியதைக் கதைகளில் கேட்டிருக்கிறோம். அந்தக் காட்சி இப்படித்தான் இருந்திருக்குமென்றெண்ணும்படியான நிலையில் தேசிகர் இருந்தார். தாமே அறிந்து ஸ்ரீ அம்பலவாண தேசிகரிடம் பலபடியாக இவருடைய நல்லாற்றலைத் தக்கவாறு எடுத்துக் கூறி ஆதீன வித்துவானாகச் செய்தது முதல் இறுதிக்காலம் வரையில் பலவகையாலும் இக் கவிச்சக்கரவர்த்தியினுடைய குணங்களையும் புலமைத் திறத்தினையும் நன்றாக அறிந்து அறிந்து இன்புற்றவர் அவரே. பிள்ளையவர்களுடைய உண்மையான பெருமையை அவரைப்போலவே அறிந்தவர்கள் வேறு யாவர்? தம்முடைய அவைக்களத்தை அலங்கரித்து மடத்திற்குத் தமிழ் வளர்த்த பெரும் புகழை உண்டாக்கிய இந்த மகாவித்துவானுடைய பிரிவைப் பொறுப்பதென்பது அவரால் இயலுவதா?
அன்று குருபூஜைத் தினமாதலின் சுப்பிரமணிய தேசிகர் கவனிக்க வேண்டிய பல காரியங்கள் இருந்தன. அவைகளில் அவர் மனம் செல்லவில்லை. அவருடைய முகம் அன்று மலர்ச்சியின்றி யிருந்தது.
மிக்க வருத்தத்தோடு இருந்தும், தேசிகர் மேலே முறைப்படி மறுநாட்காலையில் நடக்க வேண்டிய அபரக்கிரியைகளை விரிவாக நடத்தும்படி மடத்து உத்தியோகஸ்தர்களுக்குக் கட்டளையிட்டனுப்பினர். காலையில் அதிர்வெடிகள் போடப்பட்டன. திருக்கோடிகா, திருத்துருத்தி, திருவிடைமருதூர் முதலிய ஊர்களிலிருந்து அபிஷிக்தப் பெரியார்கள் பலர் வருவிக்கப்பட்டார்கள்.
மற்றவர்களுக்கு நடக்கும் முறையிலும் செலவிலும் அதிகப்பட நடத்தி இவருடைய திவ்ய சரீரத்தை விபூதி ருத்திராக்ஷங்களால் அலங்கரித்து எடுப்பித்துக்கொண்டு செல்லத் தொடங்கியபொழுது இவருடைய மாணாக்கர்களாகிய தம்பிரான்கள் மடத்து முகப்பில் வரிசையாக வந்து நின்று கண்ணீரை வீழ்த்திக் கொண்டே கலங்குவாராயினர். வடமொழி வித்துவான்களாகிய அந்தணர்களின் கூட்டத்திலிருந்து, "தமிழ்க் காளிதாஸா! தமிழ்க்காளிதாஸா!" என்ற சப்தமும், தமிழ் வித்துவான்கள் வாக்கிலிருந்தும் அயலூரிலிருந்து வந்திருந்த இவர் மாணாக்கர் கூட்டத்திலிருந்தும், "கவிச் சக்கரவர்த்தியே! தமிழ்க் கடலே! எங்களுக்கு அரிய விஷயங்களை இனி யார் அன்புடன் சொல்வார்கள்! யாரிடத்தில் நாங்கள் செல்லுவோம்? எங்களைக் கவனிப்பார் யார் !" என்ற ஒலியும், வேறொரு சாராரிடத்திருந்து, "குணக்கடலே! சாந்த சிரோமணீ!" என்ற சப்தமும், பொதுவாக மற்ற யாவரிடத்திலிருந்தும், "ஐயா! ஐயா!" என்ற சப்தமும் உண்டாயின. உடன் சென்ற அபிஷிக்தர்கள் திருவாசகம் சொல்லிக்கொண்டு போகையில், "இனிமேல் திருவாசகத்திற்கு மிகத் தெளிவாகவும் அழகாகவும் யார் பொருள் சொல்லப் போகிறார்கள்?" என்று என் தந்தையார் முதலிய பலர் சொல்லி மனம் உருகினார்கள். உடன் சென்ற கூட்டங்கள் மிக அதிகம்.
இவ்வண்ணம் திருக்கோயிலுக்கு வடக்கேயுள்ள மருதமரச் சாலைவழியே சென்று காவிரிக்கரையிலுள்ள ருத்திர பூமியை அடைந்தவுடன் இவருடைய தேகம் சந்தனக்கட்டை, பரிமள தைலம் முதலியவற்றோடு அமைக்கப்பட்ட ஈமப்பள்ளியில் வைத்துச் சிதம்பரம் பிள்ளையால் விதிப்படி தகனம் செய்யப்பெற்றது.
மாணாக்கர்களாகிய நாங்கள் அடைந்த வருத்தம் இங்கே எழுதி யடங்குவதன்று; செயலழிந்திருந்தோம்; "உடலெலாம் உயிரிலா எனத்தோன்று முலகம்" என்றபடி அவ்வூராரும் வந்தோர்களும் செயலற்று மிக்க வாட்டத்துடன் இருந்தார்கள். அப்பால் ஸ்நானாதிகளை முடித்துக்கொண்டு மீண்டுவந்து நான் திருவாரூர்த் தியாகராசலீலையைக் கையில் வைத்துக்கொண்டு அதிலுள்ள அருமையான செய்யுட்களைப் படித்துப் படித்துப் பொருள் நயங்களை அறிந்து கண்ணீர் வீழ்த்திக்கொண்டே பகல் ஒரு மணிவரையில் இருந்துவிட்டேன்; ஆகாரத்திற் புத்தி செல்லவில்லை. மற்றவர்களும் அப்படியே இருப்பவர்களாய் இவர் இயற்றியவற்றுள் தமக்குப் பிரியமான ஒவ்வொரு நூலைப் பார்த்துக்கொண்டே இருந்து வருந்துவாராயினர்.
சுப்பிரமணிய தேசிகர் எனக்கு ஆறுதல் கூறியது.
ஒரு மணிக்கு மேலே ஒடுக்கத்தில் வீற்றிருந்த சுப்பிரமணிய தேசிகரை நான் பார்த்து வரச் சென்று அவருக்கு அயலில் நின்றேன். கயையில் ஜனோபகாரமாக ஒரு தர்மசாலை கட்டிவைத்த முத்தைய தம்பிரானென்பவரும் அங்கு வந்திருந்தார். நின்ற என்னை நோக்கித் தேசிகர் இருக்கும்படி குறிப்பித்தார். அவரைக் கண்டவுடன் எனக்கு மிகுதியான வருத்தம் உண்டாயிற்று; கண்ணீர் ஆறாகப் பெருகிவிட்டது; அழத்தொடங்கிவிட்டேன்.
அவர் கையமர்த்தி, "காலத்தை யாரால் வெல்லமுடியும்? அதே வருத்தத்துடன்தான் நாமும் இருந்து வருகிறோம். ஆனால் உம்மைப்போல் வெளிப்படுத்தவில்லை. பெரிய மணியை இழந்து விட்டோம். இனி இதைப்பற்றிச் சிந்தித்தலில் பயனில்லை. அவர்களிடம் கேளாமல் எஞ்சியுள்ள நூல்களை நாம் பாடஞ் சொல்வோம். அவற்றைக் கேட்டுச் சிந்தனை செய்து கொண்டும் புதியவர்களாக வருபவர்களுக்குப் பாடஞ் சொல்லிக்கொண்டும் செளக்கியமாக நீர் இங்கே இருக்கலாம். அவர்களுடைய பக்கத்தில் இருந்தது போலவே நம்முடைய பக்கத்தில் இருந்து வர வேண்டும். இந்த ஊரை உம்முடைய சொந்த ஊராகவே பாவித்துக்கொள்ளும்; [11]வீடு முதலியவற்றை விரைவில் அமைத்துக் கொடுப்போம். கவலையின்றி இருக்கலாம். பிள்ளையவர்களை மாத்திரம் வருவித்துக் கொடுக்க முடியாதேயன்றி வேறு இங்கே என்னதான் செய்விக்க முடியாது? உம்முடைய சகபாடிகளாகிய தம்பிரான்களைப் போலவே நீரும் மடத்துப் பிள்ளையல்லவா? உமக்கு என்ன குறைவு?" என்று எவ்வளவு தைரியத்தை உண்டாக்க வேண்டுமோ அவ்வளவையும் உண்டாக்கி அபயமளித்தார்.
பின்பு, பிள்ளையவர்களுடைய பிரிவைப்பற்றித் துக்கித்துக் கொண்டிருந்த ஸகபாடிகள் இருக்குமிடஞ் சென்று இப்புலவர்பிரானுடைய குணங்களைப் பாராட்டி வருந்திக் கொண்டே யிருந்தேன்.
பலர் பலவாறு வருந்தல்.
அஸ்தமித்த பின்பு தேசிகரைப் பார்த்தற்குச் சென்றேன். அப்பொழுது பிள்ளையவர்களுடைய வியோகத்தைப் பற்றி அவரை விசாரித்தற்குப் பலர் வந்து வந்து பார்த்து விட்டுப் போய்க் கொண்டிருந்தனர். மடத்து ஸம்ஸ்கிருத வித்துவான்களுள் ஒருவரும் மிக்க முதுமையை உடையவருமாகிய ஸ்ரீராமகுட்டி சாஸ்திரிகளென்பவர் அப்பொழுது ஒடுக்கத்திலிருந்து எனக்கு எதிரே வந்தார். அவர் பிள்ளையவர்களோடு நெடுங்காலம் பழகியவர்; பல சாஸ்திரங்களில் நிபுணர்; தளர்ந்த உடலையும் தளரா நாவையும் உடையவர். அவர் என்னைக் கண்டு ஓவென்றழுது, "தமிழ்க் காளிதாசன் போய்விட்டானையா!" என்று மூன்று முறைசொல்லி அரற்றினர். பலர் உடனே அங்கே வந்து கூடிவிட்டனர். அப்பால் ஒருவாறு சமாதானப்படுத்தி அவரை அனுப்பிவிட்டு, அங்கே நின்ற மற்றவர்களோடு சேர்ந்து ஒடுக்கத்திற்குச் சென்றேன்.
சுப்பிரமணிய தேசிகர் தம்மைச் சூழ்ந்திருந்த பலரிடம் பிள்ளையவர்களுடைய குணங்களையும் கல்விச் சிறப்பையும் பற்றிப் பாராட்டியும் பிரிவைப்பற்றி வருத்தமுற்றும் பேசிக்கொண்டிருந்தனர்: "தேசாந்தரங்களிலெல்லாம் பிள்ளையவர்களுடைய பெரும் புலமைத் திறம் புகழப்படுகிறது. அவர்கள் பெயரோடு நமது மடத்தின் பெயரும் விளங்குகின்றது. அந்தப் புலவர்மணியின் ஆற்றல் இந்த மடத்தை எல்லோருக்கும் உரிய கல்வி நிலயமாகச் செய்தது. வைதிக மதஸ்தர்களும் பிறமதஸ்தர்களும் பல்வகைச் சாதியினரும் தமிழ் நூல்களைத் தடையின்றிப் பாடஞ் சொல்லும் அவர்களை எண்ணி எண்ணி இங்கே வந்தனர். நமது மடத்துக்கும் கெளரவத்தை அளித்தார்கள். முன் பழக்கமில்லாத எத்தனையோ உத்தியோகஸ்தர்களும் வேறு வகையான பிரபுக்களும் இந்த மடத்திற்கு வந்திருக்கிறார்கள். எல்லாம் அவர்களால் வந்த பாக்கியமே. பணமும் இடமும் அதிகாரமும் சாதியாத எவ்வளவோ காரியங்களை மடத்திற்காக அவர்கள் சாதித்து உதவியிருக்கிறார்கள். அவ்வளவுக்கும் இந்த மடத்திலிருந்து அவர்கள் பெற்ற பயன் சிறிதளவேயாகும். எங்கே இருந்தாலும் அவர்கள் தம்முடைய தமிழரசாட்சியை நடத்தியிருப்பார்கள். அதற்கு இம் மடத்தை அமைத்துக்கொண்டது ஆதீனத்தின் பாலுள்ள அபிமானமே. இந்த ஆதீன குலதெய்வமென்று சொல்லப்படுகிற சிவஞான முனிவர் முதலிய பெரியோர்களால் இவ்வாதீனம் தமிழ்க் கல்வியில் மிக்க சிறப்பை அடைந்ததாயினும் மடத்திலிருந்தே பாடஞ் சொல்லித் தமிழை விருத்தி செய்யவில்லையே என்ற குறை இந்த மடத்திற்கு இருந்து வந்தது. அக்குறை பிள்ளையவர்களாலே தான் தீர்ந்ததென்பதை நாம் சொல்ல வேண்டுமா! இனிமேல் அத்தகைய உபகாரிகள் எங்கே பிறக்கப்போகிறார்கள்! ‘பிள்ளையவர்களைப் பார்க்கும்படி செய்விக்கவேண்டும்' என்று இங்கே வந்தவர்களெல்லாம் சொல்லச் சொல்லக் கேட்டுக் குளிர்ந்த இந்தச் செவிகள் இனிமேல் எதைக் கேட்கும்! பெரிய மனிதர்கள் வந்த காலத்திலும் சிறந்த வித்துவான்கள் வந்த காலத்திலும் சமயத்துக்கு ஏற்றபடியும் நம்முடைய உள்ளக் கருத்துக்கு ஒத்தபடியும் அரிய இனிய செய்யுட்களை விரைவிற் செய்து மகிழ்விக்கும் அவர்களுடைய திறமையை வேறு யாரிடம் பார்க்கப் போகிறோம்! எவ்வளவு பெரிய ஸபையிலும் அவர்கள் அங்கே நிகழும் நிகழ்ச்சியைச் சிறப்பித்துக் கவியொன்று கூறி விட்டால் அந்த ஸபையில் உண்டாகும் குதூகலமும் நமக்கு உண்டாகும் ஆனந்தமும் இனிமேல் எங்கே வரப்போகின்றன! அவர்களுடைய கவி ஸபைநிகழ்ச்சியின் முடிவிற் கிரீடஞ் சூட்டியது போல விளங்குமே! அவர்களிடம் மதிப்புள்ள எத்தனை பேர்கள் தம்மாலான அனுகூலங்களை மடத்திற்குச் செய்திருக்கிறார்கள்! 'திருவாவடுதுறை ஆதீனம் செந்தமிழ்ச்செல்வியின் நடன சாலை' என்று பிற்காலத்திலும் யாவரும் கூறும் வண்ணம் செய்வித்த அவர்கள் இல்லாத குறை இனி என்றைக்கு நீங்குமோ தெரியவில்லை.
"வந்தவர்களில் அவர்கள் குணத்தைக்கண்டு வியவாதவர்களே இல்லை. என்ன அருமையான குணம்! நாமும் தினந்தோறும் எவ்வளவோ வித்துவான்களைப் பார்த்துக் கொண்டே வருகிறோம். சிறிது படித்திருந்தால் எவ்வளவு தருக்கு வந்துவிடுகிறது? இப்பொழுது தமிழ்நாட்டிலுள்ள தமிழ்ப்புலவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கிய அவர்கள் அலையற்ற கடல்போல அடங்கியிருந்த ஆச்சரியத்தை என்னவென்று சொல்வோம்! அவர்கள் தம்முடைய ஆற்றலைத் தாமே புகழ்ந்து கொண்டதை யாரேனும் கேட்டிருக்கிறார்களா! அத்தகைய குணக்குன்றை இனிமேல் எங்கே பார்க்கப் போகிறோம்! மிகச் சிறந்த பண்டிதராகிய ஆதீன வித்துவான் [12] தாண்டவராயத் தம்பிரானவர்கள் கூட 'இவர்களைப்போல யாரும் இல்லை' என்று வியக்கும் புலமையும் இயல்பும் உடைய அவர்களுக்கு ஆயுள் மாத்திரம் இவ்வளவினதாக அமைந்ததை நினைந்து நினைந்து வருந்துவதை யன்றி நாம் என்ன செய்யமுடியும்? ஸ்ரீநமச்சிவாய மூர்த்தியின் திருவருள் இவ்வளவுதான் போலும்! கவித்வ சக்தியை நேரிற் காணாமல் யாராவது கேட்டால் உண்மையென்று நம்பமுடியாதபடி அவ்வளவு ஆச்சரியமாகப் பாடும் அந்த மகாகவியைத் தமிழ் மொழி இழந்த நஷ்டத்தை நீக்குதற்கு இனி யாரால் முடியும்? இனி நமக்குப் பொழுது போவது எவ்வாறு?" என்று அவர் பலவாறு சொல்லிக் கொண்டே யிருந்தனர்.
பிள்ளையவர்கள் சிவபதமடைந்த தினத்தைப் புலப்படுத்தித் தில்லை விடங்கன் வெண்பாப் புலி வேலுசாமி பிள்ளை யென்பவர்,
-
{10.20}
"மன்னும் யுவவருட மாதந்தை முன்பக்கம்
உன்னும் பிரதமைமா லோணநாள் - மின்னும்
துருவுபுகழ் மீனாட்சி சுந்தரநம் மேலோன்
திருவுருவ நீங்கு தினம்"
என்னும் வெண்பாவை இயற்றினார்.
கடிதங்கள்.
உடனே தியாகராச செட்டியாருக்கு இந்த விஷயத்தைத் தேசிகர் கட்டளையின்படி குமாரசாமித் தம்பிரான் எழுதியனுப்பினார்; முதல் நாளில் அவருடைய நற்றாய் தேக வியோகமானமையின் அப்பிரிவாற்றாமல் வருந்திக்கொண்டிருந்த அவர் இச் செய்தி தெரிந்து, "முதல்நாள் பெற்ற தாயையும் மறுநாள் ஞானபிதாவையும் இழந்துவிட்டேன்" என்று மிக வருந்தி விடையனுப்பினார்.
இவர் சிவபதம் அடைந்ததைக் குறித்துப் பிற்பாடு, பல அன்பர்களுக்குச் சிதம்பரம் பிள்ளையைக் கொண்டும் என்னைக் கொண்டும் பிறரைக் கொண்டும் கடிதம் எழுதும்படி சுப்பிரமணிய தேசிகர் செய்வித்தார். ஒவ்வொருவரும் பிரிவாற்றாமையைப் புலப்படுத்தி விடைக்கடிதம் அனுப்பிவந்தனர்.
அவற்றுள் சின்னப்பட்டம் நமச்சிவாய தேசிகர் கல்லிடைக் குறிச்சியிலிருந்து சுப்பிரமணிய தேசிகருக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் பிள்ளையவர்களுடைய தேக வியோகத்தைப்பற்றி எழுதியுள்ள பகுதி வருமாறு:
"மஹா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இன்னும் கொஞ்ச நாளாவதிருந்தால் கல்வி அருமை பெருமையடையும். அதற்கு அதிட்டமில்லாமற் போய்விட்டது. அவர்கள் விஷயத்தில் மஹா ஸந்நிதானத்திற் கொண்டருளுவதெல்லாம் பெருங்கிருபையென்றே நினைத்துப் பெருமகிழ்ச்சியுற்றிருக்கிறேன்."
ஆறுமுக நாவலர் சிதம்பரம் பிள்ளைக்கு எழுதிய கடிதம் வருமாறு:
உ .
"சிவமயம்."
"ஸ்ரீ சிதம்பர சபாநாயகர் திருவருளினாலே செல்வச் சிரஞ்சீவி தம்பி சிதம்பரம் பிள்ளைக்குச் சர்வாபீட்ட சித்தி யெய்துக.
"தாம் எழுதியனுப்பிய கடிதம் பெற்று வாசித்துச் சகிக்கலாற்றாத் துக்கமுற்று யாக்கை நிலையாமையை நினைந்து ஒருவாறு தெளிந்தேன். தம்முடைய தந்தையாராகிய மஹா கனம் பொருந்திய ஸ்ரீபிள்ளையவர்கள் தமிழ் வழங்கு நிலமெங்கும் உலக மழியுங்காறும் தங்கள் புகழுடம்பை நிறுத்திவிட்டுச் சென்றமையே தமக்கு வாய்த்ததொரு பெரும்பாக்கியம்! இன்னுஞ் சில காலம் இருப்பார்களாயின், இன்னுஞ் சில காரியங்கள் அவர்களாற் செய்யப்பட்டு விளங்கும். 'வினைதானொழிந்தாற் றினைப்போதளவு நில்லாது' என்னுந் திருவாக்கை நினைந்து, அவர்களருமையை யறிந்தோர் யாவரும் தங்கள் துக்கத்தை யாற்றிக்கொள்வதே தகுதி.
"தாம், தம்முடைய தந்தையாரவர்களைப் பரிபாலித்து அவர்களுடைய கீர்த்தியை வெளிப்படுத்தி யருளிய பெருங்கருணை வெள்ளமாகிய திருவாவடுதுறை மகா சந்நிதானத்தின் திருவடிகளை மறவாத சிந்தையும், தம்முடைய தந்தையாரவர்களிடத்து மெய்யன்புடைய மாணாக்கர்களைச் சகோதரர்களாகவே கொண்டொழுகு நேசமும், எவராலும் நன்கு மதிக்கற்பாலதாகிய நல்லொழுக்கமும் உடையராய், இனிது வாழ்ந்திருக்கும்படி, திருவருள் சுரக்கும்பொருட்டு ஸ்ரீ சிதம்பர சபாநாயகர் திருவடியைப் பிரார்த்திக்கின்றேன்.
யாழ்ப்பாணம்
வண்ணார் பண்ணை இங்ஙனம்,
யுவ வருடம் மாசி மாதம் 19 ஆம் நாள் ஆறுமுக நாவலர்."
இந்தக் கடிதத்தை எழுதிய பின்னர் நாவலர் நெடுநேரம் வரையில் வருத்தத்தோடும் இருந்து பிள்ளையவர்களுடைய அருமை பெருமைகளைப் பாராட்டிவிட்டு, பின்புதான் பூசைக்குச் சென்றனரென்று அக்காலத்து அவருடனிருந்து வந்த காரைக்குடி சொக்கலிங்கையாவும் பிறரும் சொன்னதுண்டு.
பிள்ளையவர்களுடைய மாணவருள் ஒருவராகிய தஞ்சை, கோ. இராமகிருஷ்ண பிள்ளை சுப்பிரமணிய தேசிகருக்கு எழுதிய விண்ணப்பக் கடிதம் வருமாறு:-
உ
"அகண்டாகார நித்திய வியாபக சச்சிதாநந்தப் பிழம்பாய் நிறைந்த ஸ்ரீலஸ்ரீ சற்குருநாத சுவாமிகள் திவ்விய சந்நிதானத்திற்கு அடியேன் கோ. இராமகிருஷ்ணன் திக்கு நோக்கித் தண்டனிட்டெழுதிக்கொள்ளும் விண்ணப்பம்.
"ஐயா அவர்கள் ஸ்ரீ சிவபெருமான் திருவடிக் கீழ் ஐக்கியமாயின செய்தி மகாசந்நிதானங் கருணை கூர்ந்து சுவாமிநாத ஐயரால் விடுத்த நிருபத்தைப் பார்க்கப் பார்க்க அதிகத் துயரத்திற்கு இடமாயிருப்பதுந்தவிர, அவர்களாலடைய வேண்டிய பெரும்பயன் யாவும் இழந்து கண்ணிலாக் குழவிபோல் நேரிட்டிருக்கும் பெருஞ் சந்தேகங்களை நிவிர்த்திக்க மார்க்கமின்றி உழல்கின்றேன். ஒன்றையே பல தடவை கேட்பினும் அதற்கு வெறுப்பின்றிப் பிதாவைப் போல் யார் இனிக் கற்பிப்பார்கள்!
"இனி இக்குறைவை நிறைவேற்றச் சந்நிதானங் கருணை கூர்தலன்றி வேறு நெறியை அடியேனும் மற்றையோரும் அறியோம்.
" இவ்விண்ணப்பத்துடன் கல்லாடவுரைப் புத்தகமொன்று பங்கித் தபாலிலனுப்பியிருக்கின்றேன். இது சந்நிதானஞ் சேர்ந்ததற்கும் அடியேன் இனி நடத்த வேண்டும் பணிவிடைகளுக்கும் கட்டளையிட்டருளப் பிரார்த்திக்கிறேன்.
தஞ்சாவூர்
யுவ வருடம் இங்ஙனம்,
பங்குனி மாதம் 16ஆம் நாள் கோ. இராமகிருஷ்ணன்.
இரங்கற் செய்யுட்கள்.
அந்தக் காலத்தில் அயலூருக்குச் சென்றிருந்த மகா வைத்தியநாதையரும் அவருடைய தமையனாராகிய இராமஸ்வாமி ஐயரும் பிள்ளையவர்கள் தேகவியோகமடைந்த செய்தியைக் கேள்வியுற்று மிகவும் வருந்தினார்கள். அப்பொழுது இராமஸ்வாமி ஐயர் மனம் வருந்திப் பாடிய பாடல்கள் வருமாறு:
-
(வெண்பா)
{10.21}
"[13] கும்பனெனி லன்னோன் குறியவனா வானுலகிற்
கம்பனெனி லன்னோனுங் கம்பனாம் - அம்புவியில்
வேறுளார் வேறுளரா மீனாட்சி சுந்தரரின்
கூறெவரென் றேயகன்றாய் கூறு."
{10.22}
(விருத்தம்)
"எனைவைத்தி யெனைவைத்தி யெனப்பதங்க ளிடையிடைநின் றிரந்து வேண்ட
இனிவைப்பா மினிவைப்பாம் பொறுத்திடுமின் பொறுத்திடுமின் என்று கூறி
நினைவுற்ற வொருகடிகைக் களவில்கவித் தொடைதொடுத்து நிமலர் பூணப்
புனைவுற்ற மீனாட்சி சுந்தரவள் ளலைப்போல்வார் புவியில் யாரே."
-
(கொச்சகக் கலிப்பா)
{10.23}
"தூவலரு மீனாட்சி சுந்தரப்பேர் கொண்டிலகும்
நாவலர்பி ரானரன்தாள் நண்ணினனன் னானிடத்தே
ஆவலரா மாணவக ராரிடத்தே தமிழ்பயில்வார்
சேவலர்பி ரான்புகழ்சால் செழுங்கவியாப் பவரெவரே!"
{10.24}
"விண்ணாடும் பெருங்கவிஞன் மீனாட்சி சுந்தரவேள்
மண்ணாத மணியனையான் மாதேவன் மலரடிசார்ந்
துண்ணாநின் றனனின்பம் உலப்புறுவார் மாணவரென்
றெண்ணாநின் றனனிலையே யென்னேயிவ் வுலகியல்பே!"
சுப்பிரமணிய தேசிகர் இவர் குடும்பக்கடனைத் தீர்த்தது.
இவருடைய குடும்ப நிலையைப்பற்றி அறிய விரும்பிச் சுப்பிரமணிய தேசிகர் சிதம்பரம்பிள்ளையை அழைத்து விசாரித்தபொழுது ரூ. 3,000-க்கு மேற்பட்டுக் கடன் இருப்பதாக அவர் சொன்னார். உடனே சுப்பிரமணிய தேசிகர், "கடன்களைத் தீர்த்து விடாமல் இறந்து போனார்களென்ற அபவாதம் மடத்து மகாவித்துவானாகிய நமது பிள்ளையவர்களுக்கு இருக்கக்கூடாது. அவ்வாறாயின், அது மடத்திற்கு ஏற்படும் அபவாதமேயாகும்" என்று சொல்லி, கடன்காரர்களைப் பத்திரங்களுடன் வருவித்துப் பிள்ளையவர்களுடைய குமாரரையும் சில மாணாக்கர்களையும் உடன் வைத்துக் கொண்டு கடன்களைக் கொடுக்கத் தொடங்கினார். பணப்பைகள் சில அங்கே கொணர்ந்து வைக்கப்பட்டன. அப்பொழுது தேசிகர், "இவை பிள்ளையவர்களுக்காகக் கொடுக்கப்படுவன. அவர்களிடம் அன்பு வைத்து வட்டியில் சிறிதாவது, முற்றுமாவது முதல் தொகையிற் சிலபாகமாவது முற்றுமாவது தள்ளிப் பெற்றுக் கொள்ளலாம்; முற்றும் வேண்டுபவர்கள் அவ்வாறே பெற்றுக் கொள்ளலாம்" என்றார். அப்படியே சிலர், தங்களுக்குரிய தொகைகளில் ஒவ்வொரு பகுதியைத் தள்ளிப் பெற்றுக்கொண்டார்கள்.
பின்பு தேசிகர் சிதம்பரம்பிள்ளையை நோக்கி, "மடத்திலுள்ளவர்கள் பெருந்தொகையை ஒரு குடும்பத்திற்கு நாம் கொடுத்துவிட்டதாகக் குறை கூறுவார்கள். அதற்கு இடமில்லாதபடி பிள்ளையவர்களுடைய புத்தகங்களை மடத்துப் புத்தகசாலையிற் சேர்த்துவிடும். அவற்றை நீர் வைத்துக்கொண்டு இனி என்ன செய்யப்போகிறீர்?" என்றார். அப்படியே சிதம்பரம் பிள்ளை செய்துவிட்டார். பிள்ளையவர்களுடைய ஏட்டுச் சுவடிகள் மட்டும் மூன்று கட்டுப் பெட்டிகள் நிறைய இருந்தன.
----------
[1] முதற்பாகம், ப. 79 - 81, பார்க்க.
[2] கதிரவன் தளி - சூரியனார் கோயில்.
[3] கம்ப. மந்தரை சூழ்ச்சிப். 70
[4] மீ. பிரபந்தத்திரட்டு, 2237-2338.
[5] இச்செய்தி திருவிடைமருதூருலாவிலுள்ள, "ஒப்பேதும், இல்லா வலஞ்சுழியே யேரம்பன் வைப்பாக, மல்லே ரகமுருகன் வைப்பாக - நல்லார்சேர், தண்மாட வாப்பாடி தண்டீசன் வைப்பாக, வண்மாந் துறையிரவி வைப்பாக - எண்மாறா, நன்காமர் தில்லை நடராசன் வைப்பாக, மன்காழி யேவடுகன் வைப்பாக - முன்காணும், தென்னா வடுதுறையூர் சேவமர்வைப் பாவாரூர், மன்னுசோ மாக்கந்தர் வைப்பாக - உன்னிற், றடைதவிரா லங்குடியா சாரியன்வைப் பாக, இடைமருதில் வீற்றிருக்கு மீசன்" (131 - 6) என்னும் கண்ணிகளிலும் காணப்படும்.
[6] இவருடைய விரிவான வரலாற்றை, 'கலைமகள்' என்னும் பத்திரிகையின் முதல் தொகுதி 273-80-ஆம் பக்கங்களிற் காணலாம்.
[7]சிவஞான முனிவரெனவும் வழங்கப்பெறுவர்.
[8] மீ. பிரபந்தத்திரட்டு, 3941.
[9] மீ. பிரபந்தத் திரட்டு, 3953.
[10] சமயாசாரியராம் இருவர் - திருநாவுக்கரசு நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார். சந்தானத்து இருவர்கள் - மெய்கண்டதேவர், அருணந்தி சிவாசாரியாரென்பவர்கள்.
[11] இங்கே கட்டளையிட்டபடியே ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் எனக்குத் திருவாவடுதுறை அக்கிரகாரத்தில் வடசிறகின் கீழைக்கோடியில் நூதனமாக இரண்டுகட்டு வீடொன்றைக் கட்டுவித்து அளித்தார்கள். அக்காலத்திற் பதிப்பிக்கப் பெற்ற சில அச்சுப் புத்தகங்களில் அவர்களுடைய கட்டளையின்படி திருவாவடுதுறைச் சாமிநாதையரென்றே என் பெயர் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். அப்பால் நான் கும்பகோணம் காலேஜிற்குப் போனபோது அந்த வீட்டை அவர்களிடமே ஒப்பித்துவிட்டேன்.
[12] ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குத் தாண்டவராயத் தம்பிரானவர்கள் பால் சிறந்த மதிப்பும் அன்பும் உண்டு; "நாம் வழிபடு தெய்வம் பிரத்தியட்சமாகி என்ன வேண்டுமென்று கேட்டால் தாண்டவராயத் தம்பிரானவர்களை நாம் பார்க்கும்படி செய்யவேண்டுமென்று கேட்போம்" என்று அவர் சொல்வதுண்டு. அத்தகைய மதிப்புடைய தாண்டவராயத் தம்பிரானவர்கள் பாராட்டத்தக்க புலமைத் திறம் பிள்ளையவர்கள்பால் இருந்தமையால்தான் தேசிகர் இவரிடத்து அதிகமாக ஈடுபட்டார்.
[13] கும்பன் - அகத்திய முனிவர். கம்பன் ஆம் - நடுக்கமுடையவன் ஆவான்; கம்பம் - நடுக்கம்.
-----------
11. குடும்பத்தின் பிற்கால நிலை.
அப்பால் சிதம்பரம் பிள்ளை முதலியவர்கள் தேசிகரிடம் விடை பெற்றுக்கொண்டு மாயூரத்திற்குப் புறப்படுகையில் தேசிகர் உசிதமாக அப்பொழுது செய்யவேண்டிய உதவிகளைச் செய்து அனுப்பினார். அவர்கள் அவற்றைப் பெற்றுக்கொண்டு மாயூரம் சென்று சொந்த வீட்டில் வாழ்ந்து வந்தார்கள்.
சிதம்பரம் பிள்ளையினுடைய குடும்பம் வரவரப் பெருகிவிட்டமையினால் செலவு அதிகரிக்கவே குடும்பம் தளர்ச்சியை அடைந்தது. அதனை அவர் மடத்திற்குத் தெரிவிக்கவில்லை. வேதநாயகம்பிள்ளை அதனை அறிந்து அந்தத் துயரத்தை நீக்கியருள வேண்டுமென்று சுப்பிரமணிய தேசிகருக்கு ஐந்து பாடல்கள் எழுதியனுப்பினார். அவை வருமாறு :
-
(விருத்தம்)
{11.1}
(1) "புயலிருக்குங் கரதலச்சுப் பிரமணிய வள்ளானின் புலவன் பன்னூல்
இயலிருக்கு மீனாட்சி சுந்தரவேண் மைந்தனுறும் இடர்க ளெல்லாம்
அயலிருக்கும் பலரானும் அறிவுற்றேன் பரிவுற்றேன் அவனுக் கிங்கே
உயலிருக்குங் கயலிருக்கும் வயலிருக்கு மொன்றினைநீ உதவி னம்மா."
[வயல் இருக்கும் ஒன்று - நெல். உதவின் உயலிருக்கு மென்க.]
(கட்டளைக் கலித் துறை)
{11.2}
(2) "கந்தனை நேர்சுப் பிரமணி யைய கவிஞரெலாம்
வந்தனை செய்தற் குரியன் பெரியன்மண் வாழ்வைவிட்டென்
சிந்தனை வாழ்பவன் மீனாட்சி சுந்தரச் செல்வனென்பான்
மைந்தனை நிந்தனைப் பஞ்ச முறாவண்ணம் வாழ்வருளே."
{11.3}
(3) "அருந்தவஞ் செய்த தவத்தாற் புவியி லவதரித்துப்
பெருந்தவஞ் செய்சுப் பிரமணி யையநின் பிள்ளையிவன்
வருந்து மிடிப்பிணிக் கோர்மருந் தின்றிமெய் வாடினனம்
மருந்து விளையு மிடம்யா தெனினின் வளவயலே."
{11.4}
(4) "பல்லார் புகழ்சுப் பிரமணி யையவிப் பாலனைத்தான்
இல்லாமை யென்னு மதகரி பற்றி யிடுங்கடும்போர்
வில்லா லடிப்பினுங் கல்லா லடிப்பினும் விட்டிலதால்
நெல்லா லடிக்கும் படிநீ பலகலம் நீட்டுவையே."
{11.5}
(5) "பாவிற் பெரியவன் மீனாட்சி சுந்தரப் பாவலனே
தாவிற் பெரிய னவன்சேய் நினக்கதைத் தானுரைக்க
நாவிற் பெரியவ னானென்சொற் கேட்டு நலம்புரியப்
பூவிற் பெரியவ னீசுப்ர மண்ய புரவலனே."
[தா - வருத்தம். பூ - பூமி.]
சிதம்பரம் பிள்ளைக்கு ஆங்கிலத்திலும் பயிற்சி உண்டு. அவர் சும்மா இருத்தலையறிந்த வேதநாயகம் பிள்ளை அங்கே டிப்டி கலெக்டராயிருந்த முருகேசம் பிள்ளை யென்பவரிடம் சொல்லி மாயூரந் தாலூகாவிலுள்ள கப்பூரென்னும் ஊரில் கணக்கு வேலை கிடைக்கும்படி செய்வித்தார். அவ்வேலையைப் பெற்றுக்கொண்டு அவர் வாழ்ந்திருப்பாராயினர். மேல் உத்தியோகஸ்தர்கள் பிள்ளையவர்களுடைய குமாரரென்பதை யறிந்து அவரிடம் பிரியமாக இருந்து பலவகையான அனுகூலங்களை அவருக்குச் செய்வித்து வந்தார்கள்.
சிதம்பரம் பிள்ளை அப்பொழுது அப்பொழுது தாம் வாங்கி வந்த கடன் மிகுதியால் தம்முடைய வீட்டை விற்றுக் கடன்காரர்களுக்குச் சேர்ப்பிக்க வேண்டிய தொகையைச் சேர்ப்பித்துவிட்டுப் பின் வாடகை வீட்டிற் குடியிருந்துவந்தனர்; அங்ஙனம் இருந்து வந்தமை அவர் குடும்பத்திற்கு மிகவும் அஸெளகரியமாக இருந்தது. அதனை யறிந்த நான் அவருக்கு இடவசதி செய்விக்க வேண்டுமென்று நினைந்து பிள்ளையவர்கள் மாணாக்கர்கள் பலரிடத்தும் அன்பர்கள் பலரிடத்தும் சொல்லியும் கடிதவாயிலாகத் தெரிவித்தும் வந்தேன். ஒருவரும் கவனிக்கவில்லை. அப்பால் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குப் பின்பு ஆதீனகர்த்தராக இருந்தவரும் அருங்கலை விநோதரும் கற்றவர் நற்றுணையுமாகிய ஸ்ரீ அம்பலவாண தேசிகருக்கு, சில செய்யுட்களால் சிதம்பரம் பிள்ளைக்கு ஒரு வீடுவாங்கிக்கொடுக்க வேண்டுமென்று தெரிவித்துக்கொண்டேன். அச்செய்யுட்கள் வருமாறு :
-
(விருத்தம்)
{11.6}
(1) "மாமேவு வடமொழிதென் மொழிவாணர் இசைவாணர் மகிழ்ந்து போற்றக்
காமேவு பெருவண்மை மருவியவர்ப் புரக்குமருங் கலைவி நோத
பாமேவு புகழுடையாய் ஆவடுதண் டுறையென்னும் பதியின் மேய
கோமேவு விறன்மிகுமம் பலவாண தேசிகயான் கூறல் கேண்மோ"
{11.7}
(2) "இனமளித்தற் கியலாமல் தனையடைந்த மாணாக்கர்க் கிரங்கி யென்றும்
அனமளித்தும் தனமளித்தும் அரியபல நூலளித்தும் அவையா ராயும்
மனமளித்தும் விளங்கியசீர் மீனாட்சி சுந்தரநா வலவர் கோமான்
முனமளித்த அரும்புதல்வன் இடமின்றி வருந்துதலும் முறைமை யாமோ."
{11.8}
(3) " வரமளிக்கும் வள்ளலஞ்சல் நாயகியோ டினிதமரும் மாயூ ரத்தில்
தரமளிக்குந் தென்மறுகி னினதுதிரு மடத்தருகே சார்ந்த தாகத்
திரமளிக்கும் வீடொன்று கட்டுவித்தே அவனிருக்கச் செய்வித் தாள்வாய்
உரமளிக்கும் அடியவர்க்கு வீடளித்தல் நின்மரபிற் குரிய தன்றோ."
[வள்ளலென்பது ஸ்ரீ மாயூரநாதரது திருநாமம்; அஞ்சலென்பது அம்பிகையின் திருநாமம்.]
-
(விருத்தம்)
{11.9}
(1) "வான்பூத்த கயிலாய பரம்பரையிற் சயிலாதி மரபிற் றோன்றித்
தேன்பூத்த சுவைபழுத்த தமிழ்மறையின் பொருளையனு தினமுந் தேர்ந்தே
ஊன்பூத்த பவப்பிணியு மிடிப்பிணியு மடுத்தவருக் கொழித்துப் போதிக்
கான்பூத்த நகர்வளரம் பலவாண தேவகடைக் கணிக்க வீதே."
(சயிலாதி - திருநந்திதேவர். தமிழ்மறை - தேவாரம். போதிக் கான்பூத்த நகர் - திருவாவடுதுறை; போதிக்கான் - அரசவனம்.)
{11.10}
(2) "இந்தமதி தனிலிருப தாந்தேதித் திருமுகமீண் டெய்தப் பெற்றேன்
சந்தவரைக் குறுமுனியு மதித்திடுமா றொருமூன்று தலைச்சை லப்பால்
வந்தபெருந் தமிழ்ச்செல்வன் மீனாட்சி சுந்தரநா வலவர் கோமான்
மைந்தனுக்கு வசதியளித் திடலாதி தெரிந்துமிக மகிழ்வுற் றேனால்."
(சந்தவரை - பொதியில் மலை. ஒரு மூன்றுதலைச் சைலம் - திரிசிரகிரி. வசதி - நல்லிடமாகிய வீடு.)
{11.11}
(3) "அகத்தியனோ குறியனின தருங்கவிநா வலனெடியன் அவனோர் நூலே
சகத்தினிடை நவின்றனன்மற் றதுவுமற்ற தென்பர்நினைச் சார்ந்தோன் யாரும்
மிகத்துதிக்க வியற்றியவை பலவவையிந் நாண்மேன்மேல் விளங்குந் தென்றல்
நகத்தினன்பன் னிருவர்க்கின் னவன்பலர்க்கா சானிவன்சீர் நவிலற் பாற்றோ."
(ஓர் நூலென்றது அகத்தியத்தை. மற்று அதுவும் அற்றது என்பர். பல - பல நூல்கள். ஆசானென்பதைப் பன்னிருவர்க்கே ஆசான் என முன்னுங்கூட்டுக.)
{11.12}
(4) "இன்னபெரு நாவலனின் மொழிப்படிநின் னிடைப்பலவாண்
டிருந்தென் போல்வார்க்
குன்னரிய பலநூலு முளங்கொளுமா றன்புடனன் குரைத்த லாலே
என்னவருத் தமுமின்றி யிருக்கின்றே மவன்புதல்வற் கில்ல மீய
நன்னரமை செயலில்லம் நினக்கன்றி யெவர்க்கிதனை நவிலு வேமால்."
(ஆதீனகர்த்தர்களாக வந்த யாவரும் ஒருவரே எனக் கொள்வதும் முன்னவர் செயல்களைப் பின்னவர்க்கும் ஏற்றிச் சொல்லுதலும் மரபு. இல்லம் - வீடு. செயல் இல்லம் - நானும் என் போல்வாரும் உதவி செய்தற்குரிய சாதனங்கள் இல்லேம்.)
{11.13}
(5) "பார்பூத்த பருதியென விளங்கியடுத் தவர் துயரம் பாற்றி யோங்கும்
சீர்பூத்த துறைசையிலம் பலவாண தேசிகவிச் செய்தி தன்னைப்
பேர்பூத்த பலர்க்கெழுதிக் கைசோர்ந்தேன் நாச்சோர்ந்தேன் பேசிப் பேசிக்
கார்பூத்த கொடையமைநின் றிருமுகங்கண் டல்லலொரீஇக் களித்திட் டேனால்."
{11.14}
(6) " நினையடைந்தோர்க் கொருகுறையு மிலையெனினு முளதொன்று நிகழ்த்து
கென்னின்
அனையனைய அன்புடைச்சுப் பிரமணிய குருமணிநின் அளவி லாற்றல்
தனைநிகரில் கொடையினைக்கல் வியைமனோ தைரியத்தைச் சாந்தந் தன்னை
இனையபல வற்றையிவ ணிருந்துணர்ந்து மகிழ்ந்திலனே என்ப தாமால்."
{11.15}
(7) "என்னமொழிந் திடினுமெனக் காராமை மீக்கூரும் ஈது நிற்க
முன்னடைந்தோர் தமைப்பிரம ராக்கிமறைப் பொருள்பலவும் மொழிந்தே பின்னர்
அன்னவரை மாலாக்கி உடன்பீதாம் பரதரர்கள் ஆக்கி நீசெய்
இன்னபரி சாதிகளைக் கலியாண சுந்தரன்வந் தியம்பி னானால்."
(பிரமர் - மயக்கமுடையவர், பிரமதேவர். மறைப்பொருள் - தேவாரப் பொருள், வேதத்தின் பொருள். மாலாக்கி - மயக்கமுடையவராகச் செய்து, திருமாலாக்கி. பீதாம்பரம் – பொன்னாடை; திருமாலுக்குப் பொன்னாடை உரியது. கலியாணசுந்தரன்: என் குமாரன்.)
{11.16}
(8) "மந்தரமா ளிகைவீதித் துறைசையிலம் பலவாண வள்ள லேவான்
கந்தரநே ரருண்மிகுசுப் பிரமணிய குருமணியாற் கவின்மீனாட்சி
சுந்தரநா வலன்கவலை யிலனானா னனையவன்பிற் றோன்ற லாகி
வந்தமைநீ யவன்புதல்வன் றனைக்காத்தல் வழக்குன்சீர் வாழ்க மாதோ."
குடும்பத்துக்கு உதவி.
கும்பகோணம் காலேஜில் நான் வேலைபார்க்கத் தொடங்கியது முதல் அவ்வப்போது என்னால் இயன்ற உதவிகளை அக்குடும்பத்துக்குச் செய்துவந்ததுண்டு. நிலையான தொகை ஒன்று இருந்தால் அக் குடும்பத்திற்கு அனுகூலமாக இருக்குமென்று நினைத்து அது விஷயத்தில் முயற்சி செய்ய எண்ணினேன். 1915-ஆம் வருஷம் பிப்ரவரி மாதத்தில் பூவாளூர்ச் சைவ சித்தாந்த ஸபைக்கு நான் போய்வர நேர்ந்தது. அங்ஙனம் போயிருந்தபொழுது அவ்வூரில் பிள்ளையவர்களுடைய பெருமையை நன்றாக அறிந்த தனவைசியச் செல்வர்கள் அக்காலத்தில் இருந்தனராதலின் அவர்கள் முன்னிலையில் என்னுடைய கருத்தை வெளியிட்டேன். அந்த ஸபைக்கு வந்திருந்த சேற்றூர்ச் சமஸ்தான வித்துவான் ஸ்ரீமான் மு. ரா. கந்தசாமிக் கவிராயரவர்களும், மகிபாலன்பட்டி, பண்டிதமணி ஸ்ரீமான் மு. கதிரேசச் செட்டியாரவர்களும் அதனை ஆமோதித்துப் பேசினார்கள். ஸபைக்கு வந்திருந்த கனவான்கள் கேட்டு அங்கீகரித்து உடனே 250 ரூபாய் வரையில் சேர்த்துக் கொடுப்பதாக வாக்களித்தார்கள். என்னுடைய விருப்பத்தின்படி இக்காரியத்தை நிறைவேற்றுதற்குரிய முயற்சியைக் கவிராயரவர்களும் செட்டியாரவர்களும் ஏற்றுக்கொண்டு தமிழ்நாட்டாருக்கு ஒரு வேண்டுகோளை அச்சிட்டு அனுப்பினார்கள். பின்பு மேலைச்சிவபுரி முதலிய ஊர்களிலிருந்த கனவான்களிடமிருந்தும் பூவாளூரிலிருந்தும் வேறு வகையிலும் ரூபாய் ஆயிரத்துக்குச் சிறிது மேற்பட்ட தொகை கிடைத்திருப்பதாக அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள். 1916-ஆம் வருஷம் டிசம்பர் மாதத்தில் இங்ஙனம் சேர்ந்த அந்தத் தொகை திருவாவடுதுறை மடத்தைச் சார்ந்த பாஸ்கர விலாஸத்திற் கூட்டப்பெற்ற ஒரு மகா ஸபையில் சிதம்பரம் பிள்ளைக்கு எங்கள் விருப்பத்தின்படி ஸ்ரீ அம்பலவாண தேசிகரால் வழங்கப்பெற்றது. அவர் அதனைப் பெற்று அந்தத் தொகையின் வட்டியினாலும் வேலையிற் கிடைக்கும் வரும்படியினாலும் சுகமாக வாழ்ந்துவந்தனர்.
குடும்பத்தின் பிந்திய வரலாறு.
சிதம்பரம் பிள்ளைக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. அவர்களுள் முதல்வரும் மூன்றாம் புதல்வரும் அக்காலத்தில் இறந்துவிட்டனர். இரண்டாங் குமாரருக்கு வைத்தியநாதசாமி பிள்ளை யென்று பெயர். தம் தந்தையார் பார்த்து வந்த கப்பூர்க் கணக்கு வேலையை அவர் பார்த்துக்கொண்டு இப்பொழுது சௌக்கியமாக இருந்து வருகின்றனர். அவரை நான் அடிக்கடி பார்ப்பதுண்டு. "உமக்கு ஆண் குழந்தை பிறந்தால் அக் குழந்தைக்குப் பிள்ளையவர்களுடைய பெயரை வைக்கவேண்டும்" என்று அவரிடம் நான் சொல்லியிருந்தேன். பின் ஒருமுறை அவரைக் கண்டபொழுது தமக்கு ஒரு குமாரன் பிறந்திருப்பதாகவும் அவனுக்கு மீனாட்சி சுந்தரமென்று பெயர் வைத்திருப்பதாகவும் சொன்னார். நான் அதனை அறிந்து மகிழ்ந்தேன். அவர் அடிக்கடி திருவாவடுதுறைக்கு வந்து இப்பொழுது ஆதீனகர்த்தர்களாக விளங்கும் ஸ்ரீலஸ்ரீ வைத்தியலிங்க தேசிகரவர்களைத் தரிசனம் செய்துகொண்டு போவார். அவர்களும் அவர்பால் மிக்க அன்புடையவர்களாகி விசேஷ தினங்களில் வஸ்திரம் முதலியன அளித்து ஆதரித்துவருகிறார்கள்.
சில வருஷங்களுக்கு முன்பு நான் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர்களைப்பார்க்கச் சென்றிருந்தபொழுது வைத்தியநாதசாமி பிள்ளை தம்முடைய குமாரனுடன் அங்கே வந்திருந்தார்; "இவன் தான் என்னுடைய குமாரன்" என்று அவர் சொன்னார். அப்பொழுது அவனுக்குப் பத்துப்பிராயம் இருக்கும். அவனைப் பார்த்து, “உன்னுடைய பெயரென்ன?" என்று கேட்டேன். அவன், "மீனாட்சிசுந்தரம்" என்று தைரியமாகச் சொன்னான். அந்தப் பெயரை அவன் கூறியபொழுது எனக்குப் பழைய ஞாபகங்களெல்லாம் வந்து இன்பமளித்தன. "தமிழ் வாசிக்கிறாயா?" என்றேன். “வாசித்து வருகிறேன்" என்றான். "ஏதாவது ஒரு பாடலைச் சொல்" என்றபோது ஒரு பாட்டை நன்றாகச் சொன்னான். பின்பு, "புதிதாக ஒரு பாட்டைப் பாடித் தந்தால் பாடம் பண்ணிக்கொண்டு தைரியமாக ஸந்நிதானத்திடம் சொல்வாயா?" என்று நான் கேட்கவே, "நன்றாகச் சொல்லுவேன்" என்று அவன் சொன்னான். அவனுடைய தைரியத்தைப் பாராட்டியதன்றி,
-
(கட்டளைக் கலித்துறை)
{11.17}
"படிதாங்கு சேடனும் கூறற் கருநின்றன் பாக்கியத்தை
மிடிதாங்கு சிற்றடி யேனோ வறிந்து விளம்புவனின்
அடிதாங்கி வாழ வருள்திதென் கோமுத்தி யாந்தலத்தெம்
குடிதாங்கி வாழும் வயித்திய லிங்க குருமணியே "
என்ற செய்யுளைச் செய்து கொடுத்துப் பாடம் பண்ணச் சொல்லி ஆதீனகர்த்தரவர்களிடம் அழைத்துச் சென்றேன். அவர்களுக்கு வந்தனம் செய்து திருநீறு பெற்றுக் கொண்டான். பின்பு பாட்டை விண்ணப்பிக்கச் செய்தேன். அவன் மிகவும் தைரியமாகவே அந்தச் செய்யுளைச் சொன்னான்; சொல்லும் பொழுது எங்கெங்கே எப்படி எப்படி நிறுத்திச் சொல்ல வேண்டுமோ அங்கங்கே அப்படி அப்படியே நிறுத்தி அந்தப் பாடலைச் சொன்னான். கேட்ட தேசிகரவர்கள் மகிழ்ந்து பின்னும் இரண்டுமுறை அதனைச் சொல்லச் செய்து கேட்டார்கள்; "மேலும் மேலும் படித்து வா. அடிக்கடி இங்கே வந்து போ" என்று பேரன்புடன் கட்டளையிட்டதோடு பொருளும் வஸ்திரமும் அளித்து அனுப்பினார்கள்.
அவனுக்கு இப்பொழுது பதின்மூன்று பிராயம் இருக்கும். அவனைக் காணும் பொழுதெல்லாம், "பிள்ளையவர்கள் பரம்பரையிற் பிறந்த உனக்குத் தமிழில் இயல்பாகவே அறிவு விருத்தியாகும். ஊக்கத்தோடு படித்து வந்தால் சிறந்த பயனை அடைவாய். தமிழ் நாட்டாருடைய அன்புக்கும் பாத்திரனாவாய்" என்று கூறிக்கொண்டு வருகிறேன்; அவனும் படித்துக்கொண்டு வருகிறான். தமிழ்த் தெய்வத்தின் திருவருளும், தமிழ்நாட்டாருடைய பேரன்பும் அக் குடும்பத்தினருக்கு என்றும் இருந்து வரவேண்டுமென்பதே எனது வேணவாவாகும். இறைவன் திருவருள் அங்ஙனமே செய்விக்குமென எண்ணுகிறேன்.
சுபம்.
--------------
12. இயல்புகளும் புலமைத் திறனும்.
பிள்ளையவர்களுடைய சரீரம் மாநிறமுடையது. இவர் நல்ல வளர்ச்சியமைந்த தோற்றமுடையவர். இவரைப் பார்த்த மாத்திரத்தில் யாரும் ’சிறந்த தகுதியுடையவர்’ என்று எண்ணுவார்கள். நெற்றியின் அகலமானது இவருடைய அறிவைப் புலப்படுத்தும். கைகள் முழங்கால் வரையில் நீண்டிருக்கும். வலக்கையில் உள்ளங்கையிலிருந்து நடுவிரலின் மத்தியில் ஊடுருவிச் செல்லும் ரேகை ஒன்று உண்டு. அது வித்தியாரேகை யென்றும் அதனை யுடையவர்கள் சிறந்த கவிஞர்களாகவும் நல்ல, ஞாபக சக்தி யுடையவர்களாகவும் இருப்பார்களென்றும் அத்தகையவர்களைக் காண்டல் அரிதென்றும் அறிஞர் கூறுவர்; உள்ளங்கையானது பூவைப்போன்று மிகவும் மென்மை-யுடையதாக இருக்கும்; "எத்தகைய வறுமை நிலையை அடைவதாயிருந்தாலும் ஆகார விஷயத்தில் எந்த இடத்திலும் இவருக்கும் இவரைச் சார்ந்தவர்களுக்கும் யாதொரு குறைவும் வாராது" என்று சாமுத்திரிகா லட்சணம் தெரிந்தோர் கூறுவதுண்டு. நான் பழகிய போது இவர் பருத்த தேகம் உடையவராக இருந்தார். தலையில் சிறிய குடுமி உண்டு. இளமையிலிருந்ததைவிட முதுமையில் பருத்த தேக முடையவராக ஆயினரென்று இவருடன் பழகியவர் சொல்லுவர்.
காட்சிக்கு எளிமையும், பணிவும், சாந்தமும் இவர்பாலுள்ளன வென்பதை இவரைக் கண்டவுடன் அறியலாம். ஆழ்ந்த அறிவும் இணையற்ற கவித்துவமும் வாய்க்கப் பெற்றிருந்தும், அலைகளெல்லாம் அடங்கி ஒலியற்றிருக்கும் ஆழ்ந்த கடலைப்போல் அறிவின் விசித்திர சக்தியெல்லாம் கண்டவுடன் அறிய முடியாவண்ணம் அடங்கியிருக்கும் தோற்றமுடையவராக இவர் இருந்தார்.
இடையில் ஆறுமுழ நீளமும் மூன்றுமுழ அகலமும் உள்ள தூய வெள்ளை உடை, ஆறுமுழ நீளமுள்ள மேலாடை, உதரபந்தனமாக ஒரு சிறிய சவுக்கம் ஆகிய இவ்வளவே இவர் எக்காலத்தும் அணியும் ஆடைகள். உடையை மூலகச்சமாக உடுத்திக்கொள்வார். . முன்னும் பின்னும் கெளரிசங்கரமுள்ள ருத்திராட்ச கண்டியைத் தரித்திருப்பார். இவருடைய கையில் ஊன்றிச் செல்வதற்குரிய பிரம்பு, ஒன்று இருக்கும். நடந்து செல்லுங் காலத்தில் வலக்கையால் வஸ்திரத்தின் மூலையைப் பற்றிக்கொண்டு நடப்பார். இடையின் வலப் புறத்தில் நன்றாக வடிக்கட்டிய விபூதி நிறைந்த வெள்ளிச் சம்புடம் ஒன்றும் இடப்புறத்தில் மூக்குத்தூள் 'டப்பி' ஒன்றும் இவர் உடையிற் செருகப்பட்டிருக்கும். காலில் ஜோடு போடுவதுண்டு; ஆனால் திருவாவடுதுறையில் மட்டும் இவர் அவற்றை உபயோகிப்பதில்லை. யானை போன்ற அசைந்த மெல்லிய நடையை உடையவர் இவர். அளவாகவும் மென்மையாகவும் நிறுத்தியும் பேசுவார். திடீரென்று அதட்டிப் பேசுதலும் கோபமாக இரைந்து பேசுதலும் இவர்பால் இல்லை.
வழக்கங்கள்.
விடிய நான்கு நாழிகைக்கு முன் எழுந்திருப்பது இவர் வழக்கம்; உடனே ஒரு நாழிகைவழித் தூரத்திற்குக் குறையாமல் நடந்து சென்று தந்தசுத்தி முதலியவற்றைச் செய்து அநுஷ்டானங்களை முடித்துக் கொண்டு வருவார். அப்பொழுது உடன் செல்பவர்களுடன் தமிழ் நூல்களிலுள்ள செய்யுள் நயங்களைப்பற்றிப் பேசிக்கொண்டே நடப்பார். தம்முடன் உறையும் மாணாக்கர்கள் விழித்து எழுந்து வாராவிட்டால், அவர்கள் எழுந்துவரும் வரையில் [1] பழந்தமிழ்ச் செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே வீட்டு வாயிலில் உலாத்துவார்; அவர்களைத் தாமாக எழுப்புவதில்லை. நான் பழகிவந்த காலத்தில் இவர் பெரும்பாலும் வெந்நீரிலேயே ஸ்நானம் செய்வார். நல்ல புல்தரைகளையும் சோலைகளையும் ஆற்றின் கரைகளையும் பார்ப்பதில் இவருக்கு மனமகிழ்ச்சி உண்டு. கோடைக் காலத்தில் பிற்பகலிற்சென்று ஆறுகளில் ஊற்றுத் தோண்டி இறைப்பித்துச் சுத்தமான அந்த ஊற்றைப் பார்த்தலிலும் அதில் ஆடையைத் துவைக்கச் செய்தலிலும் துவைத்த ஆடைகளைக் கொய்து ஊற்றின் குறுக்கே போடுவித்து ஊறவைத்தலிலும் இவருக்கு விருப்பம் அதிகம். அந்த ஊற்றுக்களைப் பார்த்துக்கொண்டே வழக்கமாகச் செய்யும் செய்யுட்களை இயற்றுவதுமுண்டு. ஒருமுறை நான்கு ஊற்றுக்களைப் போடுவித்து அவற்றைப்பற்றி நான்கு செய்யுட்கள் இயற்றினர்.
வண்டியிற் போவதைவிட நடப்பதில் இவருக்கு விருப்பம் அதிகம். வண்டியிற் பிரயாணம் செய்யும்போது சில சமயங்களில் சில மாணாக்கர்களை வண்டியிலேயே இருக்கச்செய்து தாம் இறங்கிச் சிலருடன் நடந்துவருவார். அப்போது அங்கங்கே உள்ள இயற்கைக் காட்சிகளைக் கண்டு இன்புறுவார்.
உட்கார்ந்து பாடஞ்சொல்லும்பொழுது மடியில் ஒரு திண்டை வைத்து அதன் மேல் கைகளை மடக்கிவைத்துக்கொண்டே சொல்வார். மடத்திலிருந்து பாடஞ்சொல்லும்பொழுது திண்டைவைத்துக் கொள்வதில்லை. கைகளைக் கட்டிக்கொண்டே சொல்வது வழக்கம். ஆறுமணிநேரம் வரையில் காலைப் பெயர்த்துவையாமல் அமர்ந்தபடியே யிருந்து பாடஞ்சொல்வார். எந்த வகையான செய்யுளையும் [2] ஒரே வகையான இசைமுறையிலேதான் சொல்வது இவருடைய வழக்கம்.
உணவு.
காலையில் எவ்வித உணவையும் இவர் உட்கொள்ளுவதில்லை. தினம் தோறும் பகலில் பூஜை பண்ணியபின்பே உண்பார். இரண்டு வேளையே உணவு கொள்வார். மிளகு சேர்த்த உணவு வகைகளிலும் கீரை வகைகளிலும் சித்திரான்னங்களிலும் புளி சேர்த்துச் செய்த அரைக்கீரை உணவிலும் நறு நெய்யிலும் மாம்பழத்திலும் தேங்காய் வழுக்கையிலும் இவருக்கு விருப்பம் உண்டு. இரவில் சீனாக்கற்கண்டு சேர்த்துக் காய்ச்சிய பாலை உண்டு படுப்பார்; பாலுண்ணுதல் ஒருநாளும் தவறியதே யில்லை; திருவாவடுதுறையிலிருக்கும்பொழுது, இரண்டு சேர் பால் இவருக்கு மடத்திலிருந்து அனுப்பப்படும்; ஒரு சேரைத் தாம் உண்டு மிகுதியை உடன் இருப்பவர்களுக்குக் கொடுத்துவிடுவார்.
குணங்கள்.
இவருடைய அரிய குணங்களுள் பொறுமை, திருப்தி, தம்மை வியவாமை, பிறருடைய குற்றத்தைக் கூறாமை, பிறரைப் பாராட்டல், இரக்கம், நன்றியறிவு, சிவபக்தி, மாணாக்கர்பாலுள்ள அன்பு முதலியவற்றைச் சிறப்பாகச் சொல்லலாம்.
பொறுமை.
இவர்பால் அமைந்திருந்த சாந்தகுணமே மாணாக்கர்களையும் பிறரையும் இவர்பால் இழுத்தது. பிறர் தம்மை அவமதித்தாலும் பிறரால் தமக்கு இடையூறுகள் நேர்ந்தாலும் பொறுத்துக் கொண்டிருக்கும் இவருடைய இயல்பை அறிந்து வியந்தவர்கள் பலர். தியாகராச செட்டியார் முதலியோர் சில சமயங்களில் இவர் மேற்கொண்ட பொறுமைக்காக இவரைக் குறை கூறியதுமுண்டு. யாரேனும் கடுமையாகப் பேசினால் எதிர்த்து ஒன்றும் கூறாமல் உடனே எழுந்து சென்றுவிடுவார். யாரிடத்தும் விரோதம் பாராட்டக்கூடாதென்பது இவர் கொள்கை. தம் கொள்கைக்கு மாறுபாடுடையவர்களானாலும் தமக்குப் பல இடையூறுகளைச் செய்தவர்களானாலும் அவர்களோடு பழக நேர்ந்தால் எல்லாவற்றையும் மறந்து அன்புடன் பழகுவார்; அவர்களுக்கு உதவியும் செய்வார். இவருடைய வாழ்க்கையில் வறுமையினாலும் பிறருடைய அழுக்காற்றாலும் இவருக்கு நேர்ந்த இடையூறுகள் பல. அவற்றை யெல்லாம் பொறுமையால் வென்று புகழோடு விளங்கினார்.
திருப்தி.
பணத்திற்கு அடிமையாக இராமல் பணத்தை இவர் அடிமை யாக்கினார். எவ்வளவு வறிய நிலையில் இருந்தாலும் தம் கொள்கைக்கு விரோதமான எதையும் செய்யாத வீரம் இவர்பால் இருந்தது. வறுமையால் துன்பமுறுகையில் தமது விவேகத்தால் அத்துன்பத்தை இன்பமாக எண்ணி வாழ்ந்துவந்தார். இவரைக்கொண்டு தாம் பொருள் வருவாய் பெறலாமென்றெண்ணிப் பாடசாலை வைக்கலாமென்றும் புஸ்தகங்கள் பதிப்பிக்கலாமென்றும் வேறுவகைகளிற் பொருள் ஈட்டலாமென்றும் பலர் அடிக்கடி வந்து வந்து இவர்பாற் கூறியதுண்டு. அவற்றிற்கு இவர் செவிகொடுக்கவேயில்லை. இவர் நினைத்திருந்தால் எவ்வளவோ செல்வத்தைப் பெற்றுப் பின்னும் சிறந்த நிலையில் இருந்திருக்கலாம். உள்ளதே போதுமென்ற திருப்தியே அத்தகைய முயற்சியில் இவரைச் செலுத்தாமல் இருந்தது. இவர் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் இவருக்குத் தெரிந்த பிரபுக்களிற்பலர் இவரைப் பெருஞ்செல்வராகச் செய்திருப்பார்கள். அவர்களிடம் தம் நிலையைக் கூறுதலை இவர் நினைத்தும் அறியார். கல்விச் செல்வத்தையன்றி வேறு செல்வத்தை இவர் மதியார்.
தம்மை வியவாமை.
தம்மை வியத்தலென்னும் குற்றம் இவர்பால் ஒருபொழுதும் காணப்படவில்லை. இவர் தமிழ் நூலாசிரியராக இருந்து செய்தற்கரிய பல செயல்களைச் செய்திருந்தாலும் அவற்றைப்பற்றித் தாமே பாராட்டிக்கொண்டதை யாரும் இவர்பால் ஒருபோதும் கண்டிலர்.
பிறருடைய குற்றத்தைக் கூறாமை.
பிறருடைய குற்றங்களை இவர் எடுத்துக் கூறமாட்டார். ஒரு நூலாசிரியரிடமோ உரையாசிரியரிடமோ ஏனைப்புலவர்களிடமோ குற்றங்கள் காணப்படின் அவற்றை இவர் பெரும்பாலும் வெளியிடார்; வெளியிட்டாலும் குற்றமென்று பிறர் கருதாதவாறு, பக்குவமாகச் சொல்லுவார்; யாரேனும் குற்றமென்று வலிந்து சொல்வாராயின் சமாதானம் சொல்லிப் பின்பு அவரை அவ்வாறு சொல்லாத வண்ணம் செய்விப்பார்.
பிறரைப் பாராட்டல்.
பிறரைப் பாராட்டுதலும் பிற கவிஞர்களுடைய செய்யுட்களைப் போற்றுதலும் தம்பால் வந்தவர்கள் கல்வியறிவிற் குறைவுடையவர்களாக இருந்தாலும் அவர்களுடைய செய்யுட்களைப் பாராட்டி ஆதரித்து ஊக்கமளித்தலுமாகிய இவருடைய நற்குணங்கள் யாவரையும் இவர்பால் இழுத்தன. தமக்குப் புலப்படாத ஒரு கருத்து எவ்வளவு சிறிதாயினும் அதனை யார்கூறினும் அங்ஙனம் கூறியவருடைய நிலையைக் கருதாமல் இவர் மிகவும் பாராட்டுவார். இவரால் அங்ஙனம் பாராட்டப்பெற்ற பின்பு அவர்களுக்கு ஒரு தனி மதிப்பு உண்டாகும்.
இரக்கம்.
பிறருடைய துயரைக் கண்டவிடத்து இரங்கும் உள்ளமுடையவர் இவர். தமக்குக் குறைபாடிருப்பினும் பிறருக்குள்ள குறைபாடுகளை நீக்கும் தன்மையினர்; "தம் குறை தீர்வுள்ளார் தளர்ந்து பிறர்க்குறூஉம், வெங்குறை தீர்க்கும்" விழுமியோர் இவர்.
நன்றி மறவாமை.
பிறர் செய்த நன்றியை மறவாமற் பாராட்டும் தன்மை இவருடைய குணங்களில் தலைசிறந்து விளங்கியது; "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர்" என்னும் அருமைத் திருக்குறளுக்கு இலக்கியமாக இவர் இருந்தனர். பிறருடைய உதவியைப் பெற்றவுடன் நன்றியறிவினால் மனங்கசிவதில் இவரை ஒப்பார் யாரும் இல்லையென்றே சொல்லலாம். அந்த உணர்ச்சி அவ்வப்பொழுது உபாகாரிகளை இவர் பாராட்டிய செய்யுட்களில் வெளிப்பட்டிருத்தலைக் காணலாம். கொடுத்தாற் புகழ்தலும் கொடாவிடின் இகழ்தலுமாகிய புன்செயல்கள் இவர்பால் இல்லை. மனிதரைப் புகழ்வது பிழையென்று சிலர் கூறுவதுண்டு. ஒன்றை எதிர்பார்த்து ஒருவரைப் புகழ்தலும், எதிர்பார்த்தபடி கிடைக்காவிடின் வெறுத்தலும் பிழையெனவே இவர் கருதிவந்தார். ஒவ்வொரு மனிதனும் பிறருடைய உதவிகளால் வாழ்க்கையை நடத்த வேண்டியவனாக இருக்கிறான். பிறருதவியின்றித் தன்னுடைய ஆற்றலொன்றனையே கொண்டு வாழ்வது உலகத்தில் இயலுவதன்று. ஒருவருக்கொருவர் தம்மால் இயன்ற உதவிகளைச் செய்து இன்புற்று வாழ்வதே அறம். அங்ஙனம் ஒருவர் ஒருவருக்கு உதவிபுரியும் பொழுது அதனை மறவாமல் நினைத்தலும் வாயாரப் புகழ்தலும் இயன்றவரையில் உதவி செய்தவருக்குத் தம்மால் ஆன உதவிகளைப் புரிதலும் வேண்டும். அந்த முறையில் புலமை யுடையவர்கள் தமக்கு உதவிசெய்தவர்களை மறவாமல் வாயாரப் புகழ்தல் அவர்களுடைய கடமையாகும். நாவன்மையை அவ்வகையில் உபயோகிப்பது செய்ந்நன்றியறிவின் பயனாகுமேயன்றிப் பிழையாக எண்ணக்கூடியதன்று. சங்கப்புலவர்களும், கம்பர் ஒட்டக்கூத்தர் புகழேந்தி வில்லிபுத்தூரார் முதலிய புலவர் பெருமக்களும் செய்ந்நன்றியறிவு காரணமாகவே தம்மை ஆதரித்த உபகாரிகளின் புகழைப் பாராட்டி உரிய இடங்களில் பல செய்யுட்களில் அமைத்துள்ளார்கள்" என்று இவர் கூறுவதுண்டு.
சிவபக்தி.
இவருக்கு இருந்த சிவபக்தி அளவிடற்கரியது. சிவதீட்சைகளை முறையே இவர் பெற்றவர். இவர் நெற்றியில் எப்பொழுதும் திருநீறு விளங்கிக்கொண்டேயிருக்கும். இரவில் சயனித்துக்கொள்ளுமுன் திருநீறு தரித்துக்கொண்டு சிறிதுநேரம் ஈசுவரத்தியானம் செய்துவிட்டு அப்பால்தான் சயனித்துக்கொள்வார். திருநீற்றுச்சம்புடம் தலையணையின் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும். துயிலெழுந்தவுடன் திருநீறு தரித்துக்கொண்டுதான் புறத்தே வருவார். நாள்தோறும் சிவபூஜையை நெடுநேரம் செய்வார். பூஜைக்கு வேண்டிய பத்திரபுஷ்பங்களை அதிகமாகக் காணுமிடந்தோறும் எடுத்தும் எடுப்பித்துக் கொண்டும் வருவதுண்டு.
சிவஸ்தலங்களுக்குச் சென்று தரிசனம் செய்வதும், சிவஸ்தல வரலாறுகளை நன்றாகத் தெரிந்துகொள்வதும், சிவபெருமானுடைய புகழைப் பலவகையாகச் சொல்லியும் பாடியும் வரும் வழக்கமும் இவர்பாற் சிறந்து விளங்கின. சைவ சம்பிரதாயங்களுக்கு விரோதமான செயல்களைக்காண இவர் மனம் பொறார். இவருடைய மாணாக்கர்களுள் ஒருவர் தம்பால் பாடங்கேட்கும் ஒரு வீரசைவரைத் தமக்குக் கால் பிடிக்கும்படி சொன்னதுண்டு. அதனை அறிந்த இவர், "சிவலிங்க தாரணம் செய்து கொண்டவரை இங்ஙனம் ஏவுதல் பிழை" என்று சொல்லி வருந்தினார். சிவத்துவேஷமான வார்த்தைகளைக் கேட்டால் வருந்துவார்.
இப்புலவர்பெருமானுடைய சிவபக்தியின் முதிர்வை இவர் நூல்களே நன்கு தெளிவிக்கும். இவர் இறுதிநாள்காறும் சிவபிரானுடைய திருவடிக் கமலத்தையே எண்ணி உருகினார். உலகவாழ்வை நீப்பதற்கு இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு சுலோகத்தை மொழிபெயர்த்து அதனுடைய ஈற்றடியில், "ஏகநாயகனே தில்லையிலாடும் இறைவனே எம்பெருமானே" என்று அமைத்த செய்தியால் சிவபிரானுடைய திருவடி நினைவில் இவர் மனம் பதிந்திருந்தமை புலப்படுகின்றதல்லவா? இவர் பூத உடம்பை நீத்த அன்று திருவாவடுதுறையில் ஸ்ரீ கோமுத்தீசுவரரது இடபவாகனக் காட்சி விழா அமைந்ததும், திருவாசகத்தில் அடைக்கலப்பத்தை வாசிக்கையில் இவர் பூவுலகை நீத்ததுமாகிய வாய்ப்புக்கள் இவரது சிவபக்தியின் பயனென்றே சொல்லவேண்டும்.
பிற மதங்களிடத்தில் இவர் அவமதிப்பில்லாதவராகவே யிருந்தார். கும்பகோணத்தில் பெரிய தெருவில் அயலூரிலிருந்துவந்து வாழ்ந்த ஒரு பெருஞ்செல்வர் இருந்தார். 'முனிசிபாலிடி' தேர்தலில் அவருக்கு ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாள் கோயிலைச் சார்ந்தவர்கள் தங்கள் வாக்கை வழங்கவில்லை. ஒரு நாள் பிள்ளையவர்கள் அவரோடு பேசிக்கொண்டிருந்த சமயம் திருவிழாக் காலமாதலின் அன்று ஸ்ரீ சாரங்கபாணிப் பெருமாளது திருத்தேர் அந்த வீதி வழியாக வருகையில் அந்தப் பிரபுவின் வீட்டு வாசலில் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. வாக்குப் பெறாத கோபத்தையுடைய அந்தத் தனவான், "இந்தச் சாரங்கபாணி என் வீட்டு வாசலுக்கு முன்னே வந்து ஏன் நிற்கிறான்?" என்று இகழ்ச்சிக் குறிப்போடு சொன்னார். கேட்ட இக்கவிஞர்கோமான் மிகவும் வருந்தி, "தெய்வ தூஷணை பண்ணுகிற இவரோடு பழகுதல் சரியன்று" என்று எண்ணி அன்றுமுதல் அவரது பழக்கத்தை அடியோடே விட்டுவிட்டார்.
மாணாக்கர்பாலிருந்த அன்பு.
இவருடைய வாழ்க்கையில் இவர் நூலாசிரியராகவும் போதகாசிரியராகவும் இருந்து செய்த செயல்கள் தமிழறிவை வளப்படுத்தின. அவையே இவர் வாழ்க்கையாக அமைந்தன என்று கூறுதல் மிகையன்று. தமிழ் நூல்களை ஓய்வின்றி முறையாகப் பாடஞ்சொல்லும் திறத்தில் இவர்காலத்தில் இவரைப்போன்றவர் வேறு யாரும் இல்லை. பலரிடம் பல சமயங்களில் அலைந்து முயன்று தாம் படித்து வந்த வருத்தத்தை இவர் நன்றாக அறிந்தவராதலின் தம்பால் வந்த மாணாக்கர்களுக்குக் கஷ்டத்தை உண்டாக்கக் கூடாதென்று கருதி அவர்கள்பால் அளவற்ற அன்பு பூண்டு பாடஞ்சொல்லிக்கொடுக்கும் இயல்புடையவரானார். மாணாக்கர்களிடம் இவர் தாயைப் போன்ற அன்புடையவராக இருந்தனர்; அவர்களோ தந்தையாகவே எண்ணி' இவரிடம் பயபக்தியோடு ஒழுகினர். அவர்களுடைய குற்றங்களை இவர் மறந்து விடுவார். அவர்களுக்கு எந்த எந்த வகையில் குறைகள் உண்டோ அவற்றை நீக்குதற்காக முயல்வார்; அவர்கள் தெரிந்து கொள்ளாதபடி அவர்களுக்கு வேண்டிய நன்மைகளைச் செய்வார். மாணாக்கர்களேயன்றிப் பிறர் சுற்றத்தாரல்லரென்பது இவருடைய வாழ்வின் நோக்கமாக இருந்தது.
தமிழ் படித்தவர் யாரும் இவரிடத்தில் கவலையின்றிப் பழகலாம்; ஏதாவது கேள்வி கேட்பாரென்றேனும், தருக்குற்றிருப்பாரென்றேனும், தங்களுடைய பிழைப்பைக் கெடுத்து விடுவாரென்றேனும் ஒருவருக்கும் இவர்பால் அச்சம் உண்டாவதில்லை.
தம்முடைய மாணாக்கர்களை நல்ல நிலையில் இருக்கச் செய்ய வேண்டுமென்னும் நினைவு இவருக்கு எப்போதும் உண்டு. தம்மைப் பார்க்கவந்த செல்வர் முதலியோர் தம்முடைய அரிய பிரசங்கத்தைக் கேட்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கையில் தம்முடைய மாணாக்கர்களை அழைத்து இருக்கச்செய்து அவர்களுக்குத் தெரிந்த பாடல்களை இசையோடு சொல்லச் செய்வதும் பொருள் சொல்லிப் பிரசங்கிக்கச் செய்து கேட்பிப்பதும் இவருடைய வழக்கம். அவர்களுக்கு அநுகூலம் உண்டாகும் விஷயத்தில் எத்தகைய உழைப்பையும் மேற்கொள்வார்.
இவர்பாற் படித்த மாணாக்கர்கள் பலவகையினர். சாதி, சமயம், ஆச்சிரமம் முதலியவற்றில் வேறுபாடுடையவர்கள் பலர் படித்தனர். யாவருக்கும் இவர்பாலிருந்த அன்பு ஒருபடித்தானதே. இவரிடம் படித்தவர்கள் நல்லறிவையும் நன்மதிப்பையும் உயர்நிலையையும் அடைந்தார்கள்; சிலர் ஸம்ஸ்தான வித்துவான்களாகவும் கலாசாலைப் பண்டிதர்களாகவும் இருக்கும் பேறு பெற்றனர். தம்பிரான்களிற் சிலர் நல்ல அதிகாரத்தையும் உயர்ந்த நிலையையும் அடைந்தனர்; சிலர் ஆதீனத்தலைவர்களாகவும் ஆயினர். இவரிடம் ஒருவர் சிலகாலம் படித்தாலும் சிறந்த அறிவுடையவராகி விடுவார். இவருடைய மாணாக்கர்க ளென்றாலே அவர்களுக்குத் தனியாக ஒருமதிப்பு உண்டு. இவருடைய கைராசியை யாவரும் புகழ்வார்கள். இவரிடம் புஸ்தகம் பெற்றவர்கள்கூடத் தமிழ்ப் பயிற்சி உடையவர்களாக விளங்கினார்கள். திருவாவடுதுறை மடத்தில் இராயஸவேலை பார்த்துவந்த பொன்னுசாமி செட்டியாரென்பவர் இளமையில் இவரிடம் 'வாட்போக்கிக் கலம்பகம்' என்னும் புஸ்தகத்தைப் பெற்றுப் பின் பிறரிடம் முறையே அநேக நூல்களைப் பாடங்கேட்டுத் தமிழ்நூற் பயிற்சியும் செய்யுளியற்றும் வன்மையும் சொல் வன்மையும் உடையவராகிப் புகழோடு விளங்கினர்.
பாடஞ்சொல்லுதல்.
பாடஞ் சொல்வதில் இந்நாவலர் பெருந்தகைக்குச் சலிப்பே உண்டாவதில்லை. தமக்குத் தெரிந்தவற்றை யாவரும் அறிந்து கொள்ள வேண்டுமென்னும் உபகார சிந்தையுடையவர். மாணாக்கர்களுடைய தரமறிந்து பாடஞ் சொல்வார். பாடஞ் சொல்லுங் காலத்தில் கையில் புத்தகம் வைத்துக்கொண்டு இவர் சொல்வதை நான் பார்த்ததேயில்லை. பாடஞ்சொல்லும் உரை நடை, செய்யுட்கள் எல்லாம் இவருக்கு மனப்பாடமாகவே இருக்கும். இவர் இன்ன சமயங்களிலேதான் பாடஞ்சொல்லுவது என்ற நியமம் வைத்துக்கொள்ளவில்லை. சமயம் நேரும்பொழுதெல்லாம் பாடஞ் சொல்வதே இவருடைய வழக்கமாக இருந்தது. வண்டியிற் செல்லும்பொழுதும், உண்ணும் பொழுதும் உறங்கத் தொடங்கிய பொழுதும் கூட இவரிடம் பாடம் நடைபெறும்.
பாடஞ் சொல்லும்பொழுது கடினபதங்களுக்குமட்டும் பொருள் சொல்வார். கற்பனைகளை இன்றியமையாத இடங்களில் விளக்கிக் காட்டுவார். இன்ன கருத்துக்களை ஒழுங்காக மனத்தில் வைத்திருக்க வேண்டுமென்று கூறுவார். தேவாரம், திருவாசகம், கல்லாடம், பெரியபுராணம், திருக்குறள், காஞ்சிப் புராணம், கம்பராமாயணம் என்பவற்றிலிருந்து மேற்கோள்களை எடுத்துச் சொல்லி மாணாக்கர் மனத்தில் கருத்துக்கள் தெளிவாகப் பதியும்படி செய்வார். பெட்டி நிறையப் பணத்தை நிரப்பிவைத்துக் கொண்டிருக்கும் வண்மையாளன் தடையின்றி எடுத்து வாரி வாரி வழங்குவது போலத் தமது உள்ளக் களஞ்சியத்தில் பல நாட்களாகச் சேமித்து வைத்த பொருள்களை யெல்லாம் பாடஞ்சொல்லுகையில் மாணாக்கர்களுக்கு வழங்கி வரும்பொழுது, "இவ்வளவு நூல்களையும் இவர் எப்படி மனத்திற் பதித்து வைத்துக்கெண்டாரோ!" என்னும் ஆச்சரியம் அயலிலிருப்பவர்களுக்கு உண்டாகும். நடக்கும் புஸ்தகசாலையென்று இவரைக் கூறலாம். பாடஞ்சொல்லும் நூல்களின் உரைகளில் மேற்கோளாக வரும் செய்யுட்களுக்குப் பொருள் கூறுவார். புலவர்களைப் பற்றிய வரலாறுகளை அடிக்கடி சொல்லுவார். அருங்கருத்துக்களைச் சொல்லிவரும்பொழுது அவற்றைத் தாம் அறிந்த வரலாற்றையும் கூறுவதுண்டு. மாணாக்கர்களுக்குச் செய்யுள் இயற்றும் பழக்கம் உண்டாக வேண்டுமென்னும் எண்ணத்தினால் அடிக்கடி சமஸ்யைகளை அவர்களுக்குக் கொடுத்துச் செய்யுள் செய்யச் சொல்வார்.
பண்டைக்காலமுதல் நூல்களில் வழங்கிவந்த சொற்பிரயோகங்களை நாம் மாற்றுதல் பிழையென்று சொல்வார். வடமொழிச்சொற்களைத் திரித்து வழங்கும்பொழுது மனம்போனவாறு திரித்தலை இவர் விரும்பார். எல்லாச் சொற்களையும் திரித்தே வழங்கவேண்டுமென்பது இவருக்கு உடன்பாடன்று; "என் பெயரைத் திரித்து மீனாக்கிசுந்தரமென்று வழங்கினால் நன்றாக இருக்குமா?" என்று கேட்பார். கோகநகம், ஆதவன், மானிடன் என்ற சொற்பிரயோகங்கள் அடிப்பட்ட வழக்காக நூல்களில் அமைந்துவிட்டமையால் அவற்றை வடமொழிப்படியே இருக்கவேண்டுமென்று கருதித் திருத்துதல் நன்றன்று என்பர். சொல்லுக்கு மதிப்பு உண்டாவது, புலவர்களுடைய ஆட்சியில் அது வழங்கிவருவதனால்தான்; ஆதலின் சொல்லின் உருவத்தையும் பிறதொடர்புகளையும் ஆராய்வதினும் ஆன்றோர் ஆட்சியில் உள்ளனவா என்பதை ஆராய்வதே சிறந்ததென்பது இவர் கருத்து. மனஸ் என்பதை 'மனது' என்று வழங்கக் கூடாதென்பது இவர் கொள்கை; "மனஸ் என்ற வடமொழிச்சொல் மனம் என்றுதான் வரும்; சிரஸ் என்பது சிரமென்று வருகிறதேயன்றிச் சிரது என்று வருவதில்லை" என்பார். இத்தகைய செய்திகளையெல்லாம் பாடஞ்சொல்லுகையில் மாணாக்கர்களுக்குக் கூறுவார். "இலக்கண அறிவு ஒருவனுக்கு இன்றியமையாததே. ஆயினும் இலக்கிய பாடங்களை வாசித்த பின்பே இலக்கண நூல்களைக் கற்றல் பயன்விளைக்கும்" என்று இவர் சொல்வதுண்டு. அயலிடம் சென்றபொழுது யாரேனும் இவரிடம் கடினமான பாடல்களுக்குப் பொருள் கேட்பின் அவர்களுக்கு அவற்றை விளக்கிவிட்டுப் பின்பு வீட்டுக்கு வந்து மாணாக்கர்களுக்கும் அவற்றைக் கூறி விளக்குவது இவரது வழக்கம்.
கல்விப் பெருமை.
இவருடைய கல்வி மிகவும் ஆழமும் அகலமும் உடையதாக இருந்தது; "அளக்கலாகா அளவும் பொருளும்" உடைய இவரது அறிவின் திறம் ஒவ்வொருநாளும் புதியதாகவே தோற்றியது; இளமை தொடங்கியே தமிழ் நூல்களை முறையாகப் பயின்று பயின்று உரம் பெற்றதாக இருந்தது. படித்தவர்களாக எண்ணிய யாவரிடமும் பழகி அவரவர்களுக்குத் தெரிந்தவற்றை இவர் இளமை தொடங்கியே கற்றனர். தமிழ் நூலாக எதுகிடைப்பினும் அதனைவாசித்து மெய்ப்பொருள் அறிந்தனர். இங்ஙனம் துளிதுளியாகச் சேர்த்த அறிவு பலதுளி பெருவெள்ளமென்பது போல ஒரு பெரிய கடலாகப் பெருகி நின்றது. பிற்காலத்தில் இவர் பாடஞ் சொல்லும்போது நன்றாகத்தெளிந்த அறிவோடு கருத்துக்களை எடுத்துக் கூறும் வன்மையும் பாடஞ்சொல்லும் நூல்களிலுள்ள பொருள்களைத் தம்முடையனவாகக் கொண்டுவிட்ட நிலையும் இவர் இளமைதொடங்கிச் செய்துவந்த முயற்சிகளின் பயனென்றே கூறவேண்டும். சிலரைப் போலக் கல்வி விஷயத்தில் இவருக்குத் திருப்தி பிறக்கவில்லை. எந்த இடத்திற்குப் போனாலும் அங்கே பழைய சுவடி ஏதாவது இருக்கின்றதாவென்று பார்ப்பார். இருந்தால் உடனே வாங்கி ஒருமுறைவாசித்து விட்டுப் பொருள் சொல்வார்; சில சமயங்களிற் பிரதி செய்துவைத்துக் கொள்வதுமுண்டு. சந்தேகம் நேரிடின் தெரிந்தவர்களைச் சந்திக்கும்பொழுது விசாரித்துத் தீர்த்துக் கொள்ளுவார்.
இப்புலவர்பிரான் பல இடங்களில் பலவகையில் சேகரித்துவைத்திருந்த தம் அறிவைத் தம் மாணவர்களுக்கு வரையாது வழங்கினமையால், பிரபந்தங்கள் உயிர்பெற்றன. அதுகாறும் தெரிவிப்பாரின்றிக் கிடந்த குமரகுருபரசுவாமிகள் பிரபந்தங்களிற்சில , சிவப்பிரகாச சுவாமிகள் பிரபந்தங்களிற் சில, சிவஞான முனிவர் பிரபந்தங்களிற்சில, இன்னும் வேறுசில தமிழ் நாட்டாருடைய கைகளில் விளங்கின. இவர் பாடஞ் சொல்லியதனாலேயே அப்பிரபந்தங்களின் நயங்ளைத் தமிழ்மக்கள் உணரத் தலைப்பட்டனர். கம்பரந்தாதி, முல்லையந்தாதி முதலிய நூல்களுக்கு இவர் சொல்லி எழுதுவித்த உரைகளே பின்பு மதுரை இராமசாமிப் பிள்ளையால் பதிப்பிக்கப்பட்டன. காஞ்சிப் புராணம், தணிகைப் புராணம், திருவானைக்காப்புராணம் முதலியவற்றிற்கு இவர் பாடஞ்சொன்ன உரையே பிற்காலத்தில் தமிழ்நாட்டில் வழங்குவதாயிற்று.
பலருடைய வேண்டுகோளுக்கு இணங்கி இவர் செவ்வந்திப் புராணம், காஞ்சிப் புராணத்தின் முதற்பாகம், திருவானைக்காப் புராணம், கல்லாடமூலம் முதலியவற்றைப் பதிப்பித்தனர்.
கையெழுத்து.
நூல்களைத் தொகுத்து வைப்பதிலும் தாமே எழுதிச் சேர்ப்பதிலும் இவருக்கு அவா மிகுதி. இளமை தொடங்கியே ஏட்டில் எழுதும் வழக்கம் இவருக்கு இருந்தமையின் இவருடைய எழுத்து அழகாக முத்துக்கோத்தாற்போல இருக்கும். ஒவ்வொரு வரியும் கோணாமல் ஒழுங்காக இருக்கும்; எழுத்து ஒன்றுடன் ஒன்று சேராது. இவரால் எழுதப்பெற்ற சுவடிகளுக்குக் கணக்கேயில்லை. கம்பராமாயணத்தை மூன்றுமுறை எழுதியிருக்கிறார். மாணாக்கர்களுக்கும் ஏட்டில் எழுதும் பயிற்சியை உண்டாக்கினர்.
இவர் தம் கையினால் நூல்களைக் காகிதங்களில் எழுதியதில்லை. யாருக்கேனும் கடிதம் எழுத வேண்டுமாயின் காகிதத்தில் உடன் இருப்பவரைக்கொண்டு எழுதுவித்து இறுதியில் ‘தி. மீனாட்சிசுந்தரம்’ என்று கையெழுத்திடுவார்; 'தி' என்பது திரிசிரபுரம் என்பதன் முதற் குறிப்பாகும். ஒருவரும் அருகில் இல்லையானால் தாமே எழுதுவார். காகிதத்தில் எழுதும் எழுத்தின் அமைப்புக்கும் ஏட்டுச்சுவடியில் எழுதும் எழுத்தின் அமைப்புக்கும் சிறிது வேறுபாடுண்டு.
தமிழன்பு.
தமிழ் நூல்களிடத்தில் இவருக்கு இருந்த அன்பு அளவற்றது. ஒரு நூலைப் படித்து வருகையில் அதில் முழுதும் ஈடுபட்டு, உணவு உறக்கம் முதலியவற்றையும் மறந்துவிடுவார்; தமிழ்நூல் சில சமயங்களில் இவருடைய நோய்க்கு மருந்தாகவும் உதவியிருக்கிறது. நல்ல நூல்களில் உள்ள சிறந்த பகுதிகளைப் படிக்கும்பொழுதும் பாடஞ் சொல்லும்பொழுதும் மனமுருகிக் கண்ணீர் வீழ்த்துவார். தமிழ்ப் புலவர்களுள் கச்சியப்ப முனிவரை இவர் பக்தியோடு வழிபட்டுப் பாராட்டுவார்; "செய்யுள் செய்துவரும்பொழுது தடைப்பட்டால் கச்சியப்ப முனிவரைத் தியானிப்பேன். உடனே விரைவாகக் கருத்துக்களும் சொற்களும் தடையின்றி எழும்" என்று இவர் சொல்லியதைக் கேட்டிருக்கிறேன். சேக்கிழார், கம்பர், நெற்குன்றவாண முதலியார், அம்பிகாபதி, கவி வீரராகவ முதலியார், வரதுங்கராமபாண்டியர், அதிவீரராமபாண்டியர், திருவாரூர் இலக்கண விளக்கம் வைத்திய நாததேசிகர், துறைமங்கலம் சிவப்பிரகாசர், சிவஞானமுனிவர் என்பவர்களுடைய நூல்களில் இவருக்கு விருப்பம் அதிகம். கம்பருடைய செய்யுட்களைப் படித்து வருகையில் இடையிடையே அவற்றின் சுவையில் ஈடுபட்டு, "இவையெல்லாம் நினைத்துப் பாடிய செய்யுட்களா?" என்று கூறுவதுண்டு. திருப்புகலூரந்தாதியிலுள்ள திரிபின் அமைப்பை வியப்பார். திருச்சிற்றம்பலக் கோவையாரிலுள்ள செய்யுட்களை அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பார். கல்லாடப் பகுதிகள் இவருக்கு அடிக்கடி ஞாபகத்துக்கு வரும். தேவாரப் பகுதிகளின் கருத்தைச் சில சில சமயங்களில் எடுத்துக் காட்டுவதுண்டு. இலக்கண விளக்கத்தில் இவருக்கு மதிப்பு அதிகம். சைவரால் இயற்றப்பெற்ற நூலென்பதும் அந்நூல் அகத்திணையியலில், திருச்சிற்றம்பலக் கோவையாரிலுள்ள துறைகளை அமைத்துக்கொள்வதற்கு ஏற்ற இலக்கணங்களையும் பொருத்தி, அவற்றிற்கு அக்கோவையாரிலுள்ள செய்யுட்களை இடையிடையே உதாரணமாகக் காட்டியிருப்ப தும் அதற்குரிய காரணங்களாம். அக்காரணங்களை அடிக்கடி கூறி வைத்தியநாத தேசிகரை இவர் பாராட்டுவதுண்டு. சிவஞான முனிவருடைய செய்யுள் நடையிலும் வசன நடையிலும் இவருக்கு உவப்பு அதிகம். கச்சியப்பமுனிவர் நூல்களில் உள்ள அரிய அமைப்புக்களையும் சங்கநூற் பிரயோகங்களையும் பற்றி இவர் அதிகமாகப் புகழ்வார். அவருடைய நூலமைப்பையே இவர் பெரும்பாலும் பின்பற்றிப் பாடுவார்.
கவித்திறன்.
இக் கவிஞர்பெருமானது கவித்திறன் இவருடைய வரலாற்றாலும் நூல்களாலும் அறியப்படும். நினைத்ததை நினைத்தவண்ணம் வார்த்தைகளால் சொல்வதே மிகவும் அரிய செயல். மனத்தில் தோன்றிய இனிய கருத்துக்களைச் செய்யுளுருவத்தில் அமைக்கும் கவித்வம் பாராட்டற்குரியதேயாம். கருத்துக்களை நினைக்கலாம்; நினைத்தவற்றைச் சொல்லலாம்; சொல்வதையே அழகுபெறப் பன்னலாம்; அதனையே கவியாக அமைக்கலாம்; ஆனால் நினைத்தவற்றை நினைத்த போதெல்லாம் நினைத்த வழியே தமிழ்ச் சொற்கள் ஏவல்கேட்ப வருத்தமின்றி விளையாட்டாகக் கவிபாடும் திறமை எல்லாக் கவிஞர்களுக்கும் வாய்ப்பதன்று; அத்தகைய திறமையையுடைய கவிஞரை மற்றப் புலவர்களோடு ஒருங்கு எண்ணுதல் தகாது. அவர்கள் பிறப்பிலேயே கவித்வ சக்தியுடன் பிறந்தவர்களாவார்கள். அவ்வகைக் கவிஞர் வரிசையில் சேர்ந்தவரே இந்த மகாகவி. [3} சொற்களை வருந்தித் தேடி அகராதியையும் நிகண்டுகளையும் அடுக்கி வைத்துக்கொண்டு கவிபாடுவதென்பது இவர்பால் ஒருபொழுதும் இல்லை.
சுவையற்ற பாடல்களை உண்டாக்கும் உலைக்கூடமாக இவர் மனம் இராமல், வளம் பெற்ற செய்யுட்களின் விளைநிலமாகவே இருந்தது. செய்யுள் இயற்றுவது இவருக்குத் தண்ணீர்பட்டபாடு. எவ்வளவோ ஆயிரக்கணக்காக இவர் செய்யுட்களை இயற்றினாலும் இவருக்கு முழுத் திருப்தி உண்டாகவில்லை. இவருடைய நாத்தினவு முற்றும் தீரவேயில்லை. இவருடைய ஆற்றலை இயன்றவரையில் பயனுறச்செய்ய வேண்டுமென்னும் நோக்கத்தோடு தக்கவண்ணம் யாரேனும் இவரை ஆதரித்து ஊக்கத்தை அளித்து வந்திருந்தால் இவர் இன்னும் எவ்வளவோ நூல்களை இயற்றியிருப்பார். சிலசில காலங்களில் சிலர் சிலரால் தங்கள் தங்கள் கருத்துக்கு இயைய இன்ன இன்னவகையாகச் செய்யவேண்டுமென்று தூண்டப்பட்டுச் செய்த நூல்களே இப்பொழுது இருக்கின்றன. இவருடைய புலமைக்கடலிலிருந்து ஊற்றெடுத்த சிறிய ஊற்றுக்கள் என்றே அவற்றைச் சொல்லவேண்டும். அக் கடல்முழுதும் மடை திறந்திருந்தால் தமிழ்நாடு முழுவதும் இவருடைய பலதுறைப்பட்ட கவிவெள்ளத்தில் முழுகி இன்புற்றிருக்கும்.
செய்யுள் இயற்றுவதெனின் அதற்கென்று தனியிடம், தனிக் காலம், தனியான செளகரியங்கள், ஓய்வு முதலியவற்றை இவர் எதிர்பார்ப்பதே இல்லை. இன்னகாலத்தில் தான் பாடுவது என்ற வரையறையும் இல்லை. பிரபுக்களும் அன்பர்களும் வந்து பேசிக்கொண்டிருக்கையிலேயே அருகிலிருக்கும் ஒரு மாணாக்கரிடம் இவர் ஒரு நூலுக்குரிய செய்யுட்களைச் சொல்லி எழுதுவித்துக்கொண்டே யிருப்பார்.
இவர் பெரும்பாலும் யோசித்துக்கொண்டேயிருக்கும் இயல்புடையவர். பாடவேண்டிய விஷயங்களை ஒருவகையாக மனத்தில் ஒழுங்குபடுத்திக்கொண்டு பின்பு பாட ஆரம்பித்தால் ஒரே மூச்சில் நூற்றுக்கணக்காகப் பாடுவார். செய்யுட்களைச் சொல்லிக்கொண்டே வருகையில் மனப்பாடமான நூல்களில் உள்ள செய்யுட்களைக் கூறுகின்றாரென்று தோற்றுமேயொழியப் புதிய செய்யுட்களை யோசித்துச் சொல்லி வருகிறாரென்று தோற்றாது. மிகவும் அரிய கற்பனைகளை மனத்திலே ஒழுங்குபண்ணிச் சில நிமிஷ நேரங்களிற் சொல்லிவிடுவார். நூல்களுக்கு இடையிடையே அமைந்த எதுகைக் கட்டுள்ள பாடல்களை இளைப்பாற்றுப் பாடல்களென்பார்.
இவர் இயற்றியவற்றைப் புராணங்கள், பிரபந்தங்கள், தனிப் பாடல்கள், சிறப்புப்பாயிரங்களென நான்கு வகையாகப் பிரிக்கலாம். புராணங்களைக் காப்பிய இலக்கணப்படி அமைக்கும் முறையை மேற்கொண்ட புலவர்களுள் இவரைப்போல அளவிற் பலவாகவுள்ள நூல்களைச் செய்தவர்கள் வேறெவரும் இல்லை. இவருக்கு முன்பிருந்த தமிழ்ப் புலவர்களிற் சிலர், சில புராணங்களை மொழிபெயர்த்துக் காப்பியங்களாகச் செய்திருக்கின்றனர். அவர்களுடைய நூல்களிற் காணப்படும் அமைப்புக்கள் அனைத்தையும் இவருடைய நூல்களிற் காணலாம்.
நூல்களின் இயல்பு.
இவருடைய நூல்களிற் பெரும்பான்மையானவை புராணங்களே. இவருடைய வாக்கால் தங்கள் தங்கள் ஊருக்கு ஒரு புராணமேனும் ஒரு பிரபந்தமேனும் பெறவேண்டுமென்று அக்காலத்தில் சிவஸ்தலங்களில் இருந்தவர்கள் விரும்பினார்கள். பழைய புராணம் இருந்தாலும், நாட்டுச் சிறப்பு நகரச் சிறப்பு முதலிய காப்பிய இலக்கண அமைதியுடன் செய்யவேண்டுமென்னும் கருத்தால் பலர் இவரை மீண்டும் ஒரு புராணம் இயற்றித் தரும்படி வற்புறுத்தி வேண்டுவதுண்டு. இவர் புராணங்கள் இயற்றிய தலங்களில் பெரும்பான்மையானவற்றிற்குப் பழைய புராணங்கள் உண்டு. ஆனாலும் இவருடைய புராணத்திற்கு மதிப்பு அதிகம். இவராற் புராணம் முதலியவை பாடப் பெற்ற தலங்கள் பல சொற்பணிகளும், கற்பணிகளும், பொற்பணிகளும் இயற்றப்பெற்றுப் பலவகையாலும் வளர்ச்சியுற்று விளங்குகின்றன என்பர். திருச்சிராப்பள்ளியில் சிரஸ்தேதாராக இருந்த ராவ்பகதூர் தி.பட்டாபிராம பிள்ளை யென்னும் கனவான் ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகருக்குத் தம்முடைய கருத்தை அமைத்து அகவல் வடிவமாக விடுத்த விண்ணப்பமொன்றில் பிள்ளையவர்களை, "புராணம் பாடும் புலவன்" என்று குறித்திருந்தனர்.
ஏறக்குறைய முப்பது வருஷங்களுக்கு முன் நானும் என்னுடைய தம்பியும் சில நண்பர்களும் திரு எவ்வுளூரிலிருந்து திருவெண்பாக்கம் என்னும் சிவஸ்தல தரிசனத்திற்காக நடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்பொழுது எதிரில் வந்த எழுபது பிராயமுடைய வேளாளரொருவரிடம் திருவெண்பாக்கத்தைப்பற்றிய விஷயங்களை விசாரிக்கத் தொடங்கினேன். அவர் அத்தல சரித்திரங்களைச் சொல்லிக்கொண்டே உடன் வந்தார். பின்பு நான், "இந்த ஸ்தலத்திற்குப் புராணம் உண்டா?" என்றேன். அவர், "புராணம் பாடுவதற்கு மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களா இருக்கிறார்கள்? அந்த மகான் இருந்தால் இதற்கும் ஒரு புராணம் பாடியிருப்பார்” என்றார். அந்தச் சொற்கள் எனது அகக்கண்ணின்முன் பிள்ளையவர்களுடைய திருவுருவத்தையும் செயல்களையும் தோற்றச் செய்தன; நெஞ்சம் உருகியது. வந்த அன்பர்களிடம், "ஜனசஞ்சாரமற்ற இந்தக் காட்டிலே கூடப் பிள்ளையவர்களுடைய புகழ் பரவியிருக்கிறது. பார்த்தீர்களா!" என்று சொன்னேன்.
சில புராணங்கள் முற்றுப் பெறுவதற்கு முன்பே அரங்கேற்றத் தொடங்கப்பெறும்; செய்யுளியற்றுதலும் அரங்கேற்றுதலும் அடுத்தடுத்து நிகழும். உடனிருந்தவர்களால் சிறப்புப்பாயிரம் இயற்றிக் கடவுள் வாழ்த்தின் இறுதியிற் சேர்க்கப்பெறுவது வழக்கம். இங்ஙனம் செய்வித்துச் சேர்ப்பது பண்டைகாலத்து முறையென்று தெரிகிறது.
இவர் இயற்றும் புராணக்காப்பியங்களில் கடவுள் வாழ்த்திலும் அவையடக்கத்திலும், "நூனுதல் பொருளைத் தன்னகத் தடக்கி" என்னும் இலக்கணப்படி நூலில் வரும் செய்திகளை உரிய இடங்களிற் பலவகையாக அமைப்பார். அவையடக்கங்கள் பலவற்றில் இலக்கணச் செய்திகளையும் சாஸ்திரக் கருத்துக்களையும் காணலாம். பெரும்பான்மையான புராணங்களில் கடவுள் வாழ்த்தில் சிவபெருமான் வணக்கத்தில் மடக்கு அமைந்திருக்கும். நாட்டுச் சிறப்பில் இன்னநாடு என்று சொல்லும்பொழுது செய்யுட்களின் இறுதியில் மடக்கை அமைப்பதும் ஐந்திணைகளை வருணிக்கும்பொழுது அவ்வத்திணைகளில் அமைந்துள்ள சிவஸ்தலங்களைக் கூறுவதும் இவர் இயல்பு. இவை பெரிய புராணத்தால் அறிந்தவை. சித்திரகவிகளைத் திருநாகைக்காரோணப் புராணம் அம்பர்ப்புராணம் என்பவற்றில் இவர் அமைத்திருக்கிறார். காஞ்சிப் புராணத்தின் முதற்காண்டத்தில் இத்தகைய அமைப்பு இருக்கிறது. தோத்திரம் வருமிடங்களில் ஒத்தாழிசைக்கலிப்பா முதலியவற்றையும் அமைப்பர்; இது சீகாளத்திப் புராணம் முதலியவற்றிலிருந்து அறிந்து கொண்டது. வரலாறுகளைச் சொல்லும்பொழுது வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை முதலிய சிறு செய்யுட்களாற் கூறுவர்; சில சமயங்களிற் கட்டளைக் கலித்துறையாலும் பாடுவர்.
தேவாரச் சந்தம் இவருடைய நூற்செய்யுட்களில் அமைந்து விளங்குதலை அங்கங்கே காணலாம். சைவசித்தாந்த சாஸ்திரங்களிலுள்ள கருத்துக்களைப் பல வேறு உருவங்களில் இவர் நூல்களில் அமைத்துள்ளார். இவருடைய நூல்களிற் பெரும்பாலனவற்றின் இறுதிச் செய்யுளில் ஸ்ரீ நடராஜப் பெருமான் குஞ்சிதபாதத்தைப் பற்றிய வாழ்த்தைக் காணலாம். எந்த நூலிலேனும் ஒரு புதுக்கருத்தை அறிந்தாராயின் அதனைப் பின்னும் அழகுபடுத்தித் தாம் இயற்றும் நூலில் பொருத்திவிடுவார். தாம் கண்டும் கேட்டும் அநுபவித்தும் அறிந்தவற்றைச் செய்யுட்களில் அங்கங்கே அமைத்துப் பாடுவார். தம்முடைய ஞானாசாரிய ஸ்தானமாகிய திருவாவடுதுறையிலுள்ள மடாலயத்தையும் குருமூர்த்திகளையும் பல இடங்களில் பாராட்டிக் கொண்டே செல்வது இவருடைய வழக்கம்.
இவருடைய பிரபந்தங்களில் அவ்வப்பிரபந்தங்களின் இலக்கணம் நன்றாக அமைந்திருக்கும். பிள்ளைத்தமிழ்களில் இவர் பகழிக் கூத்தரையும் குமரகுருபரரையும் ஒப்பர். கோவைகளில் கற்பனைகளையும் நீதிகளையும் பண்டைப்புலவர் சொற்பொருள்களையும் காணலாம். இவர் இயற்றிய திருவிடைமருதூருலாவுக்கு இணையாக உள்ள ஓருலாவைக் காண்டலரிது. யமகந்திரிபுவகைகளில் வேறெவரும் இயற்றி இராத விசித்திரமான அமைப்புக்களை இவர் வாக்கிற்காணலாம்.
இவர் இயற்றிய தனிப்பாடல்கள் பலவகையாகும். சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவண்ணம் காதுரியமாகப் பாடிய பாடல்கள் அளவிறந்தன. ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு வரலாறு உண்டு. அவற்றையன்றி, நன்றியறிவின் மிகுதியால், தமக்கு உபகாரம் செய்தவர்களை அவ்வப்போது பாடிய செய்யுட்கள் பல. அவை அன்புமிகுதியால் பாடப்பட்டனவாதலின் சில செய்யுட்கள் உயர்வு நவிற்சியாகத் தோற்றும். யாருக்கேனும் கடிதமெழுதுகையில் தலைப்பில் ஒரு பாடலை எழுதுவிப்பது இவருடைய வழக்கம். அங்ஙனம் இவர் எழுதிய பாடல்கள் நூற்றுக்கணக்காக இருக்கும். வடமொழி வித்துவான்கள் அவ்வப்பொழுது கூறும் சுலோகங்களை உடனே மொழிபெயர்த்துச் சொல்லிக்காட்டுவார். அவ்வாறு இயற்றிய செய்யுட்கள் பல. பிறருக்காகப் பாடிக்கொடுத்தவை எத்தனையோ பல.
இவரால் இயற்றப்பெற்ற சிறப்புப்பாயிரங்கள் நூலாசிரியருடைய தகுதிக்கேற்ப அமைந்திருக்கும். இவரிடமிருந்து சிறப்புப்பாயிரம் பெறுவதனால் நூலியற்றுபவர்களுக்கு உயர்ந்த மதிப்பு உண்டாயிற்று. அதனால் நூலியற்றுபவர்கள் பலர் இவருடைய சிறப்புப்பாயிரம் பெறப் பலவகையில் முயல்வார்கள். அகவலாகவும் விருத்தங்களாகவும் தரவு கொச்சகமாகவும் இவர் சிறப்புப் பாயிரங்கள் இயற்றியளிப்பதுண்டு. சிறந்த நூலாயின் அகவலாலும் பல விருத்தங்களாலும் சிறப்புப்பாயிரத்தை அமைப்பார். இல்லையெனின் ஒரு செய்யுளாலேனும், இரண்டு செய்யுளாலேனும் இன்ன நூலை இன்னார் செய்தார் என்னும் பொருள் மட்டும் அமையச் செய்து அளித்துவிடுவார். நூல்களுக்குச் சிறப்புப் பாயிரங்கள் அளிக்கும் முறை இவர் காலத்திலேதான் மிகுதியாக வழங்கலுற்றது.
இவர் இயற்றிய நூல்கள் பலவற்றுள் தெரியாதவை சில. தெரிந்தவற்றுள் புராணங்கள் 22; பிற காப்பியங்கள் 6; பிரபந்தங்கள் 45; தனிப்பாடல்கள் அளவிறந்தன.
( [$] இக் குறியிடப்பட்டவை பூர்த்தியாகாத உள்ள நூல்கள். (*)
[§] இக் குறியிடப்பட்டவை இப்பொழுது கிடைக்கப் பெறாதவை. (+)
[#] அச்சிடப்படாத நூல்கள். (|)
[@] அச்சிடப்பெற்றும் இப்பொழுது கிடைத்தற்கரியன.) (9)
1. தல புராணங்கள்.
-
(1) [#] அம்பர்ப் புராணம்
(2) [#] ஆற்றூர்ப் புராணம்
(3) [@] உறையூர்ப் புராணம்
(4) [@] கண்டதேவிப் புராணம்
(5) [@] ஸ்ரீ காசிரகசியம்
(6) [@] குறுக்கைப் புராணம்
(7) [@] கோயிலூர்ப் புராணம்
(8) [@] சூரைமாநகர்ப் புராணம்
(9) தனியூர்ப் புராணம்
(10) [$] தியாகராச லீலை
(11) [@] திருக்குடந்தைப் புராணம்
(12) [#] திருத்துருத்திப் புராணம்
(13) [@] திரு நாகைக் காரோணப் புராணம்
(14) [@] திருப்பெருந்துறைப் புராணம்
(15) [$] [§] திருமயிலைப் புராணம்
(16) [$] திருவரன்குளப் புராணம்
(17) [$] பட்டீச்சுரப் புராணம்
(18). மண்ணிப்படிக்கரைப் புராணம்
(19) [@] மாயூரப் புராணம்
(20) [@] வாளொளிபுற்றூர்ப் புராணம்
(21) [#] விளத்தொட்டிப் புராணம்
(22) [@] வீரவனப் புராணம்.
2. சரித்திரம்,
-
(1) ஆதி குமரகுருபரஸ்வாமிகள் சரித்திரம்
(2) [$] சிவஞான யோகிகள் சரித்திரம்
(3) [§] மயில்ராவணன் சரித்திரம்.
3. மான்மியம்.
- குருபூசை மான்மியம்
4. பிற காப்பியங்கள்.
- (1) குசேலோ பாக்கியானம்.
(2) சூத சங்கிதை.
5. பதிகம்.
- (1) கச்சி விநாயகர் பதிகம்
(2) சுப்பிரமணியசுவாமி பதிகம்
(3) [§] திட்டகுடிப் பதிகம்
(4) மருதவாணர் பதிகம்
6. பதிற்றுப்பத்தந்தாதி.
- (1) [§] தண்டபாணி பதிற்றுப் பத்தந்தாதி
(2) திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் பதிற்றுப்பத்தந்தாதி
(3) திருவூறைப் பதிற்றுப்பத்தந்தாதி.
(4) பழசைப் பதிற்றுப்பத்தந்தாதி
(5) பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி
(6) பூவாளூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
- (1) குடந்தைத் திரிபந்தாதி
(2) திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி
(3) [§] திருவானைக்காத் திரிபந்தாதி
(4) திருவிடைமருதூர்த் திரிபந்தாதி.
8. யமக அந்தாதி.
- (1) திருச்சிராமலை யமக அந்தாதி
(2) திருவாவடுதுறை யமக அந்தாதி
(3) தில்லை யமக அந்தாதி.
9. வெண்பா அந்தாதி.
- [§] எறும்பீச்சரம் வெண்பா அந்தாதி.
10. மாலை.
- (1) அகிலாண்டநாயகி மாலை
(2) கற்குடி மாலை
(3) சிதம்பரேசர் மாலை
(4) சுப்பிரமணிய தேசிகர் மாலை
(5) சச்சிதானந்த தேசிகர் மாலை
(6) சவராயலு நாயகர் மாலை
(7) சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை.
11. பிள்ளைத்தமிழ்.
- (1) அகிலாண்டநாயகி பிள்ளைத்தமிழ்
(2) காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்
(3) சேக்கிழார் பிள்ளைத்தமிழ்
(4) திருவிடைக்கழி முருகர் பிள்ளைத்தமிழ்
(5) திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்
(6) [§] பாகம்பிரியாள் பிள்ளைத்தமிழ்
(7) [§] பிரம்மவித்தியாநாயகி பிள்ளைத்தமிழ்
(8) பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத்தமிழ்
(9) மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்
(10) அம்பலவாணதேசிகர் பிள்ளைத்தமிழ்
12. கலம்பகம்.
- (1) வாட்போக்கிக் கலம்பகம்
(2) அம்பலவாண தேசிகர் கலம்பகம்.
13. கோவை.
- (1) சீகாழிக் கோவை
(2) குளத்தூர்க் கோவை
(3) வியாசைக் கோவை
14. உலா.
- திருவிடைமருதூருலா.
15. தூது.
- (1) சுப்பிரமணிய தேசிகர் நெஞ்சுவிடு தூது
(2) [§] தானப்பாசாரியார் தசவிடுதூது.
16. குறவஞ்சி.
- [+] திருவிடைக்கழிக் குறவஞ்சி.
17. சிலேடை வெண்பா.
- [$] [§] திருவாவடுதுறைச் சிலேடை வெண்பா.
18. வேறு.
- (1) கப்பற்பாட்டு
(2) குருபரம்பரை அகவல்
(3) திருஞானசம்பந்தமூர்த்தி
(4) பொன்னூசல்
(5) மங்களம்
(6) லாலி நாயனார் ஆனந்தக் களிப்பு
(7) வாழ்த்து
இவற்றையன்றி இவர் வேறு பல நூல்களை இயற்றவேண்டுமென்று எண்ணியிருந்ததுண்டு. குறிஞ்சித்திணை வளங்கள் நிறைந்து விளங்கும் திருக்குற்றாலத்திற்கு ஒரு கோவை பாடவேண்டுமென்று எண்ணியிருந்தனர். அவ்வெண்ணம் என்ன காரணத்தாலோ நிறைவேறவில்லை.
வசனம் எழுதுவதைக் காட்டிலும் செய்யுள் இயற்றுவதிலேதான் இவருக்கு விருப்பம் அதிகம். இவர் எழுதும் கடிதங்கள் எளிய வசன நடையில் சுருக்கமாக அமைந்திருக்கும்.
பேச்சு.
இவருடைய பேச்சு யாவருக்கும் விளங்கும்படி இருக்கும். பேச்சிலேயே இவருடைய சாந்த இயல்பு வெளியாகும். புராணப் பிரசங்கம் செய்யும்பொழுது ஒவ்வொரு கருத்தையும் விரிவாக எடுத்துக் கூறிச் செல்வார். விரைவின்றியும் தெளிவாகவும் இடையிடையே மேற்கோள்கள் காட்டியும் பதசாரங்கள் சொல்லியும் பிரசங்கம் செய்வார்.
'எல்லாம் கூடிக்கூடியும்' என்னும் தொடர் இவருடைய பேச்சில் அடிக்கடி வரும். ‘ஊக்கம்' என்னும் சொல்லை இடையிடையே இவரோடு பேசிவருகையில் கேட்கலாம். மாணாக்கர்களிடம் ஏதாவது சொல்வதானால், 'என்னப்பா' என்றாவது 'அப்பா' என்றாவது சொல்லிவிட்டுத்தான் செய்திகளைச் சொல்லத்தொடங்குவார். கல்வியின் இயல்பை அறியாமல் கௌரவத்திற்காக மட்டும் யாரேனும் ஒருவர்
உதாரகுணமுடையவராகத் தோற்றினால் அவர்பால் தம்முடைய மாணாக்கர்களேனும் வேறு யாரேனும் சென்று உதவி பெறலாமென்றெண்ணுவதுண்டு. அவர்களிடம், "அவரிடம் போய்த் தமிழ்ப் பாட்டைச் சொல்லிவிட வேண்டாம். அவர் காதுக்கு அது நாராசம் போல இருக்கும். மற்ற ஆடம்பரங்களுக்குக் குறைவில்லாமற் சென்றாற் போதும்" என்பார். கல்வியறிவில்லாதவர்கள் செய்யும் உபசாரத்தை, 'பெறுவான் தவம்' என்று குறிப்பாகக் கூறுவார்; "அறிவிலா னெஞ்சுவந் தீதல் பிறிதியாதும், இல்லை பெறுவான் றவம்" என்னும் திருக்குறளில் உள்ள தொடர் அது.
புகழ்
அருங்குணமும் நிறைந்த புலமையும் தளரா நாவன்மையும் அமைந்த இப்பெரியாருடைய கீர்த்தி இவருடைய காலத்திலேயே தமிழ் நாட்டிலும் பிற இடங்களிலும் பரவியிருந்தது. திருவாவடுதுறை மடத்தில் ஆதீன வித்துவானாக அமர்ந்த பின்னர்த் திருக்கூட்டத்தாருடைய பழக்கமும் ஆசிரியர்களின் திருவருளும் சிவ பூஜையும் மாணாக்கர்களுக்கு அதிகமாகப் பாடஞ் சொல்லுதலும் அவ்வப்போது நூல் இயற்றுதலுமாகிய இவற்றோடு இவர் மனம் அமைதியுற்றிருந்தது. வேறு எவ்வகையான நிலையையும் இவர் விரும்பவில்லை. ஆயினும் இவருடைய புகழ் நாளுக்குநாள் பரவிக்கொண்டேயிருந்தது. சைவ மடாதிபதிகள் எல்லோருடைய நன்மதிப்பையும் இவர் நன்கு பெற்றிருந்தனர். சைவர்கள் இவரை, "சைவப்பயிர் தழையத் தழையும் புயல்" என்றே கருதி வந்தனர். அன்னம் அளித்துப் புஸ்தகம் வாங்கிக் கொடுத்து அன்போடு படிப்பிப்பவர் இவரென்ற பெரும்புகழ் எங்கும் பரவியது. கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி என்ற பெயரையுடையோர்கள் பண்டைக்காலத்தில் ஒவ்வொருவரே இருந்தனர்; ஆதலின் அவர்களுடைய பெயர்கள் மற்றவர்களைச் சாராமலே தனிச் சிறப்புற்றார்கள். இவருடைய பெயரை உடையவர்கள் பலரிருந்தும் ‘மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள்' என்று கூறின் இவரையே குறிக்கும் பெருமையை இவர் அடைந்திருந்தனர். தமிழ் வித்துவான்களில், "பிள்ளையவர்கள்" என்றே வழங்கும் பெரிய கெளரவம் இவருக்குத்தான் அக்காலத்தில் அமைந்திருந்தது. சமீபகாலத்தில் இத்தகையோர் இருந்ததில்லை.
ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகர் இவருடைய புகழைப் பற்றிச் சொல்லும் பொழுது, "நம்மிடம் வரும் தமிழ்வித்துவான்கள் யாராயினும் பிள்ளையவர்களிடம் பாடங்கேட்டவரென்றேனும் அவர்களுக்குப் பாடஞ் சொன்னவரென்றேனும் அவர்களுக்கு ஐயம் தீர்த்தவரென்றேனும் அவர்களை ஜயித்தவரென்றேனும் தம்மைச்சொல்லிக்கொண்டு வருகிறார்கள். வருபவர்கள் தங்கள் தங்கள் புகழை வெளியிட எண்ணி அங்ஙனம் கூறுகிறார்கள். நமக்கோ அவர்கள் கூறக்கூறப் பிள்ளையவர்களுடைய புகழ்தான் உரம் பெற்று மிகுதியாகத் தோற்றிக் கொண்டே இருக்கிறது" என்று கூறுவார்.
இவரிடம் பாடம் கேட்கவேண்டுமென்று விரும்பியும் தங்களுக்குச் செவ்வி வாயாமையால் வருந்தினோர் பலர். வேறு யாராலும் தீர்க்கமுடியாத சந்தேகங்களை இவரைப் பார்க்கும் சமயம் நேருமாயின் அப்பொழுது இவர்பால் கேட்டுத் தீர்த்துக்கொள்ளலாமென்னும் கருத்துடைய பலர் அங்கங்கே இருந்தனர். செங்கணம் சின்னப்பண்ணை நாட்டாராகிய விருத்தாசல ரெட்டியாரென்பவர் தாம் படித்துக்கொண்டுவரும் ஒவ்வொரு நூலிலும் உண்டாகும் ஐயங்களை இவர்பால் தெரிவித்து மாற்றிக்கொள்ள வேண்டுமென்று ஐயப்பகுதிகளை ஒரு குறிப்புப் புத்தகத்தில் பதிந்து கொண்டே வந்ததை நான் பார்த்திருக்கிறேன்.
இவரால் தமிழ்நாட்டிற்கு உண்டான பயன்.
இப்புலவர்பிரானால் தமிழ்மக்கள் பெற்ற பயன் மிகப் பெரிதாகும். புதிய புதிய நூல்களை இயற்றித் தமிழ் நயங்களை அமைத்துக் காட்டிய இவருடைய செய்யுளால் பலவகைச் சுவைகளை அறியும் பயனைத் தமிழ்மக்கள் பெறுகின்றனர். புது நூல்களை இயற்றியதோடு நில்லாமல் தாம் வருந்தித்தேடிய பழைய நூல்களை விளக்கிவைத்த இவருடைய செயல் தமிழ் நாட்டாரால் என்றைக்கும் நினைக்கத்தக்கதாகும். தமிழ்ப் பாடஞ் சொல்லிச் சொல்லி மாணாக்கர் கூட்டத்தை வளர்த்து அவர்கள் மூலமாகத் தமிழறிவைத் தமிழ் மக்களுக்குப் பயன்படச் செய்த வள்ளல் இவர். எங்கெங்கே தமிழ் நூல்களை முறையாகப் படித்தறியும் உணர்வும் பழைய புராணங்கள் பிரபந்தங்கள் முதலியவற்றைப் பயின்று இன்புறும் இயல்பும் திகழ்கின்றனவோ அங்கெல்லாம் இவருடைய தொடர்பேனும் இவர்பாற் பாடங்கேட்டவர்களுடைய தொடர்பேனும் பெரும்பாலும் இருக்கும். இன்றளவும் ஓரளவில் புலவர்களுடைய நூல்களுக்கு உள்ள மதிப்புக்கு மூலகாரணம் இவரென்றே சொல்லலாம். தமிழ்த் தெய்வத்தின் திருத்தொண்டர்களாகித் தமிழகத்தைத் தமிழன்பில் ஈடுபடுத்திய பெரியார்களுடைய வரிசையில் இவரும் ஒருவர். தமிழ்நூற் கோவைகளில் இவருடைய நூல்களும் முத்துக்களைப்போல் விளங்குகின்றன. இனியும் அவை தமிழ்மக்கள் உள்ளத்தில் இன்பத்தை உண்டாக்கிக்கொண்டே என்றும் குன்றா இளமையோடு விளங்கும். அவற்றை ஊன்றிப் படிப்பவர்கள் பிள்ளையவர்களின் புலமை உருவத்தை உணர்ந்து மகிழலாம். தமிழ் உள்ள்ளவும் இவருடைய பெரும்புகழ் நின்று நிலவுமென்பது திண்ணம்.
-
{12.1}
(ஆசிரிய விருத்தம்.)
சுத்தமலி துறைசையிற்சுப் பிரமணிய தேசிகமெய்த் தூயோன் றன்பால்
வைத்தமலி தருமன்பின் வாழ்ந்தினிய செந்தமிழை வளர்த்தென் போல்வார்க்
கத்தமலி நூல்கணவின் மீனாட்சி சுந்தரப்பேர் அண்ண லேநின்
புத்தமுத வாக்கினையு மன்பினையு மறவேனெப் போது மன்னோ.
[1] இங்ஙனம் சொல்லும் செய்யுட்களில் திருச்சிற்றம்பலக் கோவையாரிலுள்ள 'சிலம்பணிகொண்ட' என்பதும், புகலூரந்தாதியிலுள்ள 'தொழுந்துதிக்கைக்கு' என்பதும் எனக்கு ஞாபகத்திலிருக்கின்றன.
[2] அவ்வகையான இசையைத் திருச்சிராப்பள்ளியிலும், அந்நகரைச் சார்ந்த இடங்களிலும் பெரும்பாலோரிடத்தில் அக்காலத்திற் கேட்கலாம். தியாகராச செட்டியார் பிள்ளையவர்களைப்போல அந்த இசையோடுதான் செய்யுட்களைச் சொல்லுவார்.
[3] இப் புத்தகம் 255- ஆம் பக்கத்திலுள்ள, “எனைவைத்தி எனை வைத்தி” என்னும் செய்யுளைப் பார்க்க.
-------------------
அநுபந்தம் 1.
[$] உரிய இடங்களில் எழுதப்படாமல், பின்பு ஞாபகத்திற்கு வந்த வரலாறுகள் இங்கே எழுதப்பட்டுள்ளன.
எழுவாய் பயனிலை
பிள்ளையவர்களுடைய இளம்பிராயத்தில் ஒருவர் பாடங்கேட்க வந்தார். "என்ன படிக்க வேண்டும்?" என்று இவர் அவரைக் கேட்கவே அவர், "இலக்கியம் படிக்கவேண்டும்" என்று கூறினார். அப்பால், "இலக்கணம் படிக்க வேண்டாமா ?" என்று இவர் கேட்டபொழுது, “நன்றாகப் படித்திருக்கிறேன்" என்று அவர் விடை கூறினார்; உடனே இப்புலவர்பிரான் அவரை ஒரு செய்யுள் சொல்லச் செய்து, "இந்தப் பாடலில் எழுவாய், பயனிலை என்ன?" என்று கேட்டார். அவர் நெடுநேரம் யோசித்தும் விளங்காமல் விழித்துக் கொண்டே யிருக்கையில் இவர், "எழுவாய், பயனிலை" என்று சொன்னார்; "எழுந்து செல்லலாம்; யோசிப்பதில் பிரயோசனமில்லை" என்பது இவர் சொல்லியதற்குப் பொருள். அவர் அதனையும் உணராதவராகி யோசித்துக் கொண்டிருந்தார். உடனிருந்தவர்கள் குறிப்பாக அதனைப் புலப்படுத்தினார்கள். அப்பால் அவர் அதனை அறிந்து வணக்கமுடையவராகி இவரிடம் சிலமாதம் இருந்து பாடங்கேட்டுவந்து பின்பு தம்மிடஞ் சென்றார்.
சதுர்வேத தாத்பரிய சங்கிரகம்.
இக்கவிஞர்கோமானுக்குச் சைவத்தில் அழுத்தமான பற்று இருந்தமையின் வடமொழியிலுள்ள சைவ நூல்களின் கருத்துக்களைத் தக்கோர் வாயிலாக அப்பொழுது அப்பொழுது தெரிந்துகொள்வார். ஸ்ரீ அரதத்தாசாரியார் முதலிய பெரியோர்களுடைய நூல்களிலிருந்து அவ்வப்போது வடமொழி வித்துவான்கள் கூறும் சுலோகக் கருத்துக்களை அறிந்து மகிழ்ந்து தனிச்செய்யுட்களாக மொழிபெயர்ப்பதுண்டு; அன்றித் தாம் இயற்றும் நூல்களில் உரிய இடங்களில் அக்கருத்துக்களை அமைப்பதுமுண்டு. அரதத்தாசாரியர் இயற்றிய சுருதி சூக்திமாலை யென்னும் நூலுக்குரிய வியாக்கியானமாகிய சதுர்வேத தாத்பரிய சங்கிரகத்தைத் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமென்று மதுரையிலிருந்த சிவபுண்ணியச் செல்வர்களாகிய [1] வேங்கடாசல செட்டியார், மெய்யப்ப ஐயா என்னும் இருவரும் இவருக்குத் தெரிவித்துக் கொண்டனர். இவருக்கும் அம்மொழிபெயர்ப்புப்பணி உவப்புடையதாக இருந்தது. அரதத்தாசாரியர் சரித்திரத்தையும் தமிழ்ச் செய்யுளாக இயற்ற வேண்டுமென்று இவர் எண்ணினார்.
--
திருவாவடுதுறையிலும் வேறு சில இடங்களிலும், சதுர்வேத தாத்பரிய சங்கிரக வடமொழிப் பிரதிகள் கிடைத்தன. மதுரை, திருஞானசம்பந்தர் ஆதீன மடத்தில் சில பிரதிகள் உண்டென்று தெரிந்தது. அவற்றையும் பெற்றுப் பார்க்க வேண்டுமென்னும் விருப்பம் இவருக்கு உண்டாயிற்று. ஆதலின் அப்போது அவ்வாதீன வித்துவானாக இருந்த குறுக்கைக் குமாரசாமிப்பிள்ளை என்பவருக்குத் தமது விருப்பத்தைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதியனுப்பினார். அதற்கு விடையாக அவர் பின்வரும் கடிதத்தை எழுதினார்:
"சிவமயம்.
"ம-ள-ள- ஸ்ரீ ஐயா அவர்களுக்குக் குமாரசாமி எழுதிக்கொள்ளும் விஞ்ஞாபனம்.
இவ்விடம் க்ஷேமம். அவ்விடம் க்ஷேமத்தை எப்பொழுதும் தெரிந்துகொள்ள விருப்புற்றிருக்கின்றனன். தாங்கள் அன்போடு வரைந்தனுப்புவித்த கடிதம் வரப்பெற்று மிக்க மகிழ்ச்சியை அடைந்தேன். அக்கடிதத்தை உடனே ம–ள-ள - ஸ்ரீ வேங்கடாசலம் செட்டியாரவர்களிடத்திற்கு அனுப்புவித்தேன். கடிதம் வருவதற்குச் சில நாள் முன் தொடங்கி எனக்கு ஒன்றரை மாதம் வரையிலும் கடினமான சுரம் அடித்துக் கொண்டிருந்ததனாலே பதிலெழுத இதுகாறும் தாமதித்தது. அரசத்தாசாரிய சாமி சரித்திரம் பலவிதமாக இருப்பதனாலே அதைப் பின்னாலே மொழி பெயர்க்கலாமென்றும், இப்போது சதுர்வேத தாத்பரிய சங்கிரக மூலத்தை மாத்திரம் மொழிபெயர்த்துச் செய்யுளாக்க வேண்டும் என்றும், அதற்கு இவ்விடத்தில் இருக்கிற புஸ்தகம் வேண்டுமாயின் எழுதினால் அனுப்புவிக்கிறோமென்றும் ம -ள-ள- ஸ்ரீ வேங்கடாசலம் செட்டியாரவர்களும் மெய்யப்ப ஐயா அவர்களும் தங்களுக்கு எழுதியனுப்புவிக்கச் சொன்னார்கள். வேஷ்டியைக் குறித்து மாயாண்டி செட்டியாரவர்களை வினாவினதற்குத் தங்களுக்கு எழுதிக் கொள்ளுகிறோமென்று சொன்னார்கள். மதுரைக் கலம்பகம் எழுதி முடிக்கப்பட்டிருக்கின்றது. அதைத் தபால் வழியாகவாவது மனிதர் வசமாகவாவது அனுப்புவிக்கிறேன். ஸ்ரீ சின்ன சந்நிதானம் எப்போதும் தங்கள் குணாதிசயங்களைப் பாராட்டிக்கொண்டிருக்கின்றது. யான் குறுக்கைக்கு வருங்காலம் இன்னொரு காகிதத்தில் எழுதியனுப்புகிறேன். இங்கே எழுதிய சதுர்வேத தாத்பரிய சங்கிரகத்தின் வியாக்கியானத்தை மொழிபெயர்க்க வேண்டுவதில்லை யென்று சொன்னார்கள்.
சுக்கில வருடம் கார்த்திகை மாதம் 27ஆம் தேதி
மதுரை. குமாரசாமி
விலாஸம்
"இது, நாகபட்டணத்தில் ஓவர்ஸியர் அப்பாத்துரை முதலியாரவர்கள் பார்வையிட்டு ம - ள – ள- ஸ்ரீ திரு. மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் வசம் கொடுப்பது."
இக்கடிதம் கண்டவுடன் இப்புலவர்பிரான் மீண்டும் குமாரசாமிப் பிள்ளைக்கு ஒரு கடிதம் எழுதினர். அது வருமாறு:
"சிவமயம்.
{அநு1.1}
"குலவர் சிகாமணி குமாரசாமிப் புலவர் சிகாமணி பொருந்தக் காண்க."
"இவ்விடம் க்ஷேமம். அவ்விடம் க்ஷேமம் வரைந்தனுப்பவேண்டும்.
"தாங்களனுப்பிய கடிதம் வந்து சேர்ந்தது.
அதிசயமாகவும் சைவ சமயம் நிலைபெறும்படியாகவும் சுரந்தீர்த்த தலத்தில் தங்களை அது வருத்தியது அதிசயமாயிருக்கிறது. இப்போது சவுக்கியமாயிருக்கிறது குறிப்பாற்றெரிந்து பெருமகிழ்ச்சி அடைகின்றேன். இது நிற்க.
"சதுர்வேத தாத்பரிய சங்கிரக மூலத்திற்குச் சுருதி சூக்குமம் என்று பெயர். அக்கிரந்தத்தொகை நூற்றைம்பது . அதை மொழிபெயர்ப்பதனாற் பிரயோசனமில்லை. யாகத்திற்குப் பதி பரமசிவமே என்பது ஒரு சுலோக தாத்பரியம். நமஸ்காரத்திற்குப் பதி பரமசிவமே என்பது ஒரு சுலோக தாத்பரியம். காயத்திரிக்குப்பொருள் பரமசிவமே என்பது ஒரு சுலோக தாத்பரியம். இந்தப்பிரகாரம் 150 சுலோகமுமிருக்குமே யன்றி வேறில்லை. ஒவ்வொரு சுலோக தாத்பரியத்தையும் எடுத்துப் பாஞ்சராத்திர முதலியோர் மதங்களைக் கொண்டு பூருவபட்சஞ் செய்து அப்பால் அநேக உபநிடதம் முதலியவற்றையுங் கொண்டு மேற்படி கட்சியை மறுத்துச் சித்தாந்தஞ் செய்வதுதான் சதுர்வேத தாத்பரிய சங்கிரகமென்பது. மூலமாத்திர மொழிபெயர்க்க வேண்டுமெனில் அதில் உள்ளதில் இரண்டு பங்கு நாம் சேர்த்துச் சொல்லலாமே. இன்ன சுருதியில் இன்ன உபநிடதத்தில் இதற்காதாரமிருக்கிறதென்பதை எடுத்துக்காட்டுதல் மாத்திரம் நமக்குக் கூடாது. அதற்குத்தான் வியாக்கியானத்தை மொழிபெயர்க்க வேண்டும்.
வியாக்கியானத்தின் பெயர்தான் சதுர்வேத தாத்பரிய சங்கிரகமென்பது. இதற்கு மேல் வியாக்கியானமில்லை. சதுர்வேத தாத்பரிய சங்கிரகத்தை மூலமென்று கருதினார்கள் போலும். பாஞ்சராத்திர தந்திரங்களும் பிற தந்திரங்களும் அநேகமாய் அதில் வெளிப்படும். சைவாகமங்கள் பலவற்றிலுமுள்ள உண்மைகளெல்லாம் வெளிப்படும். பிரபலமான சண்டை செய்து கொள்ளுவதல்லவா? இவ்வளவுக்கும் இடங்கொடுப்பது சதுர்வேத தாத்பரிய சங்கிரகமேயன்றி, அதன் மூலமாகிய சுருதி சூக்திமாலையல்ல. மூலம் 150 சுலோகமுஞ் செய்தது அரதத்தாசாரிய சுவாமிகள். வியாக்கியானமாகிய சதுர்வேத தாத்பரிய சங்கிரகஞ் செய்தவர் மேற்படி சுவாமிகள் மாணாக்கரே; மேற்படி சுவாமிகள் அனுமதியாற் செய்ததேயன்றி வேறல்ல. மூலத்தின் பெயரிருக்க வியாக்கியானத்திற்கே பிரபலம் வந்துவிட்டது. அதன் பெருமை நோக்க, இவ்வளவு மூலத்தில் அடங்கியிருந்தாலும் நம் போலிகளாலும் பிறராலும் எளிதில் உணர முடியாது. ஆதலினால் சதுர்வேத தாத்பரிய சங்கிரகமே மொழிபெயர்க்க வேண்டும். உத்தேசம் அது 3000 சுலோகமிருக்கும். ஆதலால் இவ்விடத்துள்ள பிரதியினுடைய உயர்வு முன்னமே தெரிவித்திருக்கிறேனே. அவ்விடத்திலுள்ள பிரதியையும் உடனே அனுப்ப வேண்டுவதுதான். இன்னும் சில பிரதிகளும் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. ஆதலால் இக் கடிதங் கண்டவுடனே தபால் பங்கியில் அனுப்பவேண்டும். மூலத்தையுங் கூடச் சேர்த்தனுப்பவேண்டும். இது நிற்க .
.
"மாயாண்டிச் செட்டியாரவர்கள் வேஷ்டியைக் குறித்திதுவரையிலொன்றும் எழுதவில்லை. அவசியம் வேண்டியிருப்பதனால் முன்னெழுதிய விவரப்படியே இவ்வளவு தொகையாகு மென்று தெரிவித்தா லுடனே யனுப்புவேன். அதற்குத்து… செய்ய வேண்டுவதில்லை. கருணாநிதியாகிய சந்நிதானத்தை நானினைத்தறிவேன்.
இக்கடிதங்கண்ட தினமே பதிலெழுதுக..
"சுக்கில வருடம் இங்ஙனம்
மார்கழி மாதம் 2ஆம் தேதி தி. மீனாட்சிசுந்தரம்.
-----------------
"இவ்விவரங்களை யெல்லாம் ம - ள - ள - ஸ்ரீ செட்டியாரவர்களுக்கும் ஐயா அவர்களுக்கும் விவரமாய்த் தெரிவிக்க வேண்டும்."
விலாஸம்
"மதுரையில் தேவஸ்தான நிர்வாக சபையாரில் ஒருவராகிய ம-ள- ள - ஸ்ரீ வேங்கடாசலஞ் செட்டியாரவர்கள் மேல்விலாசம் பார்வையிட்டு ம--ள- ள- ஸ்ரீ வித்துவான் குமாரசாமிப்பிள்ளையவர்களுக்குக் கொடுப்பது."
இதன்பின்னர்ச் சதுர்வேத தாத்பரிய சங்கிரகம் என்ன காரணத்தாலோ இவரால் மொழிபெயர்க்கப்படவில்லை.
நெல் அளித்த அன்பர்கள்.
இவர் திருச்சிராப்பள்ளியில் இருந்த காலத்தில் இவரைப் பல வகையில் ஆதரித்த அன்பர்கள் பலர். பெரிய செல்வர்களும் இவர்பாற் பாடங்கேட்டுத் தாமே வலிய உதவிசெய்து வந்தனர். கள்ள வகுப்பினர் சிலர் இவர்பால் பாடங்கேட்டதுண்டு; பின்பு இக்கவிஞர்பிரானுக்கு அவ்வப்பொழுது வருஷாசனமாக அவர்கள் நெல்லளித்து ஆதரித்து வந்தனர்.
ஒரு பாட்டின் குறிப்பு.
வரகனேரிச் சவரிமுத்தாபிள்ளை ஒருமுறை இவருக்குத் திருவிளையாடற் புராணத்திலுள்ள [2] "தன்கிளை யன்றி" என்னும் ஒரு செய்யுளைப் பற்றிய ஐயம் ஒன்றைத் தெரிவித்து ஒரு கடிதம் எழுதினார். அதற்கு விடையாக இவர் எழுதிய கடிதம் வருமாறு:
உ
(வெண்பா)
{அநு1.2}
"இக்கடித நோக்கி யியற்செந் தமிழெவற்றும்
மிக்க தெனவளர்க்கு மேன்மையாற் - றொக்கபுகழ்த்
தென்னன் பொருவுந் திருவார் சவரிமுத்து
மன்ன னடையு மகிழ்.”
"இவ்விடம் க்ஷேமம். அவ்விடம் க்ஷேமம் வரைந்தனுப்ப வேண்டும்.
"தாங்கள் குறிப்பிட்ட திருவிளையாடற் செய்யுள், 'அன்பினில் வியப்போ வீச னருளினில் வியப்போ வன்பர்க், கின்புரு வான வீச னன்பருக் கெளிதே தைய' என்றது சரியே. எளிதேது ஐய என்பதில் ஏதுவென்பது வினா.
"ஈசனன்பர்க்கு அருளைப் பெறுதல் எளிது. அஃது அரியதன்று. அன்பு செய்தல் அரிது. அஃது எளியதன்று' என்பது பொருள். இஃது உடனே தோன்றியது. இப்போது அதைத் தெரிவித்தேன்.
"[3] சதாசிவத்திற்குச் சவுக்கியமானதை எனக்குத் தெரிவிக்கவில்லை. அது பற்றிக் கவலையில்லானென்று என்னை நினைத்தான் போலும். ம-ள-ள - ஸ்ரீ குமாரசாமி பிள்ளை, முருகப்ப பிள்ளை, சதாசிவம் பிள்ளை இவர்களைக் குருபூசைக்கு அவசியம் வரவேண்டுமென்று ஒரு மனுஷ்யனைக் கொண்டு தெரிவிக்க வேண்டும்.
"[4] ம -ள-ள- ஸ்ரீ பிள்ளையவர்களிடத்தில் கந்தசாமியைத் தாங்கள ழைத்துக்கொண்டு சென்றதும் அவனொடு வந்தவொரு செய்யுளைத் தாங்கள் பிரசங்கித்த விவரமும் தெரிய விரும்புகிறேன்.
" இவ்விடம் மகா சந்நிதானந் தங்களைப் பார்க்கும் அவா நிரம்பவுடையது. குருபூசை முன்னிலையில் எல்லாரும் வரும்போதாவது அல்லது தனித்தாவது தாங்கள் ஒரு தினம் இவ்விடம் வந்து போனாற் சிறப்பாக இருக்குமென்று நினைக்கிறேன். அப்பால் தங்களிட்டம்.
பவ ஆண்டு இங்ஙனம்
கார்த்திகை மாதம் 11ஆம் தேதி தி. மீனாட்சிசுந்தரம் "
விலாஸம்.
"இது
"திருச்சிராப்பள்ளி வரகனேரியிலிருக்கும் கிராம முனிசீப் மகா -ள -ள - ஸ்ரீ பிள்ளையவர்கள் சவரிமுத்தா பிள்ளையவர்களுக்குக் கொடுக்கப்படுவது."
நோயை மறந்து பாடஞ் சொன்னது.
பிள்ளையவர்கள் காலத்திற்குப் பிறகு ஒருமுறை மேற்கூறிய சவரிமுத்தா பிள்ளையிடம் பிள்ளையவர்கள் இயற்றிய நூல்கள் சில வற்றின் கையெழுத்துப் புத்தகங்களைப் பெறுவதற்கு நான் சென்றிருந்தேன். அப்பொழுது அவர் கூறிய செய்தி ஒன்று வருமாறு:
"ஒருசமயம் ஐயா அவர்கள் என்னுடைய வேண்டுகோளின்படி இங்கே வந்து சில நாட்கள் இருந்தார்கள். அப்பொழுது நான் பெரிய புராணத்திற் சில பகுதிகளைப் பாடங்கேட்டு வந்தேன். ஒருநாள் நெடுநேரம் பாடஞ்சொல்லிக் கொண்டே வந்தார்கள். வர வர அவர்களுடைய சப்தம் பலமாயிற்று; கண்கள் சிவந்து தோன்றின. நெடுநேரம் ஆய்விட்டமையால், 'ஐயா அவர்கள் பூசைக்கு நேரமாயிற்றே' என்றேன். உடனே அவர்கள், 'உடம்பு ஒருவிதமாக இருக்கிறது; சுரம் வந்திருக்கிறது போல் தோற்றுகிறது' என்றார்கள். நான் அவர்கள் மார்பிற் கையை வைத்துப் பார்த்தேன்; கொதித்தது; சுரம் அதிகமாக வந்திருப்பது தெரிந்து, உடனே, 'நோயையே மறந்து பாடஞ் சொல்லி வந்தார்களே! இவர்களுக்கு நம் மேல் உள்ள அன்பின் அளவுதான் எவ்வளவு! பாடஞ் சொல்லுவதில் எல்லாவற்றையும் மறந்து ஒன்றியிருக்கும் இவர்களைப்போல யாராவது இருக்கிறார்களா?' என்று நினைந்து உருகினேன்."
இச்செய்தியைச் சொல்லியபொழுது சவரிமுத்தா பிள்ளைக்கு இடையறாமல் கண்ணீர் பெருகிக்கொண்டேயிருந்தது.
------------
[1] இவர்கள் சென்ற ஈசுவர (1877) வருஷத்தில் மதுரைத் திருக்கோயிற் கும்பாபிஷேகம் செய்வித்தவர்கள்.
[2] {அநு1.3}
"தன்கிளை யன்றி வேற்றுப் பறவைகள் தாமுந் தன்போல், நன்கதி யடைய வேண்டிற் றேகொலிந் நாரை செய்த, அன்பினில் வியப்போ வீச னருளினில் வியப்போ வன்பர்க், கின்புரு வான வீச னன்பருக் கெளிதே தைய." நாரைக்கு முத்தி. 24.
[3] இவருடைய மாணாக்கராகிய சதாசிவ பிள்ளை.
[4] திரு. பட்டாபிராம்பிள்ளையவர்கள்.
-----------
அநுபந்தம் 2.
கடவுள் வணக்கங்கள்.
திருவலஞ்சுழி வெள்ளை விநாயகப்பெருமான்.
- (வஞ்சித்துறை.)
1. வெள்ளை வாரணப், பிள்ளை யார்பதம்
உள்ளு வார்மனக், கள்ள மாறுமே.
திருக்கற்குடிமாமலைச் சிவபெருமான்.
-
(ஆசிரியவிருத்தம்.)
2. தலையானை முகற்பெறுமைந் தலையானை யரைக்கிசையத் தரித்த புற்றோற்
கலையானை யமுதமதிக் கலையானைச் செஞ்சடைக்கா டலைக்குங் கங்கை
அலையானை யிறந்துபிறந் தலையானைக் கடற்பிறந்த அடுநஞ் சுண்ண
மலையானைக் கற்குடிமா மலையானை யனுதினமும் மனத்துள் வைப்பாம்.
(தலை - தலைமை. புற்றோற்கலை - புலித்தோலாகிய ஆடை. மதிக்கலை - பிறை. உண்ண மலையானை - உண்ணுதற்கு மயங்காதவனை. இதில்
அடிதோறும் மடக்கு அமைந்துள்ளது.)
திருப்பாதிரிப்புலியூர்ப் பெரியநாயகி யம்மை .
-
(குறள் வெண்பா)
3. ஒண்பா திரிப்புலியூ ருட்பெரிய நாயகித்தாய்
தண்பாதப் போதே சரண்.
திருவம்பர் வம்புவனப் பூங்குழல் நாயகி.
-
(கீர்த்தனம்.)
ராகம் - தர்பார்.
பல்லவி.
4. வம்புவனப் பூங்குழல்நின் அருளே - இந்த
மாநிலத்து மேனிலத்து மாறாத பொருளே.
அனுபல்லவி.
அம்பரம ரெம்பரமர் ஐந்தொழில்பு ரிந்துகிளர்
நம்பமர்பெ ருந்துணையெ னும்படிகி ளர்ந்துவளர் (வம்பு)
(இக் கீர்த்தனத்தின் எஞ்சிய பகுதிகள் கிடைக்கவில்லை.)
-
5. பரமசை யோகவி நாயக ஆதி
படிக்கா சுத்திருப் பெயர்ச்சுயஞ் சோதி.
6. சரவண பவசுர லோக வுதாரா
தற்பர ஞானவி னோத குமாரா.
7. அருவுரு வாகிய போதா திருவா
வடுதுறை மேவிய சற்குரு நாதா.
அன்பர்களைப் பாராட்டிய செய்யுட்கள்.
அப்பாத்துரை முதலியார்.
-
(வெண்பா)
8. தாணுமுடி மேலதுவுஞ் சங்கரிமுன் மேய்த்ததுவும்
பேணுஞ் சுவேதரையே பேசுவதும் - வாணிகர்கள்
வைப்பா யிருப்பதுவும் வந்தவரைக் கேட்பதுவும்
அப்பாத் துரைமுதலியார்.
(இது நிரனிறையின்பாற்படும். தாணு - சிவபெருமான். சங்கு அரி - சங்கை உடைய திருமால். சுவேதர் - வெள்ளைக்காரர். வைப்பு - சேம நிதி. அப்பாத்துரை முதலியார் என்னும் தொடரை, அப்பு (நீர்), ஆ (பசு), துரை, முதல், யார் எனப் பிரித்து, தாணு முடிமேலது அப்பு, சங்கு அரி முன் மேய்த்தது ஆ, சுவேதரையே பேசுவது துரை, வாணிகர்கள் வைப்பாயிருப்பது முதல், வந்தவரைக் கேட்பது யார் என முறையே முடித்துக்கொள்க.)
ஆறுமுகத்தா பிள்ளை.
தம் புத்தகத்தைப் பட்டீச்சுரம் ஆறுமுகத்தா பிள்ளை ஒளித்து வைத்தபோது அதனைத் தரவேண்டுமென்று சாமிநாத பண்டாரம் பாடியதாக இவர் இயற்றியளித்த செய்யுள்.
-
(ஆசிரியவிருத்தம்.)
9. சீர்பூத்த புகழ்பெருத்த வாறுமுக பூபாலா செறிந்தோர் யார்க்கும்
பார்பூத்த சோறூட்டிப் புத்தகமும் ஈயவல்ல பண்ப னீயே
ஏர்பூத்த சந்தனப்பூச் சில்லையென்றாய் மேற்பூச்சென் றிருந்தேன் யானும்
வார்பூத்த புத்தகத்தை யொளித்தாயேல் வெளிப்படுத்த வல்லார் யாரே.
இராகவையங்கார்.
-
(கட்டளைக் கலித்துறை)
10. வாரா கவன நகின்மா நிறங்கொண்ட மாதவன்றன்
பூரா கவனச மொத்தபொற் றாளிணை போதுதொறும்
ஏரா கவன மருச்சித் திறைஞ்சுது மெண்மறைதேர்
சீரா கவற்கெழிற் கல்வியுஞ் செல்வமுஞ் சித்திக்கவே.
(இராகவையங்கார் : பிள்ளையவர்கள் மாணாக்கர்களுள் ஒருவர். வார் ஆக வன்ன நகில்; வார் - கச்சு; ஆகம் - மார்பு. மா - இலக்குமியை. நிறம் - திருமார்பில். பூராக வனசம் - செந்தாமரை மலர்; பூ - பொலிவு; ராகம் - சிவப்பு. ஏராக - அழகாக. வனம் - திருத்துழாயால்.)
-
(கட்டளைக்கலித்துறை.)
11. சீரார் கழனிச் சிதம்பர தேசிகன் செய்யகையால்
ஏரார் தரவருள் செய்மா நிதியையென் னென்றுரைக்கேன்
நீரார் சிந்தா மணியென் கோவிரண்டு நிதியமென்கோ
ஆரார் தரவறி வாரவன் பேரரு ளாயினதே.
(இது கோயிலூர்ப் புராணம் இயற்றி அரங்கேற்றிய பின்னர், சிதம்பர ஐயா ஸம்மானம் செய்தபொழுது பாடியது. கழனி - கோயிலூர்.)
தேவகோட்டை, சிந்நயச்செட்டியார்.
இவர் வன்றொண்டருடைய மாணாக்கர்; இவரைப் பார்த்தவுடனே பிள்ளையவர்கள் சொல்லியது.
-
(வெண்பா)
12. வன்றொண்டன் வார்த்தை மரீஇயென் செவிவழிபுக்
கின்றொண்ட நீயமர்ந்தா யென்னிதயத் - தின்றொண்டன்
அல்லனென வோவெளிவந் தாய்சிந் நயவேளே
செல்லவிடு வேன்கொல்புறத் தே.
(இன்று ஒண்டன்; ஒண்டன் - ஒண்டியிருப்பவன்.)
சுப்பிரமணிய தம்பிரான்.
-
(ஆசிரியவிருத்தம்)
13. வாதவூ ரடிகளுக்கு மாலியானைப் புரூரவா மன்னர் கோமான்
பேதமிலா கமப்படியே முன்னாளி னடத்தியவப் பெருவி ழாவை
ஏதமிலா கமப்படியே யிந்நாளு நடத்திவரும் இயல்பு பூண்ட
போதமலி துறைசையெஞ்சுப் பிரமணிய முனிவர்பிரான் புகழ்மேல் வாழ்க.
(இது திருப்பெருந்துறைப் புராணத்தின் இறுதிச் செய்யுளாக முதலில் இயற்றப்பட்டது.)
பக்கிள் துரை.
திருநெல்வேலிஜில்லா, தரம் பைஸல் கலெக்டராக இருந்த பக்கிள் துரைமீது சுப்பிரமணிய தேசிகர் விருப்பத்தின்படி பாடியவை.
-
(ஆசிரிய விருத்தம்)
14. மிக்குளபே ரிரக்கமுளாய் குடிகளெனும் பயிர்க்கினிய மேகம் போல்வாய்
இக்குளசா றெனவென்று நயமொழியே பேசிடுவாய் எக்கா லத்தும்
தக்குளகாட் சிக்கெளியாய் பெருஞ்சினத்துங் கையிகந்த தண்ட மில்லாய்
பக்கிளெனும் பெயருடையாய் நின்கீர்த்தி யெவராலும் பகரொ ணாதே.
(இக்கு - கரும்பு. கை இகந்த - வரம்புகடந்த.)
15. மறிவில்பெருங் கீர்த்தியினான் பக்கிளெனும் பெயர்பூண்ட வளஞ்சான் மன்னன்
நெறிவழுவா காதவிதம் வரையனைத்துஞ் சாரல்மிக நிரம்பு மாறு
செறிவுபெறத் தருவொருவர் தறியாது வளர்த்துவரும் செய்கை யாலோர்
அறிவுயிரு மினையவெனில் மற்றையுயி ரெனையவெவர் அறைதற் பாலார்.
16. நெடியபுகழ் படைத்தபக்கி ளெனும்வேந்த னடத்திவரு நீதி நோக்கிப்
படியமையும் பன்னாட்டுப் பலகுடியெ லாமொருதென் பாண்டி நாட்டே
குடியமையக் கொளனினைக்கு மிடம்போதா வண்ணமுளம் குறித்தன் னானே
தடிவதறத் தமக்குரிய நாட்டுவரத் தவம்புரியுந் தவாம லன்றே.
17. இரவுவழி நடக்கலாங் கைநிறையப் பொருளேந்தி இவனாற் றீய
கரவுபுரி பவரொழிந்தார் கொலைஞருமெவ் வுயிரிடத்துங் கருணை செய்வர்
உரவுமழை முகின்மதியந் தொறுமுக்கா லுறப்பொழியும் உயர்ச்சி மேவப்
புரவுபுரி பக்கிள்மன்ன னதிகாரத் தெனிலவன்சீர் புகழ்வார் யாரே.
18. வாழ்ந்தோமென் றுரைப்பாரு மேன்மேலு நாமடைந்த வறுமை மாறப் போழ்ந்தோமென் றுரைப்பாருஞ் செழித்தோமென் றுரைப்பாரும் பொருமல் தீர்ந்து
தாழ்ந்தோம்பே ரின்பத்தென் றுரைப்பாரு மல்லாமற் றாவாத் துன்பத்
தாழ்ந்தோமென் றுரைப்பார்க ளொருவரிலை பக்கிள்மன்னன் அதிகா ரத்தே.
இராமநாதபுரம் பொன்னுசாமித் தேவர்.
பொன்னுசாமித் தேவர், ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரை மதுரைக்கு அழைத்துத் தம்முடைய பங்களாவில் எழுந்தருளச் செய்து மிகச்சிறப்பாக மகேசுவர பூஜை, பட்டணப் பிரவேசம் முதலியன செய்வித்ததையும் துதியாகச் சில பாடல்களை இயற்றி விண்ணப்பித்ததையும் அறிந்து அச்செயலைப் பாராட்டிப் பிள்ளையவர்கள் பின்வரும் செய்யுட்களை இயற்றி எழுதியனுப்பினார்கள்:
-
(ஆசிரிய விருத்தம்.)
19. கொத்துமலர்ப் பொழிற்றிருவா வடுதுறைச்சுப் பிரமணிய குரவ னந்நாள்
நந்துதன தடியரமு துணவிடமுண் டதையுணர்ந்து நயப்புற் றிந்நாள்
வந்துபல ரொடுமமுதே யுண்டுவக்கும் படிசெய்தாய் வண்மை யோருள்
முந்துபெருங் கொடைப்பொன்னுச் சாமிமன்னா நின்சீர்த்தி மொழிவார் யாரே.
20. ஒருதிருவா வடுதுறைச்சுப் பிரமணிய தேசிகன்முன் ஒளிர்பொன் னாதிப்
பெருமலைவைத் திருந்துமென்பா திகள்புனைந்த பழிதீரப் பிறங்கு பொன்னால்
வருமணியா லலங்கரித்துத் திருநெடுமா லென்றுரைக்கும் வண்ணஞ் செய்தாய்
தருநிகருங் கொடைப்பொன்னுச் சாமிமகி பாவிதுவும் தகுதி யாமே.
21. சொன்னயமும் பொருணயமு மணிநயமுங் கற்பனையாச் சொல்லா நின்ற
நன்னயமுந் தொடைநயமும் வனப்புநய மும்பிறிது நாட்டா நிற்கும்
எந்நயமுஞ் சிற்சிலவே பிறர்க்கமையு நினக்கமைந்த எல்லா மென்னிற்
பன்னயமு முணர்பொன்னுச் சாமிமகி பாநினது பாட்டெற் றாமே.
22. செறிபொழிலா வடுதுறைச்சுப் பிரமணிய தேசிகனாம் சிவனை நாளும்
பொறிவளர்வண் டுவாதசாந் தத்தலத்து வரவழைத்துப் பூசை செய்தாய்
நறியமலர்த் தொடைத்தடந்தோட் பொன்னுச்சா மிச்சுகுண நரேந்த்ர நின்னை
அறிவின்மிகப் பெரியனென யாவருஞ்சொல் வாரதனுக் கைய மின்றே.
(துவாதசாந்தத் தலம் - மதுரை.)
வேங்கடாசாரியர்.
திருநெல்வேலி, தரம் பைஸல் டிப்டிகலெக்டர் வேங்கடாசாரியர் மீது திருவாவடுதுறை ஸ்ரீ சுப்பிரமணிய தேசிகரவர்கள் கட்டளையின்படி செய்யப்பட்டவை:
-
(ஆசிரியவிருத்தம்.)
23. அதிகாரந் தனக்களித்த வேந்தனுக்கு நட்டமுறா தவன்கோற் கீழாய்ப்
பிதிராத குடிகளுக்கு நட்டமுறா தாராய்ந்து பெருக நாடித்
திதியாளு மிருவர்களு மனமகிழ முறைநடத்துஞ் செல்வ னாய
மதிமேய வேங்கடா சாரியமால் போற்பிறர்க்கு வருத லாமோ.
24. சொல்லாரும் பிரபலமா மதிகார நாடோறும் துணிபிற் செய்வார்
எல்லாரும் வேங்கடா சாரியைப்போற் பெருங்கீர்த்தி இயைந்தா ரல்லர்
வில்லாரு மஃதியையா விதமென்னை யென்றென்னை வினவு வீரேற்
பல்லாரும் புகழவுயர் கண்ணோட்ட மில்லாத பாவந் தானே.
25. பாடுதொழி லாளரெலா மிவன்புகழே பாடுதற்குப் படித்தோ மென்பார்
ஏடுகொள வுலகிலுள பனையனைத்தும் போதாவென் றிரங்கா நிற்பார்
காடுமலி பசுந்துழாய்க் கண்ணியா னடிக்கன்பு கலந்தோ னாய
நீடுகுண மலிவேங்க டாசாரி தன்பெருமை நினைந்து தானே.
26. உரவுமலி கடற்புடவி முழுதோம்பும் பெருங்கருணை உடைய கோமான்
அரவுமிசைப் படுப்பவனென் றவன்றரந்தேர்ந் தவற்புகழ்வோ னாத லாலே
கரவுதவிர் தரவேங்க டாசாரி தரந்தேரும் கடன்மை பூண்டு
விரவுபல குடிகளுக்கு முபகாரஞ் செய்வனெனின் விளம்ப லென்னே.
(தரம் தேரும் கடன்மை - நிலத்தின் தரம் அறிந்து வரி விதிக்கும் உரிமை.)
முன்ஸீப் வேதநாயகம் பிள்ளை.
வேதநாயகம் பிள்ளை திருவாவடுதுறைக்கு வந்து ஆதீனகர்த்தர் மீது சில செய்யுட்களை இயற்றிச் சொல்லிக்காட்டியபொழுது பிள்ளையவர்கள் இயற்றியவை.
-
(கட்டளைக் கலித்துறை.)
27. தருவேசிந் தாமணி யேயென்று பாவலர் சாற்றிடவும்
பொருவேது மின்றியுந் தானே தனக்கொத்துப் பூமிசையே
இருவே றுலகத் தியற்கைக் குறளை யெதிர்மறுத்து
வருவேத நாயக மானீடு வாழ்கவிம் மாநிலத்தே.
28. தேனென் றெடுத்துப் புகல்கோ வடித்திடுந் தெள்ளமுதம்
தானென் றெடுத்துப் புகல்கோ சிறந்த தமிழ்ப்புலவோர்
வானென் றெடுத்துப் புகல்வேத நாயக மால்கவியை
நானென் றெடுத்துப் புகல்வோரு முண்டுகொல் நானிலத்தே.
கடிதப் பாடல்கள்.
பிள்ளையவர்கள் எழுதிய கடிதங்களின் தலைப்பில் அமைத்த செய்யுட்களிற் சில வருமாறு. இவற்றிற்குரிய கடிதங்கள் கிடைக்கவில்லை.
அரியநாயகம் பிள்ளை .
-
(கலி விருத்தம்.)
29. அரிய நாயகம் பிள்ளை யவர்களுக்
குரிய காகித மொன்றுமா யூரமா
புரியி லேகல்வி போதிக்குஞ் சாலையில்
துரித மாகவே தோன்ற வருவதே.
கலியாணசோழபுரம் அருணாசலம் பிள்ளை.
-
(ஆசிரிய விருத்தம்.)
30. அலங்கொருகைத் துடியாற்ற லபயகரம் போற்றலழல் அனைத்து நீற்றல்
இலங்கொருதாண் மயக்கலினி தெடுத்ததா ளருளலிவை என்று மோங்கத்
துலங்கொளிச்சிற் றம்பலத்து நடநவிலு நவிலரும்வான் சோதி மேவி
மலங்குதலி லாமனத்து வள்ளலரு ணாசலவேள் மகிழ்ந்து காண்க.
(இச்செய்யுள் எழுதப்பட்ட காலம் ரெளத்திரி ஆண்டு, மார்கழி மாதம் 30 - ஆம் தேதியென்று வேறு ஒரு கடிதத்தால் தெரிந்தது.)
கலியாண சோழபுரம் ஐயாறப்ப பிள்ளை.
(விபவ ஆண்டு ஆனி மாதம் 12ஆம் தேதி)
-
31. மெய்யா றடைந்து, பொய்யா றகன்று
கையா றிரித்த, ஐயா றப்ப முகிலுக்கு.
சரவண பிள்ளை.
(இவர் மாயூரம் முதலிய இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்தவர்.)
-
(கொச்சகக் கலிப்பா.)
32. உரைசிறந்த நயகுணனு முபகாரம் புரிதிறனும்
வரைசிறந்த புயத்தரசர் வழியொழுகு நுண்ணறிவும்
விரைசிறந்த பிரபலமு மேவுதலா லெஞ்ஞான்றும்
தரைசிறந்த சீர்படைத்த சரவணவே ளிதுகாண்க.
கலியாணசோழபுரம் சிதம்பரம் பிள்ளை.
-
(ஆசிரிய விருத்தம்.)
33. சிவபெருமான் றிருவுருவ நோக்குபணி விழிக்காக்கிச் சிறந்த வந்த
நவவடிவோன் றிருநாம நவிற்றுமொரு பெரும்பணிநன் னாவிற் காக்கி
அவமிலவன் றிருவடிகள் சிந்திக்கும் பணியென்றும் அகத்துக் காக்கும்
தவமுடைய நயசுகுண சிதம்பரப்பேர் வள்ளலிது தகவிற் காண்க.
கோயிலூர், சிதம்பர ஐயா.
-
(கொச்சகக் கலிப்பா).
34. இதம்பரவு பிரமசபை யிடத்தினிது வீற்றிருந்து
முதம்பரவப் பொழிதருகொண் மூவெனச்சொன் மழைபொழிந்து
பதம்பரவு மடியவர்க்குப் பாசமொழித் தின்பருளும்
சிதம்பரதே சிகவினிது திருக்கண்ணால் நோக்குகவே.
தரங்கம்பாடி வக்கீல் செளந்தரநாயகம் பிள்ளை.
-
(ஆசிரிய விருத்தம்.)
35. சீர்பூத்த கல்வியறி வொழுக்கமுதற் பலவானுஞ் சிறப்புற் றோங்கி
நார்பூத்த தொன்றுதொடு நட்பினைப்பெட் புறநாளும் நனிபா ராட்டிப்
பார்பூத்த பெருங்கீர்த்திப் படாம்போர்த்தி யாவருக்கும் பயனா மேவும்
தார்பூத்த வரைத்தடந்தோட் சவுந்தரநா யகமகிபன் தகவிற் காண்க.
வேறுவகைப் பாடல்கள்.
திரு. பட்டாபிராம பிள்ளையின் விருப்பத்தின்படி பாடி யளித்தவை.
-
(ஆசிரிய விருத்தம்.)
36. நல்லொழுக்கந் தலைநின்றா னதுநிலைத்தற் காங்கலைகள் நயப்ப வோர்ந்தான்
இல்லொழுக்க மதுபூண்டான் றுறவொழுக்கந் தலையெடுத்தற் கியன்ற செய்வான்
புல்லொழுக்கம் பூண்டார்தம் முகம்பாரா னடுநிலைமை பொருந்தப் பார்ப்பான்
சொல்லொழுக்க மனைத்துமொரு வடிவுகொண்டா லெனப்பொலியுந் தூய னேயன்.
37. விளங்கதிகா ரத்தொடுகண் ணோட்டமுமுள் ளான்சிறப்பு மேன்மே னல்கும்
களங்கமின்ஞா னத்தினொடா சாரமுமுள் ளானளவாக் கவிக ளீனும்
வளங்கெழுமு கொடையினொடின் மொழியுமுளா னெஞ்ஞான்று மாறு றாது
துளங்கலிலாத் தெய்வபத்தி குடியிருக்கு மாலயமாம் சுமன முள்ளான்.
38. விரும்பிருகண் டனக்கென்ன விராவுமிரு கனிட்டருளான் வெய்ய தீமை
அரும்புமழுக் காறாதி கனவிலுமில் லான்குடிகள் அனைத்தி னுக்கும்
பெரும்புகழ்சா லரசினுக்கு நன்மையே யுண்டாதல் பேணிச் செய்வான்
இரும்புவியோர் கொண்டாடும் பட்டாபி ராமனெனும் இயற்பே ருள்ளான்.
39. இத்தகைய வள்ளலைப்பெற் றெடுத்தவனி யாவர்க்கும் இனிய சொல்வான்
உத்தமநற் குணங்களெல்லா முறைவதற்கோ ராலயமா உள்ளா னென்றும்
வித்தகமாற் கன்புள்ளான் வேங்கடா சலநாமம் விளங்கப் பூண்டான்
சத்தமையு மறம்பொருளின் பனுபவித்து முற்றியபின் தவத்தின் பேற்றால்
40. சீர்பூத்த விரோதிகிரு தாண்டிடப மதிப்பதினாற் றேதி நாளும்
ஏர்பூத்த மதிவார மபரபக்கந் துவாதசியாம் இனைய நாளில்
ஆர்பூத்த பிரகிருதிக் கப்பாலாம் விரசையெனும் ஆற்றை நீந்திப்
பார்பூத்த பரமபத மண்டபநித் தியசூரிப் படிவுற் றானே.
41. இனையபுகழ் வேங்கடா சலமகிபன் மனைக்குரிமை இயையப் பூண்டாள்
புனையவரு மில்லறத்திற் காமெவையுங் காலத்தே பொருந்த வீட்டி
நனையமொழி யொடுயார்க்கும் பதமருத்திப் பசியவிக்கு நலத்தான் மிக்காள்
கனையவிருந் தவன்பணியே தலைக்கொண்டு மழைக்குதவும் கற்பு வாய்த்தாள்.
42. பரவுபுகழ்ச் சின்னம்மை யெனும்பெயர்பூண் டவள்பிரசோற் பத்தி யாண்டில்
விரவுதுலா மதிப்பதினே ழாந்தேதிப் புதவார மேய தாகி
வரவுபயி லபரபக்கம் பஞ்சமியிற் றன்கொழுநன் மதித்துச் சென்ற
புரவுவைகுந் தத்துமுனம் புகன்றபடி புகுந்தின்பம் பொருந்தி னாளே.
சிறப்புப்பாயிரங்கள்.
பின் வருபவை பின்பு கிடைத்தமையால் பிள்ளையவர்கள் பிரபந் தத்திரட்டில் சேர்க்கப்படவில்லை.
ஐயாத்துரை ஐயர்.
-
(ஆசிரியவிருத்தம்)
43. சிறந்தவிரா மாயணசங் கிரகமிளஞ் சிறுவரெலாம் தெரியு மாசீர்
உறந்தபுக ழெல்லாக்கி முத்தையபூ பன்குலத்தில் உதித்த மேலோன்
அறந்தழுவு துரைசாமிக் குரிசில்சொல வங்ஙனமே அறைந்திட் டான்தோம்
மறந்தவள முக்குறும்பூர் வருமையாத் துரைப்பெயர்கொள் மறையோன் றானே.
(இராமாயண சங்கிரகம்.)
சாமிநாத முதலியார்.
-
(ஆசிரியவிருத்தம்)
44. கோடேந்து மிளநகிலார் குலவுமரங் கொளிர்மயிலை குலவு மெம்மான்
ஏடேந்து மிணைக்கழன்மே லுலகுள்ளோ ரேக்கழுத்தம் இயைந்து வாழச்
சேடேந்து சிவநேசன் சாமிநா தப்பெரியோன் செஞ்சொ லாற்றால்
பாடேந்து பதிற்றுப்பத் தந்தாதி சொனானவன்சீர் பகரொ ணாதே.
(மயிலைப் பதிற்றுப்பத்தந்தாதி - நள ஆண்டு ஐப்பசி மாதம்)
திருப்பாதிரிப்புலியூர், சிவசிதம்பர முதலியார்.
-
(ஆசிரியவிருத்தம்)
45. உரிய னாயகி யாதிநன் கடையவென் றுரைசெயப் பொலிநல்லா
சிரிய னாயகி பூண்பவர்க் கன்புடைச் சிவசிதம் பரவண்ணல்
புரிய னாயகி தந்தப வெனவருள் பொலிவட புலிசைச்சீர்ப்
பெரிய னாயகிக் கியற்றுசொன் மாலையைப் பெட்டவர் பெரியோரே.
(பெரியநாயகிமாலை.)
(கியாதி - புகழ். நல் ஆசிரியனாய். அகி பூண்பவருக்கு - பாம்பை அணிபவராகிய சிவபெருமானுக்கு. அனாய் அகிதம் தப புரி - அன்னையே, அஹிதம் நீங்கும்படி செய்வாயாக. வடபுலிசை - திருப்பாதிரிப்புலியூர். பெட்டவர் - விரும்பியவர். இது திரிபாதலின் பெரியனாயகி என்பதில் 'நா’ ‘னா' ஆயிற்று.)
(வெண்பா )
46. உண்மைநல முற்றுமினி தோர்சிவசி தம்பரவேள்
திண்மைமதில் சூழ்பா திரிப்புலியூர் - ஒண்மைப்
பணிமாலை சூடும் பரமர்க் கிரட்டை
மணிமாலை சூட்டினனம் மா.
(திருப்பாதிரிப்புலியூர் இரட்டைமணிமாலை.)
(ஆசிரியவிருத்தம்.)
47. முயலுமா தவரு மமரருஞ் சூழும் முதுபுகழ் வடபுலி சையிற்செம்
புயலுமா முகிலும் போலவெஞ் ஞான்றும் பொலியிரு முதுகுர வருக்கும்
இயலுமா சிரிய விருத்தமோர் பப்பத் தியற்றின னினைப்பொடு மொழியும்
செயலுமன் னவர்க்கே செலுத்திடு மேலோன் சிவசிதம் பரப்புல வோனே .
(ஸ்ரீ பாடலேசுவரர் ஆசிரிய விருத்தம், பெரிய நாயகி ஆசிரிய விருத்தம்)
சுந்தரம் பிள்ளை.
-
(ஆசிரிய விருத்தம்)
48. தந்தையென வரையகப்பெண் தழுவிநெடுங் கொக்கிறுத்துச் சயிலங் கைக்கொண்
டந்தமுறு தலையாறு கொண்டுவய லூர்மருவி அடியார்க் கின்பம்
சந்ததமுந் தருங்குமர வேளுக்கோ ரந்தாதி சாற்றி னானால்
கந்தமிகு தமிழுணர்ந்த சுந்தரநா வலனென்னுங் கருணை யோனே.
(வயலூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி)
[வரையகப் பெண் - மலையில் உள்ள பெண்ணாகிய வள்ளி, பார்வதி. கொக்கு - கொக்கென்னும் பறவை , மாமரம். சயிலம் - மலைகள், கைலை மலை. தலையாறு கொண்டு - ஆறு தலைகளைப்பெற்று, தலையிற் கங்கையாற்றைக்கொண்டு.]
அநுபந்தம் 3.
[§] பிள்ளையவர்களுக்குப் பிறர் எழுதிய கடிதங்கள் சில எனக்குக் கிடைத்தன. அவற்றுள் முக்கியமான சில கடிதங்களும், சிலவற்றின் பகுதிகளும் இங்கே வெளியிடப்படுகின்றன.
மேலகரம் சுப்பிரமணிய தேசிகர்.
(சின்னப்பட்டத்தில் இருந்தபோது எழுதிய திருமுகம்.)
உ
சிவமயம்
"சுவாமி அம்பலவாண சுவாமி திருவுளத்தினாலே இகபரசவுபாக்கிய வதான்னிய மூர்த்தன்னிய சதுஷ்டய சாதாரண திக்குவிஜய பிரபுகுல திலக மங்கள குணகணாலங்கிருத வாசாலக பரிபாக சிரோரத்ந மஹா புருஷச் செல்வச் சிரஞ்சீவி மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களுக்குச் சிவஞாநமுந் தீர்க்காயுளுஞ் சிந்தித மனோரத சித்தியுந் தேவகுருப் பிரசாதமுஞ் சகல பாக்கியமு மேன்மேலு முண்டாகுக.
நாளது விபவ ஆண்டு மீனரவி 14ஆம் தேதி வரையும் தெய்வப் பொன்னித் திருநதிசூழ்ந்த நவகோடி சித்தவாசபுரமாகிய ஞானக்கோமுத்திமாநகரத்தி லெம்மை யாண்ட ஞானசற்குருதேசிக சுவாமிகளாகிய மஹா சந்நிதானத் திருவடி நீழலின்கண் தங்களுடைய க்ஷேமாபிவிருத்தியையே சதா காலமும் பிரார்த்தித்து வாசித்திருப்பதில் ஞானநடராஜர் பூசையு மஹேசுவர பூஜையும் வெகு சிறப்பாக நடந்துவருகின்றன. இவ்விடத்து வர்த்தமானங்களெல்லாம் இதற்கு முன்னெழுதியிருக்கிற லிகிதத்தாலுஞ் சுப்பு ஓதுவார் முகவசனத்தாலும் விசதமாகுமே. மேற்படி யோதுவாரிட மனுப்பிய வலிய மேலெழுத்துப் பிள்ளை யவர்கள் லிகிதங்களுங் காகிதப் புஸ்தகங்களும் வந்து சேர்ந்த விவரமும் மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி அப்பாத்துரை முதலியாரவர்கள் பிரார்த்தனைப்படி நல்ல சுபதினத்தில் நாகைப்புராணம் அரங்கேற்றி வருவதும் தெரிந்து கொண்டோம். வலிய மேலெழுத்துப் பிள்ளையவர்கள் செய்யுட்களைத் திருத்தியனுப்பி யிருப்பதில் இதுவரை சிறப்புப் பாயிரமுமமைத்தனுப்பியிருக்கக்கூடுமே. அதற்குத் தொகையும் இதுவரை சேர்ந்திருக்கலாம். கந்தசாமி முதலியாருக்குக் காஞ்சிப் புராணம் முற்றுப்பெறச் செய்யும்படிக் கெழுதியதும் மற்றக் காரியாதிகளும் தெரிய விவரமா யெழுதியனுப்ப வேண்டும். ஆவராணி மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி முத்தைய பிள்ளையவர்கள் இவ்விடந் தரிசனத்திற்கு வருவதில் அவரைப் போன்ற கனவான்களைப் பார்க்க நாமும் விருப்பத்தோ டெதிர்பார்த் திருக்கிறோம். ஆசாரிய சுவாமிகளை அவ்விடந் திருக்கூட்டத்தார்களுடன் தாங்களும் போய்க் கண்டு தரிசித்த விவரமும் தெரிந்து மகிழ்ச்சியானோம். அவ்விடம் நம்முடைய மடத்து இரண்டு கொட்டடியையுந் திறந்துவிடும்படி மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சிவி திருவாரூர் ஐயாப் பிள்ளையவர்களுக்கும் எழுதியனுப்பியிருக்கிறது. நமச்சிவாயத் தம்பிரானுந் திருவெண்ணெய்நல்லூரிலிருந்து இன்னும் வந்து சேரவில்லை. பனசைத்தம்பிரானும் இவ்விடத்தில் வந்து தரிசித்துக் கொண்டுபோயிற்று. காசி இரகசியத்தைப் பற்றியும் நாச்சியார் கோவில் முதலியாரவர்கள் ......... மேற்படி சாஸ்திரியாரை யழைத்துக் கொண்டு வருவதாகவும் எழுதியிருக்கிறார்கள். வந்த விவரம் பின்பெழுதுவோம். மற்றுள்ளன பின்பு எழுதுவதாயிருக்கும். நமது இருதய முழுவது நிறைந்து நற்றவமனைத்துமோர் நவையிலா வுருப்பெற்ற குருபுத்திர சிரோமணியாய் விளங்குகின்ற தாங்கள் அரோக திடகாத்திரரா யிருந்தின்னும் பெரிதாயிருக்கிற திகந்த விச்ராந்த கீர்த்திப் பிரதாப ஜயகர பிரபல பெரும் பாக்கியங்க ளெல்லாம் மேன்மேலும் வந்து சிவக்ஷேத்ர குருக்ஷேத்ரங்களைப் பரிபாலனஞ் செய்து கொண்டிருக்க வேண்டுமென்று சிவபூஜா காலங்களிலு மஹேஸ்வர பூஜை வேளைகளிலும் வேண்டு-கொண்டிருக்கிறோம். மஹதைசுவரிய விபூதியனுப்பினோம். வாங்கித் தரித்துக்கொண்டு நித்தியானந்த சிரஞ்சீவியாயிருந்து பெருவாழ்வின் வளர்ந்தேறி வர வேண்டும்.
அம்பலவாணர் துணை "
விலாஸம்.
"இது நாகபட்டினத்தில் மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி நமதாதீன மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை யவர்களுக்குக் கொடுக்கற்பாலது."
(பெரியபட்டத்தில் இருந்தபொழுது எழுதிய திருமுகம்.)
சிவமயம்
" நாளது சுக்கில வருடங் கடகரவி 17 - ஆம் தேதி வரையும் ஞான நடராஜர் பூஜையும் மகேசுவர பூஜையும் வெகுசிறப்பாக நடந்து வருகின்றன.
# # #
" புராணம் அரங்கேற்றி முடிவு செய்து கொண்டு விரைவில் நமதாதீ னாந்தரங்கமான பத்திபுத்தி பாகப் பண்புரிமையிற் சிறந்த விவேக சிரோமணியாய் விளங்குகின்ற தாங்கள் இவ்விடம் வந்து நமது நேத்திரானந்தம் பெறச்செய்து கண்டு கலந்து கொள்வதை எதிர்பார்த்திருக்கிறோம். மற்றுள்ளன பின்பு எழுதுவதாக இருக்கும்.
# # #
" புராணம் முற்றுப்பெற்று வரும்போது மஹாபுருஷச் செல்வச் சிரஞ்சீவி ஓவர்சியர் முதலியாரவர்களையும் அழைத்துக்கொண்டு வர வேண்டும்.
நமஸ்ஸிவாயம்."
----------
தி. சுப்பராய செட்டியார்.
உ
"சிவமயம்
{அநு3.1}
"அருளொரு வுருவா மாரியன் கழற்கீழ்
மருளறப் புகுது மனங்குது கலித்தே "
"தங்களைத் தரிசித்து வந்த செகநாத பிள்ளை முதலியோர் தங்கள் க்ஷேமலாபங்களையும் கருணையையும் சொல்லும்போது தங்களை எப்போது பார்ப்போமென்று மனம் பதையா நின்றது. அடியேன் பாவியா யிருந்ததனாலேதான் தங்களை விட்டுப் பிரியும்படி நேரிட்டதே தவிர வேறு அன்று.
இங்ஙனம்,
விபவ தை 5-ஆம் தேதி தி. சுப்பராயன்
1869 தங்களூழியன்
--------
சுப்பராய செட்டியார் பிள்ளையவர்களுக்கு எழுதும் கடிதங்கள் ஒவ்வொன்றிலும் குரு வணக்கமாக இவ்விரண்டடி அமைந்த ஒவ்வொரு செய்யுள் எழுதுவது வழக்கம். கிடைத்த சில கடிதங்களில் உள்ள செய்யுட்கள் வருமாறு :
{அநு3.2}
1. சிந்தை யிருள்பருகிச் சேர்ந்தொளிரு மீனாட்சி
சுந்தரமாஞ் செய்ய சுடர். (பிரபவ வருடம் ஆடி மாதம் 28ஆம் தேதி)
{அநு3.3}
2. தண்ணிய கருணை தந்தெனை யாண்ட
புண்ணிய போதகன் பொலிந்துவா ழியவே. (விபவ வருடம் புரட்டாசி மாதம்
16ஆம் தேதி)
{அநு3.4}
3, குருபரன் றாளைக், கருதுவை மனனே.
(விபவ வருடம் மார்கழி மாதம் 19ஆம் தேதி)
{அநு3.5}
4. எனையும் புலவ ரிருங்குழாத் தொருவனா
நினைதரச் செய்தோ னிருசர ணினைகுவாம். (விபவ வருடம் மாசி மாதம் 6.)
{அநு3.6}
5. நீக்கமி லின்ப நிறுவுங் குருமணிதாள்
ஆக்கமொடு சேர்வா ரகத்து. (சுக்கில வருடம் சித்திரை மாதம் 2ஆம் தேதி.)
{அநு3.7}
6. என்பிழை பொறுத்தரு ளெழிற்குரு ராயன்
தன்பத மலரிணை தழைத்துவா ழியவே.
(சுக்கில வருடம் வைகாசி மாதம் 5ஆம் தேதி.)
{அநு3.8}
7. குலவிய பெரும்புகழ்க் குருமணி யிணையடி
நிலவிய வுளத்திடை நினைதரு வாமே.
(சுக்கில வருடம் வைகாசி மாதம் 26ஆம் தேதி)
{அநு3.9}
8. திருந்திய வுண்மைத் திறந்தரும் போதகன்
பொருந்திய பூங்கழற் போதுபுனை தானே.
(சுக்கில வருடம் ஆனி மாதம் 3 ஆம் தேதி)
சாமிநாத தேசிகர்.
உ
"சிவமயம்.
"அன்புள்ள அம்மானவர்களுக்கு விண்ணப்பம்.
"இவ்விடத்தில் யாவரும் க்ஷேமம். அவ்விடத்திய க்ஷேமம் அறிவிக்கச் சொல்லவேண்டும். மணியார்டர் செய்தனுப்பிய கடிதத்திற்கும், பதில் வரவில்லையென்று மனவருத்தத்தோடு பின் எழுதிய கடிதத்திற்கும் பதில் வரவில்லை. இந்தக் கடிதங் கண்டவுடன் மணியார்டர் வந்து சேர்ந்த செய்திக்குப் பதிலெழுதச் சொல்லவேண்டும். மணியார்டர் கெடு தப்பிப்போகுமுன் பணம் வாங்கிவிட வேண்டும். கடிதம் வந்து சேரும் என்ற நம்பிக்கையினால் இதை [*]நட்பயிட்டாக அனுப்பினேன்.
சுக்கில வருடம் இங்ஙனம்,
ஆடி மாதம் 27ஆம் தேதி. 1870. சி. சாமிநாத தேசிகன்."
திருவனந்தபுரம்.
------
[*] notpaid ஆக
விலாஸம்.
"இது நாகபட்டணத்தில் வந்திருக்கும் தமிழ் வித்வான் திரிசிரபுரம் ம- ள- ள- ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சமுகத்திற் கொடுக்கப்படுவது."
திருமங்கலக்குடி சேஷையங்கார்.
உ
ஸ்ரீமது சகலகுண சம்பன்ன அகண்டித லஷ்மீ அலங்கிருத ஆசிருத ஜன ரக்ஷக மகாமேரு சமான தீரர்களாகிய கனம் பொருந்திய மகா ராஜமான்ய ராஜஸ்ரீ பிள்ளையவர்கள் திவ்விய சமுகத்திற்கு ஆசிருதன் திருமங்கலக்குடி சேஷையங்கார் அநேக ஆசீர்வாதம்.
" இவ்விடம் தஞ்சையில் தங்கள் பெருங்கருணையால் க்ஷேமமாயிருக்கின்றேன். தங்கள் க்ஷேம சுபாதிசயங்கட்கெழுதியனுப்பும்படி உத்தரவு செய்யப் பிரார்த்திக்கின்றேன். தாங்களன்புடன் வரைந்தனுப்பிய நாளது மாதம் 2ஆம் தேதி உள்ள கடிதம் கிடைத்தது. கோயிலுக்கும் இதற்குமாயலைந்து கொண்டிருந்ததால் பங்கியனுப்பத் தவக்கப்பட்டது. அதை மன்னிக்க வேண்டும். [§]இவ்விடம் வேந்திருக்கைக் கலைமகள் விளக்க இல்லிடத்திலிருந்து எழுதுவித்த ஸ்ரீ அம்பர் க்ஷேத்திர புராணக் கிரந்த புத்தகம் 1- க்கு ஏடு 40; மேற்படி புத்தகத்தை இத்துடன் பங்கி மார்க்கமாய்த் தங்களிடத்திற்கு அனுப்பியிருக்கிறேன். வந்து சேர்ந்ததற்குப் பதில் கடிதமனுப்பப் பிரார்த்திக்கிறேன். சென்னையிலிருந்து ஹைகோர்ட்டு வக்கீல் ஸ்ரீநிவாசாசாரியரும், மற்றொரு துரையும் தரும் நூல் சில வேண்டி அங்ஙனம் பெருநீதியிடத்து உத்தரவு இவ்விடம் கலெக்டருக்குப் பெற்று வந்து ஒரு திங்கள் பிரயாசைப்பட்டுப் பார்த்தும் அகப்படாமையாற் போய்விட்டார்கள். பின்னும் மாயூரம் கலெ. அவர்கள் சில ஸ்தலக் கிரந்தங்களைத் தாம் பார்க்க வேண்டி 200 கிரந்தங்களைக் குறித்து அனுப்ப 40 கிரந்தம் அகப்பட்டு எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. இப்படியாய் இன்ன பின்ன பக்கத்திலிருக்கிறதென்றறிய ஒரு நூறு அசாமிகளாய் ஒரு ஆண்டு பிரயாசைப்படினும் அமையாத மிகுதியுள்ள தாயும், பகிரங்கத்திற் கிடைக்கக்கூடாமல் பிரைவேட்டிலாக வேண்டியதாயுமிருந்தும், அத்தல மகாதேவனருளினாலும், கனம் பொருந்திய தங்கள் கீர்த்திப் பிரதாபத்தினாலும் இப்படிப்பட்ட அருமையான தல அபிமானிகள் முப்பணிகளிற் சிறந்த பணி யிஃதேயென்று கருதித் துணிந்த பத்திப் பொருளினாலுமே இந்தக் கிரந்தம் அகப்பட்டதேயன்றி, ஏகதேசம் வழங்கிய பொருட் செலவினாலென்று நினைக்கத் தகாது. வெகு பிரயாசைப்பட்டு 4 - மாதகாலமாய்ப் பரிசீலனை செய்து பார்த்ததில் இனியகப் படாதென்றே நினைத்துவிட்டோம். ஏதோ அகஸ்மாத்தாய் ஒரு பெரும் புத்தகத்தின் மத்தியிலிருப்பதாய்ப் பார்த்து வந்ததில் அகப்பட்டது. ரூ. 20 செலவாயிருக்கிறது.
பிரயாசைப்பட்ட பிராமணருக்கு உயர்ந்த [$] பட்டம் தருவதாயுஞ் சொல்லியிருக்கிறேன். இந்தச் சங்கதியை அத்தல அபிமானிகளுக்குச் சொல்லி அவ்வேதியருக்கு நடப்பித்தால் மிக்க புண்ணியமாகும்.
சுக்கில வருடம் இங்ஙனம்,
மார்கழி மாதம் 7ஆம் தேதி தங்களாசிருதன்,
தஞ்சை . தி. சேஷையங்கார்.
"இந்தப் பங்கியை ரயில் ஸ்டேஷனில் வந்து வாங்கிக்கொள்ளச் செய்ய வேண்டும்."
------
[§] தஞ்சை அரண்மனைச் சரஸ்வதி மகால் புத்தகசாலை.
[$] பட்டம் – ஆடை
விலாஸம்.
“இது நாகபட்டணம் கட்டியப்பர் கோவில் சந்நிதானம் திருவா வடுதுறை மடத்தில் விஜயமாயிருக்கிற திரிசிரபுரம் மகாவித்துவான் ம-ள-ள- ஸ்ரீ மீனாக்ஷிசுந்தரம் பிள்ளையவர்கள் திவ்விய சமுகத்திற்கு வருவது."
-------------------------
அநுபந்தம் 4.
மாணாக்கர் முதலியவர்கள் இயற்றிய சிறப்புப்பாயிரச் செய்யுட்கள் முதலியவற்றில் இவரைப் பாராட்டிய பகுதிகள் வருமாறு :
அழகிரிசாமி நாயகர்.
-
"துங்கநற் குணமீ னாட்சிசுந் தரனென் தோமறுத் தருள்செய்தே சிகனே."
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
ஆறுமுகத் தம்பிரான்.
-
{அநு4.1}
"எங்கடுறை சையையடைந்தம் பலவாண தேவனடி இனிது சூட்டத்
துங்கமுடி வாய்ந்துசிவ ஞானகலை யகங்கைநெல்லித் தோற்றத் தாய்ந்து
கங்கைதரித் தருள்சடையோன் பலதலத்து மான்மியந்தன் கருத்தி னோர்ந்து
சங்கையில்செந் தமிழின்மொழி பெயர்த்தியற்றுங் கடப்பாட்டிற் றலைமை யானோன்."
{அநு4.2}
" மின்னுமர னடியன்றிக் கனவிலும்வே றெண்ணாத விரதம் பூண்டோன்
இன்னுமெம்போ லியர்பலருக் கிலக்கியமு மிலக்கணமும் எளிது தந்தோன்
அன்னவன்பேர் மீனாட்சி சுந்தரநா வலவனென ஆய்ந்தோர் யாரும்
பன்னுபுகழ் பூதலமு மீதலமும் பாதலமும் பரவ நின்றோன்."
(சேக்கிழார் பிள்ளைத்தமிழ்)
காஞ்சீபுரம் இரகுநாதையர்.
-
"பொன்னனைய மலர்க்கடுக்கைச் சடிலவா னவன்போற்
புலவர்களின் முதலானோன் புனிதனைப்போற் றுதலிற்
தன்னிகர்தா னாயவன்மீனாட்சிசுந் தரமால்."
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
திரு எவ்வுளூர் இராமசாமி செட்டியார்.
-
"விதிமருவு சகலகலை யுணரும்வித ரணவிபவ வித்வஜன சேகரனிதம்
மேதகுஞ்சீர் கொண்டதிரி சிரபுரத்தி னான்மீனாட்சி சுந்தரப்பேர் விசயன்."
(காசிரகசியம்)
இராமசாமி பிள்ளை.
-
"எளியேன் றீமை, மண்ணியசீர் மீனாட்சிசுந்தர தேசிகன்."
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை.)
காஞ்சீபுரம் இராமானுஜ பிள்ளை.
-
"அருஞ்சிர புரஞ்செய் மாதவத் துதித்த அண்ணல்செந் தமிழ்க்குயர் கந்தன்
அவிர்பதி பசுபா சப்பொருண் முடிபை அடியடைந் தவர்க்கரு டூயன்
அறஞ்செய்மீ னாட்சி சுந்தரப் பெயர்கொ ளறிஞன்."
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை.)
ஆறைமாநகர் ஐயாசாமி முதலியார்.
-
"பவமிலார் துதிக்குந் தமிழ்க்கட லுண்டு பாவல ரெனும்பயிர் தழைக்கப்
பனூன்மழை பொழிமீ னாட்சிசுந் தரப்பேர் படைத்திடு கருணைமா முகிலே."
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
நாகபட்டினம் இராம - அ. கிருஷ்ணசாமி உபாத்தியாயர்.
-
{அநு 4.3}
”பேரெட்டா மீனாட்சி சுந்தரவே ளெனவுலகம் பேச மேவி
ஈரெட்டாண் டினுக்குளிலக் கியக்கடனீத் திலக்கணவா ரிதியை யெற்றிச்
சீரெட்டா மூர்த்தனெழிற் கைலாய பரம்பரையாம் செல்வம் வாய்ந்த
காரெட்டா விகௗடருந் தண்டுறைசை மடாலயத்தைக் கலந்து நாடி”
{அநு4.4}
"அறந்தழீஇ யமருமெய்யம் பலவாண தேசிகன்பால் அரிய ஞானத்
திறந்தழைக்குங் கலைமுழுதுஞ் செவ்விதினோர்ந் துயர்தீக்கைத் திருவ நீடி
நிறந்தழைக்கும் தமிழ்ச்சங்க மெவ்விடத்து நிறுவியருள் நிமலன் றாளுக்
கிறந்துபடாப் பாமாலைப் பல்வகைய பிரபந்தம் இசைத்துப் போற்றி."
(திருநாகைக் காரோணப் புராணம்.)
குப்பு முத்தா பிள்ளை.
-
"எனையாண், ஞானநன் மணிமீ னாட்சிசுந் தரப்பேர் நாவலன்."
"தண்டமிழ்க் குருமீ னாட்சிசுந் தரமால்,"
".................. புலமை முதிருமீ னாட்சிசுந் தரப்பேர் எந்தை "
"................................................................ மன்னு மின்பம்
நல்குதமிழ்த் தேசிகனெம் மீனாட்சி சுந்தரப்பேர் நாதன்." .
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை.)
காஞ்சீபுரம், சபாபதி முதலியார்.
-
"............. .............. அகிலாண்ட வல்லி
புங்கமுறு கின்றபிள் ளைக்கவிதை யாமமுது
புலவர்மகிழ் கொண்டருந்தப்
பொற்புட னளித்தனன் மீனாட்சி சுந்தரப்
பொன்னிறங் கொண்ட மாலே."
(அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ்)
புரசை, சபாபதி முதலியார்.
-
"... சிவநெறி சற்றும் பிறழ்விலாக்
குரிசில் திரிசிர புரமுறை புனிதன்
................................................
நளிகடற் றிசைதொறும் நனிதன் னிசைநிறூஉ
மேனாட் பெருந்தமிழ் விரகரும் விழைதகு
மீனாட்சி சுந்தர விற்பன சிகாமணி
ஓதுமா வடுதுறை யாதீன வித்துவான்."
(காசிரகசியம்.)
புதுவை, சவராயலு நாயகர்.
"மீனாட்சி சுந்தரவென் னாசான்."
"மீனாட்சி சுந்தர தேசிகன்."
"…முக்கணன் வாழிதயனிந்த
மண்கணுற்றோர் தொழுதேத்தெம் மீனாட்சி சுந்தரமால்."
“ஏர்குடிகொண் டோங்கிவளர் மீனாட்சி சுந்தரப்பே ரெங்க ளாசான்."
"......... தடமலி சிராமலை தனில்வாழ்,
தகுதிபெற் றொளிர்செந் தமிழ்முனி யென்னத்
தக்கமீ னாட்சிசுந் தரமால்."
"தேசுற வொளிருஞ் சிரகிரி வாணன்
நற்குண மேன்மை நல்லொழுக் குடைமை
பொற்புறு வாய்மை பொலிவுறு தூய்மை
புண்ணியஞ் சீலம் பொறைநிறை தேற்றம்
உண்ணிறை யறிவிவை யொருங்கு திரண்டு
வந்தென வொளிரு மாதவப் புனிதன்."
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை.)
சவேரிநாத பிள்ளை.
-
{அநு4.5}
1. "புண்ணியமென் கோபொறையே பொருவிலா வடிவெடுத்த புதுமை யென்கோ
கண்ணியவின் தமிழ்மொழிசெய் நற்றவத்தின் பயனென்கோ கருது வார்க்குள்
அண்ணியமா விருளகற்றி யருண்ஞான விளக்கென்கோ அறையப் புக்கால்
நண்ணியபல் படியுநீத் தவிர்கின்ற திருமேனி நயந்து ளானால்."
{அநு4.6}
2. "அலரடியி லிடுவாரு மகநெக்கு நெக்குருகி அருளா யென்றே
புலர்வுறநாத் துதிப்பாரும் பொன்னடியே புகலென்று புகன்று நாளும்
உலர்வறவந் தடைவாரு முளராக வடியேற்கும் உணர்வு கூட்டிக்
கலர்காணாக் கழனேர்ந்து கடைக்கணித்தாட் கொண்டவொரு கருணை மூர்த்தி”
{அநு4.7}
3. "சீர்பூத்த நாவலருங் காவலருஞ் செழுமறைதேர் திறலு ளாரும்
நார்பூத்த ஞானநிறை மாதவரும் போதவரும் நாளும் போற்றப்
பார்பூத்த நம்பெருமான் பஃறலமான் மியந்தமிழாற் பாட வல்லான்
வார்பூத்த சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே."
(திருவம்பர்ப் புராணம்.)
திருவீழிமிழலை, சாமிநாத கவிராயர்.
-
"தொல்காப் பியமும் பல்காப் பியமுமாம்
இலக்கண விலக்கிய மெனும்பெருங் கடலிற்
திளைத்தினி தாடுஞ் செந்தமிழ்க் குஞ்சரம்
மடிமையேன் போல்வார் மனத்திரு ளகல
அருளொளி விடுத்துநல் லறிவை விளக்க
வந்த ஞான வரோதயப் பருதி
தென்பான் மலயத் திருமுனி யிருந்தாங்
கன்பார் வடபாற் கருண்முனி யானோன்
சைவசித் தாந்தத் தனிப்பெருஞ் சாகரம்
பொய்ம்மை யில்லாப் புலவர் சிகாமணி
கல்லாக் கலராங் கரிகளை வெல்ல
வல்ல வீர வாளரிக் குருளை
கங்கைச் சடையெங் கண்ணுதற் பெருமான்
வடாது கைலையாம் வரையினை யொரீஇத்
தெனாது கைலையாஞ் சிரகிரி யதனிற்
றமிழ்க்கர சியற்றத் தான்வந் ததுபோற்
றானாட்சி யாகிய தலைவன்
மீனாட்சி சுந்தர விமலநா வலனே"
"... திருச்சிரா மலையில் வாழெந்தை யருள்சேர்
மாட்சிமை விளங்குமீ னாட்சிசுந் தரமுகில்."
"நீர்கொண்ட வேணிக் கறைக்கந்த ரத்தெந்தை நிலவுஞ் சிராமலையிடை
நிலைமைசேர் செந்தமிழ்ப் புலமையை நடாத்திநெறி நீதிசெய
வந்தகோமான்
ஏர்கொண்ட தண்டா மரைத்திரு வடிக்கடிமை யென்னவெனை யாண்டபெம்மான்
இருநிலம் பரவுமீ னாட்சிசுந் தரனென்னு மினியநா வலவரேறே."
”மருத்திகழ் கமல முகத்தினா ருலவு மாடநீ டிரிசிரா மலையின்
வழுத்தரும் புகழ்மீ னாட்சிசுந் தரமால் வஞ்சனே னெஞ்சகச் சிலையிற்
குருத்தினி தலருந் தாமரைத் தாளன்."
”தூநிலாத் தவழுஞ் சிரிகிரி யதனிற் றுளவணி யலங்கலாற் பொருவும்
சொல்லரும் புகழ்மீ னாட்சிசுந் தரப்பேர்த் தூயநா வலர்சிகா மணியே."
"ஆரணி சடிலத் தெந்தைவீற் றிருக்கும் அருட்சிரா மலையில்வா ழெம்மான்
அருந்தமிழ்க் கிறைமீ னாட்சிசுந் தரமால்."
”.................. துயர்மாற் றிடுஞ்சீர்ச் சிரகிரியிற் தங்கும் புகழ்நற் செந்தமிழ்க்குத்
தலைமைப் புலமை நடத்துபெருந் தகைமீ னாட்சி சுந்தரமால்."
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
சி. சாமிநாத தேசிகர்.
-
”சீர்கொண்ட சிதம்பரமால் செய்தவத்தின் மலைவிளக்கிற் சிறக்கத் தோன்றிப்
பார்கொண்ட புகழ்முழுது மொருபோர்வை யெனப்போர்த்த பண்பின் மிக்க
ஏர்கொண்ட மீனாட்சி சுந்தரவேள்”
(திருக்குடந்தைத் திரிபந்தாதி.)
உ. வே. சாமிநாதையர்.
-
{அநு4.8}
"அத்தகைய பெருங்கீர்த்திக் கவிநாதன் யாவனெனின் அமலை யோடும்
நித்தனுறை பலதலமான் மியமினிய செந்தமிழில் நிகழ்த்தி னோனங்
கைத்தலவா மலகமெனத் தனையடைந்தோர் பலர்க்குமின்ன கால மென்னா
தெத்தகைய பெருநூலு மெளிதுணர்த்திப் பயனு றுத்தும் இணையி லாதோன்."
{அநு4.9}
"அருத்திமிகு மெனையருகி விருத்தியருந் தமிழ்நூல்கள் அறைந்து பின்னர்த்
திருத்துறைசை யமர்தருசுப் பிரமணிய வருட்கடலின் திருமுன் சாரப்
பொருத்தியனை யான்கருணைக் கிலக்காக்கி யிருபயனும் பொருந்தச் செய்தோன்
மருத்தபொழிற் சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே."
(உறையூர்ப் புராணம்.)
"எண்ணிய பலவு மாணவர்க் கன்பி னீந்திடு நிதிதமிழ் விளங்க
நண்ணிய புகழ்மீ னாட்சிசுந் தரநன் னாவலன்."
{அநு4.10}
"தேனாட்சி செய்கவி யானின் செயன்முற்றுஞ் செப்புமுன்னே
மீனாட்சி சுந்தர வள்ளலை யெங்கள் விழுப்பொருளை
வானாட்சி செய்யப் புரிந்ததென் னோமன் வடிவுகொடு
தானாட்சி செய்திரு வாரூர்த் தியாகசிந் தாமணியே."
(தியாகராசலீலை முகவுரை.)
"பூமலி துணர்ச்சினைக் காமலி கூலப்
பொன்னிமா நதிபாய் சென்னிநாட் டிடைவளம்
நிறையூ ராய வுறையூர்க் குணபாற்
கருமுதிர்ந் தயர்வுறு மொருமக ளஞரறத்
தாயான செல்வந் தங்குமாத் தலமாய்த்
துரிசிரா திலங்குந் திரிசிரா மலையில்
உதித்தொளி மிகுத்தே கதித்துறு மணியும்
மலர்தொறு நறவுகொள் வண்டின மேய்ப்பப்
பலரிடைக் கல்வி பயின்றோங் கண்ணலும்
யாவரு மென்று மேவரும் புலமை
வாய்ந்துநூல் பலமிக வாய்ந்துகிள ரேந்தலும்
சுவைசெறி பனுவல்க ளவைபல வியப்ப
எளிதிற் பாடிய வளிகிளர் குரிசிலும்
புவித்தலம் வியப்பச் சிவத்தல புராணம்
பலசெய் தோங்குசீர் படைத்தசீ ரியனும்
நலமா ணாக்கர் பலபேர்ப் புரந்தே
அன்னர் குழாத்திடை நன்னர் மேவி
நூல்பல பயிற்றிச் சால்புறு பெரியனும்
அருத்திகூ ரெனையரு கிருத்திநூல் பலசொற்
றல்ல லகற்றிய நல்லிசைப் புலவனும்
நன்றிபா ராட்டுநர் நடுநா யகமும்
நிலமலை நிறைகோல் மலர்நிக ராய
மாட்சிசால் புகழ்மீ னாட்சிசுந் தரப்பேர்
உடையனுங் குவளைத் தொடையனுஞ் சுவைசெறி
இதிலுள நூலெலா மியம்புமா கவிஞனும்."
(பிள்ளையவர்கள் பிரபந்தத்திரட்டு, உரிமையுரை.)
சென்னை, சின்னசாமி பிள்ளை.
-
"மலையமுனி தவப்பேறோ கலைமகளின் தவப்பேறோ மறிநீர் வைப்பிற்
றலைமைபெறு மிவன்சனன மெனப்பலபிள் ளைத்தமிழைச் சாற்றும் வல்லோன்
குலைவில்புகழ் மீனாட்சி சுந்தரநா வலரேறு."
(மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்)
சுந்தரம் பிள்ளை.
-
"............ நளிர்சிர புரத்தில் வந்த ஞானசம் பந்தனிகர் மீனாட்சிசுந்தரந லாரியன்."
"அடியார், கண்ணிய தருண்மீ னாட்சிசுந்தரநங் கடவுள்."
"நாற்கவிக் கிறைமீனாட்சி சுந்தரன்."
"என், அல்லறீர்த் தாண்மீ னாட்சி சுந்தரமால்."
"மெய்ஞ்ஞானக் கடலெனையாண் மீனாட்சி சுந்தரமால்."
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
தி. சுப்பராய செட்டியார்.
-
"மின்னுமணிக் குடந்தையுமை தமிழைச் சொன்ன மீனாட்சி
சுந்தரநா வல்லோன் றன்பாற்
றன்னமில்சீர்த் தலைமைதழைத் தோங்கும் பிள்ளைத்
தமிழ்பிள்ளைத் தமிழாகித் தயங்கிற் றன்றே."
(மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்)
"பெரும்பொரு ளுளார்க்கே பெரும்பொரு ளுறல்போல்
ஈண்டுபுகழ் செறிய வாண்டுவரு பெரியோன்
பிறைமுடிப் பெம்மா னுறைதரப் பெற்ற
நறையூர் பொழில்சூ ழுறையூர்ப் புராணமும்
சுரும்புபடிந் துண்ண வரும்புக டோறும்
மட்டவிழ் குறுக்கைவீ ரட்டப் புராணமும்
உற்ற பவஞ்சப் பற்றகன் றவர்பலர்
துற்றொளிர் வாளொளி புற்றூர்ப் புராணமும்
உடைத்தெழும் வயன்மடை யடைத்திடக் கருப்புக்
கட்டி யிடும்விளத் தொட்டிப் புராணமும்
சேற்றூர் விளைவய லாற்றூர்ப் புராணமும்
எயிலை யுடுத்தொளிர் மயிலைப் புராணமும்
கமலைத் தியாக ரமல லீலையும்
ஊழியும் பேராக் காழிக் கோவையும்
எருதூர் பரனிடை மருதூ ருலாவும்
மேவுபுக ழானைக் காவி னிடத்தருள்
பூண்டமர்ந் தருளகி லாண்டநா யகிக்கும்
உருத்தவத் துறைதெறுந் திருத்தவத் துறைவளர்
கருப்புகல் கடிபெருந் திருப்பிராட் டிக்கும்
முன்னவி லுறையூர் மன்னிய வடியவர்
ஏந்திமதி யமைக்குங் காந்திமதி யுமைக்கும்
தருப்பெரு மணந்தரு திருப்பெரு மணத்துறை
போற்றுவார்க் கருடிரு நீற்றுமை யவட்கும்
பெருவிடைப் பரனரு டிருவிடைக் கழியமர்
தருமரு கனுக்கும், திருமுரு கனுக்கும்
காவடுத் துறைதிரு வாவடு துறையில்
நம்பல மாக நயந்தெழுந் தருளும்
அம்பல வாண வருட்குரு பரற்கும்
பெருநயந் துவன்றிய பிள்ளைத் தமிழும்
அரதனா சலத்துறை வரதனுக் கும்மேற்
சொன்னகுரு பரற்கும் பன்னுகலம் பகமும்
விற்குடி கொளுமுடிக் கற்குடிப் பரற்கும்
இதம்புகல் கலைசைச் சிதம்பரேச் சுரற்கும்
சொற்றவா னைக்கா வுற்றவன் னைக்கும்
தருமையில் வளர்தருஞ் சச்சிதா னந்த
குருபர னுக்குமேர் தருதமிழ் மாலையும்
அறைதுறை சையுமரு ணிறைசிராப் பள்ளியும்
அமரம லற்குநல் யமக வந்தாதியும்
நீலி வனத்துறை நிமலனுக் கும்முரற்
காலிப வனத்துமுக் கட்பரஞ் சுடர்க்கும்
விரிபொருள் கிடந்த திரிபந் தாதியும்
சீருறை பூவா ளூருறை யரற்கும்
நாருறை யூறை நண்ணிய பரற்கும்
தண்டபா ணிக்கும் வண்டமிழ் மதுரை
ஞானசம் பந்த நற்றே சிகற்கும்
உத்தமப் பதிற்றுப் பத்தந் தாதியும்
நறும்பலாச் சோலை யெறும்பி யூரின்
மேவுசோ திக்குவெண் பாவந் தாதியும்
நவின்றமா மதுரையிற் கவின்றருள் ஞானசம்
பந்ததே சிகற்கா னந்தக் களிப்பும்
ஒருகவி யேனு மொழிதர லின்றி
இருளகன் றொளிரு மெல்லாக் கவிகளும்
சொன்னலம் பொருணலஞ் சுவைமிகு பத்திமை
நன்னலம் பல்லணி நலங்கள் செறிந்து
முழங்குற வெளிதின் மொழிபெரு நாவலன்
குலத்திற் குடியிற் குணத்திற் குறையா
நலத்தின் மாண்பி னகுசிவ பத்தியில்
வாய்மையிற் பொறையின் மலிதரு நிறையிற்
தூய்மையிற் கொடையிற் றுகளரு நீதியின்
மயங்குறு பிறப்பி லுயங்கெனை யாண்ட
தயங்குபே ரருளிற் றலைமைபெற் றுயர்ந்தோன்
சந்த மலிந்த செந்தமிழ்க் கரசா
வந்தமீ னாட்சி சுந்தர வாரியன்."
(திருத்தில்லை யமகவந்தாதி)
"மூர்த்திதலந் தீர்த்தமான் மியமுமந்த மூர்த்தியருண் முறையுங் குன்றா
தார்த்திகொள்பா யிரமுதலா நைமிசம்வா ழறவர்பூ சித்த தீறாப்
பாத்தியபஃ றுறைப்படுபா வாற்புலவ ரியற்றுநூற் பண்பு தேர்வான்
சேர்த்தியநன் னிறைகோலாப் பலசெய்தோன் புராணமொன்று செய்தா னன்றே."
{அநு4.12}
"அன்னவன்யா ரெனினறைதுங் கேண்மினக லிடத்தளவாக் கல்வி யொன்றாற்
றன்னனைய ருளரெனினும் பொறையினாற் றனக்குநிகர் தானாக் கற்றோன்
பொன்னனைய கவிபாடும் புலமையினாற் பாடுநரும் புவியி லுண்டோ
என்னெனயா முரைப்பமெனப் புலவர்தம்மு ளெடுத்துரைப்பப் பாடத்
தேர்ந்தோன்."
{அநு4.13}
"சின்னூலி னுணர்ச்சியுளோ ரஃதிலோர் செவிதெவிட்டச் செறிந்து கேட்பிற்
பன்னூலு நனியுணர்ந்தோ ரிவரெனயா வருமதிப்பப் பழுத்த செஞ்சொல்
முன்னூலும் பின்னூலூந் தலையெடுப்பப் பிரசங்க மொழிய வல்லோன்
எந்நூலு மிவன்பினெவர் மொழியவல்லா ரெனக்கற்றோர் இசைப்ப மிக்கோன்."
{அநு4.14}
"அருள்கனிந்த பரசிவமே பொருளெனத்தேர்ந் துலகனைத்தும் அருகா துய்யத்
தெருள்கனிந்த சைவநெறி நடையாலு முரையாலும் தெரிக்குந் தூயோன்
இருள்கனிந்த வென்மனத்து மிடையறா தொளிபரப்பி இருப்போன் கங்கைப்
பொருள்கனிந்த குலதீபன் மீனாட்சி சுந்தரனாம் புலவ ரேறே."
(திருநாகைக் காரோணப் புராணம்.)
சி. தியாகராச செட்டியார்.
-
"நீரேறு செஞ்சடில நின்மலனே பதியென்று நிலவச் சாற்றும்
நாரேறு ஞானகலை முதலியநற் கலைபலவு நன்கு தேர்ந்தோன்
காரேறு மகத்தெனையுங் கற்றோர்சே ரவைக்களத்தோர் கடையிற் சேர்த்தோன்
சீரேறு மீனாட்சி சுந்தரநா வலரேறு."
(திருவெண்ணீற்றுமை பிள்ளைத்தமிழ்)
"............... பற்றா வெனக்கு மறிஞர்
பரவவையி லிடமருளு மீனாட்சி சுந்தரப் பைந்தமிழ்ப் புலவரேறே."
(மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ்.)
".... கல்லா
இருள்பழுத்த மனத்தினரை யெவ்வறிவு முடையரென இயற்றுந் தூய்மைத்
தெருள்பழுத்த மீனாட்சி சுந்தரநா வலன்."
(பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி.)
"...... ........ ........ ....... ...... ........... நாயேன்
தொண்டிருக்குங் கழற்பெரியோன் மீனாட்சி சுந்தரப்பேர்த் தூய்மை யோன்வெண்
பெண்டிருக்கு நாவனன்றி மற்றொருநா வாற்புகழ்ந்து பேச லாமோ"
(சித்திரச்சத்திரப் புகழ்ச்சி மாலை.)
{அநு4.15}
"என்னவதி சயநம்பா லிருந்தபெரும் புண்ணியமென் றிதுவு மெம்மான்
தன்னனைய வருளாயிற் றடையெவனோ வெனவுவகை சார்ந்து நின்று
சொன்னயமும் பொருணயமுந் துலங்குபல வணிநயமும் தூய பத்தி
நன்னயமு மினிதார்ந்து நனிவிளங்கப் புனைவித்து நல்கி னானால்."
{அநு4.16}
"அனையபெரி யோன்யாவ னெனிற்புகல்வாஞ் சிராப்பள்ளி அமர்ந்து வாழ்வோன்
கனைகடல்சூ ழுலகிற்றன் பெயர்நிறுவி னோனெல்லாக் கலையு மோர்ந்து
தனையனைய னாயடைந்தோர் சரணாகி யொளிர்புனிதன் தக்கோர் போற்றி
வனைபுகழ்ப்பூம் படாம்புனைந்த மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே."
(திருநாகைக்காரோணப் புராணம்.)
{அநு4.17}
"முன்னுளபல் புலவருளும் பின்னுளபல் புலவருளும் முதியீர் செஞ்சொன்
மன்னுபன்னூ லொன்றொடொன்று தோலாது மாண்புபெற வகுப்பார் யாரே
என்னினிவர் தமைக்குறிப்பே மினையனே யெனக்குறிப்ப இசைமை வாய்ந்து
துன்னுநய குணமேலோன் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே."
(மாயூரப் புராணம்.)
ச. தெய்வநாயகம் பிள்ளை.
-
{அநு4.18}
"விண்ணுலகத் தமர்ந்துதனை யடைந்தோர்க்கு விரைந்தழியும் வெறுக்கை நல்கிக்
கண்ணுறுசிற் றின்புறச்செய் தறக்கழிவு கண்டிடுகற் பகம்போ லாது
மண்ணுலகத் தமர்ந்தடைந்தோர்க் கழிவில்கல்விப் பொருள் வழங்கி வனைபே
ரின்பம்
நண்ணுறச்செய் தறம்பெருக்கு மீனாட்சி சுந்தரப்பேர் நல்லோ னன்பால்"
"என்னறிவா லின்னவென வறிந்தறிந்து வகுத்துவகுத் திசைத்தல் கூடாப்
பன்னலமு நனிசிறந்து விளங்கவனைந் தணிந்தபா மாலை யாய
நன்னலஞ்சே ரொருபிள்ளைத் தமிழ்."
(அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ்)
வல்லூர்த் தேவராச பிள்ளை
-
"அண்ட வுருவா யவிர்விராட் புருடனுக்
கெண்டகு சென்னியா விலகுகா ரணத்தாற்
சென்னிப் பெயர்பெறுந் திருநா டதனில்
அம்முடிக் கென்று மழகுறக் கவித்த
பன்மணி முடியிற் பாங்குற வொளிரும்
திரிசிர கிரியெனுந் திருநக ராளி
கலையுணர்ந் திடலாற் கற்பவ ருளத்தில்
நிலைமுக் குற்ற நிசியைத் துரத்தலாற்
சைவ சமயத் தாமரை மலர்த்தலாற்
புறமதத் துகினம் புறமிடக் கடிதலால்
மதிஞரிற் சிலரின் மார்த்தாண்ட னென்றும்
புலவருக் குக்கலை பொலிதரத் தரலாற்
கலாநிதி யாகலிற் கவினளி செயலால்
அறிஞரிற் சிலரிவ னம்புலி யென்றும்
செந்தமிழ் பரப்பலாற் சிவன்புகழ் பாடலால்
ஆகம மனைத்து மறிந்துயர்ந் திடலால்
ஆய்ந்தவர் சிலரிவ னகத்திய னென்றும்
மனநனி மகிழ்ந்து வழங்குவ ரென்ப
கதிரவன் வெய்யோன் கழறிவன் றண்ணியோன்
நகையிழந் தவனவ னகையிழ வானிவன்
எல்லிடை யுறானவ னெப்போழ்து முனிவன்
ஆதலி னவனிவற் கன்றிணை யென்ப
மதிகலை தேய்பவன் வளர்கலை யானிவன்
அவன்மா பாதக னிவன்மா புண்ணியன்
அவன்வெந் நோய னிவன்மிகு தூயன்
அவன்பக லவனிடை யவிரொளி பெறுவான்
இவனியற் கையினி லென்று மிலகுவான்
ஆதலி னவனிவற் கன்றிணை யென்ப
கும்ப முனியோ குறியவ னாகும்
நம்பனைப் பணியிவ னவிலரும் பெரியோன்
முன்னொர்நற் சீடனை முனிந்தவன் சபித்தனன்
சீடர்செய் பிழையெலாஞ் சிந்தி யானிவன்
ஆதலா னவனிவற் கன்றிணை யென்ப
... ... ... ... ... ...
... ... ... ... ... ... ...
பகர்சுதந் திரனாம் பரசிவ முதலே
என்போன் றவருக் கின்னருள் புரிவான்
கடுவர வொடுசெழுங் கடுக்கை தவிர்த்து
மடலவிழ் குவளை மலர்த்தா ரணிந்து
பாலலோ சனமும் பனிமதிக் கோடும்
களத்திடைக் கறையுங் காணாது மறைத்துச்
சிதம்பர வேண்முனஞ் செய்தமா தவத்தான்
மகிதல முற்றும் வாழ்த்துறச் சுதனா
வந்தன னெனலே வாய்மையா மென்று
தூயவ ரெவருஞ் சொற்றிடுந் தக்கோன்
மீனாட்சி சுந்தரப் பெயர்ச்செவ் வேளே."
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
பாலகுரு உபாத்தியாயர்.
-
"............. ............ நல்லறிஞ ரேத்தும்
தங்கியசீர் மீனாட்சி சுந்தரதே சிகனெனும்பேர்த் தமிழ்ச்சிங் கேறே. "
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
தி. க. பெரியண்ணம் பிள்ளை.
-
"நாவிற் சிறந்தவன் மீனாட்சி சுந்தர நங்குருவே."
(திருக்குடந்தைத் திரிபந்தாதி.)
மெய்யூர் பொன்னம்பல நாயகர்.
-
"கணிவளர் கூந்தற் பரையொடு பரமன் களித்துவாழ் திரிசிர புரியான்
கங்கையங் குலத்தான் செந்தமிழ் வாரிக் கரைகண்ட நாவலர் பெருமான்
திணிவளர் சைவச் செழுமதம் விளங்கத் திருவவ தாரஞ்செய் பெரியோன்
செய்யமீ னாட்சி சுந்தர நாமம் திகழ்தரப் பெற்றசெவ் வேளே."
(சித்திரச்சத்திரப் புகழ்ச்சிமாலை.)
புரசை பொன்னம்பல முதலியார்.
-
" ................ ........... சிறந்தசைவ சமயமோங்கத்
தகரநறுங் குழல்பாகன் றிருவருளாற் சிராப்பளியென் தலத்தில் வாழ்வோன்
சிகரவட வரைப்புயத்தெம் மீனாட்சி சுந்தரமால் திருந்தெந் நூலும்
பகர வலோன்."
(அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ்)
மழவை மகாலிங்கையர்.
-
"சிரபுரக்கோன் மீனாட்சி சுந்தரவேள் தன்பெயரின் சீர்மைக் கேற்ப
வரனுறுநற் பிரபந்த விடயத்து முயர்ந்தெல்லாம் வல்லோ னானான்."
(அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ்.)
காரைக்கால் முத்துசாமிக் கவிராயர்
-
"போராட்டச் செயலுணரா மீனாட்சி சுந்தரனாம் புலவன்."
(அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ் )
மாயூரம் ந. முத்துசாமி பிள்ளை.
-
{அநு4.19}
"கொத்துமலர்ப் பொழிற்றிருவா வடுதுறையம் பலவாண குரவன் பாலே
முத்தர்களும் புகழ்ந்தேத்து மூவகைத்தீக் கையுமுறையே முற்றப் பெற்றுத்
தத்துவமெய்ஞ் ஞானகலை முதலாய பல்கலையிற் றழைந்து மேலும்
எத்தலமு மதிக்கவரும் புகழோங்கு நாவலர்கள் இனிதாப் போற்றும்."
"பொன்னாட்டிற் சுவைமிகுநல் லமுதினுமின் கவிமாரி பொழியு மேகம்
கன்னாட்டும் புயத்தரசர் முடிதுளக்கப் பேசுகவி வாண னாய
தென்னாட்டிற் சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரப்பேர்த் திறல்வல் லோன்."
(திருநாகைக்காரோணப் புராணம்.)
{அநு4.20}
"இலங்குறுமெய்ஞ் ஞானகலை முதலியபல் கலையுணர்ச்சி ஏய்ந்து தூய
நலங்குலவு பொறைவாய்மை யருளடக்க முறவாய்ந்து நலத்தி னின்றும்
விலங்குறுமென் னையுந்தனது மெய்யடியார் குழுவினிடை மேவச் சேர்த்தோன்
வலங்குலவு சிரகிரிவாழ் மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே."
(மாயூரப் புராணம்)
முருகப்பிள்ளை.
-
......... எளியேன் றீமை
மண்ணியசீர் மீனாட்சி சுந்தரதே சிகன்.""
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சி மாலை.)
நாகபட்டினம் வீரப்பசெட்டியார்.
-
{அநு4.21}
"பூமேவு திருநாகைக் காயாரோ கணப்பெருமான் புராணஞ் சொற்றான்
தேமேவு வீரசைவ சிகாமணியப் பாத்துரைமால் சிறப்பிற் கேட்கக்
காமேவு சிராமலைவாழ் சைவசிகா மணிஞான கலைமுற் றோர்ந்து
மாமேவு துணிபமைந்த மீனாட்சி சுந்தரநா வலவ ரேறே."
(திருநாகைக் காரோணப் புராணம்.)
திரிசிரபுரம் வீரராகவ செட்டியார்.
-
{அநு4.22}
"இப்புவிசெய் தவந்தானோ தந்தைதாய் செய்தவமோ இசைத்த வாசான்
செப்பமுடன் செய்தவமோ மீனாட்சி சுந்தரவேள் செனன மாகி
ஒப்பிலியர் கல்வியுஞ்சற் குணமுநிறைந் தகிலாம்பை உபய பாத
வைப்பிலன்பா லினியபிள்ளைத் தமிழுரைத்தான் புலவரெலாம் மகிழத் தானே."
(அகிலாண்ட நாயகி பிள்ளைத்தமிழ் )
தாராநல்லூர் வீராசாமி நாயகர்.
-
"அவ்விய மடியார்க் கறுத்தருள் புரிமீ னாட்சிசுந் தரகுரு பரனே."
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
குளத்தூர் ச. வேதநாயகம் பிள்ளை.
{அநு4.23}
"வாதவூ ருதித்தந்நா டிருக்கோவை யுரைத்த மாணிக்க
வாசகரே சிரபுரத்தி லிரந்நாள்
ஆதவனிற் றோன்றிமீ னாட்சிசுந் தரனென் றரும்பெயர்பூண்
டொருகோவை யறைந்தனர்கா ழிக்கே
ஏதமில்தில் லைக்கோவை யாயுவதின் மூத்த தென்னினுங்கற்
பனைநயத்தி லிக்கோவை முன்னாம்
மூதறிஞர் வைகலும்பா டப்பாட வாக்கின் முதுமைகொள்வா
ரெனவுலக மொழியுமொழி மெய்யே."
(வேறு.)
{அநு4.24}
"திருவமர்கோ வையைமகிழ்ந்து வாதவூ ரரைத்தன்பாற் சேர்த்துக் கொண்ட
பொருவில்சிதம் பரநாதன் பின்னுமொர்கோ வைக்காசை பூண்டன் னாரை
மருவுசிர புரத்தீன்று மீனாட்சி சுந்தரப்பேர் வழங்கிக் காழிக்
கொருகோவை செய்வித்தான் சிதம்பரநா தன்சேயென் றுரைத்தன் மெய்யே."
{அநு4.25}
"வித்தகமார் மீனாட்சி சுந்தரவே ளேயொருநூல் விளம்பு மென்னைப்
புத்தமுதார் நின்வாக்காற் றுதித்தனைநீ பாடியதிப் பொருணூ லொன்றோ
எத்தனையோ கோவைகண்மற் றெத்தனையோ புராணமின்னும் எண்ணி னூல்கள்
அத்தனையு மித்தனையென் றெத்தனைநா விருந்தாலும் அறையப் போமோ."
{அநு4.26}
"பன்னூலு மாய்ந்தாய்ந்தோர் பயனுமுறா துளம்வருந்தும் பாவ லீரே
நன்னூலோர் மீனாட்சி சுந்தரமா லொருகோவை நவின்றான் காழிக்
கந்நூலு ளொருபாவி லோரடியி லொருசீரை ஆய்வீ ராயின்
எந்நூலுங் கற்றவரா யிகபரமும் பெற்றவரா யிலகு வீரே."
(வேறு.)
{அநு4.27}
“தண்டமிழுன் பாலுணர வாசைகூ ரனந்தன் தனமீய வகையின்றி நின்சேட னாகிக்
கொண்டனனந் நாமமே யகத்தியன்றான் றன்னைக் கூடாம லுனைமேவிக்
குலாவுதமி ழதனை
அண்டலரின் முனிந்ததனாற் றமிழ்முனிவ னெனும்பேர் அடைந்தனனா
தலினகிலத் தியாவருனை நிகர்வார்
வண்டமர்தார் மீனாட்சி சுந்தரவே ளேநீ வளப்புறவக் கோவைசொலின்
வியப்பவரா ரையா."
(வேறு.)
{அநு4.28}
"நலம்விளக்கு மீனாட்சி சுந்தரமா லொருகோவை நவின்றான் சண்பைத்
தலம்விளங்க வவற்குநாம் புரிகைம்மா றெவனழியாத் தனமே கங்கா
குலம்விளக்குங் கற்பகமே குருமணியே திருவணியே குணக்குன் றேயிந்
நிலம்விளக்குந் தினகரனே யெனவவனை வாழ்த்திடுவாய் நிதமு நெஞ்சே."
{அநு4.29}
"கானோடு மிளிர்தாரான் மீனாட்சி சுந்தரமால் காழிக் கோவை
தேனோடு பாலோடு நிகருமவன் பிரதாபம் சீர்த்தி யோங்கி
வானோடு மண்ணோடு மற்றோடும் வகையின்றி வடிவி ரண்டாய்
மீனோடு வான்றிரியும் பானுமதி யென்றுலகோர் விளம்பு வாரால்."
{அநு4.30}
"தண்டமிழ்முந் நீர்பருகி மீனாட்சி சுந்தரப்பேர்த் தருமக் கொண்டல்
தொண்டர்கள்சூழ் சிரபுரத்திற் பொழிகோவை யெனுமமுதத் தூய மாரி
மண்டலமும் விண்டலமுங் கரைபுரண்டு திரைசுருண்டு வருத னோக்கி
அண்டர்தொழும் புகலியிறை தோணியுற்றா னஃதின்றேல் அமிழ்ந்து வானே”
{அநு4.31}
"தேவேநேர் மீனாட்சி சுந்தரக்கோ னொருகோவை செப்பிப் பாரிற்
றாவேயில் புகழ்படைக்கி னமக்கென்ன வவற்குமவன் தமர்க்கும் பாடாம்
நாவேகா தேமனனே யவன்சீரைச் சொலிக்கேட்டு நனியிங் குன்னி
ஓவேயி லாதருங்கா லங்கழித்தீர் பிறவினைமற் றொன்றி லீரோ."
(சீகாழிக்கோவை.}
வைத்தியலிங்க பத்தர்.
"தூமேவு தன்னடிய ரொடுநாயி னேனையும் துரிசறச் சேர்த்தருள்செயும்
சுகுணசிர புரமேவு விமலவெம் மீனாட்சி சுந்தரப் பேர்க்குரவனே."
"ஏர்கொண்ட நதிகுலச் சலதிவந் தமரர்மிக் கேத்துசிர கிரியுதித்தன்
பெஞ்சலின லடியவ ருளத்தஞா னத்திமிரம் இரியச் சவட்டியருள்செய்
தார்கொண்ட சிவஞான பானுமீ னாட்சிசுந் தரகுரு பரன்”
(சித்திரச் சத்திரப் புகழ்ச்சிமாலை.)
-----------
(எண் - பக்க எண்.)
(மேற்கோள்கள், சிறப்புப் பாயிரங்கள், தனிப் பாடல்கள் நூற் செய்யுட்கள் ஆகிய இவற்றுள்
முழுச் செய்யுட்களின் முதற் குறிப்புக்கள் மட்டும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.)
[*] பிள்ளையவர்கள் வாக்கல்லாத செய்யுட்களின் முதற்குறிப்புக்களின் முதலில் இந்த நட்சத்திரக்குறி இடப்பட்டிருக்கின்றது.

* செய்யுள் முதற்குறிப்பகராதி.
(மேற்கோள்கள், சிறப்புப் பாயிரங்கள், தனிப் பாடல்கள் நூற் செய்யுட்கள் ஆகிய இவற்றுள்
முழுச் செய்யுட்களின் முதற் குறிப்புக்கள் மட்டும் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன.)
[*] பிள்ளையவர்கள் வாக்கல்லாத செய்யுட்களின் முதற்குறிப்புக்களின் முதலில் இந்த நட்சத்திரக்குறி இடப்பட்டிருக்கின்றது.
* அகத்தியனோ {11.11} | * அருளொரு {அநு3.1} |
அடியார் யார் {9.3} | அரைப்புலித்தோல் {8.24} |
அண்டரு முனிவர் {8.13} | அலங்கொருகைத் {அநு2.30} |
அண்ணா மலையத்தனை {4.2} | * அலரடியிலிடு {அநு4.6} |
* அத்தகைய {அநு4.8} | அளிவளர்குணனும் {7.3} |
அத்திதருங் கவி {8.21} | அறத்தனிச் செல்வி {8.17} |
அதிகாரந் தனக்களித்த {அநு2.23} | * அறந்தழீஇ {அநு4.4} |
அரிய நாயகம் {அநு2.29} | அன்னமுனிவரன் {10.11} |
அருண் மலி நின் {6.10} | * அன்னவன் யார் {அநு4.12} |
* அருத்திமிகும் {அநு4.9} | * அனம்படியும் {7.4} |
* அருந்தவஞ் செய்த {11.3} | * அனையபெரியோன் {அநு4.16} |
அருவாகி யுருவாகி {9.2} | ஆசையிலார்க்கே {5.6} |
அருவுருவாகிய {அநு2.7} | * ஆர்த்த சபை {5.10} |
* அருள்கனிந்த {அநு4.14} | ஆரதித் தன்மை {8.19} |
ஆறுமுக பூபாலா {4.4} | * இன்றொண்டர் சூழ {8.5}. |
இக்கடித நோக்கி {அநு1.2} | * இன்ன பெரு {11.12} |
இகமொன்று களிப்பு {9.26} | இன்ன வடியவர் {9.5} |
இத்தகைய வள்ளலை {அநு2.39} | * இனமளித்தற்கு {11.7} |
இதம்பரவு {அநு2.34} | இனையபுகழ் {அநு2.41} |
* இந்த மதிதனில் {11.10} | உண்மை நலம் {அநு2.46} |
* இந்த வறச்சாலை {10.4} | உரவுமலி {அநு2.26} |
இந்த விதம் பூசனை {9.9} | உரியனாயகி {அநு2.45} |
இந்தவித மடியவரை {9.6} | உரை சிறந்த {அநு2.32} |
* இப்புவிசெய் {அநு4.22} | உழவொலி {9.29} |
இரவுவழி நடக்கலாம் {அநு2.17} | உள்ளுதோ றிழிபை {8.7} |
இல்லேனென்றாரும் {5.8} | * ஊருணி நீர் {7.9} |
* இலங்குறு மெய்ஞ்ஞா {அநு4.20} | * ஊழிற் பெருவலி {10.15} |
இலவு வந்த {6.17} | * ஊறு தெரிதலும் {4.8} |
இளங்கொடியான {10.2} | ஊனுடம்புடைய {8.16} |
* எங்கடுறைசை {அநு4.1} | ஒப்புயர் வில்லவன் {9.30} |
எந்நாடும் புகழ் {5.1} | ஒருகழுகும்பர் {6.3} |
எயிலையன்றட்ட {6.2} | ஒரு திருவாவடு {அநு2.20} |
எல்லையப்பனாய {10.16} | ஒருவருண்டிடு {9.28} |
* என் பிழை பொறுத்தரு {அநு3.7} | ஒன்றளித்தாற் கோடி {5.5} |
* என்னகத்தில் {7.12} | ஒன்றளிப்பாய் {5.7} |
* என்ன மொழிந் {11.15} | ஒன்றுடையோன் {6.13} |
* என்ன வதிசய {அநு4.15} | ஓங்குசைவத் {9.21} |
என்னை நானறியேன் {8.14} | * கடிப்பிகுகண் {5.9} |
* எனையும் புலவ {அநு3.5} | கண்ணான் மதனை {7.7} |
* எனைவைத்தி {10.22} | * கந்தனை நேர் {11.2} |
ஏய்ந்த விளம் {10.13} | கருதுமொருமலமும் {9.1} |
* ஏர்தருசாலி {10.6} | * கறைநிறுத்திய {9.19} |
ஏலவே யொருப்பட்டு {8.9} | கனிவிளவிருக்க {8.10} |
ஒண்பா திரிப்புலி {அநு2.3} | * காணாதாற் காட்டுவான் {7.10} |
* காணியுங் காணியுங் {6.18} | கோடேந்துமிள {அநு2.44} |
* கார்க்குன்றுரித்தவர் {10.18} | சரவணபவ {அநு2.6} |
* கானோடு மிளிர் {அநு4.29} | * சிந்தையிருள் {அநு3.2} |
குணங்கொள் செவ்வாய் {9.12} | சிவபெருமான் {அநு2.33} |
* கும்பனெனில் {10.21} | சிறந்தவிராமாயண {அநு2.43} |
* குருபரன்றாளைக் {அநு3.4} | * சின்னூலின் {அநு4.13} |
குருவருக்கந் {5.3} | சீர்பூத்த கயிலாய {6.9} |
குலவர் சிகாமணி {அநு1.1} | சீர்பூத்தகல்வி யறிவு {அநு2.35} |
* குலவிய பெரும்புகழ் {அநு3.8} | சீர்பூத்த கல்வியுந் {6.24} |
குலவு முருகக்கடவுள் {10.9} | சீர்பூத்த சிவபத்தி {9.16} |
குவளை யருகதன் {8.22} | * சீர் பூத்த நாவலருங் {அநு4.7} |
கூடுபுகழ்க்கோமுத்தி {10.10} | சீர்பூத்த புகழ் {அநு2.9} |
* கொடுக்கச் சடைவற்ற {2.2} | சீர்பூத்த விசும்பு {8.4} |
* கொத்து மலர்ப் {அநு4.19} | சீர்பூத்த விரோதி {அநு2.40} |
கொத்துமலர்ப் {அநு2.19} | சீரடியாள்செய் {8.29} |
சீரார் கழனிச் {அநு2.11} | * தண்ணிய கருணை {அநு3.3} |
* சுத்த மலி {12.1} | தந்தை பெயரெடுப்பான் {6.12} |
சுவைபடு கருப்பங்காடு {9.13} | தந்தையென {அநு2.48} |
சுவைபடுமவல் {8.11} | தருவே சிந்தாமணி {அநு2.27} |
செங்கையாட்டினார் {4.7} | தலையானை {அநு2.2} |
செம்மையொன்றில்லா {8.15} | தலைவராய் நல்லொழுக்க {6.27} |
செறிகுறிலுடை {9.24} | தழுவு புகழ் {7.1} |
செறிபொழிலாவடு {அநு2.22} | தளிபுகுந்து {9.4} |
சொல்லாரும் பிரபல {அநு2.24} | * தன் கிளையன்றி {அநு1.3} |
சொல்லாரும்புனற் {6.26} | தாணு முடிமேலது {அநு2.8} |
சொற்கொண்ட திரு {9.22} | * தான் பிறந்த தந்தையையும் {6.25} |
சொன்னயமும் பொருணயமும்{அநு2.21} | திருக்கிளர் முனிவன் {10.7} |
தங்கள் கருத்திடை {6.28} | திருச்சமயத்துடன் {6.11} |
* தண்டமிழ் முந்நீர் {அநு4.30} | * திருந்திய வுண்மைத் {அநு3.9} |
* தண்டமிழுன்பால் {அநு4.27} | * திருந்து தமிழ் {6.5} |
திருநெடுமாலன்று {8.12} | * தேனாட்சி செய் {அநு4.10} |
திருமா மகளும் {9.10} | தேனென்றெடுத்து {அநு2.28} |
* திருவமர்கோ {அநு4.24} | தொழுபவ ரொருபால் {8.6} |
திருவாதவூரர் {9.17} | நண்ணிய மூகை {8.28} |
திருவியலும் {6.21} | நம்பலமாகும் {6.22} |
திறப்பாவனைய {10.3} | நல்லொழுக்கம் {அநு2.36} |
* தீயனெனும் பாம்பு {6.7} | நலம்பூத்த {10.12} |
துங்கஞ்சார் (கீர்த்தனம்) {8.2} | * நலம் விளக்கு {அநு4.28} |
தூயநாமத்தருவம் {8.23} | நலமலி செய்கை {9.7} |
* தூவலரு மீனாட்சி {10.23} | நாட்டஞ் சிவந்தனை {4.10} |
* தென்றனாடன் {6.6} | நாடிய வத்தினத்தில் {9.8} |
தென்னாருஞ்சீர் {5.4} | நாமத வாரணங் {4.9} |
தேடுகயிலாய {8.1} | * நாற்கவியாம் {8.20} |
தேடுமரியயற்கு {7.6} | நிலம் பூத்த {6.30} |
தேமலி துறைசைச் {5.2} | * நினையடைந்தோர்க் {11.14} |
* தேவேநேர் {அநு4.31} | * நீக்கமிலின்ப {அநு3.6} |
நெடிய புகழ் {அநு2.16} | * புண்ணியமென்கோ {அநு4.5} |
நெற்றியினீறு {6.16} | புயலிருக்குங் கர {11.1} |
* படிதாங்கு {11.17} | * புரமாய வென்றருள் {4.5} |
* பண்டுமைக்கோர் {4.1} | புரமுதல் {8.25} |
பரம்பரையே {7.5} | பூமேவுசிங்கவனம் {9.11} |
பரமசையோக {அநு2.5} | பூமேவு தமிழரும்பும் {9.25} |
பரவுபுகழ்ச் சின்னம்மை {அநு2.42} | * பூமேவு திருநாகைக் {அநு4.21} |
* பல்லார் புகழ் {11.4} | பூமேவு நங்கைவளர் {6.20} |
* பன்னூலும் {அநு4.26} | * பெயற்பான் மழை {5.11} |
பாடப் படிக்க {2.1} | பெரும்புங்கவர் {6.4} |
பாடமுதலாசிரிய {6.29} | பெருமையிற் பொலியும் {9.23} |
பாடு தொழிலாளர் {அநு2.25} | பேசுபுகழ்ச் {8.3} |
* பார் பூத்த {11.13} | * பேரெட்டா {அநு4.3} |
* பாவிற் பெரியவன் {11.5} | * பொன்னகரான் {6.8} |
* பிணக்கிலாத {6.19} | * மந்தரமாளிகை {11.16} |
புண்ணியமெல்லாந் {7.11} | மருவுலகங்களி {10.8} |
மழைபொழியு {7.13} | * மெய்க்கேயணியும் {6.15} |
மறிவில் பெருங் {அநு2.15} | மெய்யாறடைந்து {அநு2.31} |
* மன்னும் யுவவருடந் {10.20} | மொய் வேலைசூழ் {7.14} |
* மாசாரக்கவி {10.5} | மோகமாமடவி {10.19} |
* மாமேவு வடமொழி {11.6} | வம்புவனப் (கீர்த்தனம்) {அநு2.4} |
மாமேவு ......... வள்ளலாய {7.8} | * வரமளிக்கும் {11.8} |
மாமேவு ......... வள்ளற் {9.18} | வரைமா திருக்கும் {4.3} |
மாமேவு வான்பிறை {6.31} | வழிவழி யடிமை {8.8} |
மாறு வேண்டினர் {9.27} | வள்ளிய பங்கயக் {9.20} |
மிக்குள பேரிரக்கம் {அநு2.14} | வன்றொண்டன் {அநு.2.12} |
மிகப் பெரியனாகிய {10.14} | வாதவூர் மறை {8.27} |
* மின்னுமரன் {அநு4.2} | வாதவூரடிகளுக்கு {அநு.2.13} |
முதிரு மாக்கனி {9.15} | * வாதவூருதித் {அநு4.23} |
முயலுமாதவரும் {அநு2.47} | வாய்ந்த திருவடிக் {10.1} |
* முன்னுள பல் {அநு4.17} | * வாரணம் பொருத {2.3} |
* மூர்த்திதல {அநு4.11} | வாராக வன நகில் {அநு2.10} |
* வாழ்ந்ததென்ன {6.23} | விரும்பிருகண் {அநு2.38} |
வாழ்ந்தோமென்று {அநு2.18} | விளங்கதிகாரத்தொடு {அநு2.37} |
* வான்பணிந்தால் {6.14} | வெள்ளை நிறத்தாற் {4.6} |
* வான்பூத்த {11.9} | வெள்ளைவாரணப் {அநு2.1} |
வான நாடவர்க்கு {8.18} | வெற்றியூரொரு {6.1} |
விட்புனன் முடிமேல் {9.14} | வென்ற சீரான்ம {8.26} |
* விண்ணாடும் {10.24} | * வேண்டாமையன்ன {7.2} |
* விண்ணுலகத் {அநு4.18} | * வேதாவின் தண்ணிடமோ {10.17} |
* வித்தகமார் {அநு4.25} |